உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 37

விக்கிமூலம் இலிருந்து


37


காவலாளிகளில் ஒருவனை அழைத்து, அரசர் ஏதோ கூறினார். அவன் விரைந்து சென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மன்னரின் மெய்ப் பாதுகாவலர் அங்கு வந்து சேர்ந்தார். மன்னர், "ஆணவம் பிடித்த இவனையும், சாகசம் மிகுந்த இவளையும் அரண்மனைக்குள்ளே இருக்கும் பிரத்யேகச் சிறையில் தள்ளுங்கள்" என்று உத்தரவிட்டார். இருவரும் மெய்ப் பாதுகாவலரால் இழுத்துச் செல்லப்பட்டனர். மன்னரும் மற்றக் காவலாளிகளும் அரண்மனைக்குச் சென்றுவிட்டனர். நான் மட்டுமே, நெடுநேரம் சுயநினைவில்லாதவன்போல் உலவிக் கொண்டிருந்தேன். யாருடைய நிலைமை எப்படி இருந்தால்தான் எனை! அந்த நிலவு வழக்கம் போலவே பிரகாசித்துக் கொண்டிருந்தது.

சிறையிலே, என் அண்ணனும் அவருடைய மனதை விழியாலும் மொழியாலும் மருட்டிய தவமணியும் அடைபட்ட செய்தி, மெள்ள மெள்ள நகருக்குள் பரவலாயிற்று. ஊரிலே இதுபற்றி விபரீதமான வதந்திகள் பரவாதிருக்க வேண்டுமென்று கருதிய என் தந்தை வம்பளப்போருக்குக் கடுந்தண்டனை தரப்படும் என்று முரசறை விதித்தார். நடந்ததைச் சுருக்கமாக மக்களுக்கு அறிவிக்குமாறு பிறகு மந்திரிக்குக் கட்டளையிட்டார்.

"ஆஸ்ரமத்திலே இருந்த அந்தப் பெண் ஒரு ஜாலக்காரியாம்—இளவரசருக்கு அவள் ஏதோ மருந்திட்டு மயக்கினாளாம்! அவளும் இளவரசருமாக சேர்ந்து சதிசெய்து, மன்னரைக் கொல்ல முயன்றனராம்" என்று மக்கள் பேசலாயினர். மன்னரின் கோபம் தணிந்த பாடில்லை. பிரதானியர்களிலே சிலர் சிறுமைக்குணம் கொண்டவர்கள். அவர்கள் என்னாலேயே, இளவரசருக்கு இந்த இடுக்கண் நேரிட்டதென்று பேசிடக் கேட்டேன். என் மனம் பதைத்தது! என் அண்ணனுக்குச் சொந்தமான அரச உரிமையை நான் அபகரிக்கச் சதிசெய்து, மூத்தவரை சிறையில் அடைபடச் செய்தேன் என்று கூறும் கயவரின் நாவைத் துண்டித்திட எண்ணினேன். அவ்வளவு ஆத்திரம் எனக்கு. கேவலம், அரச போகத்துக்காக, உடன் பிறந்தாரை மோசம் செய்யும் உலுத்தனா நான்! எவ்வளவு இழிகுணம் இவர்களுக்கு என்று நினைத்துப் பதறினேன்.

முதியவர் சிறையிலே தள்ளப்பட்டதும், மந்திரிகளும், பிரதானியரும், என்னைக் கண்டதும், விசேஷ மரியாதைகள் செய்யலாயினர். அது எனக்குப் புண்ணிலே புளித்த காடியை ஊற்றுவது போலிருந்தது. என் மீது வீண் சந்தேகம் கொண்ட அவர்களையும், அவர்கள் பெரிது எனப் பேசும், அரச பதவியையும் தூசு எனக் கூறிவிட்டுத் துறவு பூண்டுவிடவேண்டும் என்றுகூட நினைத்தேன். இந்தத் தீர்மானத்தை தந்தையிடம் கூற அவரிடம் சென்றேன். ஆனால் அவருடைய விழி அப்போது சிவந்திருந்ததையும், அவருடைய மொழியிலே சோகம் தோய்ந்திருந்ததையும் கண்டதும் என்னால் ஏதும் பேசமுடியவில்லை.

"என் செல்வமே! கடைசி முறையாக, நீ போய்க் கேள் அவனை. என்னைச் சாகடிக்கத்தான் அவன் பிறந்தானா என்று கேள். குலை தள்ளியதும் வாழையை வெட்டி வீழ்த்துவதையும், விழுந்துவிட்டாலும் ஆல் நிலைத்து நிற்பதையும் அவனுக்குக் கூறு. பாண்டியனைப் படுகளத்திலே கொல்ல முடியாது போன பகைவர்களின் பங்காளியா, பட்டத்தரசன் பொறுப்பை பெரிதென எண்ணும் புதல்வனா என்பதைக் கேட்டுப்பார்" என்று என்னிடம் கூறினார்.

புயலைப்போய் அடக்கு என்று கட்டளையிடுவது போல இருந்தது, என் தந்தையின் வாசகம்! நான் என்ன செய்வேன்! முடியாது என்று என்னால் கூற முடியுமோ? தலை அசைத்தேன். தந்தை தலையைக் கவிழ்த்துக் கொண்டார். துக்கம் அவரைத் துளைத்தது. என் செய்வார் அவர்? சிறை சென்றேன். காவல் புரிவோரை வெளியே போகச் சொல்லிவிட்டு, என் அண்ணன் இருந்த அறைக்குள் நுழைந்தேன். அவர் புன்சிரிப்போடு என்னைப் பார்த்து, "தெரியும் எனக்கு, தந்தை எப்படியும் சம்மதிப்பார் என்று. அவர் சம்மதத்தைக் கூறத்தானே நீ வந்தாய்?" என்று கேட்டார். எனக்கு அவர் மொழியைக் கேட்டதும் பிறகு நடுக்கம் பிறந்தது. இவ்வளவு நம்பிக்கையும் ஆவலும் கொண்டுள்ளவருடன், என்ன பேசி, மன்னர் வழிக்கு அவரைத் திருப்புவது? நடக்கக் கூடிய காரியமா என்ற எண்ணத்தின் முடிவு என்னைக் கோழையாக்கி விட்டது. நான் இந்த முயற்சியைச் செய்யாதிருப்பின் முடிவுபெற வேண்டியே நான் சும்மா இருந்துவிட்டேன் என்ற பழிவந்து சேரும். இரு நெருப்புக்கிடையே சிக்கிய நான் எவ்வளவு தவித்தேன் தெரியுமா? என் நிலையை ஒருவாறு யூகித்துக் கொண்டார் அண்ணன். அவருடைய புன்னகை மறைந்து விட்டது. பொலிவு குறைந்தது. பெருமூச்சுடன் "தந்தை இசைய மறுக்கிறாரா?" என்று கேட்டார். "ஆம்" என்று நான் மெதுவாகக் கூறினேன். "சரி" என்று கோபமாகக் கூறிவிட்டு, அவர் அங்கிருந்து மஞ்சத்திலே படுத்துக் கொண்டார். என் நெஞ்சு உலர்ந்துபோய் இருந்தது. நெஞ்சை நனைத்துக் கொள்ள, அங்கிருந்து நீர்க்குவளையை எடுத்தேன். என் அண்ணன் "வேண்டாம்! அந்த தீரைப் பருகாதே" என்று கூறினார். நான் பயந்துவிட்டேன். ஒருசமயம் தற்கொலை செய்து கொள்ள நீரிலே ஏதேனும் விஷம் கலந்து தயாராக வைத்திருக்கிறாரோ என்று திகில் பிறந்தது. 'அண்ணா!' என்று கூவினேன்.'தம்பி!பயப்படாதே! அதிலே விஷமில்லை; ஆனால் அந்தக் குவளை நீரிலே இருப்பது என் கண்ணீர்த் துளிகள்' என்று கூறினார்.

அதைக் கேட்ட நான், எவ்வளவு பதறினேன் தெரியுமா? நடனா! நெடுநேரத்திற்குப் பிறகே, நான் அவருடன் பேச முடிந்தது. பேச்சினால் என்ன பயன் விளைய வேண்டுமோ, அது ஏற்படவில்லை. அதற்கு மாறாக, என் அண்ணன் காதலையே கலையாகக் கொண்டிருப்பவர் என்று நான் கண்டு கொண்டேன். ஒரு பெரும் புலவர் பேசுவது போலிருந்ததே தவிர அவருடைய பேச்சு, மைவிழியாளுக்காக வீண் பிடிவாதம் செய்யும் வீணுரையாக எனக்குத் தெரியவில்லை. அவருடைய வாதங்களும், மனோதத்துவ மொழியும் மிக அழகாக இருந்தன. தந்தையின் துக்கத்தை நான் அவருக்கு எடுத்துரைத்தேன். ஒரு பெண்ணுக்காக குடும்பம் அழிவதா என்றும் கேட்டேன். நான் கற்றிருந்த திறமையனைத்தையும் காட்டி எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவ்வளவையும் அவர் சிதறடித்தார். அவர் அன்று கூறிய சில வாசகங்கள், பிறகு, பல இரவுகள் என் சிந்தனைக்கு வேலை தந்தன. அவர் அன்று கிளப்பிய பல பிரச்சினைகளுக்கு, எனக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.

"தம்பி! அரசனின் கடமை, அரச பதவியின் பொறுப்பு, நிலைமைக்கேற்ற நடவடிக்கை என்று பல கூறினார் தந்தை. நீயுந்தான் கூறுகிறாய். அரசனாக ஒருவன் இருப்பதனால் ஒரு சாதாரண மனிதனுக்குள்ள மிகச் சாதாரணமான உரிமையையும் அரசனென்ற நிலைமைக்காக, பதவிக்காக இழந்துவிட வேண்டுமா? அறிவுடைமையா அது? அரச போகத்துக்காக, குடும்ப இன்பத்தைப் பறிகொடுக்க வேண்டுமா? அது சரியா" என்று என்னை அவர் கேட்டார். இன்றுவரை நான் அதுபற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்—சரியான பதில் கிடைக்கவில்லை.

"தம்பி! பாண்டிய நாடு பெரிது. உன் பரிவுக்கேற்ற மங்கையல்ல என்று தந்தை கோபத்தோடு கூறினார். கோபம் அவருடைய சிந்தனா சக்தியைக் கெடுத்துவிட்டது. நீ யோசித்துப் பார்! ஒரு மங்கைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது, அவளைப் பெற ஆண்மையில்லாது, பேடியாகி, துரோகியாகி, நான் இந்த மண்டலத்தை ஆண்டு என்ன பயன்? தந்தையின் கோபத்துக்குப் பயந்து ஒரு தையலின் மானத்தை நசுக்க நான் துணிந்துவிட்டால் நாளைக்கு ஒரு மண்டலத்து மக்களின் மானத்தைக் காப்பாற்றும் மகத்தான பொறுப்பை நான் நிறைவேற்ற முடியுமா? நீ கூறு. ஏழை எளியவர், அபலை அனாதைகள் எனும் எவரிடமும் பரிவு காட்டி, அவருடைய சுகத்திற்காகப் பணியாற்றுவது அரச பதவியின் மேன்மை என்று அறவுரை புகல்கிறார்களே, அந்தப் பதவிக்கு நான் இலாயக்குள்ளவனாவதற்கு ஒரு மங்கையரின் மனதைப் புண்ணாக்கி, வாழ்வைப் பாழாக்குவது பயிற்சி முறையா கூறு? அவள் கண்ணீர்ப் பெருகப் பெருக, நான் பன்னீரால் குளிப்பாட்டப்பட்டு பட்டத்தரசனாவதா? அவள் கரங்களைப் பிசைந்து கொண்டு ஒரு இடத்திலே அழுது கொண்டிருப்பது, வேறோர் இடத்திலே நான் கரத்திலே செங்கோலேந்தி அரசாள்வதா? ஒரு புறத்திலே, நான் நீதியின் சின்னமாக கொலுவீற்றிருப்பது. மற்றோர் இடத்திலே ஓர் மங்கை என்னை அநீதியின் இருப்பிடமே என்று கடிந்துரைப்பதா! பாண்டிய நாட்டுக்கு, ஒரு பாவையின் வாழ்வைக் கெடுத்த பாதகனா அரசனாவது? ஒரு பெண்ணை நிர்க்கதியாக்கும் நீசனுக்கா மக்கள் நெடுந்தண்டமிடுவது? யோசித்துப்பார்" என்று அவர் அன்று சொன்னார். இதுவரை பல பெரியவர்கள் இதற்குப் பலவாறு பதில் கூறினர். எனக்குத் திருப்தியாகவில்லை.