கலிங்க ராணி/கலிங்க ராணி 19
மலர்புரியிலே, ஆரியன் தனது ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ளத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு யுக்தி தோன்றிற்று. கைது செய்யப்பட்டுள்ளவர்களிலே எவனையாவது கொண்டு, மலர்புரி அரசியைக் கொலை செய்துவிடும்படியாகச் செய்துவிடலாம் என்று எண்ணினான். பின்னர் கொலை புரிந்தோனைக் கொல்ல உத்தரவு செய்துவிட்டு, அரசியின் குரு என்ற முறையிலே தானே அரசாளத் தொடங்கலாம் என்று எண்ணினான். பிறகு அந்த எண்ணத்தையும் மேலும் கொஞ்சம் திருத்தினான். ஆட்களைக் கொல்வதைவிட, "தேவியே கொன்று விட்டாள்; அரசியைத் தேவி தன்னடி சேர்த்துக்கொண்டாள்" என்று கூறிவிடலாம்; பாமரரை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணினான்.
தேவி, சிலைதான்; ஆனால் வெண்கலத்தாற் செய்யப்பட்டது. உள்ளே ஓர் ஆள் போய்த் தங்கும்படியான அமைப்புடன், ஆரியன் அதனைச் செய்து வைத்திருந்தான். ஆண்டுக்கோர் முறை எவனாவது ஒருவனை, சிலைக்குள் தங்கி இருக்கச் செய்து 'மலர்புரி அரசியே! குருதேவனின் வாக்கை என்வாக்கெனக் கொண்டு நட' என்று கூறச் செய்வது வழக்கம். அதைக் கூறுமாறு எவனாவதோர் ஏமாளிக்கு ஆசைமொழி புகன்று அமர்த்துவான். அன்று விழா நடக்கும். அவன் தேவி சிலைக்குள்ளிருந்து ஆரியனின் தந்திர ஏற்பாட்டின்படி பேசிய பிறகு, அன்றிரவு அவனை ஆரியன் கொன்றுவிடுவான், விஷயம் வெளிவராதிருக்க அதே முறையிலே, சிலைக்குள் யாரையாவது இருக்கச் செய்து அரசியைக் கொல்லுமாறு ஏற்பாடு செய்துவிட வேண்டும். பிறகு வீரமணியை மந்திரியாக்கி அவனையும் சரிப்படுத்திவிட்டு, மலர்புரி மன்னனாகி விட வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். இனி, காரியத்தைச் செய்யக்கூடிய கூரிய அம்பு தேடுவோம் என்று கிளம்பினான். சிறைப்பட்டிருந்த வணிகர் கூட்டத்திலே, சீறும் புலிபோல் காணப்பட்ட உத்தமன் ஆரியனின் கண்ணையும் கருத்தையும் இழுக்கவே, "இவனே இதற்கேற்ற ஆள்" என்று முடிவெடுத்து அவனைச் சிறைக்கூடத்தினின்றும் விடுவித்துத் தனது கிரகத்துக்கே அழைத்துச் சென்று, வைத்திய சிகிச்சை செய்வித்து, அவனுடன் இதமொழி பேசி அவனை மயக்கி வரலானான். உத்தமன் சிறைக்கூடத்தில் இருக்கையிலே, ஆரியனின் ஆட்சி மலர்புரியில் பரவிய வகைப்பற்றிச் சிலர் கூறிடக் கேட்டிருந்தான். ஆரியன், திடீரெனத் தன்னிடம் அன்பு காட்டுவது தெரிந்ததால், அவனைக்கொண்டு, நடனாவின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளக் கருதி, 'ஐயா! எங்களுடன் வந்து பக்கத்தூரிலே பதுங்கிக் கொண்ட வயோதிக வணிகர்களும், அவர்களுடன் இருந்த ஓர் வாலிப வணிகனும் என்னவானார்கள்' என்று கேட்டான். ஆரியன் சிரித்துக் கொண்டே, "எனது உத்தரவு அவர்களைத் தேடி அங்கு சென்றதால், அவர்கள் அங்கும் தங்காது எங்கோ சென்று விட்டனர்" என்று கூறினான். உத்தமன் வருந்தினான்.
"வருந்தாதே! சிறையிலே உழலவேண்டிய உன்னை என் மாளிகையிலே உபசரிக்கிறேன். காரணம் என்ன தெரியுமா? உன் முகத்தைக் கண்டதும் எனக்கு உன்னிடம் பிரேமை ஏற்பட்டுவிட்டது. உன் முகக்குறியிலிருந்து நீ வெகுவிரைவில், உன்னதமான உயரிய பதவியில் அமரப் போகிறாய் என்று தெரிகிறது. அதற்காகவே நான் உன்னிடம் அக்கரை கொண்டேன்." என்று ஆரியன் தனது காரியவாத பேச்சைத் துவக்கினான்.வணிகரைக் கொள்ளையர் என்று பழிசுமத்திய பாதகன், சிறையிலிருந்து தன்னைக் கொண்டுவந்து வெளியே விருந்தளித்து, வினயமாகவும் அன்புடனும் பேசுவது சூதன்றி வேறு யாதாக இருக்க முடியுமென்று உத்தமன் தெரிந்து கொள்ளாமலில்லை. இந்தப் பசப்புக்கெல்லாம் பாதகனின் அந்தரங்க நோக்கந்தான் என்னவென்பதைக் கண்டறிய வேண்டுமென்று, ஆரியன் மீதுஎழுப்பிய கோபத்தை அடக்கிக் கொண்டு "ஐயா! என்மீது கருணை காட்டுவது கண்டு என் மனம் குளிர்கிறது. என்னால் ஏதேனும் ஆகவேண்டுமென்றால் கூறும்" என்றான்.
"நீ பலசாலி மட்டுமல்ல; புத்திசாலியுங்கூட! இப்படிப் பட்டவர்களுக்கே யோக ஜாதகம் இருக்கிறதென்று மேலோர் கூறுவர். என் இஷ்டப்படி நடப்பவர்களை நான் எத்தனை பெரிய அந்தஸ்திலும் வைப்பது வழக்கம். நாடோடியாக என்னை வந்து அடைந்த மணிவீரன், இன்று பெரும் படைத் தலைவனானான்" என்று ஆரியன் தன் பெருந்தன்மைக்கு ஆதாரம் காட்டினான். வீரமணியைப் பற்றிய விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பிய உத்தமன் "மணிவீரன் யார்? எங்கிருந்து இங்கு வந்தான்?" என்று கேட்க, ஆரியன் "அவனுடைய பூர்வோத்திரம் நானறியேன்; மல்லனாக இங்கு வந்தான்; என்னிடம் வேலைக்கமர்ந்தான். இன்று மேனிலையில் இருக்கிறான். அதுபோலவே நீயும் என் சொற்கேட்டால் சுகம் பெறுவாய்." என்றான். உத்தமன் "தடை இல்லை! தயாநிதியாகக் காணப்படும் உம்மிடம் நான் சேவை செய்வதே யுக்தம்; கூறும் கேட்கிறேன்" என்றான்.
"உத்தமா! இங்கு நாட்டுக்கு அரசி உண்டு. மகா பொல்லாதவள்; காமாந்தகாரி; கர்வம் பிடித்தவள்; வணிகரான உங்களைக்கூடக் கொள்ளையர் என்று கூறுமாறு என்னைப் பணித்தவளும் அந்தப் பாதகியே. பரம்பரையாக அவள் குலம் இந்நாட்டை ஆண்டு வந்த காரணத்துக்காக அவள் ஆள்கிறாள்" என்று கூறிப் பெருமூச்செறிந்தான். உத்தமன் சினத்தை உள்ளடக்கிக்கொண்டு, "அவ்வளவு கொடியவளை ஏன் மக்கள் இன்னமும் அரசியாகக் கொண்டிருக்கின்றனர். விரட்ட கூடாதோ வெளியே?" என்று கேட்டான்.
‘வீரமிக்கவனே! உன்போல் ஆட்கள் இங்கு இல்லை. ஒருவேளைச் சோற்றுக்காக, எதையும் செய்வர், இங்குள்ள ஊமைகள். நம் போன்றவர்கள் ஏதேனும் செய்தால் தான் பயன் உண்டு. நானும் ஏதேதோ யோசித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். அரசி கொல்லப்பட வேண்டும்; அதுவும் உன்னால்!' என்றான். உத்தமன் திடுக்கிட்டான். அதைப் பார்த்த ஆரியன், "பதறாதே! பக்குவமான திட்டம் இருக்கிறது. அரசி, தேவி பூஜைக்காகக் கோயில் வருவாள், தேவியின் சிலைக்குள் உன்னைப் புகுத்தி வைக்கிறேன். நான் "தேவி, உன் பக்தையை உன் பாதத்தில் சேர்த்துக்கொள்" என்று கூறுவேன். உடனே நீ சிலையின் கரத்தில் உன் கரத்தை நுழைத்து ஓங்கி அவள் மண்டையில் அடிக்க வேண்டும்" என்று கூறினான்.
ஒரு நாட்டை ஆள்பவளைக் கோயிலிலே கொல்வதற்கு இவ்வளவு சூதான திட்டமிட்டு, அதைக் கொஞ்சமும் கூசாது கூறியது கேட்ட உத்தமன் திடுக்கிட்டான். ஆனால் இச்செயலை நாம் செய்ய மறுத்தால், வேறு யாரையாவது கொண்டு செய்துவிடுவான். எனவே, நாமே இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, ஆரியனை நோக்கி, 'சரி' என்று கூறினான். "சபாஷ்!" என்று கூறிக்கொண்டே ஆரியன் உத்தமனின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
✽✽✽
"தேவியின் திருக்கூத்தை என்னென்பது! நேற்றிரவு, என் சொப்பனத்திலே தேவி பிரசன்னமாகி, சில கட்டளைகள் பிறப்பித்தாள்” என்று ஆரியன், படைத்தலைவன் கரிமுகனிடம் கூறினான். கரிமுகன், மலர்புரிப் படைகளுக்குத் தலைவன். அரசி ஆரியன் சொற்கேட்டு ஆடுவதுகண்டு மனம் புழுங்கி, அரச காரியத்தை வெறுத்துக் கிடந்தான். மலர்புரிப் படைகளுக்கோ, கரிமுகனிடம் அபாரமான அன்பு. கரிமுகனிடும் கட்டளைகளைப், படையினர் மிகக் களிப்போடு செய்வது வழக்கம். கரிமுகன் மலர்புரி அரச குடும்பத்திடம் விசேஷ அக்கரை கொண்டவன். மலர்புரியின் நிலைமையை மேன்மையுறச் செய்ய வேண்டும் என்பதிலே கரிமுகனுக்கு அளவுகடந்த பிரியும். சுற்றுப்புறங்களிலே இருக்கும் காடுகளை நாடுகளாக்க வேண்டும். மலை ஜாதியினரை அடக்கி, அந்த மண்டலங்களை மலர்புரியில் இணைக்க வேண்டும். மூவேந்தரின் மண்டலங்கள் போல் மலர்புரியும் திகழவேண்டும் என்பது அவனுடைய எண்ணம். அரசியோ ஆரியனின் மொழிகேட்டுக் கெட்டதால், மலர்புரியின் முன்னேற்றத்திலே அக்கரை கொண்ட கரிமுகனின் திட்டங்களெதையும் ஆதரிக்கவில்லை. காரிமுகன், படையைப் பார்ப்பதும், பெருமூச்செறிவதும், பாசறை செல்வதும், தோள் துடைத்துக் கொள்வதுமாக இருந்து வந்தான். கரிமுகனை அடக்கிவைத்துவிட்டோம். இனி அவனுடைய சக்தி சரிந்துவிடும் என்று ஆரியன் தீர்மானித்துவிட்டான். கரிமுகன், செல்வாக்குடனிருந்தால், ஆரியனுக்கு எப்போதும் ஆபத்தல்லவா?
படைத்தலைவன் கரிமுகன் அடக்கப்பட்டாலும், அவனிடம் அன்பு பூண்ட படை எந்நேரத்திலும், கரிமுகன் சொற்கேட்டுத் தன்மேல் பாயும் என்று அஞ்சிய ஆரியன், வீரமணி கிடைத்ததும், 'தேவி சேனை' தயாரித்துக் கொண்டான். சமயம் நேரிட்டால், 'தேவி சேனை'யைக் கொண்டு கரிமுகனின் படையை ஒழிக்க வேண்டுமென்று கருதினான். ஆரியனின் ஆவல் அவனை ஏககாலத்தில் பல திட்டங்களைத் தயாரிக்கச் செய்தது.
கரிமுகனை அடக்க வீரமணி; வீரமணிக்குத் தெரியாமலே, அரசியைக் கொல்ல உத்தமன்; உத்தமனுக்குத் தெரியாமல்தான், கரிமுகனிடமே ஆரியன் சென்றான்—மற்றோர் சதிச்செயல் புரிய! மலர்புரி அரசி மாண்டால் மக்கள் கரிமுகனிடம் பற்றுக்கொண்டு அவனை மன்னனாக்கிட எண்ணினால், என்ன செய்வது என்று யோசித்த ஆரியன், அரசி இருக்கும்போதே, கரிமுகன் அரசாளப் பேராசை கொண்டு சூது செய்யத் துணிந்தான் என்ற நிலையை உண்டாக்கிவிட்டால், அரசி கொல்லப்பட்ட பிறகு தனக்கு ஒரு எதிரியும் இல்லாது செய்துவிடலாம் என்று ஆரியன் திட்டமிட்டான்.
இந்தச் சூதான எண்ணத்துடன், ஆரியன் தன்னிடம் வந்ததைக் கரிமுகன் தெரிந்து கொள்ளாது, இத்தனை நாட்களாகத் தன்னை உதாசீனம் செய்து கொண்டிருந்த ஆரியன், தானாகத் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதால் பூரித்தான். அந்திவேளை! ஆற்றோரம்! அரசமரத்தடியிலே, இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். செவ்வானத்தின் அழகுபோலக் கரிமுகன் முகத்திலே சந்தோஷம் தவழ்ந்தது. அவனுக்கு வர இருக்கும் இருள்போல, ஆரியனின் நெஞ்சிலே, சூது கப்பிக் கொண்டிருந்தது.
"தேவியின் கட்டளை என்றால் விளங்கவில்லையே" என்று கரிமுகன் ஆரியனைக் கேட்டான். "கரிமுகா! உனக்கு என்னிடம் பிரியம் கிடையாது; எனக்கும் உன்னிடம் அப்படித்தான். என் மொழி கேட்டு அரசி நடப்பது உனக்குப் பிடிக்கவில்லை. என்மொழி வழி செல்ல நீ இசையாததால், எனக்கு உன்னிடம் பற்று கிடையாது. ஆகவே இப்போது நான் உன்னிடம் வந்தேன் என்றால், அது என் இஷ்டத்தினால் அல்ல என்பதைத் தெரிந்துகொள். தேவி கட்டளையிட்டதால் நான் இங்கு வந்தேன்" என்று ஆரியன் உரைத்திட, கரிமுகன் திடுக்கிட்டுப்போய், "தேவியின் கட்டளையா? தேவிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்! தேவி, உன் ஆயுதம்! மலர்புரிப் படைத்தலைவனை நீ மடக்கி வைத்த இயந்திரம். ஆண்மையை மலர்புரி இழந்திடச் செய்த பொறி" என்று ஆத்திரமாகக் கூறினான்.
ஆரியன் புன்னகையுடன், "உன் எண்ணம் இது என்பது எனக்குத் தெரியும். தேவியும் அறிந்திருப்பாள் என்பதை நான் கூற வேண்டுமா? அவள் சர்வலோக ரட்சகி. எவனொருவன் தன்னை நிந்திக்கிறானோ, எவன் தன்னை அலட்சியப் படுத்துகிறோனோ அவனையே அணைத்து ஆதரித்து, பின்னர் தன் பெருமையை அவனும் உணரும்படி செய்யும் பெருநோக்கமுடையவள். தன்னைக் கடிக்கும் குழந்தையின் கன்னத்தை முத்தமிட்டுக் கொஞ்சும் தாய்போல், அவளை அவமதித்து வரும் உன்னைத் தேவி ஆதரிக்க முன் வந்தாள். அவள் பெருமையை அறியாத நீயும் இனி அவள் பெருமையை உணரப் போகிறாய். அவளடி தொழப் போகிறாய்! தேவியின் பக்தனாகப் போகிறாய் என்பது சத்தியம்" என்று ஆவேசங் கொண்டவன்போல் ஆரியன் பேசினான். கரிமுகன் ஆச்சரியப்பட்டான். "நான் நிந்திக்கும் ஆள் என்பதற்காக என்னை அந்தத் தேவி ஆதரிக்கிறாள் என்று கூறுகிறீரே, இது விந்தையல்லவா!" என்று கேட்டான்.
"அன்னையின் போக்கை நீ என்ன அறிவாய்? அவள் சக்தி, ஊனக்கண் படைத்த உனக்கு என்ன தெரியும்? அதை உணர, ஞானக்கண் வேண்டும், கரிமுகா! நமது சுக துக்கங்கள் அவளுடைய லீலைகள், இதோ தெரியும் செவ்வானம் அவளுடைய ஆடை! சூரிய சந்திரர் அவளுடைய விழிகள்! அண்டசராசரம் அவள் உடல்! அவனியிலுள்ள உயிர்களெல்லாம், அன்னையின் மூச்சு. அவளைக் கட்டுப்படுத்த அரச ஆக்கினை பயன்படுமா? அவள் உடுக்கை ஒலிமுன் உன் படைஒலி, சிங்க கர்ஜனைமுன் நரியின் ஊளை போலாகும். பொன்னால் செய்யப்பட்ட சிங்காதனமேறும் மன்னர்களையே நீ அறிவாய். அவர்கள்முன் மண்டியிட்டுப் பழக்கப்பட்டவன் நீ. மாகாளியின் ஆசனம் எது தெரியுமோ! மக்களின் மனம், அவள் ஆசனம்; அவள் சினம், அரண்மனைகளைச் சுடுகாடாக்கும்; சுடுகாடுகளையும் என் அம்மை விரும்பினால் சொர்ணபுரியாக்கிக் காட்டுவாள். அவள் பெருமை சொல்லுந்தரத்தக்கதல்ல" என்றான். பிறகு மேலும் பேசினான் ஆரியமுனி.
கரிமுகன், "போதுமய்யா உமது யோசனை. உன் தேவியின் திருக்கல்யாண குணம் கிடக்கட்டும். இப்போது என்னிடம் வந்த காரணம் யாது? அதைக்கூறும்! உன் பூசாரிப் புலம்பலை ஆலயத்தில் நடத்து" என்று கூறினான்.ஆரியன் கோபங்கொள்ளாது, "விடியுமுன் இருட்டு அதிகரிக்கும். அதுபோலவே அன்னையின் அருள் ஒளியைக் காணப்போகும் நீ இப்போது அஞ்ஞான அந்தகாரத்திலே கிடக்கிறாய். ஆனால் நீ பாக்கியசாலி. இப்பிறவியிலே நீ இத்தகைய தேவ நிந்தனை செய்கிறாயே தவிர, முற்பிறப்பிலே புண்யவானாக இருந்ததால், இப்போது உனக்குத் தேவி பிரசாதம் கிடைக்கிறது" என்று ஆரியன் கூறினான்.
"பிரசாதமா? என்ன அது? தேன் கலந்த பழமா?"
"அதைவிடச் சுவையுள்ளது. மரத்தில் குலுங்காத கனி. அன்னையின் அருள்வாக்கு உனக்கு அன்புடன் ஊட்டப்படுகிறது."
"அழகான பேச்சு; ஆனால் குற்றமல்ல."
"புரியாதது. பொருளின் குற்றமல்ல."
"போதும் பூசாரியே! காரியம் கூறும். தேவி உம்மை என்னிடம் அனுப்பிய காரணம் என்ன?
"கரிமுகனே, கேள்! தேவி, உன்னை மலர்புரி மன்னனாகும்படி கட்டளையிடுகிறாள். அதைக் கூறுமாறு என்னை இங்கு அனுப்பினாள்."
இப்பேச்சு கேட்ட கரிமுகன், ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்றான். அவனது அந்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஆரியன், ஆவேசமாக மேலும் சில மாய மொழிகளைப் புகன்றான். ஆரியனின் பேச்சு கேட்டு, கரிமுகன் தன்னை மறந்து நின்றான்.
செவ்வானம் மாறி இருள் சூழ்ந்து கொண்டது. ஆரியனின் முகத்திலே வெற்றி தாண்டவமாடுவது கரிமுகனுக்குத் தெரியவில்லை. "தேவி! உன்னை மன்னனாகும்படி கட்டளையிட்டுவிட்டாள். நீ உன் படையுடன், அரண்மனையை முற்றுகையிட வேண்டும். அரசியிடம் தேவியின் கட்டளையைக் கூறவேண்டும். அரசி முடிதுறக்க இசைவாள். ஆலயத்திலே போய்ச் சேருவாள். நீ மன்னனாக வேண்டும். இதை நீ மறுத்தால், மாபாதகம் உன்னைத் தீண்டும். நான் ஏதோ கூறினேன் என்று எண்ணாதே. நீ அரசனானவுடன், நான் ஆரண்யம் சென்று விடவேண்டுமாம்! தேவியின் உத்தரவு அது" என்று ஆரியன் கூறினான்.
அதனைக் கேட்ட கரிமுகன், "என்னால் நம்ப முடியவில்லையே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்று தழதழத்த குரலில் கரிமுகன் சொன்னான். ஆனால் அவன் மனதிலேயோ ஆசை படமெடுத்தாடத் தொடங்கிற்று. படைகள் அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பரிப்பதும், அரசி, முடியை எடுத்தெறிவதும், பிறகு தர்பார் கூடித் தனக்கு முடி சூட்டுவதுமான காட்சிகள் அவன் மனக் கண்முன் கற்பனையில் தோன்றின. கரிமுகன், ஆசைக்கு அடிமைப்பட்டானென்றால் அரச போகத்திலே புரள வேண்டும் என்ற சுயநலத்தால் அல்ல; தான் ஆளத் தொடங்கினால், படைபலத்தைக்கொண்டு மலர்புரியின் கீர்த்தியை மேலோங்கச் செய்யலாம் என்ற நோக்கத்தாலேயே, அவனுக்கு அரச பீடத்தின் மீது ஓர் ஆவல் உதித்தது.