கலிங்கத்துப் பரணி/இராச பாரம்பரியம்

விக்கிமூலம் இலிருந்து

இமயத்தில் புலிக்கொடி[தொகு]

178

செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே. 1

நாரதர் கூறல்[தொகு]

179

கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்
கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
போலு மன்னருள ரல்லரென ஆசி புகலாப்
புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான். 2

விநாயகர் பாரதம் எழுதினார்[தொகு]

180

பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்
பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகைக்
கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதிக்
குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால். 3

181

பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்
பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி
நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே. 4

இதுவும் வேதம் ஆகும்[தொகு]

182

அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்
பாத மானசில பார்புகழ வந்த அவையும். 5

183

அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே
ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்
வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்
வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே. 6

184

கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்
காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
அமல வேதமிது காணுமிதி லார ணநிலத்
தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே. 7

நாரதர் இருப்பிடம் செல்லல்[தொகு]

185

அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்
அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்
தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்
தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே. 8

நாரதர் கூறிய வரலாறு[தொகு]

186

ஆதி மாலமல நாபிகம லத்த யனுதித்
தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்
காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்
காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும். 9

187

அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புரந்
தரிய காதலனை யாவினது கன்று நிகரென்
றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்
இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும். 10

188

இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்
இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்
சக்கு வாயிர முடைக்களிறு வாகன மெனத்
தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். 11

189

ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே
உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்
புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும். 12

190

கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்
உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்
ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும். 13

191

சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்
இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும். 14

192

கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்
காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும். 15

193

புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்
புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்
வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்
வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16

194

தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணிச்
சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17

195

தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே
தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்
களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வ ழித் தளையை வெட்டியர சிட்ட அவனும். 18

கரிகால் வளவன்[தொகு]

196

என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடியத்
தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்
தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும். 19

197

தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20

198

தத்து நீர்வரால் குருமி வென்றதுந்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும். 21

199

ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா
உதியர் மன்னரே மதுரை மன்னரென்
றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவித்
தெரிவி ளக்குவைத் திகல்வி ளைத்ததும். 22

முதலாம் பராந்தகன்[தொகு]

200

வேழ மொன்றுகைத் தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்
ஈழ முந்தமிழ்க் கூடலுஞ் சிதைத் திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும். 23
முதலாம் இராசராச சோழன்

201

சதய நாள்விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்
உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும். 24

முதலாம் இராசேந்திர சோழன்[தொகு]

202

களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25

முதலாம் இராசாதிராசன்[தொகு]

203

கம்பி லிச்சயத் தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்
கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும். 26

இராசேந்திர சோழன்[தொகு]

204

ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத் துலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். 27

இராச மகேந்திரன்[தொகு]

205

பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும். 28

முதற் குலோத்துங்கன் தோற்றம்[தொகு]

206

குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை
இந்தநிலக் குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்னத் தோன்றி. 29

வெற்றிச் சிறப்பு[தொகு]

207

எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும்
அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்காத் தளிக்கு மாறும். 30
கரிகாலன் எழுதி முடித்தான்

208

இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்
தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31

காளி வியத்தல்[தொகு]

209

எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனைத்
தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்
சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ. 32

காளி மகிழ்தல்[தொகு]

210

வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே
ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. 33

காளி புகழ்தல்[தொகு]

211

உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி
அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34