கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/பேய்கள் உலகம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

பேய்கள் உலகம்


விதைகளைக் கணிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்துவது கற்பனைத் திறன் ; கவிதையின் பிற பண்புகளுக்கெல்லாம் அடிநிலமாக அமைவது அதுதான் ; முடியாக இருப்பதும் அதுவே. உணர்ச்சிகளின் நிலைகளனாக எழுதப் பெறும் எல்லா வகையான இலக்கியங்களுக்குமே கற்பனையாற்றல் மிக மிக இன்றியமையாததாகும். கற்பனை என்றால் என்ன என்பதைச் சொற்களால் எல்லை கட்டிக் காட்ட இயலாது, ரஸ்கின் என்ற மேற்புலக் கவிஞர், " கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது ; சொற்களால் உணர்த்த முடியாதது ; அது அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அறியப்படுவ தொன்றாகும்"[1] என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது. கவிஞன் யதார்த்த உலகில் நிகழும் சில நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே தன் கற்பனைத் திறனால் புதியதோர் உலகைப் படைத்துக் காட்டுகிறான். நாம் அவ்வுலகில் உலவும் பொழுது பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம் ; பேரின்பத்தில் திளைக்கின்
 1. The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effects only.
  - Ruskin.
றோம். கவிஞன் படைப்பு ஒர் அற்புதப் படைப்பு. இதனாலன்றோ குமரகுருபர அடிகள் நான்முகன் படைப்பையும் கவிஞன் படைப்பையும் ஒப்பிட்டு,
மலரவன்செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு, [1]

என்று கூறியுள்ளார்?

'கலிங்கத்துப் பரணி' என்பது கவிஞர் சயங் கொண்டாரது அற்புதப் படைப்பு; அவரது கற்பனையிலிருந்து மலர்ந்த ஈடற்ற ஒரு சிறு காப்பியம். காவியத்தில் இருவேறு உலகங்களைப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர். ஒன்று, மக்கள் உலகம் , மற்றொன்று, பேய்கள் உலகம், பதின்மூன்று அதிகாரங்களைக் கொண்ட அந்நூலில் கடவுள் வாழ்த்து போக நான்கு அதிகாரங்கள் மக்கள் உலகைப் பற்றிய செய்திகளைக் கொண்டவை ; ஐந்து அதிகாரங்கள் பேய்கள் உலகைக் காட்டுபவை; மூன்று அதிகாரங்கள் பேய்களின் தலைவியாகிய காளிதேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவள் கோவில் ஆகிய செய்திகளைப் பற்றியவை. எனவே, நூலினுள் எட்டு அதிகாரங்கள் பேய்கள் உலகத்தைக் காட்டுகின்றன என்று துணிந்து கூறலாம். இனி, கவிஞர் படைத்துள்ள பேய்களின் உலகைக் காண்போம்.

பேய்கள்

கலிங்கத்துப் பரணியில் கவிஞர் படைத்துள்ள பேயுலகிலுள்ள பேய்கள் பன்னெடுநாள் உணவின்றிப் பசிப்பிணியால் வாடுபவைகளாக வுள்ளன.
 1. குமரகுருபரர் : நீதி நெறி விளக்கம்.செய். 6.
அவை வாழ்விலும் தாழ்விலும் தம் தலைவியாகிய காளிதேவியின் அடியை மறவாதிருக்கின்றன.

இதனை

எவ்வனங்கும் அடிவனங்க
இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை அகலாத
அலகைகளை இனிப்பகர்வாம்.[1]

[அணங்கு-தெய்வமகளிர், காளி; அலகை-பேய்]

என்பனால் அறியலாம். தமக்கு உணவின்மையால் உயிர்விடும் காலம் நெருங்கி விட்டது என்று தம் தேவியிடம் கூறிக்கொண்டு அவளை விட்டு அகலாதிருக்கின்றன. பசிக் கொடுமையைக் கவிஞர்,

புயல ளிப்பன மேலும வளித்திடும்
பொற்க ரத்தபயன்புலி பின்செலக்
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங்
காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்[2]

[புயல்-மேகம்; கயல்.கயற்கொடி, சுரம்-பாலை நிலம்; பசியின்-பசியால்; தீதல்-கரிதல்]

என்று காட்டுகிறார். ஈகையில் மேகத்தையும் வென்ற சோழனுடைய புலிக்கொடி துரத்த அதற்கு ஆற்றாது பாண்டியனுடைய மீனக்கொடி ஒளித்துள்ள கொடிய பாலை நிலத்தைப் போல, வயிற்றின் உட்பக்கத்தில் வருத்தும் பசியின் வெம்மையால் உடலின் வெளிப்பக்கம் தீந்து கரிந்திருக்கின்றது. ஒவ்வொரு பேயின் வயிறும் பசியென்ற பொருளை அதிகமாக அடைத்து வைத்துள்ள குப்பி போன்றது. பேய்களின் கால்களும் கைகளும் பனங்காடுகள் போல் உள்ளன. கால்கள் மிக நீண்டு விகார வடிவமாக உள்ளன. வாய் பெரிய குகையை வெல்லுந் தன்மையது. 'வன்பிலத்தொடுவாதுசெய் வாயின' என்று கூறுகிறார் கவிஞர். இத்தகைய வாயால் உணவு கொண்டாலும் நிரம்பாத வயிறு அவற்றிற்கு வாய்த்திருக்கின்றது.

உடல் மிகவும் இளைத்திருக்கின்றது; எலும்பும் நரம்புமாய்க் கிடக்கின்றது. இதனைக் கவிஞர்

வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல்
வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பினர்[3]

[வலித்தல்-கட்டுதல்; ஏய்ந்த-ஒத்த]

என்று கூறுகிறார். பேய்களின் கன்னங்கள் இரண்டும் ஒட்டி கண்கள் குன்றுகளின் குகைகளில் தோன்றும் கொள்ளிக்கட்டைகளைப்போல் விளங்குகின்றன. அவற்றின் முதுகிற்கு மரக்கலத்தின் பின் புறத்தைத்தான் உவமை கூறலாம். அவற்றின் கொப்பூழில் பாம்பும் உடும்பும் புகுந்து தாராளமாக உறங்கலாம்; அத்துணைப் பெரிதாக இருக்கின்றது. எனவே, கவிஞரும் அதனை 'ஒற்றைவான் தொளைப் புற்று' டன் உவமை கூறினார்.

பேய்களின் உடலிலுள்ள மயிர்கள் கரிய பாம்புகள் தொங்குவன போலிருக்கின்றன. மூக்குகளில் பாசி படர்ந்திருக்கின்றது. காதுகளில் முன்னதாகவே ஆந்தைகள் புகுந்து பதுங்கிக்கொண்டமையால் வௌவால்கள் பதுங்க இடமின்றி வலக்காதுகளுக்கும் இடக்காதுகளுக்குமாக உலாவுகின்றன. அவற்றின் பற்கள் மண்வெட்டி இலையைப்போல் அகன்றும் கொழுவைப்போல் நீண்டும் இருக்கின்றன. அவற்றின் உதடுகள் மிகவும் தடித்து நீண்டு மார்பளவும் தொங்குகின்றன. பாம்புகளில் ஓந்திகளைக் கோத்துத் தாலிகளாக அணிந்திருக்கின்றன. இந்த வடிவங்களுடன் உள்ள பேய்கள் வானை எட்டும் உயரமாக உள்ளன.

மூங்கில்களுக்கும் பேய்களுக்கும் வேறுபாடு புலப்படவில்லை; பேய்களின் குழந்தைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேற்றுமை தெரியவில்லை.

அட்ட மிட்டநெ டுங்கழை காணிலென்
அன்னே யன்னையென் றாலுங்கு ழவிய;
ஒட்ட வொட்டகங் காணிலென் பிள்ளையை
ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.[4]

[அட்டம்-அண்மை; ஆலும்-ஒலியிடும்; குழவி-பேயின் குழந்தை; ஒட்ட-அண்மையில் ஒக்கலை-இடுப்பு]

உயர்ந்த மூங்கில்களைக் காணுங்கால் பேய்க்குழவிகள் 'அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டு செல்லுமாம்; ஒட்டகங்கள் தம்மை நெருங்கி வருங்கால் தாய்ப்பேய்கள் அவற்றைத் தம் இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்ளுமாம்.

பேய்கள் இருக்கும் காடு

பாலை நிலந்தான் பேய்களின் இருப்பிடம், சங்க இலக்கியங்கள் காட்டுகின்றனவே அது போன்ற காடுதான். எங்கும் ஒரே மணற்பரப்பு. ஒரு மணலைக் கடலிலிட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப் போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல் தான் இராமாயண காலக் குரங்குகள் கடலை அணைப்பதற்கு மலைகளைத் தூக்கி வருந்தின.

அணி கொண்ட குரங்கினங்கள்
     அலைகடலுக் (கு) அப்பாலை
மனலொன்று காணாமல்
     வரைஎடுத்து மயங்கினவே.[5]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த; வரை- மலை; மயங்கின-வருந்தின.]

என்று கூறுகிறார் கவிஞர். அக்காட்டில் கதிரவன் வெம்மையால் பொரிப் பொரியாய்ப்போனகாரை மரங்களும், கரிந்துபோன சூரை மரங்களும், பிற மரங்களும், செடிகளும் காட்சியளிக்கின்றன. மரங்கள் தண்ணீரின்றி வாடுதலால், தங்கள் நிழலைத் தாமே உட்கொள்ளக்கூடுமெனக் கருதி அவற்றின் நிழல் இல்லாது மறைந்து போயிற்றாம்.

பருந்துகளும், புறாக்களும், மான்களும் ஆங்காங்குச் சிற்சில இடங்களில் காணப்படுகின்றன. சிவந்த நெருப்பைத் தகடாக அடித்துப் பரப்பியது போல் பாலைநிலப் பரப்பு அமைந்திருக்கின்றது. அந்நெருப்பிலிருந்து திரண்ட புகைக் கூட்டத்தை யொப்ப ஒரு சில இடங்களில் புறாக்கள் தென்படுகின்றன. பருக நீரின்மையால் செந்நாயின் வாயில் ஒழுகும் நீரைத் தண்ணீர் என்று உவந்து மகிழ்ந்து மான்கள் நக்கி நிற்கின்றன. அக்காட்டின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் கருமுகிலும் வெண்மதியும் ஓடுகையில் அவற்றின் உடலில் தோன்றிய வேர்வையே பனிநீராகப் பெய்கின்றது.

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும்
     வெண்மதியும் கடக்க அப்பால்
ஓடியிளைத் துடல் வியர்த்த வியர்வன்றே
     உருபுனலும் பனியும் ஐயோ. [6]

[கடத்தும் கடப்போம்; முகில் மேகம்; மதி- நிலா; புனல்-மழைநீர்.]

என்பது கவிஞன் கூற்று. இந்நிலத்தின் வெம்மைக்குப் பயந்துதான் தேவர்களும் நிலத்தில் கால் வைத்து நடப்பதில்லை. அவர்கள் விண் முகட்டிவிருந்துகொண்டே கார்மேகங்களாகிய திரைச் சீலையிட்டுச் சந்திரனாகிய ஆலவட்டத்தால் விசிறிக் கொள்ளுகிறார்கள். அந்த வெம்மை நிலத்திலிருந்து வீசும் காற்று தம்மிடம் வராதிருக்கும் பொருட்டே கடல்கள் ஓயாது தம் அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. திக்கு யானைகளும் தம் காதுகளை விடாது அடித்துக் கொண்டிருப்பதும் அதற்காகத்தான்.

நிலத்தில் பல வெடிப்புக்கள் காணப்படும். கதிரவன் தன் மனைவி சாயாதேவியின் பிரிவைப் பொறுக்கமாட்டாது அவ்வெடிப்புக்களில் தன் கதிர்களாகிய கைகளை விட்டு அவளைத் தேடுகிறான். பசிப் பிணியால் வாயுலர்ந்த பேய்கள் தம் வறண்ட நாக்குகளை நீட்டுவனபோல், மரப் பொந்துகளிலிருந்து பெரியபாம்புகள் வெளிக் கிளம்பும். நிலத்தில் கானலில் நீர் மிதந்து வருவதுபோல் தோன்றும்; அந்நீரில் சுழன்று வரும் சுழிகள் போல் சூறாவளி சுழன்று சுழன்று அடிக்கும். அக்காட்டில் சுடலையிலுள்ள சாம்பலில் இரத்தினங்கள் மறைந்து கிடக்கும்; அவை புகையாலும் நீறாலும் மூடுண்ட தணலை ஒத்திருக்கும். மூங்கில்கள் முத்துக்களை உதிர்த்தல், அவை அந்நிலத்தின் வெம்மை கண்டு மனமுருகிச் சொரிகின்ற கண்ணீரை யொக்கும். அம் முத்துக்கள் நிலத்தில் கிடக்கும் தன்மை, பாலை நிலத்தின் உடலில் தோன்றிய வியர்வைத்துளிகளை அல்லது கொப்புளங்களை ஒத்திருக்கும்.

காளி கோயில்

இத்தகைய கொடிய காட்டில் தான் காளி தேவியின் கோவில் அமைந்திருக்கின்றது. குலோத்துங்கன் வென்று கொன்ற அரசர்களின் தேவிமார்களுடைய ஆபரணங்களிலுள்ள இரத்தினங்கள் கோவிலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. சேனாவீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழைத்து அவர்கள் தலைகளைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டுதுள்ளது. மாற்றரசர்களின் காவற்காடுகளிலுள்ள மரங்கள் தாம் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைந்துள்ளன, யானையின் கொம்புகள் அரிச்சந்திரக் கால்களாகவும், அவற்றின் விலா வெலும்புகள் கைமரங்களாகவும் பகை வேந்தர்களின் கொடிகள் மேல்முகட்டின் கூடல் வாய்களாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. யானைகளின் முகபடாங்கள் கூரையாக அமைக்கப்பெற்றுள்ளன, கோவிலின் மதிற் சுவர்களும் கோபுரமும் எலும்புகளாலமைந்துள்ளன. கோவிலுக்கு முன்னால் இரண்டு இரும்புத் தூண்கள் நடப்பெற்று அவற்றின்மீது ஓர் இரும்பை வளைத்து மகர தோரணமாக அமைக்கப்பெற்றிருக்கின்றது. மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துடனுள்ள வீரர்களின் தலைகள், நிணத்தாலாகிய கொடிகள், பச்சிளங் குழந்தைகளின் தலைகள் ஆகியவை கோவிலின் எல்லா இடங்களிலும் தொங்கவிடப் பெற்றிருக்கின்றன.

வீற்றிருக்கும் காளிதேவி

இத்தகைய கோவிலில் வீற்றிருக்கும் காளி எவ்வாறு காணப்படுகிறாள்? அவள் உருவம் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகிறது. அவள் வாசுகி, ஆதி சேடன் ஆகிய இரண்டு பாம்புகளில் முத்துக்களாகிய பாற் கற்களை நிரப்பி அவற்றின் மீது நட்சத்திரங்களாகிய இரத்தினங்களைப் பதித்து அவற்றைச் சிலம்புகளாக அணிந்திருக்கின்றாள். நெற்றியில் சிந்தூரப் பொட்டு திகழ்கின்றது. செப்புக் கிண்ணங்கள் போன்ற கொங்கைகளில் வெண்ணீறு பூசப்பெற்றிருக்கின்றது. அவள் யானைத்தோலை ஆடையாக அணிந்திருக்கின்றாள். அதன் குடலையும் பாம்பையும் முறுக்கிக் கச்சாகக் கட்டியிருக்கின்றாள். பாம்பை மேலாடையாக அணிந்திருக்கின்றாள். பொன்னணிகளும், முத்துமாலைகளும், பவள மாலைகளும் அவள் கழுத்தில் இலங்குகின்றன. நான்முகன், இந்திரன், யானை முகத்தோன், முருகன் ஆகியவர்களைப்பெற்ற வயிற்றினையுடையவள் அவள். வீரர்கள் உதிரத்தைக் குடித்து சிவப்புற்ற கைகள், திசை யானைகளின் மத நீரில் கழுவியதால் கருமை நிறத்தையடைந்திருக்கின்றன. அமுதம் கடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சை உண்ட சிவபெருமானைத் தனது அதரபானமாகிய அமுதத்தால் தணிக்கக் கூடியவள் அவள். அவளுடைய கடைக்கண் பார்வை படுவதால் சிவமெருமானுக்கு உண்டாகும் காம நோயைத் தன் இனிய சொற்களால் தணிவிப்பாள். உலகிலுள்ள மலைகளைக் காதணிகளாகவும் அணிவாள்; விரும்பினால் அவற்றைக் கோத்து இரத்தின மாலையாகவும் சூடுவாள். அந்த மலைகள் அவளுடைய கையில் அம்மானையாகவும் அமையும்; பந்துக்களாகவும் கூடும்; கழங்குகளாகவும் கொள்ளப்பெறும். அவள் விரும்பினால் என்னதான் ஆகாது?

தேவி வழிபாடு

தேவியை வழிபடுவோர் அவள் திருக்கோவிலைப் பெருக்கி பசுங்குருதி நீரைத் தெளித்து, கொழுப்பாகிய மலர்களைத் தூவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள விறகு விளக்குகளை எங்கும் ஏற்றி வைப்பர். அவளை வழிபடுவோரின் ஒலி கடலொலி போல் எங்கும் முழங்கும். இதனைக் கவிஞர்,

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
      தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
      பரவும் ஒலி கடல் ஒலிபோல் பாக்கு மாலோ[7]

[தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்; பரக்கும் பரவும்]

என்று கூறுகிறார். பலவகை வாத்திய ஒலிகளை, ஒலிக்கும் வீரர்கள் தங்கள் விலா எலும்புகளைச் சமித்ததாகவும் குருதியை நெய்யாகவும் கொண்டு ஓமத் தீவளர்த்து வேள்வி புரிவர். சில வீரர்கள் தங்கள் சிரங்களை அறிந்து தேவியின் கையில் கொடுப்பர்; அத்தலேகள் தேவியைப் பரவும்; தலை குறைந்த உடலங்கள் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரித்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
      குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[8]

[அணங்கு-காளி; கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]

என்பது கவிஞன் வாக்கு. பலி பீடத்தில் அரிந்து வைத்த வீரர்களின் தலைகளை ஆண்டலைப் புட்கள் அணுகும்பொழுது அவற்றை அத்தலைகள் வெருட்டியோட்டும். தலைகளை அரிந்தபின் களிப்பால் துள்ளும் உடல்களைப் பேய்கள் தொடுவதற்கு அஞ்சி அவை நிலத்தில் விழும் வரையில் அவற்றைத் தொடர்ந்து நிற்கும்.

மூங்கில்களின் நுனியில் தொங்கும் வீரர்களின் தலைகள் எல்லாத்திசைகளிலும் கண்விழித்து இமையாது சிரிக்கும் காட்சிகளைக் கண்டு சில பேய்கள் விடியும் வரையிலும் தூங்காதிருக்கும். வீரர்களின் தலைகளைக்கொண்ட சில மூங்கில்கள் பாரத்தால் வளைந்து இரத்தப்பெருக்கில் மூழ்கியிருக்கும். அவை இறந்துபட்ட வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களைப்போல் தோன்றும்.

அரிந்ததலை யுடன் அமர்ந்தே ஆடுகழை
    அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற
    நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்[9]

[அமர்ந்து பொருந்தி; கழை-மூங்கில்; காலன் யமன்;]

என்பது கவிஞனின் சொல்லோவியம்.

வழிபடுவோர் பல வகை வாத்திய ஒலிகளைக் கேட்டுத் தேவியை வணங்க வருவர். சாதகர் என்ற தேவியின் மெய்காப்பாளர் தோற்கருவிகளின் ஒலி கேட்டு வருவர் ; யோகினிமார் என்ற தேவியின் பரிவார மகளிர் வாளாயுதத்தை வலக்கையிலும் வீரர்களின் தலைகளை இடக்கையிலும் கொண்டு தேவியிடம் வருவர், பிணங்களைத் தின்னும் பருந்துகள், பேய்கள் முதலியன தேவியின் கோவில்சூழ இருக்கும்; பிணங்களைக் கவருவதில் நரிகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும். பேய்கள் தம் குழந்தைகளின் பொருட்டு நரிகளின் வாயிலுள்ள இனிய தசைகளைப் பறித்துச் செல்லும்.

காளி தேவியின் கோவிலில்தான் மக்கள் உலகமும் பேய்கள் உலகமும் சந்திக்கும் இடமாகும். ஆனால் அவ்விரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்வதில்லை.

இந்திர சாலம்

ஒருநாள் காளிதேவி பேய்கள் சூழ கொலுவீற்றிருக்கும்பொழுது சுரகுரு என்ற சோழன் காலத்தில் காளி தேவியின் சீற்றத்துக்கு அஞ்சி இமயமலையில் ஓடி யொளித்த பேய் முதற் குலோத்துங்கன் காலத்தில் தேவியின் முன் வந்து கண்டோர் வியப்புறுமாறு இந்திரசால வித்தைகளைக் காட்டுகின்றது. போர்க்கத்திலுள்ள காட்சிகள் 'தத்ரூபமாக'க் காளிக்குக் காட்டப் பெறுகின்றன. முதுபேய்,

துதி வீழ்துரக ராசியார்! உடல்து
     ணிந்து வீழ்குறைது டிப்பபார் !
அஞ்சி யோடுமத யானைபார்!
     உதிர ஆறும் ஓடுவன நூறுபார்![10]

[துஞ்சல்-இறத்தல்; துரகம் குதிரை]

என்று தன் மாய வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெட்டுண்டு துடிக்கும் வீரர் உடல்களையும் வெருவியோடும் யானைகளையும் பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டுகின்றது. இத்தகைய சாலவித்தைகளில் மயங்கின பேய்கள் பிணங்களைப் புசிக்கும் ஆவலால் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து அடித்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றன. மாயப்போரில் கண்ட பிணங்களின் குருதியையும் தசையையும் விரும்பி வெறுங்கை முகந்து நிலத்தைத் துழாவலாயின. முதுபேய் தேவியை நோக்கி,

கொற்றவர்கோன் வாளப்யன் அறிய வாழும்
     குவலயத்தோர் கலையனைத்தும் கூறஆங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
     கடைபோகக் கண்டருள்என் கல்வி என்றே[11]

[கொற்றவர் கோன்- அரசர்க்கரசன்; குவலயம் -உலகம்;

கடைபோக-முடிய.]

மீண்டும் வேண்டியபோது, பேய்கள் யாவும் அவற்றைக் காட்ட வேண்டாமென்று முறையிட, அவ்வாறே வித்தை காட்டல் நிறுத்தப்பெறுகின்றது.

பேய்கள் குறை இரத்தல்

எல்லாப் பேய்களும் ஒன்று திரண்டு வந்து காளி தேவியிடம் தம் பசிக்கொடுமையைக் கூறி அதைப் போக்குமாறு வேண்டுகின்றன.

சாவத்தால் பெறுதுமோ சதுமுகன்றான்
    கீழ் நாங்கள் மேனாள் செய்த
பாவத்தால் எம்வயிற்றில் பசியை வைத்தான்
    பாவியேம் பசிக்கொன் றில்லேம்[12]

[சாவம்-சாபம்; சதுமுகன்- நான்முகன்]

என்று பேய்கள் தம் நிலையைத் தெரிவிக்கின்றன. தம்முடைய மூக்கின் அருகே வழு நாறுவதாலும், முடைநாறுவதாலும் உதடுகள் துடிக்கும்படி ஈக்கள் மொய்ப்பதாலும் அவற்றை நன்னி மித்தங்களாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாக உரைக்கின்றன.

அப்பொழுது இமயத்தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் அங்கு கண்ட சில தீய நிமித்தங்களைக் கூறுகின்றது. ஆண் யானைகளுக்குக் கொம்பு முறிதல், பெண் யானைகளுக்கு மருப்புக்கள் முளைத்தல், ஒளி வீசி எரியும் விளக்குகள் கறுத்து எரிதல், பருவமுகில்கள் செங்குருதிகளைப் பெய்தல், முரசங்கள். தாமே முழங்குதல், இரவில் இந்திரவில் தோன்றுதல், ஊரிலுள்ள இல்லங்களில் கோட்டான்கள் தோன்று தல், நரிகள் ஊளையிடுதல், வேள்வித்தீ சுடலைத்தீ போல் நாறுதல், பூமாலைகள் ஒளியிழத்தல், ஓவியங்களில் வியர்வை நீர் தோன்றுதல், தடாகத்தில் இரத்தம் மாறுதல் ஆகியவை அது கண்ட தீ நிமித்தங்களாம்.

அவற்றைக் கேட்ட காளிதேவி கணிதப்பேய் நனவிலும் கனவிலும் கண்டதைக்கூறி ஒரு பரணிப் போர் நடைபெறப் போவதாக உரைக்கின்றாள். பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன.

போர்க்களத்தில் கூழ் சமைத்தல்

முதுபேயின் வேண்டுகோளுக் கிணங்க காளி தேவி தன் பேய்க்கூட்டங்களோடு போர்க்களத்துக்குச் சென்று அங்குள்ள காட்சிகளை ஒவ்வொன்றாக தம் பேய்களுக்குக் காட்டுகின்றாள். பிறகு அவைகளைக் கூழடுமாறு ஆணையிடுகின்றாள்.

முதலில் பேய்கள் காலைக்கடன்கள் செய்து முடிக்கின்றன. யானைகளின் மருப்பால் பல்லை விளக்கி அவற்றின் பழு எலும்பால் நாக்கை வழித்துக்கொள்கின்றன. கூரிய அம்புகளால் நகங்களைக் களைந்து யானையின் மத நீராகிய எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு வெண்மூளையாகிய களிமண்ணைக்கொண்டு நன்றாகத் தேய்த்து குருதித்தடாகத்தில் நீந்தி விளையாடுகின்றன. குளித்தபிறகு நிணத் துகில் உடுத்திப் பல்வேறு அணிகளைப் புனைந்து கொள்ளுகின்றன.

பிறகு கூழடுதல் தொடங்குகின்றது. பருந்து நிழற்பந்தலின் கீழ் யானைப் பிணங்களின்மேல் சமையலறை அமைக்கப்பெறுகின்றது. யானையின் மதநீரால் நிலத்தை மெழுகி முத்துத்தூளால் கோலமிட்டு யானைத்தலைகளை அடுப்பாக அமைத்துக் கொள்கின்றன. யானை வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரைகளின் இரத்தம் உலை நீராகவும், அவற்றின் பற்கள் வெங்காயமாகவும், வீரர்களின் நகங்கள் உப்பாகவும் கொள்ளப் பெறுகின்றன இறந்துபட்ட வீரர்களின் அம்புகள், வேல்கள், கோல்கள். முதலியவற்றை விறகாகக் கொண்டு வீரர்களின் கோபக்கனலாகிய தீயைக் கொண்டு அடுப்பு மூட்டப் பெறுகின்றது. கலிங்க வீரர்களின் பற்களாகிய அரிசியை முரசங்களாகிய உரல்களில் சொரிந்து யானைக் கோடுகளாகிய உலக்கைகளால் நன்கு குற்றி, சல்லவட்டம் என்னும் சுளகால் புடைத்து உலையிலிட்டுக் கூழ் காய்ச்சப்பெறுகின்றது. கூழ் பானையிற் பிடித்துக் கொள்ளாதிருக்கும்பொருட்டுப் போர் வீரர்களின் கைகளாகிய துடுப்புக்களைக் கொண்டு நன்கு துழாவப் படுகின்றது. நல்ல பதம் வந்ததும் குதிரைகளின் இறைச்சியாகிய நுணியைப் பிடித்து மெதுவாக இறக்கப்படுகின்றது.

கூழுண்ணல்

பிறகு பேய்கள் கூழுண்ணத் தொடங்குகின்றன. யானைகளின் மத்தகங்களில் குருதிப் பேராற்றில் நீர் முகந்து குடிநீராக வைத்துக் கொள்ளப் பெறுகின்றது. வேழங்களின் வால்களைக்கொண்டு பெருக்கி, குருதி நீர் தெளித்து, உண்ணும் இடம் ஆயத்தம் செய்யப்பெறுகின்றது. அரசர்களின் கேடகங்கள் மண்டையோடுகள் ஆகியவை உண்கலன்களாகவும், மன்னர்களின் கேடகங்கள் பொற்பாத்திரங்களாகவும் , அவர்களின் வெண்கொற்றக் குடைகள் வெள்ளிப் பாத்திரங்களாகவும், யானைச் செவிகள் பரிமாறும் பாத்திரங்களாகவும், வேல் பாய்ந்த வீரர்களின் தலைகள் அகப்பைகளாகவும் பயன்படுகின்றன. தேவியருளால் உயர் பதவி பெறுவோரின் விழிக்கனல் பகல் விளக்காகவும் நிணம் பாவாடையாகவும் கொள்ளப்படுகின்றன. பார்ப்பனப் பேய்கள், சமணப் பேய்கள், புத்தப் பேய்கள், பார்வைப் பேய்கள், குருட்டுப் பேய்கள், ஊமைப் பேய்கள், செவிட்டுப் பேய்கள், சூற்பேய் கன், மூடப் பேய்கள், நோக்கப் பேய்கள், கூத்திப் பேய்கள், கனவுகண்ட பேய்கள், கணக்கப் பேய்கள் ஆகிய பேய்களுக்கு அவையவை தகுதிக் கேற்றவாறு கூழ் வார்க்கப்பெறுகின்றது. கூழுண்ட பின் குதிரைகளின் காதுகளாகிய வெற்றிலையும் அவைகளின் கணைக்கால் பிளவுகளாகிய பாக்கையும் கலிங்க வீரர்களின் கண்களிலுள்ள வெண்மணியாகிய சுண்ணாம்பையும் கலந்து தாம்பூலம் தரித்துக் கொள்ளுகின்றன. தாம்பூலத்தை அதிகம் தின்று புரையேறின பேய்கள் பூதத்தின் தலையிலுள்ள மயிரை மோந்து பார்க்கின்றன.

உண்டகளிப்பு

நீண்ட நாட்கள் பசியால் வாடிக்கிடந்த பேய்கள் உண்டு வயிறு நிரம்பியதும் மகிழ்ச்சியால் மலைகள் கூத்தாடுவனபோல் கூத்தாடுகின்றன. சில பேய்கள் ஆடைகளை மேலே வீசிப் பாடி விளையாடுகின்றன; சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடி கைவீசி ஆடுகின்றன; சில யானைகளின் வயிறுகளில் புகுந்தும், இரத்த வெள்ளத்தில் விழுந்தும், விளையாடுகின்றன; சில தரையில் வீழ்ந்து புரண்டும் தலைவிரி கோலமாய் ஓடியும் ஆடுகின்றன. சில பேய்கள்,

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
    பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
    கங்கை மணாளனை வாழ்த்தினவே[13]

[பொன்னி-காவிரி; பொருநை - தாமிரவரணி; கன்னி

கன்னியாகுமரி; கங்கை-கங்கையாறு]

எல்லாப் பேய்களும்,

யாவ ருங்களிசி றக்கவே; தருமம்
    எங்கு மென்றுமுள தாகவே;
தேவ ரின்னருள்த ழைக்க வே;முனிவர்
    செய்த வப்பயன்விளைக்கவே;[14]

வேத நன்னெறி பரக்க வேயபயன்
   வென்ற வெங்கலிக ரக்கவே;
பூத லம்புகழ்ப ரக்க வேபுவிதி
    லைக்க வேபுயல்சு ரக்கவே [15]

என்று சொல்லி வாழ்த்துகின்றன.

இவ்வாறு, சயங்கொண்டார் தன் கற்பனை ஆற்றலால் புதியதோர் பேய்கள் உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார். கவிஞர் மனித உலகை ஊன்று கோலாகக்கொண்டு பேசுவதால் மனித உலகத்தேவைகளே பேய்கள் உலகத் தேவைகளாகக் காணப்பெறுகின்றன, அவர் செய்த காவியமும் மனித உலகைச்சார்த்த நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டுள்ளது. மனித உலகையே ஊன்று கோலாகக்கொண்ட நம்மைத்தவிர வேறு யார் தான் அதனைச் சுவைத்துப் பயன் காண முடியும்? 1. தாழிசை-134
 2. தாழிசை-143
 3. தாழிசை-137
 4. தாழிசை-142
 5. தாழிசை-96.
 6. தாழிசை -86.
 7. தாழிசை -109
 8. தாழிசை -111
 9. தாழிசை -118.
 10. தாழிசை-165.
 11. தாழிசை -174
 12. தாழிசை -216
 13. தாழிசை 592.
 14. தாழிசை 595.
 15. தாழிசை-596