உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 12

விக்கிமூலம் இலிருந்து


12



ப்படி என் கதை? நவரசமும் ததும்புகிறது. பார்த்தாயா? இவ்வளவு பாரத்தைச் சுமந்து கொண்டு நான் எப்படி இறக்க முடியும்? வீரனே! உன்னிடம் நான் என் மனத்தில் இருந்ததைக் கூறிவிட்டேன்; என் நிதிக்கு உன்னைக் காவலனாக்கினேன்; என் மகளைக் கண்டுபிடி; அவள் மண் வீட்டிலிருந்தால், மாளிகைக்கு அழைத்துச் செல்; வாழ்க்கையில் வதைந்து கிடந்தால், பணமெனும் மருந்தூட்டி, அவள் நோயைப் போக்கு; நான் உலவிய மலர்புரியை ஒரு முறை போய்ப் பார்; கலிங்கரும் தமிழரும், ஆந்திரரும் தமிழரும், சேரரும் சோழரும் களத்திலே மோதிக் கொண்டு, சிதைகின்றகோரம் நீங்க வழி கண்டுபிடி. செந்தமிழ் நாட்டை அரிக்கும் செல். எமது நாட்டை மட்டும் சும்மா விட்டு விடவில்லை. கங்கையிலே உலவினர். காவிரிக்கும் வந்தனர். அந்த ஆரியத்தை அழிக்க ஆயுதம் உதவாது. அறிவுவேண்டும். சாகப்போகும் நான் சாந்தோபதேசம் புரிகிறேன் என்று எண்ணி எள்ளி நகையாடாதே என்று, கலிங்க வயோதிகன் கூறிக்கொண்டே களைத்துக் கண்களை மூடிக் கொண்டான். அவன் கூறிக் கொண்டதை வீரமணி சரியாகக்கேட்கவில்லை. அவனது செவியிலே, தூரத்திலே குதிரைகள் வேகமாக வரும் சத்தம் அதிகரித்தது. வயோதிகனை நோக்கினான். மயக்கமாகிக் கிடக்கக் கண்டான். மேலே ஒரு கம்பளத்தை எடுத்து போர்த்திவிட்டுக் குகை வாயிற்படி வந்து நின்றான். கருணாகரனின் உதவி அதிகாரி சில வீரர்களுடன், குகையை நோக்கித் தன் குதிரையின் காலடிகளை அடையாளம் கண்டு பிடித்து வரக்கண்டான். திகைத்தான். தான் சவாரி செய்து வந்திருந்த குதிரையை அவர்கள் கண்டதும், சந்தோஷத்தால் ஆரவாரித்து, "வீரமணியின் குதிரை! இங்கேதான் எங்காவது இருப்பான்" என்று கூவினர். தனக்குப் பகைவரால் ஏதோ ஆபத்து வந்துவிட்டதோ எனப் பயந்தே தன்னை அவர்கள் தேடிக் கொண்டு வருவது வீரமணிக்குப் புரிந்து விட்டது. ஆனால், குகையிலே, அவர்கள் நுழைந்தால், கிழவனைக் கைது செய்வார்கள். நிதியைக் கைப்பற்றுவார்கள். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத நிலைமை தனக்கு உண்டாகுமே என்று வீரமணி அஞ்சினான். என்ன செய்வது என்று யோசித்தான். அவனது மனதிலே யோசனைகள் தோன்றும் வேகத்தைவிட அதிக வேகமாக குதிரைகள் ஓடி வந்தன. அதோ குகை! என்று கூச்சல். குகைக்கருகே வந்தேவிட்டனர்.

மூவர், வீரமணி குகை வாயிற்படியண்டை நின்று கொண்டு அவர்களை உள்ளேவிடாமல் தடுக்கத் தீரமானித்து விட்டான். வந்தவர்களோ, வீரமணியைக் கண்டதும் சந்தோஷத்துடன். "இதோ வீரமணி ! நல்ல வேளை, ஒரு ஆபத்தும் இல்லை" என்று கூறிக் கொண்டே, குதிரைகளை விட்டுக் கீழே இறங்கி, குகையை நோக்கி நடந்தனர். சாதாரண காலத்திலே, தனக்கு மேலதிகாரி வரக்கண்டால், வீரமணி காட்டும் மரியாதையைக் காட்டாமலும், தோழர்களைக் கண்டதும் வரவேற்கும் வழக்கத்துக்கு மாறாகவும், உருவிய வாளுடன், கடுகடுத்த முகத்துடன் வீரமணி நிற்கக் கண்ட மூவரும் சற்றுக் கோபமும் வெறுப்பும் கொண்டனர். அவர்கள் அவனருகே செல்லச் செல்ல அவன், அவர்களைப் பகைவர்கள்போல் கருதுவது தெரியலாயிற்று. ஆகவே, அவர்கள் சற்றுப் பயந்தனர்.

"வீரமணி! இஃதென்ன விசித்திரமான நிலை! எங்களைக் கண்டு முறைப்பது ஏன்? நாங்கள், நீ கலிங்கரிடம் சிக்கிவிட்டாய் என்று கலங்கியன்றோ உன்னைத் தேடிக் கொண்டு வந்தோம். நீ எங்களை நோக்குவது வேதனை தருவதாகவன்றோ இருக்கிறது" என்று கூறினர். வீரமணி, "கண்டுபிடித்து விட்டீர்களல்லவா? இனி ஏன் இங்கு வருகிறீர்கள். நான் சுகமாகத்தான் இருக்கிறேன். எந்தச் சூரனும் என்னைத் தூக்கிக் கொண்டு போய்விடவில்லை. இனி நீங்கள் போகலாம்," என்றுரைத்தான்.

மூவரும் பொறுமையையிழந்தனர். "களத்திலே கண்ட கோரக்காட்சிகளைக் கண்டு, மூளை குழம்பிவிட்டதோ" என்று கேட்டான் மூவரின் தலைவன். வீரமணி மௌனமாக இருந்தான். மூவரும், குகை வாயிற்படியை நெருங்கினர். உடைவாளை நீட்டினான் வீரமணி. "இதைத் தாண்டித்தான், குகைக்குள்ளே நுழைய வேண்டும்" என்று கர்ச்சனை புரிந்தான். மூன்று உடைவாள்கள் வெளி வந்தன. போர் மூண்டுவிட்டது. முதல் வெட்டிலேயே, மூவரில் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டு விட்டது. போர் மும்முரமாக நடக்கையிலே, உள்ளே கிழவன், "ஒ" என்று அலறினான். வீரமணியின் மனம் குகைக்குள்ளேயும், விழி வெளியேயும் என்ற நிலையாகிவிட்டது. நெருக்கடியை மறந்தான். வாளைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினான். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். ஒரு கூச்சலுடன், கிழவன் சாய்ந்துவிட்டான்.

தீபம் அணைந்துவிட்டது. வீரமணி அவனைப் பார்த்துக் கண்ணீர் உகுத்தான். வந்தவர்கள், "இதென்ன கோலம்" என்று கேட்டனர். வீரமணி "இவனோர் கலிங்கவீரன், இவனைக் காப்பாற்றவே, நான் இங்கு வந்தேன்" என்றான்.

"துரோகி!" என்றான் வந்த தலைவன், "பாதகன்! பசுத்தோல் போர்த்திய புலி! பாலைக் குடித்து விஷத்தைக்கக்கும் பாம்பு!" என்று பதட்டமாகப் பேசிக் கொண்டே. வந்தவர்கள் குகையை ஆராய்ந்தனர். பேழையிலே பொக்கிஷம் இருக்கக் கண்டனர்.

"ஓஹோ! கலிங்கத்தானிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டுதான், கங்காணி வேலைக்கு வந்தான்" என்று இடிமுழக்கமெனக் கூவினான் வந்தவரில் தலைவன்.

"வாயை மூடு! உளறாதே! உன் நீச நாக்கைத் துண்டித்து நரிக்கு விருந்திடுவேன்," என்று வீரமணி கோபத்துடன் கூறினான். வந்த தலைவன், வீரமணி சாய்ந்து கிடந்த கிழவனைப் பார்த்து கொண்டே இருக்கையில், பாய்ந்து பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் உடனே கை கால்களைக் கட்டிக் கீழே உருட்டினர். மிக விசித்திரமான காட்சி! சீறிடும் புலிகள் மூன்று சிரித்தன! ஒரு கிழச் சிங்கம் செத்துக் கிடந்தது; ஒரு ஏறு கைகால் கட்டுண்டு உருண்டு கிடந்தது! ஏராளமான பொக்கிஷம்!

"போ புலிகேசா! போய் எனது படையைக் கூட்டிவா!" என்று தலைவன் உத்தரவிட்டான். அவனும் உத்தரவிற்கிணங்க, விரைந்து சென்று, படையுடன் வந்து சேர்ந்தான். "பிணம் இங்கே கிடக்கட்டும்! பொக்கிஷத்தை மூட்டைகளாக்கிக் குதிரைகள் மீது போடுங்கள். இந்தத் துரோகியின் கைகால்களில் இரும்புத்தளைகள் போட்டுக் குதிரைமீது இறுக்கிக் கட்டுங்கள். குலோத்துங்கனின் உப்பைத் தின்று. அவனுக்கே துரோகம் செய்ய எண்ணிய நீசனுக்குத் தக்க தண்டனையைத் தொண்டைமான் தருவார்" என்று தலைவன் உறுமினான். வீரமணி வாய் திறக்கவில்லை. ஆனால், அவன் உடல் பயத்தால் உதறிற்று.

வீரமணியை இழுத்துக் கொண்டு போய், படைத் தலைவன் முன் நிறுத்தினர். தொண்டைமானின் துயரம் சொல்லுந் தரத்தன்று. வீரமணி துரோகியானான் என்பது, ஆயிரம் வேல்கொண்டு இருதயத்தைத் தாக்குவது போல் இருந்தது! வீரன்! இவனா துரோகியாவது! என்ன கொடுமை! எங்கிருந்து பிறந்தது இம்மடமை! கேவலம் பணத்துக்காக, நாட்டை, மன்னனை, மானத்தைக் காட்டிக் கொடுத்து விடவா துணிவது. தமிழகத்திலே இத்தகைய கள்ளி முளைத்தால், பூந்தோட்டம் காடாகுமே! பஞ்சவர்ணக் கிளிகளுக்கு பூனைபோல், புள்ளிமான்களுக்குப் புலிபோல், வீரத்தை அரிக்க துரோகி கிளம்பினானே. அரண்மனையிலே இவனுக்கு எவ்வளவு மதிப்பு. மன்னனுக்கு இவனிடம் எவ்வளவு அக்கரை. எனக்கு இவனிடம் என்ன அன்பு! இவன் செயல் என்னை வேதனைக்குள்ளாக்குகிறதே என்று எண்ணி ஏங்கினான். வீரமணியோ, தொண்டைமானின் எதிரில் தலை குனிந்து நின்றான். திகைப்புடன் படைத் தலைவர்கள் சுற்றிலும் நின்றனர். உருவிய வாளுடன் பாதுகாப்புப் படை நின்றது.

"வீரமணி! உண்மையைக் கூறு" தொண்டைமானின் குரல், துக்கத்தையே காட்டிற்று. வீரமணி மௌனமாகவே இருந்தான்.

"குகையிலே இருந்தவன் கலிங்கத்தானா?"

"ஆமாம்."

"அவனைக் காப்பாற்றவே நீ துணிந்தாயா?"

"ஆம்"

"துரோகி! அங்குப் பொக்கிஷமிருந்தது உனக்குத் தெரியுமல்லவா?"

"தெரியும்"

"உன்னை அழைக்க வந்த உன் தோழர்களை எதிர்த்தாயன்றோ?"

"எதிர்த்தேன்."

"என்ன துணிவடா உனக்கு? ஏன் இந்தத் துரோகம் செய்தாய்?"

"துரோகமில்லை, தலைவா!"

"தூர்த்தா! என்னைத் தலைவனென்று மறுமுறை கூறாதே. உன்போன்ற உலுத்தர்களுக்கா நான் தலைவன்? துரோகமின்றி, வேறு என்னடா, அதற்குப் பெயர்? கட்டித் தழுவிடும் காமுகன். உடல் அளவு பார்த்தேனே யன்றி, கூடிடும் நோக்கமில்லை என்று கூறுவது போலிருக்கிறது உன் பேச்சு, நீசா, எந்தக் கண்கள் எதிரியின் பணத்தைக் கண்டு பூரித்தனவோ, அவை புண்ணாகட்டும். எந்தக் காதுகளிலே, துரோகப் பேச்சுக்கு இடங்கொடுத்தாயோ, அவைகளைக் குடைந்தெடுக்கிறேன். துரோகி! சோழ மண்டலத்திலேயே, இத்தகைய சொரணை கெட்ட ஜென்மம் ஜனித்தது. வஞ்சக நரியே, வல்லமையுள்ள புலிபோல் வேடமிட்டு நடித்தாயே. என் எதிரே நிற்கிறாய் துணிவாக, உன் தலை இன்னும் பூமியிலே உருளவில்லை. கண்களிலே நீரா! நீலிக் கண்ணீர்!"

"என்னை வெட்டிவிட உத்தரவிடுங்கள். வீணாகத் திட்டவேண்டாம்".

"என்ன வேதாந்தம்! வஞ்சகா! வெட்டுவதா உன்னை! கை கால்களிலே விலங்கிட்டு, எந்தக் குதிரைமீது கெம்பீரமாகவும் பூரிப்பாகவும் ஏறிக்கொண்டு சென்றாயோ, அதே குதிரையின் வாலிலே கட்டி, எந்த நடனத்தின் கண்களுக்கு விருந்தாக உலவி வந்தாயோ, அவள் கண்களுக்கு வேதனை உருவாக, காரியுமிழும் பொருளாக்கி, மூன்று மண்டலங்களிலும் உன்னை மொட்டையடித்தத் தலையுடன் இழுத்துச் சென்று, பிறகன்றோ உயிரைப் போக்க வேண்டும்?"

"விஷயமறியாது வேதனைப்படுகிறீர். இருளிலிருந்து நீங்கிய பிறகு எதுவும் தெரியும்."

"என்னடா இருள்? உன் மன இருள் தவிர வேறு என்ன?"

"நீர் நம்ப வேண்டுமென்று ஏதும் கூறவில்லை. பிறகோர் நாள் உதவவே, இதனைக் கூறுகிறேன். குகையிலே கலிங்கத்தானுடன் இவர்கள் என்னைக் கண்டதும் உண்மை; அங்குப் பொக்கிஷம் இருந்ததும் உண்மை; அதை நான் எடுத்துவர எண்ணினதும் உண்மை. இவர்களை எதிர்த்தேன்; இல்லையென்றுரைக்கவில்லை. ஆனால், துரோக சிந்தனை எனக்கு இல்லை. கலிங்க வீரனுக்குத் தந்த வாக்கின்படி நான் நடக்க வேண்டும். அந்த இரகசியத்தை வெளியே உரைபதற்கில்லை. நீர் என்ன வென்று தீர்மானித்து, எப்பாடு படுத்தினாலும், நான் தலை குனியத்தான் வேண்டும். எனக்குச் சோழனே மன்னன். சோழநாடே என் பூமி, நான் துரோகியல்ல, துரோகியல்ல! என்னை நம்பு."

"உன்னையா? நம்புவதா? ஓஹோ! உத்தமனே! உன்னைச் சோழநாட்டின் ஜோதி ஸ்வரூபனாக்க வேண்டும். ஏடா! மூடர்களே, இவன் பேச்சைக் கேட்டும், சும்மா இருக்கிறீர்கள்? கோயில் கட்டுங்கள். கொட்டுமுழக்கு நடக்கட்டும்."

"கொலை, இந்தக் கேலியைவிட கொடுமையாக இராது."

இந்தப் பேச்சுக்குப் பிறகு, தொண்டைமான் கோபத்துடன், ஓங்கி ஒரு அறை கொடுத்தான், வீரமணியின் கன்னத்தில். பிறகு உரத்த குரலிலே கூறினான், "இவனது கைக்கட்டுகளை அவிழ்த்து விடுங்கள். இனி இவன் சோழ மண்டலத்துக்குள் நுழையக்கூடாது" என்று தண்டனை உத்திரவைக் கூறிவிட்டு, கூடாரத்துக்குள் சென்றுவிட்டான்.