கலிங்க ராணி/கலிங்க ராணி 22
கோயிலைவிட்டு வெளியேறிய கரிமுகன் குழல் ஊதினான். மக்கள் "என்ன, என்ன?" என்று கேட்டகலாயினர். கரிமுகனின் படை "கரிமுகன் வாழ்க! எமது தலைவர் கரிமுகன் வாழ்க!" என்று கூவிக்கொண்டு கிளம்பின. மக்கள் தீவர்த்தி ஏந்திக்கொண்டு கரிமுகனின் படை அரண்மனையை நோக்கிச் செல்வது கண்டு மருண்டனர். மூலைக்கு மூலை சிறு சிறு சச்சரவுகள்! படையினரோ ஆயுதபாணிகள்! மக்கள் ஏதுஞ்செய்ய முடியவில்லை; ஊர் அல்லோலகல்லோலப்பட்டது.
"ஓடு! ஓடு! அகழிப் பாலத்தைத் தூக்கிவிட்டு இந்தப் புறத்திலே காவல் புரியுங்கள்" என்று படையில் ஓர் பிரிவுக்குக் கரிமுகன் உத்தரவிட்டான்.
மலர்புரியைச் சுற்றி அகழி! அதைக் கடக்க ஓர் அருமையான வேலைப்பாடுள்ள பாலம். அதனை யுத்த காலங்களிலே அகற்றி வைக்கும் பொறி உண்டு. அது தெரிந்த கரிமுகன், அரசிக்கு ஆதரவாகச் சுற்றுப்புறத்துக் கூட்டம் வராமலிருக்க வேண்டும் என்பதற்காக உடனே அப்பாலத்தை அகற்றும்படி உத்தரவிட்டான். கரிமுகனின் படையில் ஓர் பிரிவு சென்று அக்காரியத்தைச் செய்துவிட்டு அகழியின் இப்பக்கம் காவலிருந்தனர். எதிர்பக்கத்திலே சற்று தொலைவில் தீவர்த்திகள் தெரியக் கண்டு, "சரியான நேரத்திலே சரியானது செய்தோம்" என்று எண்ணிச் சந்தோஷித்தனர். வீதியின் முனைகளிலே ஆயுத வீரர்கள் காவல் இருந்தனர், மக்களைத் தடுத்துக் கொண்டு! படையின் பெரும் பிரிவு இரைச்சலிட்டுக் கொண்டு அரண்மனையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அரண்மனைக் காவலாளிகள் கொல்லப்பட்டும், சிறைப்பட்டும் போயினர். சேடியர் முகத்திலறைந்து கொண்டு அழலாயினர். அரசி அரண்மனை மாடி மண்டபச் சாளரத்தை திறந்து, நிலைமையைக் கண்டு மனநிலை குலையாது தோழியரை அழைத்து, "மாடத்து விளக்குகளைத் தூண்டுங்கள்! பிரகாசமாக இருக்கட்டும்! இரண்டு பீடங்களை இங்கே போட்டுவிட்டு நீங்கள் போய் படுத்துறங்குங்கள். இப்புயல் அடங்கிவிடும்" என்று கூறினாள்.
தோழியர் ஆபத்து பெருநெருப்பெனச் சூழ்ந்து வருவது கண்டு அரசியார், கலக்கமின்றிப் பேசுவது கேட்டுத் திகைத்தனர். "அரண்மனைக் கதவுகளைத் தாளிட்டு விடலாமே" என்று குளறிக் கூவினர். மலர்புரி அரசி, "பேதைகளே! புயல் வீசும்போது மரங்கள் போர்வை தேடுகின்றனவா! கடல் குமுறும்போது கப்பலுக்குக் கஷாயமா காய்ச்சுவர்? அரண்மனைக் கதவுகளைப் பெயர்த்தெடுக்கவா, இந்த அமளி! அரசுக்காக! அதை இழக்க நான் உயிரோடு இருக்கும் வரை இசையேன். போரிடும் ஆண் மகனைக் கண்டு பெண் பதுங்குவது தமிழ்க்குலப் பண்பல்ல! இனிச் சில விநாடிகளிலே கரிமுகன் இங்கே வருவான். நான் தனித்திருந்து அவனிடம் பேச வேண்டும். நீங்கள் போய்விடுங்கள்; பயம் வேண்டாம்" என்றுரைத்தாள்.
கதவுகள் பிளக்கப்பட்டுக் கத்திகள் வீசப்பட்டு, அரண்மனை களமாகிவிட்டது! சேடியர் கதறிக்கொண்டு ஓடி, அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டனர். பதின்மர் மாடி மண்டபம் புகுந்தனர். கரிமுகன், உருவிய வாளுடன், தலைவிரி கோலமாய் நின்றான். அரசி புன்னகையுடன் மண்டபத்தின் மறுகோடியிலே நிற்கக் கண்டான். அதோடு, விளக்கொளியும் கண்டான்; அரசியின் உடல் சற்றும் பதட்டப்படவோ, நடுக்கமுறவோ இல்லை என்பதைக் கண்டு வியந்தான். தன்னுடன் வந்தவர்களைக் கீழே கொலு மண்டபத்துக்குச் சென்றிருக்கச் சொல்லிவிட்டு, வாளை உறையிலிடாமலே, அரசியை நோக்கி மெதுவாக வரலானான்.திடீரெனச் சதிச்செயல் புரிந்த கரிமுகனின் உண்மை ஊழியத்தை அரசி அறிவாளாகையால், ஏதோ ஆத்திரப் பட்டே இக் காரியம் செய்கிறான் என்பதை உணர்ந்து, தந்திரத்தால் அவனைத் தடுத்திட முடியும் என்று தீர்மானித்து மனத்திலே திட்டம் தயாரித்துக் கொண்டாள். இதற்குள்ளாகவே ஆரியன் ஏதேனும் சூட்சமம் கண்டுபிடிப்பான். தேவியின் உதவியைத் தேடுவான் என்று எண்ணிக் கோபத்தோடு வருபவனை அந்த நேரத்தில் தடுத்து விட்டால் போதும் என்று கருதி அதற்கேற்றபடி நடக்கலானாள்.
உருவிய வாளுடன் தன்முன் வரும் கரிமுகனைக் கண்டு மீண்டும் புன்சிரிப்புடன் அரசி நின்றாள். சுற்றிலும் தன் போர் வீரர்கள் நின்றாலும் கலங்காத அரசியார், துளியும் பயமின்றி நிற்பது கண்டு கலங்கினான். 'அரசியா! அரசி போன்ற சிலையா!' என்று சந்தேகிக்க வேண்டியும் இருந்தது.
"என்ன கம்பீரமான நடை! வருக, வருக!" என்று அரசி வரவேற்றது கேட்டதும் கரிமுகனின் கால்கள் ஸ்தம்பித்து விட்டன. திகைத்து நின்று அரசியை ஏற இறங்க பார்த்தான்.
"முகத்திலே ஏன் கோபம் கூத்தாடுகிறது?" என்று கேட்டாள் அரசி.
அவன் "கோபமா? களிப்பா?" என்று அலட்சியமாகக் கேட்டான்.
"களிப்பு இப்படி இருக்குமா? கரிமுகா! களிப்பிருத்தால் முகத்தைச் சுளிக்க முடியாதே!"
"அரசியே! விஷயத்தை வளர்த்துவானேன். அதோ சத்தம் கேட்கிறதா?"
"கேட்கிறது. எனக்குக் கேளாக் காதென்றா எண்ணினாய்? 'அரசியே, அரசியே!' என்று சதாநேரமும் துதி செய்ததால், செவிகெட்டா விட்டது? சத்தம் நன்றாகக் கேட்கிறது. உன் கை துடிப்பதால் கட்கம் ஆடுகிறதே. அதனால் உண்டாகும் சத்தமும் கேட்கிறது. வெளியே பெருங்கூச்சல் நடப்பதும் கேட்கிறது."
"என் படைகளின் சப்தம் அது."
"ஆமாம்! உன் படைகள் எப்போதுமே அப்படித்தான்; ஓநாய்கள்போலக் கூவுகின்றன. உன்னிடம் பயமில்லை அவைகளுக்கு."
"நான் உன்னை கைதியாக்க வந்திருக்கிறேன்."
"இனிமேலா கைதியாக்கப் போகிறாய்."
"இதே கணத்தில்! அரண்மனையைச் சுற்றிலும் ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் நிற்கின்றனர். இந்த நிமிடமுதல் நீ என் கைதி!"
"விஷயம் சரி! ஆனால் கணக்கு தவறு. நான் உன் கைதியாகி, 5 ஆண்டு 6 மாதம் 21 நாட்களாகின்றன. அரண்மனையிலல்ல, நான் கைதியானது; குன்றின் மீது! பகல் வேளையிலுமல்ல. இதுபோன்ற பாதி இராத்திரி நேரத்திலுமல்ல; செவ்வானம் தோன்றிய நேரத்தில், உன் படைகளின் மிரட்டலால் அல்ல-உனது அழகால் கரிமுகா! என்னை நீ இன்று கைது செய்ததாகக் கூறுகிறாய். அது தவறு. நான் உன் கைதியாகி ஐந்தாண்டுகளுக்கு மேலாகின்றன."
"என்னிடமா இதைப் பேசுகிறாய்."
"இல்லை. கரிமுகனிடம்! என் கண்களில் உலகைக் கண்ட கரிமுகனிடம் பேசுகிறேன். என் குரலிலே கீதங் கேட்ட கரிமுகனிடம்! என் அருகிலிருப்பதே அஷ்ட ஐஸ்வரியம் என்று பூசித்த கரிமுகனிடம். பஞ்சணையில் என்னிடம் கொஞ்சிடத் தவங்கிடந்த கரிமுகனிடம் பேசுகிறேன்! என் கிரீடத்தின் மீது பிரமை கொண்ட பேயனிடமல்ல."
"போதும் நிறுத்து! திகிலால் உன் மனம் குழம்பி ஏதேதோ பிதற்றுகிறாய்! கரிமுகனிடம் பேசுகிறேன் என்றும் சொல்லுகிறாய். என்னிடம் பேசவில்லை என்றும் கூறுகிறாய். குன்றும் காதலும் என்று உளறுகிறாய்."
"கரிமுகா! உன் நெஞ்சை நீ ஏமாற்றாதே. ஐந்தாண்டுகட்கு முன்பு ஒரு நாள், அதோ அக்குன்றின்மீது, நாமிருவரும் பேசிக்கொண்டிருந்தபோது நீ என்னைக் காதலிக்கவில்லையா?"
"வெறும் பொய்! பெரும் பொய்! உன்னை நான் எப்போது காதலித்தேன்?"
"சீ துஷ்டனே! இந்த இராஜ்யத்தை எடுத்துக்கொள். ஆனால், என் மீது காதல் கொண்டிருந்ததை மட்டும் மறைக்காதே. ஒரு பெண் எதையும் இழக்கத் துணிவாள், காதலை மட்டும் இழக்கச் சம்மதியாள். நான் அரசி. ஆனால் ஒரு பெண் என்பதை மறவாதே. அன்று அக்குன்றின்மீது நாம் அமர்ந்துகொண்டு பேசினபோது நீ என்னை எவ்வளவு அன்புகலந்த பார்வையுடன் நோக்கினாய்! பெருமூச்செறிந்தாய்! இன்று அதை மறுக்கிறாய். அன்றே நான் என்னை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். உன்னை மணம் புரிந்து கொள்ள ஒரு நாள் வேண்டியே தேவியைத் துதித்து வந்தேன். "ஏழாண்டுகள் கழியட்டும்; இஷ்டப் பூர்த்தி உண்டாகும்" என்று தேவி வரமளிக்கவே, நான் இந்நாள் வரை எவரிடமும் கூறாமல் என் காதலை மூடிவைத்திருந்தேன். நீ என்னை இன்று ஈட்டியால் குத்திக்கொன்றாலும் இவ்வளவு வேதனையிராது. என்னைக் காதலித்து இன்று கைவிடுகிறாய்! பாதகா, துரோகி!"
"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. நான் உன்னிடம் காதல்மொழி பேசினதே கிடையாதே."
"உன் நடவடிக்கை அதை எனக்கு உணர்த்தவில்லையென்றா எண்ணினாய்? சரி, நான் பழங் கதை அவ்வளவையும் கூறித்தான் தெளியவைக்க வேண்டும் போலிருக்கிறது. இந்த இரைச்சலிலே நாம் நிம்மதியாக எப்படிப் பேச முடியும்?"—இந்தப் பேச்சினால் கரிமுகன் வலையிலே வீழ்ந்தான்; சாளரத்தருகே சென்றான். வெளியே தலை நீட்டினான். படையினர் அவனைக் கண்டு ஆர்ப்பரித்தனர்! கையை அமர்த்தினான்; சத்தம் அடங்கிற்று.