கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி/கருணாகரத் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழளின் படைத்தலைவர்களில் முதன்மை பெற்று விளங்கியவன்; கலிங்கப்போரை நேரில் சென்று நடத்தித் தன்னரசனான விசயதரனுக்கு வாகைமாலை சூடியவன். எனவே, கவிஞர் சயங்கொண்டார் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்ட கலிங்கத்துப் பரணியில் இவனையும் சில இடங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். குலோத்துங்கனைத் திருமாலின் அவதாரம் என்று சிறப்பித்துப் பாடியவர். இவனை அத்திருமாலின் சக்கரம் என்று உருவகித்துப் பாடுகிறார்.[1] நூலில் இவனைப்பற்றி வந்துள்ள செய்திகளைத் தொகுத்துக் கூறுவோம்.
கருணாகரன் என்ற பெயர் இராமபிரானின் திருநாமங்களுள் ஒன்று என்பதைக் கம்ப ராமாயணத்தால் அறியலாகும். அணை கட்டுவதற்குமுன் இராமன் வருணனை வேண்டி தருப்ப சயனத்திலிருத்ததைக் கூறுங்கால்,
தருண மங்கையை மீட்பதோர்
நெறி தரு கென்னும்
பொருள் நயந்து நன் நூல்நெறி
யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் கிடந்தனன்
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி[2]
என்ற பாடலிலும், பரதன் கங்கை வேடனாகிய குகனுக்குத் தன் தாயை அறிமுகம் செய்யுங்கால் "கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேக"[3] என்ற தொடரிலும் 'கருணாகரன்' என்ற பெயரின்" பொருளை விளக்கிக் கூறுதலைக் காண்க. இவற்றை யெண்ணியே சயங்கொண்டாரும்,
இலங்கை யெறிந்த கருணா கரன்றன்
இசைவெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
களப்போர் பாடத் திறமினோ[4]
என்று பாடியுள்ளார் என்று கொள்ளலாம். இருவரும் கருணாகரப் பெயருடையராயினும் ஒருவன் இலங்கையெறிந்தபுகழுடையவன்; மற்றவன் கலிங்கமெறிந்த புகழுடையவன்.
கருணாகரத் தொண்டைமான் பல்லவ அரச குலத்தைச் சார்ந்தவன்; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின் தலைவன். இவ்வாறு சிற்றரசனாகத் திகழ்ந்த இவன் குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதியாகவும் மந்திரத் தலைவனாகவும் விளங்கினான். இச்செய்திகள்,
மண்ட லீகரும் மாநில வேந்தரும்
வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்
சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே[5]
இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை
எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநகர் அரசனே[6]
வண்டை வளம்பதி பாடீரே
மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே ![7]
என்ற தாழிசைகளால் அறியலாகும் இன்னும் கருணாகரன் பல இடங்களில் வண்டை நகர் அரசன்' என்றும், வண்டையர் அரசன்' என்றும், 'வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெறுகிறான். மத்தியகாலத்துச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெருவலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், பட்டைத் தலைவர்களாகவும், ஏனைய அதிகாரிகளாகவும் வாழ்ந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணாட்டிலும் பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்களுக்குத் தலைவர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேந்தர்களுள் இக்கருணாகரனும் ஒருவன்.
கருணாகரன் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டைநாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகைவண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந்துள்ள வண்டலூரே அவ்வண்டை என்றும் காலஞ்சென்ற திரு. வி. கனகசபைப்பிள்ளை, டாக்டர் ஹீல்ஷ் துரை போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்ஙனம் கருதினமைக்குக் காரணம், கருணாகரன் பல்லவ மரபினனாய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருப்பதும், தொண்டைமண்டல சதக நூலார் அவனைத் தொண்டை நாட்டினனாகப் பாடியுள்ளதுமாகும்.[8]
ஆனால், திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள வண்டலூர் அல்லவென்றும்,
அது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர் என்றும், அந்த ஊர் கல்வெட்டுக்களில் 'வண்டாழஞ்சேரி' என்று வழங்குகிற தென்றும், அந்த வண்டாழஞ் சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி என மருவி வழங்குகிறது என்றும் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர் குறிப்பிடும் கல்வெட்டு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ. இராஜகேசரி வன்மரான திருபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங் கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திரு நறையூர்காட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரனான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திரு நுந்தா விளக்கு"[9]
இதில் குறிப்பிடப் பெற்றுள்ள 'கருணாகரனரான தொண்டைமானார்' தான் கருணாகரத் தொண்டைமான் என்பது திரு. அய்யங்கார் அவர்களின் கருத்தாகும். அமைச்சர் குலம் போன்ற உயர்பதவியிலுள்ள மகளிரை ஆழ்வார் என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுகளிவிருந்து சான்றுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.[10] அவ் வண்டுவாஞ்சேரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் தாலூகாவின் தென்கிழக்கில் திருநறையூராகிய நாச்சியார் கோவிலுக்கும் திருச்சேறைக்கும் இடையில் உள்ளது.
கருணாகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் கருணாகரன் கலிங்கத்தின் மேல் தண்டெடுத்துச் சென்ற பொழுது துணைப்படைத் தலைவனாகச் சென்றான் என்றும் சயங்கொண்டார் குறிப்பிடுகின்றார்.
தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு
மால்க ளிற்றின் மிசை கொள்ளவே[11]
என்ற தாழிசையால் இவற்றை அறியலாம். தமையன் காஞ்சியிலிருந்து தொண்டைநாடு முழுவதும் ஆண்டு கொண்டிருந்ததால் 'பல்லவர்க் கரசு’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளான்.குலோத்துங்கனுக்குப் படைத் தலைவ னாய் அமைந்த கருணாகரன் வண்டை நகரின் கண் இருந்து சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் 'வண்டையர்க்கரசு' என்று சுட்டப் பெறுகின்றான். தம்பியைப் போலவே தமையனும் பெருவேந்தனை குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர்களுள் ஒருவனாய் நெருங்கிய நண்பனாக இருந்து வந்தான் என்று யூகம் செய்ய வேண்டியுள்ளது. இந்நட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்கரையில் பரி வேட்டையாடிய பின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒரு தாய்வயிற்றுப் பிறந்த சகோதரர்களுள் மூத்தோனிருப்பவும் இளையோன் அரசியலில் தலைமை வகிக்க நேர்ந்தது,
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்[12]
என்ற ஆன்றோர் வாக்குப்படி ஒக்குமென்றே கொள்ள வேண்டும்.
கலிங்கப் போரின் வெற்றிக்குக் கருணாகரத் தொண்டைமானின் அடலாண்மையும் பெருவீரமும் முதற்காரணமாகும். சோழப் படைகளால் அழிக்கப் பட்டன போக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் சிதறியோடி ஒளிந்தன. தொண்டைமான் வாகை சூடி குலோத்துங்கனை வந்தடைகின்றான். இதனைக் கவிஞர்,
கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்
கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே.[13]
[சயத்தம்பம்-வெற்றித்தூண்.]
என்று சிறப்பிக்கின்றார்.
முதற் குலோத்துங்கனது 45-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக் கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. கல்வெட்டின் அப்பகுதி வருமாறு :
வடதிசை வேங்கை மண்டலங் கடந்து
தாங்கிய கலிங்கமுந் தழலெரி பரப்ப
விலங்கல் போல விளங்கிய வேந்தர்
விட்டவெங் கரியொடு பட்டனர் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர்வரு
கோமட் டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சனன்
மாப்பிறளா(?) மதகரி யிராசனன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்பாத்(?)திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனவரும்
வெற்ற லேழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யோடு வெண்ணிணங் கழுகொடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வயர்த்துத்
தருங்கட லாடைத் தராதலத் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டொருபகல்
.........
வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின
கோவிராச கேசரி வன்மரான......
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு-” [14]
இப்பகுதியிலிருந்து கருணாகரன் சேனையுடன் எதிர்த்துப் பட்ட கலிங்க சேனாபதிகள் இன்னாரின்னார் என்பதை அறியலாம். ஆனால் சில பெயர்கள் தெளிவாக அறியக்கூடவில்லை. அபயனது ஏனைய கல்வெட்டுக்கள் யாவும் கலிங்க வெற்றியை பொதுவாகத்தான் சிறப்பித்துக் கூறுகின்றன, இக்கல்வெட்டு மட்டிலுந்தான் விவரமாகச் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனுள் காணும் எங்கராயன் தான் கருணாகரனை எதிர்க்காது அவனுடன் சந்து செய்து கொள்ளும்படி கூறினவன். இது,
என்று கூறவே யெங்க ராயனான்
ஒன்று கூறுவன் கேளென்று ணர்த்துவான்
என்ற பரணித் தாழிசையால் அறியப்பெறுகின்றது.
மேற்கூறிய கல்வெட்டினால் குலோத்துங்கனது. 45-ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு கி. பி 1115) கருணாகரனது படையெடுப்பு நடந்திருக்கவேண்டு மென்பது பெறப்படும்.
குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழன் அக்காலத்தில் இளவரசனாக இருந்தனன் என்றும் அவனும் கருணாகரனுடன் கலிங்கப் போருக்குச் சென்றனன் என்றும் ஆங்கு நடந்த போரொன்றில் வெற்றி பெற்றான் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். அவ்வரலாறு உண்மையாக இருந்திருத்தால் அப்போருக்குச் சென்றிருந்த சேனாதிபதி உபசேனாதிபதிகளின் பெயர்களை[15] எடுத்துச் சிறப்பித்துக் கூறும் சயங்கொண்டார் அந்த இளவரசனைச் சிறப்பித்துக் கூறாததாலும், வேறு கல்வெட்டுச்சான்று இல்லாததாலும் அதை உறுதிப்படுத்தக் கூடவில்லை. ஆனல் விக்கிரம சோழனின்,
தெலுங்க வீமன் விலங்கன்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படைத் தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத் தருளி
என வரும் மெய்க்கீர்த்தியுள் குறிப்பிடப் பெறும் கலிங்கப் போர் அபயன் கி. பி. 1095-6ல் மேற்கொண்ட தென்கலிங்கப் போரைக் குறிக்கும் என்று திரு. மு. இராகவய்யங்கார் குறிப்பிட்டுள்ளார்கள்.[16] இரண்டாம் முறையாக அபயன் நடத்திய வடகலிங்கப்போர் அவன் ஆட்சி முடிவிற்குச் சில ஆண்டுகட்கு முன் கருணாகரன் நடத்தியதாகும். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில்,
"ஏனைக் கலிங்கங்கள் ஏழனையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே[17]
என்று பாடியது முதற்கலிங்கப் போரையே குறிக்கும் என்பது திரு அய்யங்கார் அவர்களின் கருத்தாகும்.
கல்வெட்டுப் பரிசோதகரும் இம் முடிவை ஒத்துக் கொண்டுள்ளனர்.
கலிங்கத்துப்பரணிப் பிரதிகளிலும், தண்டியலங்கார மேற்கோள்களிலும் கலிங்கப் போரையும் கருணாகரனையும் பற்றிக் காணப்பெறும் ஒரு சில பழம் பாடல்களை ஈண்டு கூறுதல் ஏற்புடைத்து.
தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் விடங்குலவு வெள்வாள் விதிர்ப்பு-நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண்.[18]
சரநிரைத் தாலன்ன தண்பனி
தூங்கத் தலைமிசைச்செங்
கரநிரைத் தாரையுங் காண்பன்கொ
லோகலிங் கத்துவெம்போர்
பொரநிரைத் தார்விட்ட வேழமெல்
லாம்பொன்னி நாட்டளவும்
வசநிரைத் தான்றொண்டை மான்வண்டை
மாநகர் மன்னவனே.
இப்பாடல்கள் இரண்டும் சென்னை 'மியூசியம்’ கையெழுத்துப் புத்தக சாலையிலும், தஞ்சைச் சரசுவதி மாலிலும் உள்ள பரணிப் பிரதிகளின் இறுதியிற் கண்டதாக திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.[19]
கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும்
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ்-சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.[20]
இவை மூன்றும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்கள்.
இனி, 'ஸூக்திரத்நஹாரம்' என்ற வடமொழி நீதித்திரட்டை எழுதி 'குலசேகரன்' என்று தன் அரசன் பெயரிட்டு வழங்கியவன் குலசேகரனுடைய தலைமை அமைச்சனான காலிங்கராசன் என்பவன் என்றும், அக்காலிங்கராயன்தான் அபயன் சேனாதிபதியாகவும் சிதம்பரம் முதலிய கோவில்களில் திருப்பணி .செய்தவனாகவும் கல்வெட்டுக்களால் அறியப்படும் காலிங்கராயனேயாதல் வேண்டுமென்றும், இக்காலிங்கராயனது கல்வெட்டுக்களில் இவனுக்கு அருளாகரன் என்ற மறுபெயரும், தன்னரசனான அபயன் பொருட்டு வடநாட்டு அரசருடன் போர்கள் பல புரிந்த செய்தியும் காணப்படுதலால் இவனே அவ்வபயனுடைய தலைமைச் சேனாதிபதியாய்க் கலிங்கமெறிந்த கருணாகரனாக வேண்டுமென்றும், வண்டை என்ற ஊரின் தலைவனாகக் கருணாகரனையும், மணவில் என்ற ஊரின் தலைவனாக இக் காலிங்கராயனையும் பரணியும் கல்வெட்டுக்களும் முறையே வேறுபடக் கூறினும், முதலில் வண்டையிலிருந்த கருணாகரனே கலிங்கப் போருக்குப் பிறகு மணவிலைத் தனக்குரிய ஊராக மாற்றியிருக்கக் கூடுமென்றும், ஸூக்திரத்நஹாரப்தில் குலசேகரன் அமைச்சனாக இக்காலிங்கராயனைக் கூறியிருப்பது, அக்குலசேகரப் பெயர் அபயனுக்குரியதென்பது 'வாழி சோழ குலசேகரன்'[23] என்ற பரணித் தொடரால் அறியப்படுதலால் அவ்வபயனே அந் நீதிநூல் கூறும் குலசேகரன் என்றும் திருவனந்தபுரம் கல்வெட்டுத் துறைத் தலைவராக இருந்த திரு. ஏ. எஸ். இராமநாத அய்யரவர்கள் கூறுவர்.[24] இவற்றால் குலசேகரன் மந்திரி காலிங்கராசன், மணவிற் காலிங்கராயனான அருளாகரன், கலிங்கம் வென்ற கருணாகரன் ஆகிய மூவரும் ஒருவரே என்பது திரு அய்யரவர்களின் முடிபாதல் பெறப்படுகின்றது.
இக்கருத்தைத் திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் மறுத்து, ஸூக்திரத்நஹாரம் செய்த காலிங்கராசனும், அபயன் சேனாதிபதிகளுள் ஒருவனை மணவிற் காலிங்கராயனும், அவன் தலைமைச் சேனாதிபதியான வண்டைக் கருணாகரனும் மூவேறு தலைவர்கள் என்றும், அம்மூவரையும் ஒருவராகக் கொள்ளுவதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லையென்றும் தெளிவாக ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள்.[25] கருணாகரனைப்பற்றி அறிய விரும்பும் அன்பர்கள் அப்பகுதியையும் படித்தறிந்து கொள்வார்களாக.
- ↑ தாழிசை -247, 363, 383
- ↑ கம்ப-வருணனை வழிவேண்-செய் 5
- ↑ கம்ப குகப் பட-செய் 69.
- ↑ 4. தாழிசை -64
- ↑ தாழிசை-327
- ↑ தாழிசை-841
- ↑ தாழிசை-534
- ↑
பண்டையொர் நாளையில் ஒரேழ்
கலிங்கப் பரணிகொண்டு
செண்டையும் மேருவில் தீட்டுவித்
தோன்கழல் செம்பியன் சேய்
தொண்டநன் னாடு புரக்கின்ற
கோனந்தி தோன்றல் எங்கள்
வண்டையர் கோணங் கருணா
கரன்தொண்டை மண்டலமே.
—தொண்டைமண்டல சதகம்.செய், 93. - ↑ S.I.I. iv No. 862
- ↑ ஆராய்ச்சித் தொகுதி பக்.428
- ↑ தாழிசை-364
- ↑ புறம்-283
- ↑ தாழிசை-471
- ↑ S.I.I.IV-P. 15 தாழிசை-378
- ↑ தாழிசை-364, 385
- ↑ ஆராய்ச்சித் தொகுதி,பக்.498.
- ↑ கன்னி- 331
- ↑ 'மன்' என்றும் பாடம்.
- ↑ ஆராய்ச்சித் தொகுதி-பக். 445
- ↑ தண்டி-கருவிக் காரக ஏதுவணியின் மேற்கோள்.
- ↑ குணக்குறை விசேட அணியின் மேற்கோள்.
- ↑ சொற்பொருள் பின்வரு நிலையணியின் மேற்கொள்
- ↑ தாழிசை.285
- ↑ "கருணாகரத் தொண்டைமானும் ஸ்ரீ ஸூக்திரத்நஹாரமும்" என்ற கட்டுரையில்.
- ↑ ஆராய்ச்சித் தொகுதி-பக், 439-445.