கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/வரலாற்று கருவூலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வரலாற்றுக் கருவூலம்


ரலாற்று ஆராய்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வேண்டப்படுபவைகளுள் முக்கியமானதொன்று. முன்னோர் ஒழுகிக்காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னோர் கொண்டிருந்த உயர்ந்த பண்புகளையும் பின்னோர்க்கு எடுத்துக்காட்டுவது வரலாற்று நூல். வரலாற்றுத்துறை அறிவு வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துத் தரும் இன்றியமையாத துறை. அதுபற்றியே நாகரிகம் எய்தியுள்ள மேற்புல அறிஞர் தம் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து பல நூல்கள் வடிவாக வெளியிட்டு வருகின்றனர்; அதனால் நிறைந்த பயனையும் எய்தி வருகின்றனர். மேனாடுகளில் எத்தனையோ விதமாக வரலாற்று நூல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவை அவர்களுடைய தாய்மொழியில் வெளியிடப் பெற்றிருப்பதாலும், அனைவரும் அவற்றைப் படித்து வருதலாலும், அவர்களிடம் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. எனவே, ஒரு நாட்டு மக்களுடைய வரலாறு அந்நாட்டு மக்களின் தாய் மொழியில் வெளியிடப்பெற்றால் அஃது அன்னோரது அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி புரியும் என்பதற்குச் சிறிதளவும் ஐயம் இல்லை.

வரலாற்று மூலங்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை நன்கு அறிந்து கொள்வதற்கு மூலங்களாக இருப்பவை அந்நாட்டில் முன்னோர் எழுதிவைத்துள்ள கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கோவில்கள், சிற்பங்கள், நாணயங்கள், இலக்கியங்கள் ஆகியவையாகும். அவற்றில் காணக்கிடைக்கும் ஒருசில குறிப்புக்களைக்கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நூலை எழுதுவர்; அக்கால மக்கள் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, வாணிகம் முதலிய பல்வேறு செய்திகளையும் அவற்றின் மூலம்தான் அறியவேண்டும். 'கலிங்கத்துப் பரணி' யிலிருந்து சோழர்கால வரலாற்றையும் அக்கால மக்களின் வாழ்க்கையைப்பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ளலாம். அதில் காணக்கிடைக்கும் ஒரு சில செய்திகள் கல்வெட்டுக்கள் போன்ற பிற மூலங்களால் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு உறுதிப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியில் காணக் கிடைக்கும் அத்தகைய ஒரு சில குறிப்புக்களை ஈண்டு நோக்குவோம்.

சோழர் கால வரலாற்று மூலம்

கலிங்கத்துப் பாணியிலுள்ள 'இராச பாரம்பரியம்' என்ற பகுதியில் சோழர் குலமுறை தொடக்கம் முதல் கிளததப்படுகின்றது. கவிஞன் நாரதன் என்ற இதிகாச முனிவனக் கொண்டுவந்து நிறுத்துவதால் அதிலுள்ள செய்திகள் யாவும் 'உயர்வு நவிற்சி’யாகவே இருக்கின்றன. சோழர் வரலாற்றை நாரதன் உரைப்பதாகவும், அதைக் கரிகாலன் இமயத்தில் பொறித்து வைப்பதாகவும் அதை ஒரு முதுபேய் கற்றுவந்து காளிக்கு உரைப்பதாகவும் நூல்கூறுகின்றது. அதுபோலவே, அவதாரம் என்ற பகுதியில் பாட்டுடைத் தலைவனுகிய முதற் குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல் படைக்கலப் பயிற்சி, முடிபுனைதல் முதலிய செய்திகள் விரித்துப் பேசப்பெறுகின்றன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே பேசப்படுகின்றான்.

அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
பாரதப்பேரர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
எனஉதித்தான் விளம்பக் கேண்மின்[1]
[ ஆழி-சக்கரம், ஆணைச்சக்கரம்; விசயதரன்-குலோத்துங்கன் ]

என்று முதுபேயின் வாயில் வைத்துக் குலோத்துங்கன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிறார் கவிஞர். இலக்கியமாதலால், அப்பகுதியிலுள்ள செய்திகள் கற்பனை நயம் செறிய உயர்வு நவிற்சிகளாகவே உள்ளன. என்றாலும், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்கள் தெளிவாக இல்லாமல் இல்லை. அவற்றைத் தவிர 'காளிக்குக் கூளி கூறியது' என்ற பகுதியில் குலோத்துங்கனின் திருவோலக்கச் சிறப்பு, அவன் கலிங்கநாட்டின் மீது படை எடுத்தற்குரிய காரணம், படைகள் கலிங்க நாட்டுடன் பொருது வென்றமை முதலிய செய்திகளும், 'பேய்களைப் பாடியது', 'கோயில் பாடியது' என்ற பகுதிகளில் பேய்களின் குறையுறுப்புக்களைக் கூறுவதுபோல் குலோத்துங்கனின் வெற்றிகளைப்பற்றிய செய்திகளும் 'களம் பாடியது' என்ற பகுதியில் பேய்கள் கூழ் சமைத்தற்கு அரிசியைக் குற்றும்போது பாடுவதாக அமைந்துள்ள வள்ளைப் பாட்டுக்களிலும் கூழை உண்டபின் பாடும் வாழ்த்துப் பாடல்களிலும் சோழ அரசர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

வரலாற்று நூல் குறிப்பிடும் சோழ அரசர்கள்

திருமாலே சோழர்குல முதல்வனுகக் குறிக்கப் பெறுகின்றான்.திருமால் நாபியிலிருந்து நான்முகன் பிறந்த செய்தியும், நான்முகன் மரீசியைப் பெற்றதும், மரீசிக்குக் காசிபன் மகனாகப் பிறந்ததும், காசிபன் சூரியனைப் பெற்றெடுத்ததும் உரைக்கப் பெறுகின்றன. அன்றியும், மனுச்சோழன், இட்சுவாகு, விருட்சி, ககுத்தன், மாந்தாதா, முசுகுந்தன், பிருது லர்ட்சன், சிபி, கராதிராசன், இராச கேசரி, கிள்ளிவளவன், கவேரன், மிருத்யுசித்து சித்திரன், சமுத்திரசித்து, பஞ்சபன், திலீபன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், உபரி சரன், பாரதப்போரில் பங்குகொண்ட சோழன், சூர வர்க்கன், கோச்செங்கணான், கரிகாலன், முதற் பராந்தகன், முதல் இராசராசன், முதல் இராசேந்திர சோழன், முதல் இராசாதிராசன், இராசேந்திர தேவன், இராச மகேந்திரன், வீர ராசேந்திரன், முதற் குலோத்துங்கன் (கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத்தலைவன்) ஆகியவர்களைப்பற்றிய குறிப்புக்களும் காணப்பெறுகின்றன. கரிகாலனுக்கு முற்பட்டவர்கள் யாவரும் இதிகாச உலகைச் சேர்ந்தவர்கள்; அவனுக்குப் பின் வந்தவர்கள் வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் செய்த போர்கள், அடைந்த வெற்றிகள், கொடைத்திறன் போன்ற செய்திகள் நூலில் குறிக்கப்பெற்றுள்ளன.

இந்நூல் குறிக்கும் போர்கள்

முதல் இராசராசன் சேர நாட்டில் சதய விழாவை ஏற்படுத்தி அந்த நாட்டிலுள்ள உதகை என்னும் நகரை வென்றவன். கலிங்கத்துப்பரணி இவனை 'உதகை வென்ற கோன்' என்று குறிப்பிடுகின்றது. இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரையில் களிறுகளுக்கு நீரூட்டினான்; பர்மா தேசத்தைச் சார்ந்த கடாரத்தை வென்றான். இச் செய்தியை,

களிறு கங்கைநீர் உண்ண மண்ணையிற்
காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்.[2]

என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. முதல் இராசாதி ராசன் மேலைச் சளுக்கியர்களுடன் போர்புரிந்து துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள கம்பிலி என்னும் நகரத்தையும் அதிலிருந்த அரண்மனையையும் அழித்தொழித்த செய்தி 'கம்பிலிச்சயத் தம்ப நட்டதும்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவனும் இவன் தம்பி இராசேந்திர தேவனும் மேலைச் சளுக்கியருடன் கிருஷ்ணா நதிக் கரையிலுள்ள கொப்பத்தில் போர் புரிந்து போர்க்களத்திலேயே முடி கவிழ்த்துக் கொண்ட செய்தியையும் இந்நூல் குறிக்கின்றது.[3] கிருஷ்ணாவும் துங்கபத்திரையும் கலக்கும் இடத்திலுள்ள கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரன் குந்தளருடன் போர் புரிந்து வெற்றியடைந்த செய்தி,

குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற
கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை[4]
[கோன்-அரசன், குவலயம்-உலகம்]

என்ற அடியால் குறிப்பிடப் பெறுகின்றது. இது விக்கிரமசோழனுலாவிலும்,

கூடல்
சங்ககத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும்[5]

என்று குறிப்பிடப் பெற்றுள்ளது.

பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களனைத்தும் நூலில் நுவலப்படுகின்றன. குலோத்துங்கன் இளவரசனானவுடன் திக்கு விசயஞ் செய்து வெற்றி கொண்ட நிகழ்ச்சிகள் முதல் பின்னர் பேரரசனானவரை அவன் அடைந்த வெற் றிகள் யாவும் அவதாரம் என்ற பகுதியில் குறிப்பிடப் பெற்றுள்ளன. குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து வடதிசை நோக்கிச் சென்று மத்திய மாகாணத்திலுள்ள வத்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம்
  1. தாழிசை-232
  2. தாழிசை-202
  3. தாழிசை-204
  4. தாழிசை-208
  5. கண்ணி-22
என்ற இடத்தே பொருது வெற்றி கொண்டதுதான் இவனது கன்னிப்போராகும். [1] இதனைக் கவிஞர்,
மனுக்கோட்டம் அழித்தபிரான்
வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம்
பட்டதுசக் கரக்கோட்டம்[2]
[மனு-மனிதர்கள்; கோட்டம்-தீநெறி; புருவத்தனு-புருவவில்; நமன்-யமன்]

என்று குறிப்பிடுகிறார். வயிராகரத்தை எரியூட்டியதை 'திகிரி புகைஎரிகு விப்ப வயிரா, சுரமெரி மடுத்து'[3]என்ற அடியால் பெற வைக்கிறார். இதையே எங்கவராயன் வாயில் வைத்தும்,

மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
வேறு பட்டதும் இம்முறையே யன்றோ?"[4]

என்று பின்னால் குறிப்பிடுகிறார் கவிஞர்.

குலோத்துங்கன் துங்கபத்திரை நதிக்கரையில் நடைபெற்ற போரில் குந்தள அரசனையும் அவன் தம்பியையும் வென்று அவர்கள் தலைநகரமாகிய கலியாணபுரத்தைக் கைப்பற்றிய செய்தியும்[5] மீண்டும் அளத்திப் போர்க்களத்தில் குந்தள அரசனை வென்ற செய்தியும் நூலில் குறிப்பிடப் பெறுகின்றன. மைசூர் நாட்டைச் சேர்ந்த நவிலையில் பல சிற்றரசர்களை வென்று பல யானைகளைக் கைக் கொண்டமை,

கண்ட நாயகர் காக்கும்ந விலையில்
கொண்டதாயிரம் குஞ்சரம் அல்லவோ[6]
  1. தாழிசை-252
  2. தாழிசை-254
  3. தாழிசை-252
  4. தாழிசை-384
  5. தாழிசை-103
  6. தாழிசை-385
என்று குறிக்கப் பெறுகின்றது. இன்னும் இவன் அக்காலத்தில் ஆண்ட ஐந்து பாண்டிய அரசர்களையும் வென்றான்.[1] பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த பொழுது முத்துக்கள் மிகுதியாகக் கிடைக்கும் மன்னார் குடாக் கடலைச் சார்ந்த நாட்டையும், பொதியிற் கூற்றத்தையும், கன்னியாகுமரியையும், கோட்டாற்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். இவற்றை மீண்டும் பாண்டியர் கவராதவாறு கோட்டாற்றில் கோட்டாற்று நிலைப்படை என ஒரு படையை ஏற்படுத்தினான்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஒட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்[2]

[ஆறு-வழி; தென்னர்-பாண்டியர்; முனிதல்-வெகுளல்; வெள்ளாறு-ஒர் ஆறு; கோட்டாறு-நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஓர் ஊர்]

என்ற தமிழிசையில் இச்செய்தி குறிப்பிட்டுள்ளமை காண்க. சேரரையும் வென்று வாகை சூடினான்.[3] சேரனை வெற்றி கொண்டு திருவனந்தபுரத்திற்குத் தெற்கேயுள்ள விழிஞம், காந்தளூர்ச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில் இருந்த மரக்கலங் களைச் சிதைத்தழித்த செய்தி,

வேலை கொண்டு விழிஞ மழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றோ?[4]

[சாலை-காந்தளூர்ச்சாலை]
என்ற தாழிசையில் குறிப்பிடப் பெற்றுள்ளது.
  1. தாழிசை-381
  2. தாழிசை-95
  3. தாழிசை-382
  4. தாழிசை-383.
அக்கால அரசர் இயல்புகள்

அரசர்கள் படைக்கலப் பயிற்சி பெற்ற பின் உடைவாளைத் தம் அரையில் பூண்டிருப்பர். அரசவை யில் அரசு வீற்றிருக்கும் பொழுது அரசன் தன் தேவியுடன் இருத்தல் வழக்கம். குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்த செய்தியைக் குறிக்கும் கவிஞர்,

" தேவியர் சேவித் திருக்கவே "[1]

என்று கூறுவதிலிருந்து இதை அறியலாம். அரசனுடைய அணுக்கிமார் நாடகம் நிருத்தம் முதலியவற்றிலும் பாலை, குறிஞ்சி, செவ்வழி, மருதம் என்ற நால்வகைப் பண்களிலும் வல்லோராய் இருப்பர்.[2] அரசவையில் வீணை, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.[3] அரசருடைய புகழைப் பாடுவதற்குச் சூதர், மாகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதாளிகர் என்போர் அரசவையில் இருந்தனர்.[4] அரசனுடைய ஆணையைப் பிறருக்கு அறிவிப்பதற்கும் பிறருடைய விருப்பங்களை அரசனுக்குத் தெரிவித்தற்கும் உரிய அதிகாரி ' திருமந்திர ஓலையாள் ' என்ற பெயரைப் பெற்றிருந்தான்.[5]

அரசன் ஒன்று குறித்து வெளிச்செல்லுங்கால் மறையோர்க்குத் தான தருமங்கள் செய்தும் கவி வாணர்க்குப் பரிசளித்தும் புறப்படுவது வழக்கம்[6] பேரரசர் புறப்படுங்கால் சிற்றரசர் சயஒலி முழக்குவர்; மறையவர் மறைகளை மொழிவர்.[7] சங்கு,
  1. தாழிசை-320
  2. தாழிசை-321
  3. தாழிசை-323
  4. தாழிசை-322
  5. தாழிசை-328
  6. தாழிசை-281
  7. தாழிசை-294
பல்லியங்கள் முதலியவை ஒலிக்கப்பெறும், சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பெற்றது.[1] பயணம் செய்வோர் யானை, தேர், சிவிகை ஆகியவற்றில் ஏறிச் செல்வர். அரசர்கள் களிறூர்ந்து செல்லலும் தேவியர் பிடியூர்ந்து செல்லலும் அக்கால வழக்கமாகும்.[2]

சிற்றரசர்கள், மணிமாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச்சரடு, மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியவற்றையும் யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும் பேரரசர்கட்குத் திறைப்பொருள்களாகத் தரும் வழக்கம் இருந்தது.[3] திறைப் பொருள்கள் எருதுகளின்மீது கொண்டுவரும் வழக்கம் இருந்தாகத் தெரிகிறது. இதனைப்,

'பகடு சுமந்தன திறைகள் '[4]

என்ற சொற்றொடரால் அறியலாம். மகளிரையும் திறைப் பொருளாகக் கவர்வதும் உண்டு, சிற்றரசா்கள் பேரரசர்கட்கு மகளிரைத் திறைப்பொருளாகத் தருவதும் உண்டு.[5] அம்மகளிர் தனியாக வாழு இடத்தை 'வேளம்'என்று குறிப்பிடுவர். அந்தப்புரத்தில் சேடியராகப் பணியாற்றுவர்.[6] இது போலவே, சிற்றரசர்கள் பேரரசர்கட்குக் குற்றேவல் புரிவர்.[7] அக்காலப் போர் முறை

கலிங்கத்துப் பரணியால் அக்காலப் போர் முறைகளையும் அறியலாம். அரசர்கள் போருக்குப் புறப்படுங்கால் சங்கு முழக்கியும் முரசதிர்ந்தும், இயமரம் இரட்டியும், கொம்புகளை ஒலித்தும் செல்வது வழக்கம்.[8] பகையரசர் நாட்டினைப் படைகள் தாக்குங்கால் அவர் ஊரினை எரிகொளுவியும் சூறை கொண்டும் அழித்தல் இயல்பாக இருந்தது. கருணாகரனின் படை கலிங்க நாட்டினை அழித்த செய்தியை,

அடையப் படர் எரி கொளுவிப் பதிகளை
அழியச் சூறைகொள் பொழுதத்தே[9]

என்று கவிஞர் கூறுவதைக் காண்க.

போர்க்களத்தில் இருதிறத்துப் படைகள் ஒன்றோடொன்று போரிடுங்கால், நால்வகைப்படையுள் ஒவ்வொரு வகைப் படையும் அவ்வப் படையுடனேயே போரிடுவது மரபு. உலக்கை, சக்கரம், குத்தம், பகழி, கோல், வேல் முதலியவை போர்க்கருவிகளாகப் பயன்பட்டன. இரவில் போர் செய்தலை மேற்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. கலிங்கப்போரின் மேற்சென்ற படை,

உதயத்து ஏகுந்திசை கண்டு அது
மீள விழும் பொழுது ஏகல் ஒழிந்து.[10]

என்று கூறப்படுதலாலும், கலிங்க வேந்தன் படை சூழப்பற்றியிருந்த மலைக்குவட்டை சூரியன் மறையும் நேரத்தில் அணுகிய படை,

வேலாலும், வில்லாலும் வேலி கோலி
வெற்பதனை விடியளவும் காத்து நின்றே,[11]

என்று கூறப்படுதலானும் இவற்றை அறியலாம்.

போர்க்களத்தில் தோற்றோடிய அரசர் விட்டுப் போன குடை, சாமரம் முதலியவற்றை வென்ற வேந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன் பயன்படுத்துவர். குலோத்துங்கன் காஞ்சியிலமைக்கப்பெற்ற சித்திரமண்டபத்தில்வீற்றிருந்தபொழுது

வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
தங்கள் தங்கரத் தாற்பணி மாறவே.[12]

[வெந்இடுமுன்பு முதுகுகாட்டியோடுமுன்பு ; இடுவிட்டுப்போன ; பனிமாற-குற்றேவல் புரிய]

என்று கவிஞர் கூறுவதை நோக்குக, போரில் தோற்றோடிய அரசர்கள் மலைக்குகைகளிலும், மலைப் பள்ளத்தாக்குகளிலும், மறைவது அக்கால இயல்பாக இருந்தது.[13] காடு, மலை, கடல் முதலியவை சிறந்த அரண்களாக மதிக்கப்பெற்றிருந்தன.

கானரணும் மலையரணும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தான் அரணம் உடைத்தென்று கருதாது
வருவதும் அத் தண்டு போலும்[14]

என்றவற்றால் இதனை அறியலாம்.

சினங் கொண்ட படைவீரர் பகையரசர் நாட்டில் புகுந்து எதிர்ப்பட்ட ஆடவரை யெல்லாம் அழிப்பர். போரிற் பிடித்த அரசர்களை விலங்கிடு தலும் அக்கால இயல்பாக இருந்தது. வெற்றி கொண்ட அரசர் தாம் வென்ற இடத்தில் வெற்றித் தூண் நாட்டலும் அக்கால வழக்கமாகும். கலிங்க நாட்டில் கருணாகரன் இவ்வாறு செய்தமை,

கடற்கலிங்கம் எறிந்துசயத்
தம்பம் நாட்டி.[15]

என்ற அடியால் அறியப்படும். குலோத்துங்கனக் குறிக்குமிடத்தும்,

தனித்தனியே திசையான தறிகளாகச்
சயத்தம்பம் பல நாட்டி[16]

என்று கூறுவதாலும் இதனை அறியலாகும்.

சில வழக்காறுகள்

இலக்கியம் 'வாழ்க்கையின் விமர்சனம் ' என்று உரைத்தார் மாத்யூ ஆர்னால்டு என்ற ஆங்கிலத் திறனாய்வாளர். மக்கள் வாழ்க்கையில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் உள்ளன ; காலத்திற் கேற்றவாறு அப்பழக்க வழக்கங்கள் மாறக் கூடியவை. கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒருசில அக்காலப் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

அரசன் பிறந்தநாள்

அக்காலத்தில் மக்கள் அரசன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது ; அன்று அரசன் மக்கள் மகிழ்ச்சி பெருகுவதற்குப் பல காரியங்களைப் புரிவான். அந்நாள் 'வெள்ளணி' நாள் என்றும் 'நாண்மங்கலம்' என்றும் வழங்கப்பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்தில் மக்கள் மகிழ்ந்திருந்ததுபோல எந்நாளும் மகிழ்ந்திருந்தனர் என்பதைச் சயங்கொண்டார்,

எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்
இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே
குலோத்துங்கச் சோழனைப் பாடீரே.[17]

என்று பேய்களின் வள்ளைப் பாட்டாகக் கூறுகிறார்.

அஞ்சல் அளித்தல்

பேரரசர் தம்மை அடைந்த சிற்றரசர்கட்கு அஞ்சல் அளிப்பர் ; அதற்கு அறிகுறியாகத் தம் அடியினைகளை அவர்கள் முடிமீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்தது.[18] இங்ஙனமே பேரரசர் யானைமீது ஏறுங்கால் தம் அடியைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகின்றது.

அமைச்சர் புகழ்

சிற்றரசர்கள் பேரரசர்களின் அமைச்சர்களைப் பெரிதும் சிறப்பாக மதித்திருந்தனர்; அவர்கள் அவ்வமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகிவந்தனர் என்பதும் தெரிகிறது. கவிஞர் இதனை,

தார்வேய்ந்த புயத்தபயன்
தன்னமைச்சர் கடைத்தலையில்
பார்வேந்தர் படுகின்ற
பரிபவம்நூ ருயிரமே.[19]

என்ற தாழிசையால் குறிப்பிடுகின்றார்.

நிமித்தங்கள்

கண்துடித்தல் போன்றவை நற்குறி தீக்குறி கண்டு உணர்வதற்கு மேற்கொள்ளப் பெற்றன. ஆந்தை கூவல் முதலியவை தீநிமித்தங்களாகக் கருதப்பெற்றன. கணாப்பயன் கண்டு உணர்தலும் அக்கால மக்கள் வழக்கமாக இருந்தது. இவற்றை யெல்லாம் கவிஞர் பேயின் வாயில் வைத்துப் பேசுகிறார்.[20]

சில வழக்கங்கள்

வீரர்கள் தம் உறுப்புக்களை யறிந்தும் தெய்வத்திற்கு வழிபாடு செய்தனர்.[21] இதனை இக்காலத்தில் காவடி எடுப்போர் நாக்கிலும் உடலிலும் அம்புகளைக் குத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு அறியத்தக்கது. தெய்வத்திற்கு எருமைக் கடாவைப் பலி இடுங்கால் உடுக்கையை முழக்குவர்.[22] மண வினை முதலிய மங்கல காரியங்களில் அறுகம்புல்லை நெல்லுடன் இடல் மங்கலச் செயலாகக் கருதப் பெற்றது.[23] கோயில், அரண்மனை முதலியவற்றிற்குக் கடைகால் பறித்த உடன் அதில் பொன், மணி முதலியவற்றை இடுதல் வழக்கமாக இருந்தது.[24] அரசர் போன்ற உயர்ந்தோர்க்கு விருந்து அளிக்குங்கால், பகல் விளக்கு வைத்தலும் பரப்பிய ஆடையின்மேல் பொற்கலத்தை வைத்து அதில் உணவிடுதலும் வழக்கமாக இருந்தது.[25] இன்றும் கோவிலில் கடவுளர்க்குப் பாவாடை போடுதல் என்ற வழக்கம் இருந்து வருதல் ஈண்டு கருதத்தக்கது. வெறு நிலத்தில் உண் கலம் பரப்ப வேண்டின் நிலத்தில் நீர் தெளித்துப் பின் கலம் வைத்தல் வழக்கமாக இருந்தது[26] கூழுக்கு வெங்காயத்தைக் கறித்துண்ணும் வழக்கம் இருந்தது.[27] மகளிரிடம் கூடல் இழைத்துப் பார்க்கும் வழக்கம் இருந்தது.[28] கணவன் இறந்த பின் கற்புடைப் பெண்டிர் கணவனுடன் தீக்குளிப்பது வழக்கத்தில் இருந்தது.[29]

அக்காலச் சமணர்கள் நாள்தோறும் நீராடுவதில்லை; ஆடை உடுப்பதில்லை; தலையை மழித்திருப்பர்; ஒரு வேளைதான் உண்பர்.[30] புத்தர்கள் தலையை முண்டித்துக்கொண்டு செவ்வாடை போர்த்திருப்பர். ஒருசார் புத்தர்கள் தோலைப் போர்க்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர்.[31]

மைகொண்டும் மந்திரங் கற்றும் புதையல் காண்போராயும் நோய் தீர்ப்போராயும் 'பார்வைக் காரர்' எனப் பெயர் பெற்றுச் சிலர் இருந்தனர். இக்காலத்தில் நாட்டுப்புறத்தில் 'பில்லி சூனியக் காரர்' என்று வழங்கப்படுபவர்களை அவர்களுடன் ஒப்பிடலாம். இறந்தார் வீட்டு முன் நீண்ட தாரையை வைத்து ஊதும் வழக்கம் பூண்டவர்கள் 'நோக்கர் ’ என்று வழங்கப்பெற்றனர். நீண்ட குழாய் வடிவமான நீரைச் சொரியும் துருத்தி என்னும் கருவியைத் தோளில் சுமந்து தொழில் புரிவோர் 'துருத்தியாளர்' எனப்பட்டனர்.[32]

காட்டில் வேட்டையாடிப் பிடித்துக்கொணர்ந்த காட்டுப் பன்றியை தொழுவில் அடைத்துக்காத்து நிற்கும் வழக்கம் இருந்தது. இதனைக் கவிஞர்,

தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி

தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல[33]

என்று சுட்டுகிருர்.

அணிகள்

மகளிர் மிக மென்மையான ஆடைகளையணிந் திருந்தனர். இது,

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்(று) எடுத்துடுப்பீர்.[34]

என்ற தாழிசையில் புலனுகின்றது.

வளை, பாடகம், விடுகம்பி, இரட்டைவாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகுவலயம், ஒற்றைச்சரடு, வன்னசரம், மணிமாலை, முத்து மாலை, பதக்கம், மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் முதலியவை மகளிரின் அணிகளாக வழங்கின. கவிஞர் இவற்றைப் பேய்கள் அணிந்தவையாகக் கூறுகிறார்.[35] குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இருந்தது. குழந்தை தளர் நடை பயின்று மழலை மொழியத் தொடங்கும் பருவத்தில் காப்புக் கடவுளாகிய திருமாலின் ஐம்படையாகிய சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் ஐந்தன் உருவங்களைப் பொன்னால் செய்து அவற்றைக் கோத்து அணிதல் வழக்கம். இது ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான் அணியப்படும்.[36]

படுக்கை

மக்கள் உறங்குவதற்காக வெண் பஞ்சு, செம் பஞ்சு, இலவம்பஞ்சு, மயிர், அன்னத்தின் தூவி ஆகிய ஐந்து பொருள்களாலான மெத்தைகளைப் பயன்படுத்தினர். அரசன் முதலியோர் படுக்கையில் இந்த ஐவகை மெத்தைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக இடுவர். இதனால்தான் இப்படுக்கையைப் 'பஞ்சசயனம்' என்று வழங்குவர். காளி பேய்கள் சூழப் பஞ்சசயனத்தின் மீது வீற்றிருந்தாளாகக் கூறப்பெறுகின்றாள்.[37] தீபக்கால் கட்டில் என்ற ஒருவகைக் கட்டில் உபயோகத்திலிருந்ததாகத் தெரிகின்றது.[38]

பொழுதுபோக்கு

அரசர்கள் புலவர்களுடன் இலக்கியச் சுவையில் ஈடுபட்டு இன்புறுதல் வழக்கம். குலோத்துங்கன் இவ்வாறு மகிழ்ந்திருந்ததைக் கவிஞர்,

கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
இசையினொடும் காதன் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும் :மறையினொடும் பொழுது போக்கி.[39]

என்று குறிப்பிடுகின்றார். கோழிச் சண்டை, யானைப்போர், மற்போர், வாதப்போர் முதலியவற்றை மக்கள் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர்.

வருசெருவொன் றின்மையினான் மற்போரும்
சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா
ரணப்போரும் இனைய கண்டே.[40]

என்ற தாழிசையால் இதனை அறியலாம். மகிழ்ச்சி மிகுதியால் மேலாடையை மேலே வீசியெறிந்து விளையாடும் வழக்கம் ஒன்றும் குறிக்கப்பெறுகின்றது.[41]

எனவே, கலிங்கத்துப்பரணி சோழர்கால நாட்டு நிலை, மக்கள் வாழ்க்கை நிலை, அவர்கள் பழக்கவழக்கங்கள் முதலிய செய்திகளைக் காட்டும் ஒரு இலக்கியக் கண்ணாடியாக, வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது என்று கூறலாம்.



  1. தாழிசை-283
  2. தாழிசை-285, 286.
  3. தாழிசை 334, 335, 326
  4. 27 தாழிசை-272
  5. தாழிசை-41, 459
  6. 29 தாழிசை-40, 826,
  7. தாழிசை-325.
  8. தாழிசை-344,
  9. தாழிசை-370.
  10. தாழிசை:362
  11. தாழிசை 464,
  12. தாழிசை 325
  13. தாழிசை.449
  14. தாழிசை-377
  15. தாழிசை-471
  16. தாழிசை-20
  17. தாழிசை-533
  18. தாழிசை-337 530.
  19. தாழிசை-539
  20. 42. தாழிசை-222-226.
  21. தாழிசை-111
  22. தாழிசை-114.
  23. தாழிசை-264.
  24. தாழிசை 98,
  25. தாழிசை-561.
  26. தாழிசை-557,
  27. தாழிசை.579
  28. தாழிசை-51,
  29. தாழிசை-480.
  30. தாழிகை-466,
  31. தாழிசை-468, 567.
  32. தாழிசை-435, 568, 573.
  33. தாழிசை-464.
  34. தாழிசை-34.
  35. தாழிசை-510-514.
  36. தாழிசை-239.
  37. தாழிசை-154
  38. தாழிசை-153.
  39. தாழிசை,277
  40. தாழிசை,276
  41. தாழிசை,585.