கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/சுவைகளின் களஞ்சியம்
சுவைகளின் களஞ்சியம்
ஒரு காவியத்தைப் படித்தால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே 'ரஸம்' என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. தமிழில் இதை 'மெய்ப்பாடு' என்ற பெயரால் குறிப்பர். பண்டைக் காலத்து முனிவர்கள் ஆண்டவனிடம் பக்திப் பெருக்கால் உள்ளம் பூரித்து நிற்கும் பொழுதுதான் வேதங்கள் பிறந்தன என்று ஆன்றோர் கூறுவர். வால்மீகியின் உள்ளம் ரஸப்பெருக்கால் திளைத்து நின்ற பொழுது தான் இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்தாகக் கதை. ரஸத்தை ஒன்பது என்று கூறுவது வழக்கம்; "நவரஸங்கள்’ என்ற வழக்காற்றை நாம் கேட்டிருக்கினறோம் அல்லவா? தொல்காப்பியம் ரஸத்தை 'எண் சுவை' யாக வகுத்து விளக்கியிருப்பதை அதன் மெய்ப்பாட்டியலில் காணலாம். ரஸ தத்துவத்தை விளக்குவதற்கு வடமொழியில் பல நூல்கள் உள்ளன.
பரம்பரை வாசனை
உலகத்தில் நாம் பல பொருள்களைப் பார்க்கின்றோம். அவை நமக்கு சில சமயம் இன்பம் நல்கும்; இன்பம் நல்காத சமயங்களும் உள்ளன. நாம் அடையும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவ்வப் பொழுது நாம் கொண்டுள்ள மனோ நிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனம் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. இவ்வாறு தொன்றுதொட்டு எத்தனையோ பொருள்களை நாம் அனுபவித்து வருகின்றோம். இவ்வாறு அனுபவிக்கும் பொழுது அப்பொருள்கள் நாம் அனுபவித்தவாறே தமது உருவங்களை நம் மனத்தில் செதுக்கி விட்டுப் போகின்றன. இதைத்தான் அறிஞர்கள் 'வாஸனை’ என்று குறிப்பிடுகின்றனர். நாம் வெளியில் ஒரு பொருளைக் காணும் பொழுது உள்ளே உறங்கிக் கிடக்கும் அப்பொருள்களைப் பற்றிய'வாஸனை' மலருகின்றது. குணநலன்கள் யாவும் மனத்தின் போக்கையொட்டியே இருக்கின்றன என்பது எண்ணிப் பார்த்தால் புலனாகும். எல்லாவற்றையும் இன்பமயமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.
நூலைக் கையிலெடுத்தவர்கள் எல்லோரும் சுவையில் ஈடுபட முடியும் என்று எண்ணுதல் தவறு. நன்றாக மனத்தைச் செலுத்திப் படித்து அடிக்கடி சுவைக்கும் இயல்பு கொண்டவர்களுக்கு மட்டிலும்தான் சிறிதளவு சுவை புலனாகத் தொடங்கும். இரத்தினம் ஓர் உயர்ந்த பொருள்தான் ; அதன் பெருமையை அனைவரும் அறிய முடிகின்றதா? இல்லையன்றோ ? அதன் தரத்தை ஆராய்ந்து பழகியவர்களுக்கு மட்டிலுந்தான் அதன் பெருமை புலனாகும்; இரங்கூன் கமலத்திற்கும் நல்ல இரத்தினத்திற்கும் உள்ள வேற்றுமை நன்கு தெரியும். இரத்தினத்தை அறியும் 'வாஸனை' உள்ளிருப்பவர்களுக்கே பலதடவைப் பார்ப்பதால் அதனை அறியும் திறம் பெருகும். வாஸனை இல்லாதவர் பலநாட்கள் பல்லாயிரம் இரத்தினங்களைப் பார்த்தாலும் அவர் மனத்தில் யாதொரு மாறுபாடும் உண்டாக மாட்டாது. காவியத்தில் சுவை காண்பதும் அப்படித்தான். அதிலுள்ள மெய்ப்பாடுகளை அறிந்து சுவைப்பதற்குப் 'பரம்பரை வாசனை’ வேண்டும். அவற்றை அறிவதும் எளிதான செயலன்று.
ஒன்பது சுவைகள்
கவிஞர்கள் எல்லாப் பொருள்களையும் சுவையுடன் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அனைத்தையும் இன்பமாகப் பாவிக்கும் மனநிலை அவர்களிடம் அமைந்து கிடக்கின்றது. அத்தகைய மனநிலை உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவதாகும். பண்டைத் தமிழர்கள் அவ்வுணர்ச்சியை எட்டுவகையாகப் பிரித்துப் பேசினர். அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. பிற்காலத்தார் 'சமநிலை' என்ற ஒன்றைச் சேர்த்து சுவைகளை ஒன்பதாகக் கூறுவர். இந்த ஒன்பது சுவைகளையும் வடமொழியாளர்கள் முறையே ஹாஸ்யம், கருணம், பீபத்லம், அற்புதம், பயானகம், வீரம், ரெளத்ரம், சிருங்காரம், சாந்தம் என்று வழங்குவர். இச்சுவைகள் தோன்றி வளரும் செய்திகளை சுவை இலக்கண நூல்களில் கண்டறிக.
'கலிங்கத்துப் பரணி'யில் இச்சுவை வேறுபாடுகள் நன்றாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன. நூலைப் படிக்கும்பொழுது நாமும் உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கின்றோம் ; மகிழ்வடைகின்றோம். எல்லாவிதச் சுவைகளும் நம் உள்ளத்தைக் கனிவு பெறச் செய்கின்றன என்றே சொல்ல வேண்டும். நூலிலுள்ள சுவைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.
உவகைச்சுவை
சுவை நூலார் உவகையை முதல் சுவையாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில் காதல் சுவை உயர்ந்த பீடத்தைப் பெற்றிருக்கின்றது. காதலையே ஒரு உயர்ந்த கலைபோல் வளர்த்திருக்கின்றனர். இவ்வாறு இலக்கியங்களில் வரும் காதற் சுவையை அனுபவிக்க உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். அவை இரண்டும் இல்லாதவர்கள் கற்பனை உலகில் காணும் இன்பக் கனவுகளாகின்ற வருணனைகளை யதார்த்த உலக நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு நம் இலக்கியங்களைக் குறை கூறுகின்றனர். உவகைச் சுவையை இலக்கண நூலார் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். இரண்டிலும் எண்ணற்றதுறைகள் உள்ளன. இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள செய்திகளையே வடமொழிவாணர்கள் விப்ரலம்ப சிருங்காரம், சம்போக சிருங்காரம் என்று பாகுபாடு செய்து காட்டுவர். அவையே இவை என்று சொல்ல இயலாவிடினும் அவற்றிலுள்ள செய்திகளே இவற்றிலும் வருகின்றன என்று கூறிவிடலாம்.
போரைப்பற்றிய கலிங்கத்துப் பரணியிலும் உவகைச்சுவை இடம் பெற்றிருப்பதிலிருந்தே அச்சுவையின் உயர்வை அறியலாம். நூலிலுள்ள 'கடைதிறப்பில்' இச்சுவை பல்வேறு கோணத்தில் சித்திரிக்கப் பெறுகின்றது. ஒரு சிலவற்றை முன்னர்க் கண்டோம். ஈண்டும் சிலவற்றைக் காண்போம்.
போரில் புண்பட்ட வீரர்களுக்கு வீட்டில் மருத்துவம் தரப் பெறுகின்றது. அப்புண்களுக்கு அவ் வீரர்களின் துணைவியரே சிகிச்சை தருகின்றனர். இதைக் கவிஞர்,
தங்குகண் வேல்செய்த புண்களைத்
தடமுலை வேதுகொண்டு ஒற்றியும்
செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர்!
செம்பொன் நெடுங்கடை திறமினோ.
பொருங்கண் வேல்இளைஞர் மார்பின் ஊடுருவு
புண்கள் தீரஇரு கொங்கையின்
கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு
கட்டு மாதர்கடை திறமினோ.[1]
[கண்வேல்-கண்ணாகிய வேல் ; வேது-சூடான ஒத்தடம்; வாய்மருந்து-இதழ் அமுது ; கருங்கண்-முலைக்கண் ; கட்டும் தழுவும்]
என்று காட்டுகின்றார். புறப்பொருள் அனுபவத்தை அகப்பொருள் அனுபவத்துடன் பிணைத்துக்காட்டும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. மகளிர் ஆடவர்களின் மனத்தை எளிதில் கவரவல்லவர்கள் என்பதை எவரும் அனுபவத்தில் அறியலாம். இவ்வனுபவத்தைக் கவிஞர், முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ[2]
[முருகு-மணம்; கழுநீர்-கழுநீர்ப்பூ குழல்-கூந்தல்]
செக்கச் சிவந்த கழுநீரும் -
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழன்மடவீர்
உம்பொற் கபாடம் திறமினோ[3]
[செகம்-உலகம்: ஒக்க-ஒன்றுசேர; பொன்-அழகு]
என்று காட்டுகிறார். இம்மாதிரி சிருங்காரச் சுவையூட்டும் " சுளைகளைக் " கடைத்திறப்பில் கண்டு மகிழ்க.
நகைச் சுவை
இயற்கைக்கு மாருக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நமக்கு நகைப்பை விளைவிக்கும். ஆனல் அத்தகைய அம்சங்கள் யாவும் நகைச்சுவையைத் தூண்டிவிடும் என்று கூறுதல் ஒண்ணாது. ஆங்கிலத்தில் 'Humour ' என்று வழங்கப்படுவதும் நாம் நசைச்சுவை என்று குறிப்பதும் ஒத்ததல்ல என்பதை நாம் உணரவேண்டும். Humour-ல் நாம் கூறும் நகைச்சுவையும் உள்ளடங்கலாம். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவை விளைக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு குருட்டுப் பேயின் உண்கலத்தை ஒரு திருட்டுப்பேய் ஒளித்து வைத்துக்கொள்கிறது; குருட்டுப்பேய் கையில் கூழ் ஏற்று அருந்துகிறது; இந்நிகழ்ச்சி,
ஊணா தரிக்கும் கள்ளப்பேய்
ஒளித்துக் கொண்ட கலம்தடவிக்
காணாது அரற்றும் குருட்டுப்பேய்
கைக்கே கூழை வாரீரே[4]
- [ஊண்-உணவு; ஆதரிக்கும்-ஆசைப்படும்; கலம்-
- பாத்திரம்; அரற்றல்-கதறியழல்]
என்ற தாழிசையில் சுட்டப் பெறுகின்றது.
- ஓர் ஊமைப்பேயின் நிலை இது.
பையாப் போடு பசிகாட்டிப்
பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையால் உரைக்கும் ஊமைப்பேய்
கைக்கே கூழை வாரீரே[5]
- [பையாப்பு:துன்பம்; பதலை-பானை]
கருப்பத்துட னிருக்கும் பேய் பசியால் செவிகளடைத்துப் போகிறது. கூழைக்கண்டதும்காதடைப்பு நீங்குகிறது; நாக்கைத் துழாவிக் கொண்டு உண்ணுவதற்குத் தயாராக இருக்கின்றது. இதைக் கவிஞர்,
அடைத்த செவிகள் திறந்தனவால்
அடியேற் கென்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணும்
சூற்பேய்க்கு இன்னும் சொரியிரே[6]
- [சூல்-கருப்பம்,சொரியீர்-வாருங்கள்]
என்று காட்டுகிறார். பேய்களிலும் குறை மதியுள்ளவை இருக்கும் போலும்! ஒரு பேய் ஓட்டைக்கலத்தில் கூழ்பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலையைப்பார்க்க கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது! கூழெல்லாம் கொட்டிப்போகிறது!
பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ்
புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து
எல்லசங் கவிழ்த்துத் திகைத்திருக்கும்
இழுதைப் பேய்க்கு வாரிரே[7]
- [பொல்லா-கெட்ட மறித்துப்பார்த்து தலைகீழாகத்
திருப்பி:இழுதை-அறிவற்ற]
என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்குப் பாத்திரம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைத்துதிக்கையின் ஒருதுணியை பல்லின்மேல் நிறுத்திக்கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும்படி வேண்டி நிற்கின்றது.
துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்
செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும்
தோக்கப்பேய்க்கு வாரீரே[8]
- [துணி-துண்டம்,செவ்வே-செவ்வையாய், நுதி.நுனி)
என்பது இப்பேயின் நிலையைக்காட்டும் சொற் சித்திரம்.
அழுகைச் சுவை
போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சிகள் பல அழுகைச்சுவை பயக்கவல்லவை துன்பத்திலும் இன்பத்தைக் காணுவதுதான் ஆன்மாவை உணர்வது என்று அறிஞர் கூறுவர். இச்சுவையை மேல் நாட்டார்போல் நம் நாட்டார் இறுதிவரையில் வளர்த்துக்காட்ட முனைவதில்லை. கலிங்கப்போர் முடிந்தபின் திரும்பிவராத தன் கொழுநனைத்தேடிக் கொண்டு போர்க்களத்துக்கு வருகிறாள் மங்கை ஒருத்தி. அங்கு தன் கணவனின் உடல், முகம் வேறாகவும் கை வேறாகவும் கால் வேறாகவும் துண்டுபட்டுக் கிடக்கின்றது. தலைமட்டும் அவளுக்குக் கிடைக்கிறது; ஏனைய உறுப்புக்களை நரிகள் இழுத்துச் சென்றன போலும் அவள் அவற்றை அடையாளம் காட்டுமாறு பயிரவி என்ற பெண் தெய்வத்தை வினவுகின்றாள்.
பொருதடக்கை வாளெங்கே? மணிமார்பு எங்கே?
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்[9]
- [மணி. அழகிய வயிரம்-அழுத்தமானது: பயிரவி-யோகினி]
இன்னொருத்தி தன் கணவன் முகத்தைக்கண்ட பிறகு தன் உயிரைத் துறக்க விரும்புகின்றாள்.போர்க் களத்துக்கு வந்து சாதகரையும் இடாகினியையும் அவ்வுடலைக் காட்டுமாறு வினவுகின்றாள்.
தங்கணவர் உடன் தாமும் போக என்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தஇடம் எங்கே என்றென்று
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்[10]
[சாதகர்-காளியின் மெய்காப்பாளர்; இடாகினி-சுடலைப் பிணம் தின்னும் பேய்]
என்பது அவள் நிலையைக் காட்டும் சொற்படம்.
வெகுளிச் சுவை
பகைவர்கள் செய்த தீச்செயல்களை நினைத்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று கூறுவர். குரோதத்தின் அடிப்படையில் மலர்ந்த சுவையே வெகுளி எனப்படும். தான் திறை கொடாத செயலைக் காரணமாகக்கொண்டு குலோத்துங்கன் தன் நாட்டின் மீது படையை ஏவியுள்ளான் என்பதைக் கேள்வியுறும் அனந்தபன்பன் சினங்கொள்ளுகின்றான்.
அந்தரமொன் றறியாத வடகலிங்கர்
குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
கைபுடைத்து வியர்த்து நோக்கி[11]
- [அந்தரம்-மாறுபட்டநிலை; தறுகண்-கொடுமை மிக்க]
பின்வருமாறு பேசுகின்றான்.
வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
தடம்புயங்கள் குலுங்க நக்கே ;
கானரணும் மலையரனும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரணம் உடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்.[12]
- [மலர்க்கவிகை-பரவுதலையுடைய குடை; தண்டு சேனை; வெகுண்டு -கோபித்து; கான்- காடு ; அரணம்- பாதுகாப்பு]
இத்தாழிசைகளில் வெகுளிச் சுவை பீறிட்டுக் கொண்டு வருவதைக் கண்டு மகிழ்க.
வீரச்சுவை
இது 'பெருமிதம்' என்றும் வழங்கப் பெறும். எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனங் குன்றாது செயலாற்றுவதை வீரம் மிக்க செயல் என்று கருதுவர். வீரனது அடையாளம் போர்க்களத்தில் முன்னணியில் நிற்பது மட்டுமல்ல ; ஆயுள் முழுவதும் தன் புலன்களை அடக்கப் பாடுபடுவதும்கூட வீரம் உள்ளிருப்பதைக் காட்டுவதாகும். எனவே, புலனைந்தையும் அடக்கியாண்ட முற்றத்துறந்த முனி வரையும் சிறந்த வீரர்கள் என்றே சொல்லவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து செயலாற்றுவதையும் வீரம் என்று வழங்கலாம்.
தேவியை வழிபடும் வீரர்களைக் குறிப்பிடுமிடத்து வீரச்சுவை வெளிப்படுகின்றது. தாங்கள் கோரும் வரத்தைத் தரும்படியும் அதற்கு ஈடாகத் தங்கள் உறுப்புக்களை அறிந்து தருவதாகவும் வீரர்கள் பரவும் முழக்கம் எம்மருங்கும் கேட்கப்படுகின்றது. சில வீரர்கள் ஓமத்தீயை வளர்த்துத் தங்கள் விலாவெலும்புகளைச் சமித்தாகவும் செந்நீரை ஆகுதியாகவும் ஊற்றுகின்றனர். இதனைக் கவிஞர்,
சொல்லரிய ஓமத்தி வளர்ப்ப ராலோ
தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி வல்லெரியின் மிசையெரிய விடுவராலோ
வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ[13]
- [பழுஎலும்பு-விலா எலும்பு; தொடர- தொடர்ந்தார்
போல்; வாங்கி-பிடுங்கி; குருதி-செந்நீர்]
என்ற ஓவியத்தால் புலனாக்குகிறார். இன்னும் சிலர் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுப்பர். அறுபட்ட தலைகள் தேவியைத் துதிக்கும்; தலை குறைந்த உடலங்கள் அவளைக் கும்பிட்டு நிற்கும்.
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[14]
- [அணங்கு-காளி; கொற்றவை - காளி; பரவும்- துதிக்கும்]
என்ற தாழிசையில் அக்காட்சியைக் கண்டு மகிழ்க.
அச்சச் சுவை
அச்சம் மாந்தர்களின் உடன்பிறந்த சொத்து என்று சொல்லவேண்டும். அச்சவுணர்ச்சி இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. அவரவர்கள் மனோதைரியத்திற் கேற்றவாறு அச்சத்தை உண்டாக்கும் பொருள்கள் வேறுபடலாம் ; பயவுணர்ச்சி மட்டிலும் எல்லோரிடமும் அமைந்திருக்கும். இவ்வளவு பழக்கமான சுவையைக் கவிஞர்கள் ஒரு இலக்கியத்தின் முக்கிய சுவையாகக் கொண்டிராவிடினும், அதனை ஆங்காங்கு சிறப்புடன் சித்திரித்திருக்கின்றனர்.
குலோத்துங்கனின் சேனை கலிங்க நாட்டிற்குள் புகுந்து ஊர்களை நெருப்பால் கொளுத்தி சூறையாடுவதைக் கேட்டவுடன் கலிங்கநாட்டு மக்கள் எங்கே புகலிடம்? யாரோ அதிபதி? என்று கூறிக்கொண்டு தம் அரசனிடம் ஓடி முறையிடும் காட்சியை,
உரையிற் குழறியும் உடலிற் பதறியும்
ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ அடையச் சனபதி
அடியிற் புகவிழு பொழுதத்தே[15]
- [துகில்-ஆடை அடைய-எல்லாரும்]
என்று காட்டுகிறார் கவிஞர். இதில் அச்சம் பொதுளுவதைக் கண்டு மகிழ்க. இன்னும் கருணாகரன் போரில் இறங்கிப் பொருதபொழுது அவன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாது அனந்தபன்மன் வெருவியோடியபொழுது கலிங்கரின் நிலையைக் கவிஞர்,
எதுகொல் இதுஇது? மாயை யொன்றுகொல்?
எரிகொல்? மறலிகொல்? ஊழியின்கடை
அதுகொல்? எனஅல ருவி ழுந்தனர்
அலதி குலதியோ டேழ்க லிங்கரே[16]
- [இது-போர்; எரி-தீ; மறலி-யமன்; ஊழி-யுகாந்தம்; அலதி குலதியுடன்- மிக்க நடுக்கத்துடன்]
என்று காட்டுவதிலும் அச்சச் சுவையைக் காண்க.
இவ்வாறு நடுங்கியோடிய வீரர்களில் சிலர் கடலில் பாய்வர் ; சிலர் யானையின் வயிற்றில் புகுந்து மறைவர் ; சிலர் மலைக் குகையிலும் சிலர் புதர்களிலும் ஒளிவர். இன்னும் சிலர் தத்தம் நிழலுக்கே அஞ்சி ஒடுவதற்குப் பயந்து அபயம் என்று அலறுவர். இச்செய்திகளைக் கூறும் தாழிசைகள் யாவும் அச்சச்சுவை பற்றியனவே.[17]
இமயத்திலிருந்துவந்த முதுபேயின் இந்திர சாலங்களைக் கண்ட அலகைகள் அவ்வித்தைகளைக் கண்டு வெருவி அவற்றை நிறுத்துமாறு காளி தேவியை வேண்டும்,
அக்கணம் ஆளும் அணங்கினை
வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கணம் ஆளும்இ னித்தவிர்
விச்சையெ னக்கைவி திர்த்தலுமே.[18]
- [கணம்:பேய்க்கூட்டம்; அணங்கு-காளி; விச்சை-இந்திர சாலம்; கைவிதிர்த்தல்-கைநடுங்குதல்]
என்ற தாழிசையிலும் அச்சச் சுவையைக் காணலாம். இந்திர சாலத்தைக் கண்டு வெருவி ஓடின. நிலையினைக் காட்டும் தாழிசைகளும் அச்சச்சுவை பயப்பனவாம்.[19]
இளிவரல் சுவை
அருவருப்பு அல்லது 'இழிவு' தோன்றதிற்கும் செயல்களனைத்தும் இளிவரல் சுவையை நல்கும்; நாணத்தக்க செய்கையாலும் இச்சுவை பிறக்கும். கருணாகரனும் அவன் வீரர்களும் கலிங்க நாட்டைத் தாக்கியபொழுது அவர்கள் முன்நிற்க மாட்டாது 'கலிங்க வீரர்கள்' மாற்றுருக் கொண்டு மறைகின்ற செய்திகளைக் கூறும் தாழிசைகளில் இச்சுவையைக் காணலாம். சிலர் சமணர்கள் போலவும், சிலர் புத்தர்கள்போலவும், சிலர் வேதியர்கள் போலவும், சிலர் பாணர்கள் போலவும் மாற்றுருக்கொண்டு மறைகின்றனர்.வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
அமனரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே
- [வரை-மலை; மாசு-பழிச்சொல்; தூறு-புதர் வாங்கி-களைந்து; அரை-இடை; கலிங்கம்-ஆடை; உரிப் புண்ட-களையப்பெற்ற; அமணர்-சமணர்.]
வேடத்தால் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே
- [சிலை-வில்; மடித்திட்டு-சுருட்டி; அரி-போர்க்கருவி]
குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்(து)
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என்
அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே
[குறி-புத்தர் அடையாளம்; குருதி-செந்நீர்; கொடி-கொடிச்சீலை; குஞ்சி -முடிமயிர்; முண்டித்து - மொட்டை யடித்து, சாக்கியர்-புத்தர்]
சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்(டு)
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர்
ஆங்கே[20]
என்ற தாழிசைகளில் இளிவரல் சுவையினைக் காண்க. வீரர்கள் மறைந்தோடுவது தகுதியன்றன்றோ?
மருட்கைச் சுவை
இயற்கைக்கு மாறுபாடாக எதையாகிலும் கண்ணுற்றால் வியப்புத் தோன்றுகிறது. நகையினை வினைவிப்பவை வேண்டாதவையாக இருக்கும் ; வியப்பினை நல்குபவை அப்படியன்று ; விரும்பும் வண்ணமேயிருக்கும். நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டாலும் வியப்பெய்துகின்றோம். இமயத்திலிருந்து மீண்ட முதுபேய் காளியின் முன்பு காட்டிய தான் கற்ற இந்திர சாலங்கள் பலவும் நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றன; காட்சிகளையெல்லாம் நேரில் காண்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஒரு கையில் யானையின் துதிக்கையை வைத்து அதை மறு கையில் மாற்றும்பொழுது யானைத் தலையாகிறதைக் காட்டுகிறது.
ஏற தின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்
இக்கை யிற்சிலது திக்கைபார்!
மாறி விக்கையில ழைக்க மற்றவெம
தக்க ரித்தலைக ளானபார்![21]
- [ஏற-நேரே; மதக்கரி-மதயானை]
என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரிக்கப் பெறுகின்றது. யானைத் தலையுடன் குறையுடலையும் காட்டிய இந்திர சாலத்தை,
இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர
நீர்கு டித்துருமி டித்தெனக்
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவைகு
றைத்த லைப்பிணமி தப்பபார்![22]
- [கரி-யானை; உதிரநீர்-குருதி; உரும்-இடி; கொக்கரித் தல்-இரைச்சல் இடல்; அலகை-பேய்]
என்ற தாழிசையில் காணலாம். அடுத்து பரணி காட்டப்பெறுகின்றது.
அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய
அம்மை வாழ்கஎன வெம்மைபார்!
கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள்
களம்பெ ரும்பரணி யின்றுபார்![23]
என்ற தாழிசையில் பரணிக் காட்சியைக் கண்டு மகிழ்க.
தன் மாயா வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெகுண்டு துடிக்கும் வீரருடல்களையும் பயந்தோடும் யானைகளையும், பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டும் இந்திர சாலத்தை,
துஞ்சி வீழ்துரக ராசி பார்! உடல்
துணிந்து வீழ்குறைது டிப்பபார்!
அஞ்சி யோடுமத யானை பார்! உதிர
ஆறு மோடுவன நூறுபார்[24]
- [துஞ்சுதல்-இறத்தல் ;துரகம்-குதிரை ]
என்ற தாழிசையில் காண்க. அடுத்து முறையே குருதி வெள்ளமும் நிதர்சனமாகக் காட்டப்பெறுகின்றது.
அற்ற தோளிவைஅ லைப்ப பார் !உவை
யருத நீள்குடர்மி தப்பபார் !
இற்ற தாள் நரியி ழுப்ப பார் ! அடி
யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்![25]
- [அலைப்ப - குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலை; இற்ற -உடலினின்றும் இற்று விழுந்த ; தாள்-கால்கள்; அடி-பாதம்; இழுக்கும்-வழுக்கும் ]
நிணங்கள் பார்!திண்ம மனங்க னிந்தன்
நிலங்கள் பார்!நிலம் அ டங்கலும்
பினங்கள் பார்!இவைகி டக்க நம்முடைய
பேய லாதசில பேய்கள் பார் ![26]
- [நினம்.கொழுப்பு ; மனம்-நாற்றம்; கனிந்த-முதிர்ந்த]
என்ற தாழிசையில் அவற்றைக் காணலாம். மேற்கூறிய தாழிசைகளில் வியப்புச் சுவை வெளிப்படுவதை அறியலாம். இன்னும், கலிங்கப் போருக்கெழுந்த படையின் பெருக்கத்தைக் கண்டவுடன் மக்கட்கு ஏற்பட்ட மருட்சியைக் காட்டும்,
அகில வெற்புமின்று ஆனை யானவோ?
அடைய மாருதம் புரவி யானவோ?
முகில னைத்துமத் தேர்க ளானவோ?
மூரி வேலையோர் வீரரானவோ?[27]
- [வெற்பு-மலை; மாருதம்-காற்று; முகில்-மேகம்; வேலை-கடல்.]
என்ற தாழிசையிலும் வியப்புச் சுவையைக் காணலாம். மலைகள் யாவும் யானைகளாயிற்றோ? காற்று தான் குதிரைகளாக மாறினதோ?மேகங்கள் அனைத்தும் தேர்களாக வந்தனவோ? கடல்தான் போர் வீரர்களாகத் தோன்றினதோ? என்று மக்கள் வியப்பெய்துகின்றனர்.
சமநிலை
சமநிலை என்பது யோகியர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஒருநிலை, அந்தச் சுவைக்கு இந்த நூலில் இடம் இல்லை. போரை நாடுபவர்களிடம் எங்ஙனம் அமைதி இருத்தல் இயலும்?
முடிவு
இலக்கியங்களை எல்லோரும் ஒரேமாதிரி அனுபவிக்க முடியாது. அதுபற்றியே இலக்கியங்களைப் படிப்பதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. நம் நாட்டவர் இலக்கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதைவிட உள்ளத்திற்கும் அமைதியை நல்க வல்லதாக இருக்க வேண்டும் என்றும் கருதினர். இலக்கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப்பயனைத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும். எனவே, கவிஞர்கள் தம் இலக்கியங்களில் சுவைக்கு முதலிடம் தரலாயினர். கலிங்கத்துப் பரணியைச் 'சுவைகளின் களஞ்சியம்' என்று கூறலாம்.
- ↑ தாழிசை-55, 56.
- ↑ தாழிசை - 50
- ↑ தாழிசை - 74
- ↑ தாழிசை-569
- ↑ தாழிசை-570
- ↑ தாழிசை-571
- ↑ தாழிசை-572
- ↑ தாழிசைக் 273
- ↑ தாழிசை-484
- ↑ தாழிசை-481
- ↑ தாழிசை-375
- ↑ தாழிசை-376, 377
- ↑ தாழிசை-110
- ↑ தாழிசை-111
- ↑ தாழிசை-374,
- ↑ தாழிசை-450
- ↑ தாழிசை-451, 452, 453.
- ↑ தாழிசை-173
- ↑ தாழிசை188-171,
- ↑ தாழிசை.466, 167, 468. 469.
- ↑ தாழிசை-162
- ↑ தாழிசை-163
- ↑ தாழிசை-164
- ↑ தாழிசை-165
- ↑ தாழிசை-166.
- ↑ தாழிசை 167
- ↑ தாழிசை-347