கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/கற்பனை ஊற்று

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கற்பனை ஊற்று

ற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக்கொண்டுவந்து அப்பொருளினிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றவல்ல ஒரு வகையாற்றல். இக்கருத்தைச் சொற்களால் தெளிவாக விளக்க முயல்வதைவிட ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவது சிறந்தது.

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?[1]

என்ற அடிகள் காலைக்கதிரவனை வருணிக்கும் பாரதியாரின் அற்புதச் சொல்லோவியம். இளஞ் சூரியனது கதிர்கள் உருக்கி ஓடவிட்ட தங்கம் போலப் பரவிவருகின்றதாம்; உருக்கிய தங்கமாயினும் என்ன மாயத்தாலோ சூடுகுறைந்திருக்கின்ற தாம். இத்தகைய ஒளியுடன் அக்காட்சியில் இனி மைப்பும் கலந்து கொஞ்சுவதைக் காண்க. இதைத் தான் கவிஞன் “தழல் குறைத்துத் தேனாக்கி” என்று மிக இங்கிதமாக வெளியிட்டுள்ளான். நாமும் அக்காட்சியின்பத்தில் மூழ்கி அதை அனுபவிக்கின்றோம் கவிஞன் தான் அனுபவித்தவற்றை நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றான். இதை ஒரு பௌதிக அறிஞன் வருணித்திருந்தால் வேறு விதமாக வருணித்திருப்பான். அவனது வருணனைப்போக்கு அறிவியல் அடிப்படையில் தான் சென்றிருக்கும். அதனால் வெறும் செய்திகளை நாம் அறியலாமேயன்றி அனுபவத்தை உணரமுடியாது. கவிஞன் அனுபவித்தவற்றை யெல்லாம் நம்மையும் அனுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது கற்பனை. கற்பனை இல்லாதவர்கட்கு காலைக் கதிரவனின் காட்சி யாதொருவிதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞன் காணும் பொழுது தன்னை மறந்து விடுகிறான். காணும் கதிரவன், காண்பவனாகிய கவிஞன், காண்பதால் அவன் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஓர் உலகிற்குச்சென்று விடுகிறான். கதிரவனின் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றன. கதிரவனைக் காணும் நம் மனத்தில் கனவிலும் தோன்ற முடியாத கற்பனைகள் கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவைகள் அன்று, அவை அவன் மனத்தில் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கை கிளப்பிவிடும் அமுத ஊற்றுக்கள். அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்டபிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான அக்கற்பனையிலிருந்தே கவிஞன் அனுபவித்த உணர்ச்சியை நாமும் உணர்கின்றோம். பாடலிலுள்ள சொற்கள் நாம் அறிந்தவைகளாக இருப்பினும், அவை கவிதை வேலிக்குள் அமைந்து கிடக்கும் பொழுது புதியதோர் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. அவற்றைக் கொண்டு கவிஞன் புதிய "ரசவாதமே" செய்து விடுகின்றான்.

சொல்லோவியம்

கவிஞன் காட்டும் சொல்லோவியம் வெறும் பொருள்கள் அல்லது கருத்துக்களைத் தெரிவிக்கும் குறியீடுகளின் கோவை அன்று. நாம் சொற்களாகிய அக் குறியீடுகளைப் படிக்கும்பொழுதே அப்பொருள்களையே நேரில் காணுவது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம்.

"ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து
   அவயவம் அமைக்குந் தன்மை
யாதெனத் திகைக்கும் அல்லால்
   மதனக்கும் எழுத ஒண்ணாச்
சீதை" [2]

பான்ற கம்பநாடனின் சொல்லோவியம் சீதையை நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மழைக்காலத்தை நாம் 'கார்காலம்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுவோம். சேக்கிழார் பெருமான் அறையிலிருந்து படிக்கும் நம் முன்னே ,

நீலமா மஞ்ஞை ஏங்க
   நிறைகொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லைக்
   கோபம்வாய் முறுவல் காட்ட
ஆலுமின் இடைசூழ் மாலைப்
   பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீ டரங்கில் ஆடக்
   காரெனும் பருவ நல்லாள்[3]

என்ற தன் சொல் லோவியத்தால் கார்காலத்தையே கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்.

அணிகள்

ஒரு கருத்தை சாதாரணமாகத் தெரிவிப்பதற்குப் பதிலாகக் கவிஞர்கள் 'அலங்காரமாக'த் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடை பெறும் முறைகளை இலக்கண நூலார் தொகுத்து 'அலங்காரங்கள்' என்றும் 'அணிகள்' என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இவற்றை Figures of speech என்று வழங்குவர். தான் காணும் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே அமைந்து கிடப்பது, அந்த இயல்பு தான் உவமை அணியின் வித்து. பொருள்களிடம் காணப்பெறும் ஒப்புமைப்பகுதி பொறிகளால் காணக்கூடிய அளவிற்கு வெளிப்பட்டு நிற்பதைத் தான் மனிதன் உவமையால் கூறி மகிழ்கின்றான்; அவ்வுவமை செய்திகளை நினைவில் இருத்திக்கொள்வதற்கும் அவற்றை நெஞ்சில் ஆழப் பதித்துக் கொள்வதற்கும் துணையாக இருக்கின்றது. இந்த உவமை அணிதான் பிற்காலத்தில் தோன்றிய எல்லா அணிகளின் தாய் என்பது அறிஞர் பலரின் ஒப்ப முடிந்த துணிபாகும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இதுபற்றியே தன் நூலில் “உவமயியல்" என்ற ஒன்றையே வகுத்துக்கொண்டார். உவமையிலிருந்தே ஏனைய - அணிகள் தோன்றின என்பதை,

"உவமை யென்னும் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து

காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே[4]

என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். அது கிடக்க.

இந்நூலிலுள்ள அணிகள்

இனிக் கலிங்கத்துப்பரணியில் காணும் அணி வகைகளை ஆராய்வோம். சயங்கொண்டாரின் கற்பனை ஊற்றிலிருந்து எத்தனையோ அணிகள் தோன்றியுள்ளன. அவர் காட்டும் சொல்லோவியங்கள் பல்வேறு காட்சிகளையும் நம் மனக்கண் முன் அழகுபெறக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சொல்லணிகளும் பொருளணிகளும் நூல் முழுவதும் மலிந்து காணப்படுகின்றன. தன்மை நவிற்சி பயணிகள் பொருள்களின் உண்மையான இயல்புகளை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன. உவமை பணிகள் பொருள்களின் தன்மைகளை விளக்கமுற எடுத்தோதுகின்றன. தற்குறிப்பேற்ற அணிகள் பொருள்களின் இயல்புகளைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. உயர்வு நவிற்சி பொருள்களின் மேம்பாட்டைப் புலனாக்குகின்றன. சிலேடையணிகள் கூறப்படும் பொருள்கள். இருவேறு வகைப்பட்டு இன்பம் தோன்றத் துணைசெய்கின்றன. இவை ஒன்பான் சுவைகளை வெளிப்படுத்தி நூலினைச் சிறப்பிக்கின்றன. இடத்திற்கேற்றவாறு சந்த நயம் அமைந்திருப்பது இச்சிறப்பைப் பின்னும் மிகுவிக்கின்றது.

தன்மை நவிற்சி

உள்ளதை உள்ளவாறு கூறுதல் பெரும்பாலோருக்கு இயலும். அதை அழகு ஒழுகவும் இனிமையாகவும் எடுத்து இயம்புவது கவிஞன் ஒருவனுக்கே இயலும். சயங்கொண்டாரின் கவிதைகளில் இத்தகைய பண்பைக் காணலாம். பெண்ணொருத்தி துயிலெழும் நிலை மிக அழகான சொல்லோவியத்தால் தீட்டப் பெற்றிருக்கின்றது. காலையில் துயில் நீங்கி படுக்கையை விட்டெழுகின்றாள் ஒருத்தி. துயின்றபொழுது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது; ஆடை நெகிழ்ந்து நின்றது. எழுந்தவள் அவிழ்ந்து நின்ற கூந்தலை ஒருகையால் தாங்கியும் நெகிழ்ந்து நின்ற ஆடையை மற்றொரு கையால் பற்றியும் இரண்டோரடி எடுத்துவைத்து நடக்கின்றாள். துயில் நீங்கி எழுந்த நிலையிலும் அவள் முகம் மலர்ச்சியுற்றுக் காணப்படுகின்றது.

சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
       ஒருகை கீழ் அலைசெய் முகிலோடே
திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு
       தெரிவை மீர்கடைகள் திறமினோ[5]

[கொந்து-பூங்கொத்து; அளகம்-கூந்தல்; அலைசெய்(காற்றால்) அசையும்; துகில்-ஆடை; அனந்தல்-தூக்கம்; தெரிவை-பெண்]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரித்திருப்பதைக் காண்க. இத்தாழிசையின் முதலடியின் கருத்து,

'அகில்ஏந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி
அசைந்தொருகை
துகில் ஏந்தி'[6]

[அகில்-அகிற்புகை, துகில் ஆடை)

என்ற தஞ்சை வாணன் கோவை அடியிலும் அமைந்திருப்பது ஒப்புநோக்கி எண்ணி மகிழ்வதற் குரியது. மகளிரின் நடையைக் காட்டும் சொல் லோவியம் மிக இன்பம் பயப்பது.

சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலிஎழ ஒலிஎழப்
பனிமொழி யவர்கடை திறமினோ[7]

[சுரிகுழல்-நெளிந்தகூந்தல் (Curling, hair): பரிபுரம்

கிண்கிணி]

என்ற தாழிசையில் அந்நடை காட்டப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்க. இன்னொரு இடத்தில் மகளிர் நடை கற்பனை நயம் தோன்றக் காட்டப் பெற்றுள்ளது.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
ஒழியும் ஒழியும்என ஒண்சிலம்பு
அபயம் அபயம்என அலற நடைபயிலும்
அரிவை மீர்கடைகள் திறமினோ[8]

[உபயம்-இரண்டு; தனம்-கொங்கை; இடை-இடுப்பு; ஒழியும்-விட்டொழியும், ஒண்சிலம்பு-ஒளிபொருந்திய சிலம்பு; அலற-ஒலிசெய்ய, அரிவை-பெண்]

நுண்ணிடையையுடைய ஒருத்தி கொங்கையின் பளுவைத் தாங்க முடியாது நடந்து வருகின்றாள். பளுவின் மிதியால் இடைமுறிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவள் நடந்து வருங்கால் காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கின்றன. அச் சிலம்பின் குரல் அச்சக்குரல் போல் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர். 'கொங்கையின் பாரம் தாங்கமுடியாது இடைமுறிந்து போகக்கூடும்; நடப்பதை நிறுத்துக” என்று சிலம்புகள் அபயக்குரல் எழுப்பி அம்மங்கையிடம் முறையிடலாயின என்று கவிஞர் கற்பனை நயம் தோன்றக் கூறுகின்றார். இவ்வாறு ஒரு பொருளின் கண் இயல்பாக நிகழும் தன்மையொழியக் கவிஞன் தான் கருதிய வேறொன்றினை அதன் கண் ஏற்றிச் சொல்வதை அணி நூலார் "தற்குறிப்பேற்றம்’ என்று வழங்குவர். அதைப் பின்னர் விரிவாகக் காண்போம்.

மகளிரின் கலவிப் போரை இயல்பாகச் சித்திரிக்கும் சொல்லோவியங்கள் பன்முறை படித்து இன்புறத் தக்கவை.

அளக பாரமிசை அசைய மேகலைகள்
அவிழ ஆபரணம் இவையெலாம்
இளக மாமுலைகள் இணைய றாமல்வரும்
இயல்ந லீர்கடைகள் திறமினோ[9]

கூடும் இளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்திறமின்[10]

[அளகம்-கூந்தல்; மிசை-மேலே ; மேகலை-இடையில் அணிவது; இளக-நெகிழ ; மா.பெரிய இணையறாமல்-ஒன்றோடொன்று உயர்வு தாழ்வின்றி; நலீர்-நல்லீர், பெண்களே; பிறை-நெற்றி; வெயர்-வெயர்வை ; வடம் - மாலை; குலைந்து -கலைந்து ; அலைய-புரள ; பூசல்-ஒலி: கலவி-புணர்ச்சி.]
 1. 1. பாரதி : குயில்
 2. கம்ப-பாலகா. மிதிலைகாட்சி செய் 4
 3. பெரியபு ஆனாய நாயனார் செய் 19
 4. செந்தமிழ் -தொகுதி-7. பக்கம் - 144 லிருந்து எடுத்தது."
 5. தாழிசை -46
 6. தஞ்சை வாணன் கோவை-செய் 27,
 7. தாழிசை-23
 8. நாழிசை-58
 9. தாழிசை-53
 10. தாழிசை-62
என்ற தாழிசைகளில் கலவிப்போர் நிகழுங்கால் இயல்பாக நடைபெறும் செயல்கள் உரைக்கப்பெற் றிருப்பதை எண்ணி மகிழ்க.

வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ[1]

[வாங்க - பற்றிக்கொள்ள ; தோயம் - கடல் ; கலவி - புணர்ச்சி; துங்கம் - மேன்மை.]

என்ற தாழிசை கலவிப் போருக்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்த சொல்லோவியமாகும். விழி சிவக்க, உதடு வெளுக்கக் கலவிப்போர் புரிந்தமை இதில் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றது.

உவமை

கலிங்கத்துப் பரணியில் உவமையணி மிகச் சிறப்பான முறையில் கையாளப் பெற்றுள்ளது. அணிகள் பலவற்றுள்ளும் மிகவும் எளிமையானது உவமையணி தான். குழந்தைகளிடமும் ஒப்புமைச் சக்தி இருப்பதால், அவர்களிடமும் இவ்வணி தோன்றக்கூடும். எனவே, உவமையணி இல்லாத கவிதைகளே இரா என்று கூடக் கூறி விடலாம். ஏனைய அணிகள் யாவும் அழிந்து பட்டு இவ்வொன்று மட்டிலுமே எஞ்சி நின்றாலும் கவிதை சிறப்புடன் இலங்கக் கூடும். இந்த உவமையணியைக் கவிஞர் சயங்கொண்டார் பல்வேறு வடிவங்களில் கையாண்டுள்ளதை நூல் முழுவதும்
 1. தாழிசை-61 இதைத் தாழிசை 33-உடன் ஒப்பிடுக
படிப்பவர் நன்கு கண்டு மகிழலாம். ஒன்றிரண்டை மட்டிலும் ஈண்டு காட்டுவோம்.

பொருளுக்கேற்ற உவமையை அமைத்துப் பொருளைச் சிறக்கச் செய்வதில் ஆசிரியர் சயங் கொண்டார் வெற்றி பெற்றுள்ளார். பேய்களின் கைகால்களின் இயல்பைக் கூறுபவர் அவற்றிற்குப் பனைமரங்களை உவமையாக அமைத்துள்ளார்.

கருநெ டும்பனங் காடுமு ழுமையும்
காலும் கையும் உடையன போல்வன.[1]

என்பது கவிஞரின் வாக்கு. அவற்றின் முதுகுகளின் தோற்றத்தைக் கூறுகிறவர்,

மரக்க லத்தின்ம றிப்புறம் ஒப்பன. 12

என்று மரக்கலத்தின் பின்புறத்தை உவமையாக வைத்துப் பேசுகிறார். பேய்களின் பல்லைக் கூறுங் கால், மண்வெட்டியையும் கலப்பை மேழியையும் உவமைகளாக அமைத்துள்ளார்.

கொட்டும் மேழியும் கோத்த பல்லின[2]
இவை போன்ற பல உவமைகளை ஆங்காங்கு காணலாம் உவமேயத்தின் உயர்விற்கேற்பச் சிறந்த பொருள்களை உவமையாகவும், உவமேயத்தின் புன்மை தோன்ற இழிந்த பொருள்களை உவமையாகவும் கூறுந் திறம் மெச்சத்தக்கது. சோழநாடு அரசனை இழந்து அல்லலுற்ற நிலையில் குலோத்துங்கனை ஞாயிற்றுக்கு உவமையாகவும், அவன் பகைவர்களை வென்று வாகை சூடியதை ஞாயிற்றின் முன் இருள் மாண்டொழிந்தாற் போல பகை
 1. தாழிசை-135
 2. தாழிசை-139
வர் ஒடுங்கினர் என்றும் கூறியுள்ளார்.[1] போர்க் களத்தினின்றும் மறைந்தோடிய கலிங்க வேந்தன் ஒரு மலைக் குவடு பற்றி அதில் மறைந்திருந்த பொழுது கலிங்க வீரர்கள் விடியுமளவும் அதனைக் காத்து நின்றதை தொழுவிலடைத்த காட்டுப் பன்றியை வேடர்கள் காத்து நிற்கும் உவமையால் பெறவைக்கிறார்.[2] நூலில் காணப்பெறும் இல் பொருளுவமை அணிகள், கூறும் பொருள்களை மிகவும் சிறப்பித்து நிற்கின்றன. குலோத்துங்கன் காஞ்சியில் சித்திர மண்டபத்தில் அரியணையில் வெண் கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த பொழுது இருபாலும் கவரி வீசப்பெறும் சிறப்பிற்கு, பாற்கடலின் அலை இரு புறத்தும் நின்று பணி செய்யும் தோற்றத்தை உவமையாக வைத்துள்ளார்.[3] இங்ஙனமே ஈதலறம்புரியும் மேலோர் இயல்பு, ஈயாத உலோபியர் இயல்பு, பொருட் பெண்டிர் இயல்பு, கற்புடை மகளிர் இயல்பு ஆகியவை உவமைகளாக அமைந்து அவற்றைப் படிப் போரின் சிந்தையில் ஆழப் பதிக்கும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.[4] போர்க்களக் காட்சியைக் காட்டும் இடங்களிலும் பல உவமைகள் படிப்போரை களிப்புக் கடலில் ஆழ்த்துகின்றன.[5]

தற்குறிப் பேற்றம்

சயங்கொண்டார் கூறும் தற்குறிப் பேற்ற அணிகள் அவரது கற்பனை வளத்தைப் புலப் படுத்துகின்றன. காளிதேவி உறையும் பாலைவனத்தின் வெம்மையைக் கூறுமிடத்தே பல தற்குறிப் பேற்ற அணிகள் அமைந்து நூலை அணி செய்கின்றன. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கநூல்களில், பாலையைக் கூறும் பகுதிகள் மிகச் சிறந்து விளங்குகின்றன. பாலை நிலம் வெம்மை மிக்க வறனுள்ள இடம் ; உண்ண நீரற்றது : மக்கள் நடந்து கடந்து செல்ல இயலாதது. இந்த வெம்மை நிலத்தின் கொடுமையை விளக்கும் அற்புதச் சொல்லோவியங்களைச் சங்கப் பாடல்களில் காணலாம். ஐந்திணையைக் கூறும் பாடல்களுள் பாலைத்தினைப் பாடல்கள் அதிகமாகவும் உள்ளன: மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. துன்பத்தை நினையுங்கால் மனித தத்துவம் விளங்குமாப் போல, காட்டின் வெம்மையையும் கொடுமையையும் எண்ணுங்கால் இனிய கவிதைகள் முகிழ்த்தன போலும் !

மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிய புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடு[6]

[மரைஆ-மரைமான் ; மரல்-ஒருவகைத் தாழை; தவிர: உண்ண; வரை - மலை ; புரையோர் - குற்றத்தை யுடைய மறவர்;]

என்பது கலித்தொகை காட்டும் பாலை ஓவியம். கானம் மாரி வறப்ப, மரம் வெம்ப, மரையா மரல் கவர நிற்கின்றது. இரண்டு புறங்களிலும் மலைகள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. கொள்ளும் பொருளிலராயினும் கானவரது பகழி உடலில் மூழ்கி வழிப்போக்கர் சுருங்கி, உண்ண நீரற்று, புலர்ந்து வாடும் நாவினைத் தமது கண்ணீரைக் கொண்டு நனைக்கின்றனர். இத்தகைய கொடுமையைக் காட்டுகிறது பாலை பாடிய பெருங்கடுங்கோவின் சொல்லோவியம். அகநானூறு என்ற தொகை நூலில் பாலையைப் பற்றியே இருநூறு பாடல்கள் காணப்படுகின்றன. ஏனையவற்றிலும் பல இனிமையான பாலைத்திணைப் பாடல்கள் உள்ளன. இங்ஙனம் பண்டையோர் சிறப்பித்த பாலை நிலத்தைச் சயங்கொண்டாரும் தன் சொல்லோவியங்களால் அழகு ஒழுக, இனிமை சொட்ட, கற்பனை நயம் பொதுள, வருணித்துள்ளார். அத்தகைய ஓவியங்கள் ஒரு சிலவற்றை ஈண்டு காண்போம்.

கதிரவன் வெம்மையைத் தாங்க முடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றினுளெல்லாம் பகலவன் கிரணங்கள் பாய்ந்து செல்கின்றன. இயல்பாக உள்ள இதனைக் கவிஞர்,

தீய அக்கொடிய கான கத்தரைதி
றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி
தன்க ரங்கொடுதி ளைக்குமே.[7]

[தரைதிறந்தவாய்-வெடிப்புக்கள்; சாயை-கதிரவனின் மனைவி; பரிதி-ஞாயிறு, கரம்-கை; திளைத்தல்-தொழி லில் இடைவிடாது பயிலுதல்.]

என்று தன் கற்பனை நயம் தோன்றப் புலப்படுத்துகிறார், வெடிப்புக்களில் சூரியனின் கதிர்கள் பாய்ந்து செல்வது சூரியன் தன் மனைவியாகிய சாயாதேவியின் பிரிவைப் பொறாமல் அவளைப் பல இடங்களிலும் தேடித் திரிவதாகக் கவிஞர் தான் கருதிய வேறொன்றினை ஏற்றிச் சொல்லும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாமல் பருந்துக்கள் பறந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது பூமியின் மீது படும் அதன் நிழல் ஓடுவது போலிருக்கும். இது இயல்பாக நாம் காணும் காட்சி. இதனைக் கவிஞர் கூறும் பொழுது பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாது நிழல்கள் ஓடுகின்றன என்றும், அந்நிலத்தில் நிற்கும் நிழலையே காண்பது அரிது என்றும் தன் கருத்தை ஏற்றிப் புனைந்து கூறுவது இன்பம் பயக்கின்றது.

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல்
அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல்
ஓரி டத்துமுள வல்லவே.[8]

[ஆடுகின்ற-அசைகின்ற; சிறை-சிறகு]

என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். பாலை நிலத்திலுள்ள மரங்களில் நிழலே இருப்பதில்லை; தழையிருந்தால் தானே நிழல் இருப்பதற்கு ? இதில் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிப் புனைந்து கூறும் திறம் படிப்போருக்குக் களிப்பினை நல்குகிறது.

ஆத வம்பருகு மென்று நின்றநிழல்
அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன
பருகு நம்மையென வெருவியே.[9]

[ஆதவம்-வெயில்;பாதவம்-மரம்,உணங்குவன-உலர்வன] பாலை நிலத்தின் வெம்மையும் தண்ணீர் கிடைக்காது உலர்ந்து வாடும் மரங்களும் தன்னைப் பருகும் என்று மரத்தின் நிழல் மறைந்து போயிற்றாம்! என்னே கவிஞரின் கற்பனை இக்கருத்து,

நிழலுரு இழந்த வேனிற்குன் றத்து
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்.[10]

என்ற மதுரைக்காஞ்சி அடிகளில் வந்துள்ள கருத்துடன் ஒப்பு நோக்கி உணர்தற் பாலது. இனி, வானவர்கள் நிலத்தில் அடியிட்டு நடவாமல் இருப்பதற்கும்,[11] சூரியன் பாதிநாள் உலகில் திரிவதற்கும் பாதிநாள் திரியாததற்கும்,[12] மழையும் பனியும் தோன்றுவதற்கும்[13] இயல்பாகவுள்ள காரணங் களைத் தவிர்த்துக் கவிஞர் தன் காரணங்களை ஏற்றிக் கூறும் இடங்களில் இத் தற்குறிப்பேற்ற அணிகளைக் காணலாம். மகளிர் கூந்தலில் முடிந்திருந்த பூக்களிலுள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவை மேலுங் கீழுமாகப் பறந்து நிற்பது இயல்பு. கொங்கைகளின் பாரத்தால் அவர் தம் சிற்றிடை வருந்தா நின்றமையால், தாம் அவர்கள் கூந்தலில் உட்கார்ந்தால் அவர்கள் நுண்ணிய இடை முறிந்து போகக்கூடும் என்று எண்ணி அவை மேலே வருவதும், வேறு புகலிடம் இன்மையால் அவை கூந்தலின் மீது விழுவதும் ஆயின என்று கவிஞர் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார்.[14]

இடையின் நிலை அரி(து) இறும்இறும் என எழா
   எமது புகலிடம் இனிஇலை எனவிழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
   அளக வனிதையர் அணிகடை திறமினோ[15]

[இடை-இடுப்பு: இறும் ஒடியும்; புகலிடம்-அடைக்கலம்; மதுகரம்-வண்டு, அளகம்-கூந்தல்; வனிதையர் - பெண்கள்]

என்பது கவிஞரின் சொல்லோவியம். இதே கருத்து,

நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண்
   தேன் நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்: கொண்டை
   சார்வதுவே,[16]

என்ற திருக்கோவையாரின் அடிகளில் வந்துள்ளது. இரண்டையும் ஒப்பு நோக்கி எண்ணி மகிழ்க.

உயர்வு நவிற்சி

பொருள்களின் மேம்பாட்டைப் புலப்படுத்துவ தற்கு சில இடங்களில் கவிஞர் மேற்கொண்டுள்ள உயர்வு நவிற்சி யணிகள் பொருளை விளக்கமுறுத்தி இன்பம் பயக்கின்றன. பாலை நிலத்தின் வெம்மையைக் கவிஞர்,

அணிகொண்ட குரங்கினங்கள்
  அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல்
  வரை எடுத்து மயங்கினவே[17]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த வரைமலை]
என்று உயர்வு நவிற்சியாக உரைக்கின்றார்.
 1. தாழிசை-251, 261
 2. தாழிசை,464
 3. தாழிசை 317
 4. தாழிசை-477, 478, 479, 480, 483.
 5. தாழிசை-498, 499.
 6. பாலைக்கலி - 6
 7. தாழிசை-79.
 8. தாழிசை-80
 9. தாழிசை-81
 10. மதுரைக்காஞ்சி-வரி : 313-34
 11. தாழிசை-84
 12. தாழிசை-S5
 13. தாழிசை.86
 14. தாழிசை-96
 15. தாழிசை-57 29,
 16. திருக்கோ-45
 17. தாழிசை-96
" சிறையிருந்த செல்வியை மீட்பான் வேண்டி இராமன் பொருட்டுக் கடலுக்கு அணையிடப் புகுந்த குரங்கினங்கள் மலைகளைச் சுமந்து வீணான தொல்லைகளை மேற்கொண்டனவே: இப்பாலை நிலத்தின் மணல் ஒன்றினைக் கடலில் இட்டாலே போதுமே, கடல் முழுதும் வறண்டிருக்க ? அறிவற்ற குரங்குகள்!” என்பது சயங்கொண்டாரின் பாலை நில விளக்கம்.

கலிங்க நாட்டின் மீது தண்டெடுத்துச் செல்லுங்கால் கருணாகரத் தொண்டைமான் நடத்திச் சென்ற படையின் அளவைக் கூறுங்கால் உயர்வு தவிற்சியணிகளைக் காணலாம்.

பார்சி றுத்தலின் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலின் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க்(கு) அறிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமும் இல்லையே[1]

[பார்-உலகம், விசும்பு-ஆகாயம்]

என்பது கவிஞரின் வாக்கு. சேனையின் மிகுதியைக் கண்ணுற்ற மக்களில் ஒரு சிலர், " பூமி சிறியதாக இருப்பதால் படை பெரிதாகக் காணப்படுகிறதோ?" என்றும் வேறு சிலர் படைகள் மிகுதியாகவுள்ளதால் பூமிதான் சிறிதாகத் தெரிகின்றதோ?" என்றும் பேசிக் கொண்டார்களாம் என்பது கவிஞர் பெற வைத்த குறிப்பு. எண்ணற்ற தேர்கள் கலிங்க நாட்டில் மிக்க விரைவாகச் செல்லுகின்றன. அவற்றில் கட்டியுள்ள கொடிச் சீரைகள் உலகிடையே இருளை உண்டாக்குகின்றன. திசை யானைகளின் மதநீரை உண்டு களித்திருக்
 1. தாழிசை.348
கும் வண்டுகளையும் வெருவியோடச் செய்து விடுகின்றன.

கடுத்த விசையிருள் கொடுத்த உலகொரு
கணத்தில் வலம்வரு கணிப்பில்தேர்
எடுத்த கொடிதிசை இபத்தின் மதமிசை
இருக்கும் அளிகளை எழுப்பவே.[1]

[கடுத்த-மிகுந்த விசைவேகம்; கணிப்பில்-அளவிடுதலில்; ::திசைஇபம்-திக்கு யானை அளிவண்டு]

என்பது சயங்கொண்டாரின் கற்பனை ஓவியம். இவ் வாறு பல இடங்களில் உயர்வு நவிற்சி யணிகள் நூலை அலங்கரிக்கின்றன.

சொல்லணிகள்

மேற்கூறிய பொருளணிகளைத் தவிர சொல்லணிகளும் நூலினை அலங்கரிக்கின்றன. அவற்றிலுள்ள சிலேடை நயம் அவ்வணிகனின் தரத்தை இன்னும் உயர்த்துகின்றது. கடை திறப்பில் ஒரு தாழிசை,

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ[2]

[காஞ்சி-இடையணி, காஞ்சிநகர்;கலிங்கம்-மேலாடை, கலிங்கநாடு; குலைந்த-நிலைபெயர்ந்த, அழிந்த]

இத்தாழிசையில் 'யமகம் ' என்ற சொல்லணி வந்துள்ளதைக் காண்க, யமகம்-மடக்கு. ஓரடியில் பல இடங்களிலாயினும், பல அடிகளிலாயினும் முன்வந்த எழுத்துத் தொகுதிகளே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது மடக்கு என்னும் சொல்லணியின் இலக்கணம். மகளிரிடம் மேற்கொண்ட கலவிப் போரால் அவர்களது இடையணி அப்படியே அணிந்த வண்ணம் இருக்க மேலாடை மட்டிலும் நிலை பெயர்ந்து கிடக்கின்றது; கருணாகரனது போரால் காஞ்சி அழியாதிருக்க, கலிங்க நாடு அழிந்து விட்டது என்ற வேறுபட்ட பொருள் முறையே முதலாவது, இரண்டாவது அடிகளில் வந்துள்ளமை காண்க. இன்னும்,

ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே[3]

என்ற தாழிசையிலும் 'யமகம்' வந்துள்ளது. கருணாகரன் கலிங்க நாட்டை அழித்த பொழுது கலிங்க வீரர் மேலாடை வீழ்ந்ததையும் கவனியாது உயிர் பிழைக்க ஓடினர் என்பது இதனால் கவிஞர் பெற வைத்த செய்தி.

மனுக்கோட்டம் அழித்தபிரான்
வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்டம் நமன்கோட்டம்
பட்டதுசக் கரக்கோட்டம்[4]

என்ற தாழிசை குலோத்துங்கன் சக்கரக்கோட்டத்தை அழித்ததைக் கூறுவது. இதில் திரிபு என்ற சொல்லணி வந்துள்ளது. எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்து முதலிய பல எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபடுவதைத் 'திரிபு'என்று கூறுவர் இலக்கண நூலார். இத்தாழிசையில் முதலடியிலுள்ள மனுக்கோட்டம் இரண்டாம் அடியிலுள்ள 'தனுக்கோட்டம்' ஆகிய இரண்டு சொற்களிலும் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத் துக்கள் ஒன்றி நின்று பொருள் வேற்றுமையைப் புலப்படுத்தியமை காண்க.

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனை விட்(டு)
அக்கா னகத்தே உயிர்பறிப்பீர்
அம்பொற் கபாடம் திறமினுே.[5]

[வடமலை-மாலையணிந்த முலை, இமயம் ; வெளி - இடை, போர்க்களம்; வேடனை = வேள் +தனை, கானகத்தே கான் நகத்து; மணம் பொருந்திய மலை போன்ற கொங்கைகளால்.]

என்ற தாழிசையிலுள்ள சிலேடை நயம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இதில் காஞ்சி இடையணியையும், காஞ்சி நகரையும் குறித்தது; வடமலை மாலையணிந்த முலையையும், இமயத்தையும் குறித்தது ; வெளி இடையையும், போர்க்களத்தையும் குறித்தது. வேடனை என்பது 'மன்மதனை' என்றும் வேடன் போன்ற 'கருணாகரனை' என்றும் பொருள் பட்டது. கானகம் என்பது 'காடு' என்றும் மணம் பொருந்திய மலை போன்ற கொங்கை என்றும் இருபொருள் பட்டது. மகளிர் தம் இடையழகாலும், கொங்கையழகாலும் தம் கொழுநர்க்குக் காம வேதனையை மிகுவித்து அவர்களைத் தம் வயமாக்கிக் கொள்வர் ; கருணாகரனும் வேடன் விலங்கு, பறவை முதலியவற்றின் உயிரைக் கவர்தல் போல் தன் பகைவரின் உயிரைக் கவர்வான். இத் தாழிசை இந்த இரண்டு பொருள்களையும் பயந்து நிற்கின்றமையை எண்ணி உணர்க. இவ்வாறு சிலேடைப் பொருள் தந்து நிற்கும் இடங்கள் பல உள்ளன.

வேறு இடங்களில் கற்பனை

இவ்வாறு அணிகளைக் கூறும் இடங்களைத் தவிர, வேறு இடங்களிலும் கவிஞரின் கற்பனைத் திறத்தைக் காணலாம். இயல்பாகவுள்ள நிகழ்ச்சிகளே வரலாற்று நிகழ்ச்சியுடன் பொருத்திக் கூறுங் கால் பல கற்பனைச் சிகரங்கள் தென்படுகின்றன. பேய்களின் இயல்புகளைக் கூறுங்கால் நொண்டிப் பேய், முடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப் பேய், குறட்டுப்பேய், கூன்பேய் ஆகிய பேய்களுக்கு உறுப்புக் குறை நேர்ந்ததற்குக் கூறும் காரணங்கள் கவிஞரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டிலும் காண்போம்.

விருத ராசப யங்கரன் முன்னொர் நாள்
வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந்(து) அட்டவெங்
கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்.[6]

[விருதசாசபயங்கரன்-குலோத்துங்கன் ; குருதி-செந்நீர்;]

இது குருட்டுப் பேயின் நிலையைக் காட்டுவது. குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்து வெற்றி கொண்ட பொழுது போர்க்களத்தில் பேய்கள் கூழட்டு உண்டனவாம். அப்பொழுது தாழியிலிருந்து கூழ் தெறித்து ஒரு பேயின் கண்ணில் விழ, அதன் கண் குருடாய் விட்டதாம்.


 1. தாழிசை-357
 2. தாழிசை-63
 3. தாழிசை 354
 4. தாழிசை - 254
 5. தாழிசை-73
 6. தாழிசை-147

ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்(து)
ஐம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் ருர்த்திடும் ஆர்ப்பினில்
திமிரி வெங்களத் திற்செவி டானவும்.[1]

[ஆனை-யானை ; பரி-குதிரை: ஆர்ப்பு-பேரொலி]

இத்தாழிசை செவிட்டுப்பேயின் நிலையைக் கூறுவது. குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் போர்மேற் சென்றபொழுது அவன் படைவீரர்களின் ஆர்ப்பொலியைப் பொறுக்கமாட்டாது ஒரு பேயின் காதிலுள்ள சவ்வு பிய்ந்துபோயிற்றாம்.

காளிதேவி வாழும் காட்டின் வெம்மையைக் கூறுங்கால் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சி கட்டப்பெறுகின்றது. குலோத்துங்கன் வடவரை வென்ற பின் பாண்டியருடன் போர் தொடுத்து அவர்களையும் வென்றான். அப்பொழுது புகையால் மூடப் பெற்ற பகைவரின் காவற்காட்டின் வெப்பமும் தேவி வாழும் காட்டின் வெப்பமும் ஒரே மாதிரியாக இருந்ததனவாம்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஒட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்"[2]

என்ற தாழிசையில் இந்நிகழ்ச்சி கற்பனைத் திறத் துடன் காட்டப்பெற்றமையைக் காண்க. இவ்வாறு அணி நயங் காணும் இடங்களிலும் பிற இடங்களிலும் சயங்கொண்டாரின் கற்பனைத் திறத்தினைக் காணலாம். இக் கற்பனைத் திறன், பாடிய புலவர் உணர்ந்த அனுபவத்தை நாமும் உணரத் துணை செய்கிறது. சயங்கொண்டாரின் பரணிக்காப்பியத்தில் இத்தகைய கற்பனை நயங்கள் அமைந்து அது இன்றும் ஒரு 'கற்பனை ஊற்றாக’ தம்மிடையே நின்று நிலவுகிறது. 1. 38.தாழிசை -149
 2. 39.தாழிசை-95