கலிங்கத்துப் பரணி/தேவியைப் பாடியது

விக்கிமூலம் இலிருந்து

காளியின் வடிவழகு[தொகு]

121

உவையுவை யுளவென் றெண்ணி உரைப்ப தெனுரைக்க வந்த
அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம். 1

பரிபுரம் விளங்கும் பாதம்[தொகு]

122

ஒருமலை மத்துவலத் துலவுக யிற்றினுமற்
றுலகுப ரித்தபணத் துரகவ டத்தினுமப்
பருமணி முத்துநிரைத் துடுமணி தைத்தவிணைப்
பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே. 2

காளி தேவியின் குங்குமப்பொட்டு[தொகு]

123

அருமறை யொத்தகுலத் தருணெறி யொத்தகுணத்
தபயனு தித்தகுலத் துபயகு லத்துமுதல்
திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத்
திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே. 3

சதிகொள் நடனம்[தொகு]

124

அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்
தடியிட வுட்குழிவுற் றசைவுறு மப்பொழுதில்
தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச்
சயதர னைப்பரவிச் சதிகொள் நடத்தினளே. 4

பால் நிரம்பிய கிண்ணம்[தொகு]

125

தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத்
தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்
தணிதவ ளப்பொடியிட் டடையவி லச்சினையிட்
டமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே. 5

ஆடையும் இடைக்கச்சும்[தொகு]

126

பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்
றுரிமிசை அக்கரியிற் குடரொடு கட்செவியிட்
டொருபுரி யிட்டிறுகப் புனையுமு டுக்கையளே. 6

தேவியின் பிள்ளைகள்[தொகு]

127

கலைவள ருத்தமனைக் கருமுகி லொப்பவனைக்
கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச்
சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித்
திறலவ னைத்தருமத் திருவுத ரத்தினளே. 7

தேவியின் அணிகள்[தொகு]

128

கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக்
களிறுவி ருப்புறுமக் கனகமு லைத்தரளத்
தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்
தழலுமி ழுத்தரியத் தனியுர கத்தினளே. 8

காளியின் கைகள்[தொகு]

129

அரியுமி டற்றலையிட் டலைகுரு திக்கெதிர்வைத்
தறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையிற்
கரிகர டத்தொளையிற் கலுழியி டைக்கழுவிக்
கருமைப டைத்தசுடர்க் கரகம லத் தினளே. 9

தேவியின் உதடுகள்[தொகு]

130

சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத்
திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்
திமையவ ரைத்தகைதற் கிருளுமி டற்றிறைவற்
கினியத ரத்தமுதக் கனியத ரத்தினளே. 10

சிவனின் பகை தீர்த்தவள்[தொகு]

131

உருகுத லுற்றுலகத் துவமைய றச்சுழல்வுற்
றுலவுவி ழிக்கடைபட் டுடல்பகை யற்றொழியத்
திருகுதலைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே. 11

காதணிகளும் மாலைகளும்[தொகு]

132

அண்டமுறு குலகிரிகள் அவளொருகா லிருகாதிற்
கொண்டணியிற் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். 12

தேவியின் ஆற்றல்[தொகு]

133

கைம்மலர்மே லம்மனையாம் கந்துகமாங் கழங்குமாம்
அம்மலைக ளவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ. 13