உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 25

விக்கிமூலம் இலிருந்து


25


பை கூட அரசி ஏற்பாடு செய்துவிட்டாள். ஊர் திரண்டது. போலிப் புலவர்கள், ஆரியனுக்குப் பரிவாரமாக நின்றனர். அஞ்சா நெஞ்சினராகப் புலவர் சபை புகுந்தார்; அரசியை வணங்கினார். ஆரியன் அவரை அலட்சியமாகப் பார்த்தான்.

"ஆரியனே, கேளாய்! கெண்டை வீசி வராலை இழுத்திடும் வகைபோல், அன்று உன் காரியம் நடைபெற்றது. தேவி திருவருள் என்று பேசி, நீ மக்களுக்கு மன இருள் உண்டாக்கினாய் என்று நான் உன்மீது குற்றம் சாட்டுகிறேன்." என்று கூறினார். ஆசனத்திலமர்ந்தபடியே, ஆரியன் பேசினான். புலவனிடமல்ல, அரசியிடம்!

"தேவி திலகமே! இந்தப் புலவனை, இந்தக் காரியமாற்றத் தாங்கள் நியமித்து எவ்வளவு நாட்களாயின." என்று கேலி மொழி ஆரியன் பேசியதும் அவன் நடுங்கும்படி புலவன் புகன்றான், "ஏ, பூசாரி! கெடுமதி எனும் உன் கோட்டை இடிய நாட்கள் வரும்; உன் மமதை ஒழியும்; வாள் சம்பவத்தைத் தேவியின் வரப்பிரசாதம் என்று கூறி, ஊரை ஏய்த்தாய். இது முழுப்பொய். வெறும் தந்திரம்! மணிவீரனின் வாள், கூரையிலே தொங்குவதுபோல எத்தனை வாளை வேண்டுமானாலும் தொங்கும்படி நான் செய்யவல்லேன். வாள் மட்டுமல்ல! நீ வணங்கும் அந்தத் தேவியையே தொங்கும்படி செய்வேன்" என்றதுமே ஆரியன், கவியாகாதே! வால் நறுக்கப்பட்டுவிடும். என்னைத் தூஷித்து விடு. நான் கவலை கொள்ளேன். என் அன்னையை மட்டும் ஏளனம் செய்து பாழாகாதே! தேவியை நீ அறிவாய்! அவளுடைய அருளாலேயே என்மீது வீசிய வாள் அவன் கரத்தைவிட்டு இழுத்தெறியப்பட்டது, தேவியின் சக்தியே" என்று ஆவேசத்தோடு கூறினான்.

ஆரியனின் கோபத்தைக் கிளறிய கிழக்கவி என்ன கஷ்டத்திற்கு ஆளாவானோ என்று மக்கள் பயந்தனர். புலவனோ, துளியும் பயங்கொள்ளவில்லை. சீற்றத்தால் முகம் சிவக்க நின்றான்.

"ஆரியனே! உன் மொழியால் என்னைத் தவறான வழியிலே செல்லும்படி செய்ய உன்னால் முடியாது. உன் மிரட்டலை நான் துரும்பளவும் மதியேன். உன் சூது தெரியாதவர்களிடம் உன் சொரூபத்தைக் காட்டு, தமிழன் என்ற உணர்ச்சியை இழக்காதிருக்கும் என்னிடம் காட்டாதே, உன் இறுமாப்பை. நான் பொன்னுக்காகப் பொய்யுரைக்கும் புலவனல்ல; மூடருக்குச் சாமரம் வீசிச் சொகுசாக வாழச் சுகம் தேடும் சோற்றுத் துருத்தியுமல்ல. உண்மைக்கு ஊழியன். ஊர் முழுதும் உன்னை நம்புகிறது! ஆனால் நான் உன்னை மதிக்க மறுக்கிறேன்" என்று தைரியமாகக் கூறிய புலவரை நோக்கி, அரசி, "புலவரே! பொங்காதீர்; பொறுமையை இழக்காதீர்; பெரியவரைப் பழிக்காதீர். வாள் சம்பவம், தேவி சக்தி இல்லை என்று கூறுகிறீர். காரணம் கூறும்! அது என்ன சக்தி என்பதை எடுத்துக்காட்டும்; வீணாகத் தூற்றுவது விவேகமாகாது. மணிவீரன் கரத்திலிருந்த வாள் எப்படி, அவன் கரத்தைவிட்டுப் பறந்து, மேலே சென்று தொங்கிற்று. அதற்குக் காரணங் கூறு" என்று கண்டிப்பாகக் கூறினாள். சபையோர் கைகொட்டினர். உடனே புலவர், "அரசியாரே! மணிவீரனின் வாள், கோயில் மாடத்திலே தொங்குவது தேவி சக்திதான் என்று ஆரியன் எப்படி ருசுப்படுத்த முடியும்?" என்று கேட்டார். "அவர் சொல்கிறார்; நான் நம்புகிறேன். நீர் மறுக்க வந்தீர், நீரே காரணம் காட்டவேண்டும்" என்றாள் அரசி.

"அரசியாரே! மேகத்தைக் கண்டு மயில் ஆடுவது ஏன் தெரியுமோ, தங்களுக்கு" என்று புலவன் கேட்டான். ஆரியன் "அபாரமான அறிவு இருக்கு" என்று கேலி செய்தான். அப்போது அரசியாரும் சிரித்திடக் கண்ட செந்தமிழ்ப் புலவர் புயலானார்.

"அரசியாரே! சபையினரே! மேகத்தைக் கண்ட மயில் ஆடக்காரணம், அந்த மேகத்தினிடம், மயிலுக்கு மகிழ்ச்சியூட்டி, மயிலைத் தன்வசம் இழுக்கும் ஓர் காந்த சக்தியிருப்பது தான். அதுபோலவே தேனில் உள்ள காந்த சக்தியே, வண்டுகளை ரீங்காரமிடச் செய்கிறது. அழகில் உள்ள காந்த சக்தியே, ஒருவர் மனதை மற்றொருவருடைய மனதுடன் பிணைக்கிறது. இயற்கைப் பொருள்களுக்குள்ள காந்த சக்தியின் தன்மையை அறிந்தோர், மணிவீரனின் வாள், காந்த சக்தியினாலேயே இழுக்கப்பட்டது என்பதை அறிவர். கோயில் மாடிக் கூரையிலே, ஓரிடத்திலே, ஆரியன் காந்தக் கல்லை அமைத்திருக்கிறான். அந்தக் கல்லின் காந்த சக்தியே, மணிவீரனின் உருவிய வாளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டது. சந்தேகமிருப்பின், கூரையிலே நான் குறிப்பிடும் அக்கல்லைப் பெயர்த்தெடுத்துவிட்டு, பிறகு வாளையோ, வேறு எதையோ, மேலே போகச் செய்ய உத்தரவிட்டுப் பாருங்கள். உரத்த குரலிலே, 'தேவி! தேவி!' என்று ஆயிரந்தடவை ஆரியன் அர்ச்சித்துப் பார்க்கட்டும்; அசைகிறதா தேவி என்று பார்க்கிறேன்" என்று கோபத்துடன் கூறினார். சபையினர் அப்போது ஆரியனின் முகத்திலே, ஒரு விதமான மாறுதல் உண்டானதைக் கண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அரசியோ, ஆரியனோ, புலவரின் அறைகூவலுக்குப் பதில் கூறுமுன், சேவகர் சிலர் ஓடிவந்து, "மணிவீரன், சிறைச்சாலையினின்றும் தப்பித்துக் கொண்டு ஓடுகிறான்; அவனைப் பிடிக்க ஆட்கள் கிளம்பி விட்டனர்" என்று கூறிடவே, சபையிலே விசேஷ பரபரப்பு ஏற்பட்டது.

"இதுவும் உன் தேவியின் திருவருள் போலும்" என்று புலவர் சிரித்துக்கொண்டே கேட்டார். சபையிலே இது சிரிப்பை உண்டாக்கவில்லை; "மணிவீரன் ஓடிவிட்டான்—சிறைக் கூடத்தைவிட்டுத் தப்பித்துக் கொண்டான்" என்ற சத்தம் பலமாகிவிட்டது. குழப்பத்தை உத்தேசித்துச் சபையை அரசி கலைத்து விட்டாள்.

சிறையிலே தள்ளப்பட்ட வீரமணி அங்கு காற்றும் சரியான உணவுமின்றிக், காவலாளிகளின் கடுங்கோபத்தால் தாக்கப்பட்டு வருந்தவேண்டுமே என்பதைப் பொருட்படுத்தவில்லை! என்றைய தினம் நடனராணியைப் பிரிய நேரிட்டதோ, அன்றே உலகமே அவனுக்குக் கொடுஞ் சிறையாகிவிட்டது கலிங்கப் போர் முடிந்ததும், அக்கட்டழகியை மணம் புரிந்துகொண்டு, காதல் சுவையை உண்டுகளித்து வாழலாம் என்று எண்ணி இறுமாந்திருந்தவனுக்கு நேரிட்ட விபத்து, அவன் மனத்தை மிகவும் வாட்டிவிட்டதால், நடனாவைக் கண்டு அவளுடன் பேசி மகிழும்வரை, அவன் தன்னை ஓர் சிறையிலே காலந்தள்ளும் ஓர் கைதி என்றே கருதிக் கொண்டிருந்தான்.

அவள் இல்லா வாழ்வு, நிலவில்லா வானமாக இருந்தது. உலகு, தனது வழக்கமான வசீகரத்தைக் காட்டியபடிதான் இருந்தது. காலைக் கதிரோன் உதயமும், அதுகண்டு கூடுகளிலிருந்து கிளம்பிக் கீதம் இசைத்த வண்ணம் சிறகை விரித்துச் செல்லும் பறவைகளும் கறவைப்பசு தன் கனறுகளின் முதுகை நாவினால் அன்புடன் தடவிக் கொடுப்பதுமாகிய காட்சிகள் எப்போதும்போல நடந்து வந்தன. குயில் கூவ மறக்கவில்லை! மயில் நர்த்தனத்தை நிறுத்தவில்லை. தென்றல் வீசாமலில்லை. இயற்கை தன் எழிலைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இவைகள் முன்பு இன்பம் ஊட்டியது போல் இப்போது ஊட்டுவதாகத் தெரியவில்லை. அவன் மனம், நெய் குறைந்த தீபமாயிற்று. காதலற்ற வாழ்வு அவனுக்குக் கடுஞ்சிறையாகவே இருந்தது. எனவே மலர்புரி அரசி, ஆரியனின் மாயமொழி கேட்டுத் தன்னைச் சிறைப்படுத்தியதால், அவன் வருந்தவில்லை. ஆனால், வந்த காரியம் முடியவில்லையே என்று மட்டும் வருந்தினான். கலிங்கக் கிழவன் கூறிய குமரியைக் கண்டு பிடிக்கவில்லை. மலர்புரி அரசியின் கள்ளக் காதலின் சுனி அக்கன்னி என்பது மட்டுமே அரசியுடன் பேசியதிலிருந்து அவனுக்குத் தெரிந்தது. உத்தமன் திடீரென்று அங்கு வந்து சேர்ந்த மர்மம் என்ன? என்பது தெரியுமுன், ஆரியனின் சதிநாடகம் நடக்கவே, காரியம் வேறுவிதமாகிவிட்டது. இவைகளைத் தீர விசாரித்துத் தக்க பரிகாரங்கள் தேடி, கலிங்கக் கிழவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் பிறகு நடனாவைச் சோழ மண்டலத்திலிருந்து வெளியேறச் செய்து, எங்கேனும் ஓரிடத்தில் சென்று வாழவேண்டும் என்பது வீரமணியின் எண்ணம்.

இது ஈடேற முடியாதபடி சிறைவாசம் ஏற்பட்டதே என்று கருதிக் கலங்கினான். சிறைக்கூடத்திலே ஆரிய முனிவனின் ஆதிக்கம் கூடாதென்று ஆரம்பத்திலேயே, எதிர்த்துப் போராடிச் சிறைப்பட்ட பலரைக் கண்டான். அவர்களிற் சிலர், மனம் உடைந்து கிடந்தனர். அவர்களைத் தேற்றி, "இரவு எவ்வளவு இருண்டு கிடப்பினும், விடிந்தே தீர வேண்டுமல்லவா! அதுபோலவே, ஆரியம் மலர்புரியை எவ்வளவு கப்பிக் கொண்டிருப்பினும், தமிழுணர்ச்சி ஒரு நாள் உதிக்கப் போவது உறுதி. நீங்கள் சிந்திய இரத்தமும், வடித்த கண்ணீரும், வீண் போகாது. வெண்ணெய் திரண்டுவரும் சமயத்திலே, தாழி உடைந்த கதைபோல, ஆரியனின் சதிச்செயலை அரசியார் உணரும்படி செய்யச் சரியான சமயம் கிடைத்தது என்று எண்ணிய நேரத்திலே, அவன் ஏதோ ஓர் மாயவித்தை செய்து, என் ஏற்பாட்டைக் கெடுத்துவிட்டான். அதனாலே அவன் தலை தப்பிற்று; நான் சிறைப்பட்டேன்" என்று வீரமணி கூறினான்.