உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 34

விக்கிமூலம் இலிருந்து


34


பாண்டியன் பாசத்தோடு அப் பாவையைப் பார்த்து, "நடனா! நீ யார் தெரியுமா?" என்று கேட்டபோது நடனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஏன்? நான் சோழ மண்டல அரண்மனைத் தாசியின் வளர்ப்புப் பெண்" என்றாள், தழதழத்த குரலில்.

"மகளே!" என்று பாண்டியன் கூறிக்கொண்டே நடனாவின் கரத்தைப் பிடித்திழுத்து, அணைத்துக்கொண்டு, முகத்தில் தோன்றிய வியர்வையைத் துடைத்தபடி, "என் மகளே! நீ யார் என்பது தெரியாமல் இத்தனை காலம் வளர்ந்து வந்தாய். உன் தாயையும் அறியாய், உன் தந்தையையும் அறியமாட்டாய், நடனா! நீ என் சகோதரியின் மகள்! மலர்புரி அரசியின் மகள்!" என்றான். இந்த வாசகத்தைக் கேட்டதுமே நடனாவும் வீரமணியும் திடுக்கிட்டனர்.

"மலர்புரி அரசியின் வரலாற்றை நான் அறிவேன். முன்பே கூறியுள்ளேன்." என்று மணி கூறினான். "கூறினாய் குமரா! ஆனால் கூறாதது இதுதான்; தெரியாத காரணத்தால், மலர்புரி அரசியின் மனதைக் கவர்ந்த கள்வனே கலிங்கக் கிழவன்! அது நீ அறிந்ததே. கலிங்கக் கிழவனே என் அண்ணன். நீண்ட கதை அது. நெஞ்சு நோகும். சுருக்கமாகச் சொல்வேன்; சோலைக்குச் செல்வோம் வாரீர்" என்று சொல்லி நடனாவையும் வீரமணியையும் பாண்டிய மன்னன் அரண்மனைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். மனதிலே பல நாளைய சம்பவங்கள் ததும்பினதால், மன்னவன் வழியில் ஏதும் பேசவில்லை. 'பாண்டியன் நாட்டுப் பாவையா? மலர்புரி மங்கையா? அரச பரம்பரையைச் சேர்ந்தவளா—இந்த ஆடலழகி?' என்று எண்ணி ஆச்சரியப்பட்டான் மணி. 'விசித்திரமாகவன்றோ இருக்கிறது. பாண்டிய நாடு தகப்பன் பிறந்த இடம்; மலர்புரியோ தாயின் இருப்பிடம்; வளர்ந்ததோ சோழ மண்டலம். அரச குடும்பத்தில் பிறந்து நாட்டியத்தைப் பிழைப்பாகக் கொண்டோம்; இது என்ன விந்தை' என்றெல்லாம் நடனா எண்ணி எண்ணி, பூரா விஷயமும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டாள்.

'அப்படியானால் நடனா கைக்கு எட்டாக் கனியோ' என்ற கவலை வீரமணிக்கு உதித்தது. மன்னன் அவன் மனக்குறையை மாற்றுபவன் போல் வீரமணியின் முதுகைத் தட்டிக் கொடுத்து, "சரியான வீரனப்பா நீ. இந்த நங்கை அவளுடைய சிறிய தகப்பனிடம் வந்து சேரும்படி நீயன்றோ செய்வித்தாய். ஆனாலும் நீ ஒரு கள்ளன். நடனாவைப் பறித்துக் கொண்டு போகத்தான காத்திருக்கிறாய்." என்று கூறிவிட்டு, நடனா! அதோ பார், ஓர் பளிங்கு மண்டபம்! அருமையான சித்திர வேலைகள் அமைக்கப் பெற்றது. அதன் அழகைப் புகழாதார் கிடையாது. ஆனால் அதன் அருகே, நாங்கள் யாரும் செல்வதே இல்லை. ஏன் தெரியுமா? அந்தப் பளிங்கு மண்டபத்திலேதான், என் அண்ணன் தன் அரசுரிமையைத் துறந்தான். ஆண்டியாகியல்ல; அரச போகத்தையே அற்பமெனக் கருதும் விதத்திலே ஒரு அழகிக்கு அடிமையானதால். ஆதோ, அந்தப் பளிங்கு மண்டபப் படிக்கட்டுகளிலே தான் என் தந்தை மண்டியிட்டுக் கேட்டார். "மகனே! என் சொல்லை மீறதே" என்று. நானும், 'அண்ணா! அண்ணா' என்று கூறி அழுதேன். என் அண்ணன் அன்று அங்கு நின்றதும், தந்தையின் பேச்சை கேட்க மறுத்ததும், இப்போது என் கண்முன்பாகவே நடப்பதுபோலவே தோன்றுகின்றன" என்று பாண்டியன் கூறிக் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். ஆச்சரியம் மேலுக்கு மேல் வளருகிறதேயொழிய, விளங்கக் காணோமே என்று வீரமணியும் நடனாவும் எண்ணினர். சில வினாடிகளுக்குப் பிறகு, அரசன் அங்கு கிடந்த ஆசனமொன்றிலே அமர்ந்தான். எதிரே பசும் புற்றரையில் நடனா உட்கார்ந்தாள். வீரமணி நின்று கொண்டிருந்தான்.

"நடனா! நீ என் அண்ணன் மகள்; ஆகவே உனக்கு எல்லா விஷயமும் தெரிந்தாக வேண்டும். கேள், உன் தகப்பனின் வரலாற்றினை" என்று பீடிகையிட்டுப் பாண்டியன், பழைய கதையைக் கூறத் தொடங்கினான்.

"அன்று நல்ல நிலவு! நான் இதே சோலையில் வேறோர் பக்கத்திலே உலவிக் கொண்டிருந்தேன். இளவரசர், அதாவது என் தமயன். அச்சமயத்திலே தலைநகரில் தங்குவார். திடீரென்று நான் வெளியூர்களுக்குச் சென்று, போர் வீரர் விடுதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், ஆறேழு திங்கள் அரண்மனையில் நான் இல்லை. அன்றுதான் ஊர் வந்தேன். இரவு சோலையில் உலவிக் கொண்டிருந்தேன். நிலவின் அழகொளியோ, அந்த ஒளியினால் அலங்கரிக்கப்பட்டு அபரிமிதமான அழகுடன் விளங்கிய சோலையின் சொகுசோ, என் மனதினை அதிகமாக இழுக்கவில்லை. எனக்குக் கோட்டை, கொத்தளம், அரண், அகழி, படை, வீடு முதலியனவற்றிலேயே அதிக அக்கரை. நான் மன்னனின் இரண்டாம் மைந்தன். பட்டத்துக்குரியவர் என் அண்ணன்! என் அண்ணன் ஆட்சிக்கு நாடு வந்ததும், நான் படைத் தலைவனாக வேண்டுமென்பது என் தந்தையின் விருப்பம். ஆகவே, எனக்குப் பெரும்பாலும், படைவீடே உறைவிடமாகக் கிடந்தது. நானும் பல்வேறு நகர்களிலே பாசறைகள் அமைத்துப் பூரிப்பதும், கடலோரக் கண்காணிப்பு, மலையோரக் காவல் முதலிய பாதுகாப்பு முறைகளில் புதுப்புது ஏற்பாடுகள் உண்டாக்கிக் களிப்பதுமாக இருந்தேன். "மன்னனின் இரு மைந்தரும், நமது மண்டலத்துக்கு இரு கண்கள்; "மூத்தவன் முடிதரித்து ஆள்வான்; இளையவன் இமைகொட்டாது நின்று எதிரிகள் நுழையாதபடிக் காவல் புரிவான்" என்று மக்கள் பேசிடக் கேட்டு நான் மகிழ்வதுண்டு, "மூத்தவன் தூங்காவிளக்கு. இளையவன், சுழல் விளக்கு என்றும் கூறுவர்."

"அன்றிரவு என்ன நடந்தது?" என்று நடனா குறுக்கிட்டுக் கேட்டாள். மன்னன் பால்ய பருவத்தைப் பற்றிய நீண்ட கதையைச் சுருக்கமாகக் கூறுவதாகச் சொல்லிவிட்டு, "ஆமாம், நடனா! அன்றிரவு நடந்ததைக் கூறுகிறேன்; கேள். நான் நிலவொளியில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தபோது, யாழின் ஒலி கேட்டது, பளிங்கு மண்டபத்தின் பக்கமாக. இசை இனிமையாக இருந்து! இனிமை என்றால் சாதாரணமான இனிமையல்ல! போர் முறை பற்றிய புதுத் திட்டங்களை மனதிலே சித்தரித்துக் கொண்டிருந்த என்னையே இழுத்தது அந்த இனிமை! யாழின் இனிமையால், நான் சமர் பற்றிய சிந்தனையை மறந்தேன். இசையில் லயித்தேன். பாம்பையும் புலியையுங்கூட வசியப்படுத்தக் கூடியதும், புண்பட்ட நெஞ்சுக்கு மருந்திடவல்லதும், புயல் கொண்ட மனதுக்கு சாந்தி தரக் கூடியதுமான இசையின் இனிமையில் நான் சிலவிநாடி, கோட்டைக் கொத்தளங்களை மறந்தேன்; குளிர்ந்த மனத்துடன் உலவினேன்.

யாழும், குழலும், என் அண்ணனுக்கு தோழர்கள். நான் கட்கத்தை எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு நேசம், கலையிடம் என் அண்ணனுக்கு. நான் புதுக் கோட்டைகள் கட்டி மகிழ்வதுபோல, என் சகோதரன், இசைவாணரின் புதிய புதிய பண் கேட்டு இன்புறுவான். அகழியின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் இருக்கவேண்டிய அளவமைப்பு பற்றிய ஆராய்ச்சி எனக்கு! என் அண்ணனுக்கோ மூன்று நரம்பு யாழுக்கும் ஒன்பது நரம்பு யாழுக்கும் உள்ள இசை வித்தியாச நுணுக்கத்திலே பிரேமை! எந்தப் படைகொண்டு எதிரியை முதலிலே தாக்குவது? வேழப் படை கொண்டா, குதிரைப் படை கொண்டா என்பதிலே நான் சிந்தனையைச் செலவிடுவேன்; அவரோ குழல் கேட்ட பின் யாழ் கேட்பதா, யாழுக்குப் பிறகு குழல் கேட்பதா, எது அதிக இனிமை பயக்கும்? இரண்டினையும் ஏக காலத்திலேகேட்டு இன்புறுவதா என்பதிலே போசனையை செலவிடுவார். அன்று நான் யாழ் கேட்டதும், "சரி! வழக்கமான விருந்துண்டு. அவர் களிக்கிறார்; பழக்கப்பட்ட நாம் பட்டாளத்து விஷயமாக எண்ணிக் கிடக்கிறோம்" என்று எண்ணிக் கொண்டு உலவினேன்.

ஆனால் யாழின் இசையுடன் கலந்து கிளம்பிய ஒரு குரல் என்னைப் பளிங்கு மாளிகைக்கு நடந்திடச் செய்தது. ஓர் மங்கையின் மதுரமான கீதம், மயக்கமூட்டக் கூடிய தனிவிதமான இனிமை அக்குரலிலே தோய்ந்திருந்தது. சுவை பயக்கும் குரலுடன், சோகமும் இழைத்து, கேட்பவரின் சித்தத்தை உருக்கிவிடக் கூடிய அலாதியானதாக அக்குரல் இருந்தது. என்னை "வா! வா! வந்து கேள்! வீணான விஷயத்திலே மூழ்கிக் கிடக்கிறாயே. இதோ இனிமையுடன் இரண்டறக் கலந்துகொள்" என்று அந்த இசை கூவி அழைத்தது. மெள்ள மெள்ள அங்கு சென்று, முல்லைப் புதரருகே பதுங்கிக் கொண்டேன்; சுவைமிகுந்த பாடலைக் கேட்க ஆரம்பித்தேன்.

"வாயால் சொல்ல முடியாதபடி
    தேனிலந்த இனிப்பேதடி"

என்று அந்த மங்கை பாடினபோது, நான் பெற்ற இன்பம், வாயால் சொல்ல முடியாததுதான். தேனில் நிச்சயம் அந்த இனிப்பைக் காண முடியாதுதான் என்று தோன்றிற்று. அம்மங்கை, இசைப் பயிற்சி மிகுதியும் பெற்றதனால் மட்டும் அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கீதத்தைப் பாடவில்லை; பாடல், அவளுடைய இருதய கீதம்! கரும்பை ஆலையிலிட்டதும், ரசம் பொழிவதுபோல, வாழ்க்கை நிலையால், அவள் அடைந்த வாட்டம், அந்தக் கீதத்தை அவளுக்குத் தந்தது. தலைவி, தோழியிடம், தலைவனின் திருக்குணத்தைக் கூறிச் சோகிக்கும் பாணியிலே அமைந்திருந்தது, அப் பண்.

நீ என்னடி கண்டாய் அந்த
         மன்னவன் தரும் இன்பம்!
வாயாற்சொல்ல முடியாதபடி
         தேனிலந்த இனிப்பேதடி (நீ என்னடி)

தமிழ்பேசுதலைக் கேளாச்செவி
           இருந்திடுவது வீணே!
அமைவாய் எனை மாதே என
           அன்புடன் தழுவிடுவானே, (நீ என்னடி)

ஆஹா! நடனா! நான் அதற்கு முன்பும் அதற்குப் பிறகும், கேட்டதில்லை, அவ்விதமான பண்! தேனிலந்த இனிப்பேதடி என்று பாடும்போது, தேன் குழைந்துவந்து செவியில் புகுந்தது. எந்த மன்னவனோ! அவன் எவ்வண்ணம் தழுவினானோ? அவளன்றி யாரால் கூற முடியும்! அவளோ; அந்த இன்பத்தை வாயாற் சொல்ல முடியாதபடி பாடிவிட்டாள். நான் பரவசமானேன். மேலும் பாடினாள், அந்த வனிதை—விசித்திரமான அமைப்புடன் கூடிய அப்பாடலை.

"இரவே பகல் நாளே கலை
         நல்விருந்துயர் காதல்
உருவே விழி, வாழ்வே மணம்
         இன்ப அருவி அதன் மீதிலே" ( நீ என்னடி)

இன்ப அருவியாம்! அதன் மீதிலே நடமாடும் நங்கை கண்ட இன்பத்தை நாம் எப்படிக் காண முடியும்? அந்தப் பாடல் முடிந்ததும், என் குரலும், 'சபாஷ்!' என்று கூறிற்று. நான் என்னையும் மறந்து பளிங்கு மண்டபம் புகுந்தேன்; பயந்து ஓர் வனிதை நின்றாள் என் எதிரில். பக்கத்திலே என் முன்னவர் இல்லை; நான் பதறினேன். ஏன் தெரியுமா? பாடி என்னை பரவசமாக்கிய அந்தப் பாவை, பளிங்கு மண்டபத்தில் பாதி ராத்திரி வேளையில் பாகுமொழி கீதத்தால் தனது தாபத்தைக் காட்டும் நிலையிலுள்ளவள் என்று நான் கனவிலுங் கருதியதில்லை. அது மட்டுமா!

என் எதிரில் நின்ற அந்தச் சமயமும், அவள் அணிந்திருந்த கோலம் எப்படிப்பட்டது தெரியுமோ? மெல்லிய உடை! தைலம் அதிகங் கண்டிராததும் மலர்ச்சுமை இல்லாததுமான கூந்தல்! மை இல்லாத கண்கள்! சதங்கை இல்லாத தாள்! வளையணியாக் கரங்கள்! அவளுடைய மார்பில் முத்து வடமோ, இரத்தின கண்டியோ கிடையாது. செவியிலே செம்பொன் நிறமான புஷ்பம். நெற்றியிலே சந்தனத்தால் பிறை வடிவில் ஓர் குறி. தவக்கோலத்தில் இருந்தாள் அத்தையல்! தவக்கோலந்தான்; ஆனால் தாபத்தின் வேகத்தை அவளுடைய கீதம் நன்கு காட்டிற்று. என்னைக் கண்டதும் அவளுக்கு விழியில் நீர் துடித்தது; எனக்குப் பொறி பறந்தது. தவசிரேஷ்டரென்று தந்தையாரால் பூஜிக்கப்படுபவரும், குலகுரு என்று கொண்டாடப்படுபவரும், கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து, பாண்டிய நாடு பல்வளங்களோடு திகழ வேண்டுமென்று பல்வகை யாகங்கள் செய்தவரும், என் தந்தைக்கு நிழல்போல் இருந்து வந்தவரும், ஆஸ்ரமவாசியுமான, சத்யப் பிரகாசரின், ஏக புத்திரிதான் அவள்! என் அண்ணன் ஏகாந்தமாகத் தங்க ஏற்பட்ட பளிங்கு மண்டபத்திலே தங்கி யாழ் மீட்டி, 'இன்ப அருவி அதன் மீதிலே; அவள் கண்ட இன்பம், தேனிலும் கிடையாது' என்று பாடினாள். அவளுடைய மலரடியையும், என் பிதா பணிந்ததுண்டு; நானுந்தான்! சத்யப்பிரகாசர், அவள் அம்பிகையின் அவதாரமென்று கூறி இருந்தார். அவள் பூஜைக்கென்று தனியான பணிப்பெண்கள்! அவளுடைய பாத பூஜையிலே பலருக்குப் பிரியம். அவ்விதமான யோகி அன்றிரவு தாபத்தைத் தாங்காது, தனியே பாடிக் கிடந்தாள். அக்காட்சியைக் கண்டதும் எனக்குக் கோபம் கட்டுக்கடங்கவில்லை. என் பார்வை அவளுக்குப் பயத்தைக் கிளறிவிட்டது. அவள் உடல் நடுங்கிற்று; ஏதோ பேச வாயெடுத்தாள்! என் கேலிச் சிரிப்பு, அவள் பேச்சை நிறுத்திவிட்டது. கூப்பிய கரத்துடன் என் எதிரில் வந்து நின்றாள். ஆம்! அவளை நான் தேவியின் திரு அவதாரமென்று பலமுறை கும்பிட்டதுண்டு. அவள் அன்றிரவு, என்னைக் கும்பிட்டு நின்றாள், அவள் கேட்கும் வரம் என்ன? 'வெளியே கூறி என் மானத்தை பறித்திடாதே' என்பதுதான்! நானா விடுவேன், அந்தக் கள்ளியை! "காவி உடை; காமச்சேட்டை! தூ!" என்று கூறி அதட்டினேன், அவ் வேளையில்........