கலிங்க ராணி/கலிங்க ராணி 4
உறையூரிலிருந்து தியாகவல்லி தன் சேடியருடன், மன்னன் கட்டளைக்கிணங்கக் கச்சி நகர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். அம்மங்கை சென்றால், தானும் உடன் செல்லலாம்; சென்றால் வீரமணியைக் காணலாம் என்று நடனம் எண்ணினாள்.
இதற்குள், யானைப்பாகர் யானையைக் கட்டுத்தறியனின்றும் நீக்கி, அலங்கார அணிகள் பூட்டி, பிடரியின் மீது பொன் பூ வேலைப்பாடமைந்த மெத்தை வைத்துத் தைத்த அம்பாரியை அமைத்து, மலர் மாலைகளைச் சூட்டி, யானையை அரண்மனை வாயிலிலே கொண்டுவந்து நிறுத்தினர். குதிரைப் படையினர் சிலரும், காலாட் படையில் ஒருசிலரும், இரண்டோர் தேரும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தியாகவல்லி இந்தப் பரிவாரம் புடைசூழ, நகர இராசவீதி வழியே சென்று உறையூரைக் கடந்து கச்சிநகர் போகலானார்.
மன்னனும் பரிவார சகிதம் கச்சிநகர் புகுந்த அன்று, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. காஞ்சிபுரத்திலே குதூகலம் சொல்லி முடியாது. வீதிகளிலே புது மணல் பரப்பி, நகரமாந்தர் தோரணங்கள் அமைத்து, ஊரை அலங்கரித்தனர். மாளிகைகளுக்குப் புதுச்சுண்ணம் பூசினர். வாழை, கமுகு கட்டினர். மகரதோரணம் அமைத்தனர். ஒவ்வொருவரும் தத்தமது மனையிலே மணவினை நடத்தல் போலவும் விழா நடப்பது போன்றும் கருதி மகிழ்ந்து புத்தாடை அணிந்து புன்முறுவலுடன் மன்னன வருகையை எதிர்நோக்கி நின்றனர்.குலோத்துங்கனின் கீர்த்தி, மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்தது. மூவேந்தருள் சிறந்தும், முடிமன்னர்கள் பலரைத் தனக்குக் கப்பம் செலுத்துவோராகப் பெற்றும், வடநாட்டவர் அஞ்சிட வாழ்ந்த வல்லமை மிக்க மன்னன் ஆட்சியிலே இருப்பதை ஓர் பெருமை எனக் கருதிய மக்கள் மன்னனைக் காணவும், கண்டு களிப்படையவும், போற்றவும், வாழ்த்தவும், சமயம் வாய்த்ததைக் கண்டு மகிழ்வுற்றனர். கவிவாணர்கள் இனி நம்மை வறுமை விட்டது என்று எண்ணினர். சிற்பிகள் நமது திறனைக்காட்டி மன்னன் மகிழ்ச்சியைப் பரிசாகப் பெறுவோம் என்று கருதிக் களித்தனர். இசைவல்லோர் புதுப் பண்கள் அமைத்தனர். ஆடலழகியரும் சதங்கைக்கு மெருகிட்டனர். வீரர்கள் தத்தமது ஆயுதங்களைச் சரிபார்த்துக் கொண்டனர். சிலம்பக் கூடங்களிலே சிரிப்பு! மாடமாளிகைகளிலே மகிழ்ச்சி! ஊரெங்கும் குதூகலம். கச்சி நகரே புத்துருப் பெற்றதோ என்று வியக்கும் வண்ணம் நகர மாந்தர், நானாவிதமான முறைகளிலே ஊரை அலங்கரித்துவிட்டனர். ஊர்ப்புறத்தே கச்சிக் காவலன், படைகளுடன் காத்திருந்தான். அரச பவனிக்காக யானை, குதிரை, தேர்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. மன்னன் ஊர் புறத்தே வந்ததும் முரசு முழங்கிற்று. முரசொலி கேட்டதும், "வந்து விட்டார் மன்னர்; மன்னர் வருகிறார்!" என்று ஊரே உற்சாகத்துடன் ஒலித்தது. பவனி நடந்தது. தோற்கருவி ஆகிய பல்வேறு இசைக்கருவிகள் ஒலித்தன! வாழ்த்தொலி கடலொலிபோல் கிளம்பிற்று! "மன்னர் மன்னவா! வருக! எம்மை வாழ்விக்கும் இறையே, வருக! மூவேந்தருக்கு முதல்வா, வருக! முத்தமிழ் வளர்க்கும் வித்தகா வருக!" என்று பராக்குக் கூறினர் பாணர். "வையகம் போற்றும் மன்னர் வாழ்க! வாகை சூடிய வேந்தர் வாழ்க! சோழகுல ஜோதி வாழ்க!" என்று மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்தனர். வீதிகளிலெல்லாம் மக்கள் திரள் திரளாக நின்று மன்னனை வாழ்த்தி வரவேற்றனர். மாடங்கள் மீது மங்கையர் நின்று மன்னன்மீது மலர் தூவினர். சிறு பிள்ளைகள் யானை, குதிரை, சேனையைக் கண்டு வியந்தனர். ஆடம்பர ஊர்வலத்துக்குப் பிறகு மன்னன் சித்திர மண்டபம் சென்று தங்கினான். சித்திர மண்டபம், முத்தமிழ் மண்டபமாயிற்று. விழாக்காண வெளியூரிலிருந்தும் பலர் வந்திருந்தனர். விருந்தும், வேடிக்கையும், அமோகம். மன்னன் சின்னாட்கள் அங்கு தங்கினான். இதற்குள் ஏழிசை வல்லியாரும் வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு நாளும் அறிஞர்கள் உரையும், ஆடலழகிகளின் நடனமும், இசை விருந்தும் நடைபெற்றன. பல புலவர்கள் தமது நூற்களை அரங்கேற்றினர்! புதுப் பண்களைப் பாடிக்காட்டி இசைவாணர்கள் பரிசுகள் பெற்றனர். ஓவியக்காரரும், தத்தமது திறனை மன்னன்முன் காட்டி மகிழ்வித்தனர். மன்னன் பரிசுகள் பல வழங்கி அவர்களை மகிழ்வித்தான்.
ஆனந்தமாகச் சில நாட்கள் கழித்தபிறகு, மன்னன் அரச காரியங்களைக் கவனிக்கலானான். காட்டைத் திருத்தத் திட்டங்கள், கானாறுகளை நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தத் திட்டங்கள், உழவு முறைப்பற்றி புது ஏற்பாடுகள், பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றை பற்றி நிபுணர்களுடன் மன்னன் கலந்து பேசினான். மக்களின் வாழ்க்கையிலே குறைபாடுகள் உள்ளனவோ என்று விசாரித்தான். அதுசமயம் பழுத்த உடலும், நரைத்த தலையும் படைத்த கிழவரொருவர், மன்னனிடம் வந்து நின்று, "மன்னவா! உன் ஆட்சி கண்டு ஆனந்திக்காதவர் இல்லை. தமிழகத்தின் தனிச்சிறப்பை நீ விளக்குகிறாய். ஆனால்..." என்று இழுத்தாற்போல் பேசிடவே மன்னன், "முதியோரே! ஆனால் என்றீர்! முடித்தீரில்லை! நான் மன்னன்; ஆனால் உம் போன்ற பெரியோர்களின் மொழிதான் எனக்குச் சட்டம். உமது மனதிலே குறையுளதேல் தயங்காது கூறுக" என்று கேட்க, அம்முதியோர், "எனக்கொன்றும் குறை இல்லை கொற்றவனே! ஆனால், காலப்போக்கு என் நெஞ்சை வருத்துகிறது" என்றார் "என்ன காலப்போக்கிலே உள்ள குறை? தெளியக் கூறுமின்" என்று மன்னன் அன்போடு வினவினான்.முதியோர், "அரசே! இரண்டோர் நாட்களுக்கு முன்பு இங்கோர் ஆரியப் பண்டிதன் தனது கலை பற்றிப் பேசிடக் கேட்டீர். அவன் போன்றோர் செய்து வைத்த பிரசாரம், காலப்போக்கை கெடுத்து விட்டது என்பதே என் போன்றவர்களின் அபிப்பிராயம். தமிழகத்திற்கு ஆரியம் புதியதோர் ஆபத்தோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். அவ்வளவே என்குறை" என்றுரைத்தார். மன்னன் சற்றுநேரம் யோசித்து விட்டு, "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய்போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம்; இது உறுதி. ஆரியர், தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்தார்; புகுத்த முயன்றால், கனகவிசயர் கண்ட கதியே காண்பர்" என்று உறுதி கூறித் தேற்றினான்.
"மன்னர் மன்னவ! சிற்றரசர்கள் கப்பம் அனுப்பியுள்ளனர். கொலு மண்டபத்திற்கு அவர்களை அனுப்பவா" என்று வீரமணி, மன்னனைக் கேட்க, மன்னன் "ஆம்" என்றுரைத்துவிட்டுக் கொலுமண்டபம் சென்று அமர்ந்தான். குலோத்துங்க மன்னருக்குத் திறையனுப்பிய மன்னர்கள் பலப்பலர். கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், கோசலர், கங்கர், கராளர், கடம்பர், துறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் முதலிய பல்வேறு வட்டார மன்னர்கள் பொன்னும், மணியும் வேழமும், புரவியும் ஆரமும் பிறவுமாக பலவகை இறைப்பொருளை மன்னன் முன் குவித்துக் கும்பிட்டு ஒருபுறமொதுங்கி நின்றனர். கருணாகரத் தொண்டைமான், தூதுவர்கள் கப்பம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே, சற்றுச் சீற்றத்துடன் காணப்பட்டார். வீரமணியும் மற்றும் சில படைத் தலைவர்களும் மெல்ல ஏதோ பேசிக்கொண்டே மன்னனையும், தொண்டைமானையும் மாறி மாறிப் பார்த்தனர். மன்னன் கப்பம் செலுத்தியோரை ஒருபுறம் நிறுத்தி, அவரவர் ஊர் வளம் விசாரித்து, 'நம்மால் உமது மன்னனுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் கூசாது கூறுமின்' என்று கேட்டு உபசரித்தான். 'அரசர்க்கரசே! உமது ஆணையே எமது அரசுகளை எல்லாம் அரண்போல் காத்து நிற்கிறது. குறைவேதுமில்லை' என்றனர் திறை கொணர்ந்தோர்.
"கவிதைகள், காவியம், உயர்கலைகள், சிற்பம் முதலிய விசேடங்கள் உமது நாடுகளிலே உள்ளனவோ? நாமறியக் கூறுமின்" என்று மன்னன் கேட்க, அவரவர்கள் தத்தம் நாட்டிலே உள்ள நயங்கள் உரைத்து நின்றனர். இவை ஒன்றையும் தொண்டைமான் கவனிக்கவில்லை. அதுசமயம் தொண்டைமான், சோழ மன்னனின் படைபலக் கணக்கிலே கவனம் செலுத்தியிருந்தான், காரணத்தோடு!
மன்னன் திடீரென்று, தொண்டைமானை நோக்கி, "திறைசெலுத்தத் தவறியவர் எவரேனுமுண்டோ?" என்று கேட்டான். கொலு மண்டபம் நிசப்தமாய்விட்டது. கோபக் குரலுடன், "வேந்தே! கலிங்கநாட்டு மன்னன் அனந்தவர்மன் மட்டுமே கப்பம் செலுத்தவில்லை" என்று திருமந்திர ஓலைநாயகன் கூறினான். குலோத்துங்கன் முகத்திலே குறுநகை பிறந்தது! அதன் பொருள் என்ன என்பதை அங்கிருந்தோர் அறிவர். சபை கலைக்கப்பட்டது. தொண்டைமானின் விழியும் விஷயத்தை வெளிப்படுத்திவிட்டது! மன்னனின் புன்முறுவல் இட்ட கட்டளை, 'தூக்குவீர் கத்தியை!" என்பதே. 'உறைகளிலிருந்து வாளை உருவிட இலட்சக்கணக்கான வீரர்கள் தயார்! தயார்!' என்றனர்.
கலிங்க நாட்டு மன்னன், கெடுமதி இருந்தவாறென்ன! தமிழக முழுவதும் தலைவணங்கி நிற்கும் தன்மையினனான நம் மன்னர் மன்னனின் மாண்புகளை அறியாது போயினன். மடத்தனமிக்க மமதை கொண்டான். மண்ணில் அவன் குருதி கொட்டுமென்பதுறுதி! குலோத்துங்கனை எதிர்த்து நின்ற எவரேனும் தோற்காதிருந்ததுண்டோ? வேங்கை சீறிடின் மான் கூட்டம் பிழைக்குமோ? மூண்டு விடும் பெரும் நெருப்பிலே பஞ்சு பிழைப்பதுண்டோ? கலிங்கக் காவலனின் ஆணவமெனும் வெண்ணெய் நமது அரசனின் சினமெனும் கனல்பட்டு உருகிவிடாதே! ஒரு வேந்தனின் ஆணவத்தின் பயனாக, பாபம், அந்த மக்கள் சொல்லொணாக் கஷ்டமனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் நகரங்கள் நாசமாக்கப்படும்ǃ வயல்கள் வெளிகளாகும்! மாளிகைகள் மண்மேடுகளாகும்! இந்தக் கலிங்க மன்னன் எவ்வளவு பித்தன்! ஏனோ! வம்பை விலை கொடுத்து வாங்குகிறான். குலோத்துங்கக் கொற்றவனின் தோள்வலிமை அறியாதவன்போல், அகந்தை கொண்டு தான் ரட்சிக்க வேண்டிய மக்களை இம்சைக்கு உள்ளாக்கத் துணிகிறான் என்று காஞ்சியில் மன்னனுடன் வந்திருந்த படையினரிற் சிலர் பேச, மற்றவர் "போர் வந்தேவிட்டது போல் பேசுகிறீரே! மன்னனின் ஓலை போனதும், கலிங்கன் குளிரும் காய்ச்சலும் கொண்டு, திறையுடன் இவண் போந்து "திக்கெட்டும் புகழ் பரப்பிய தீரனே! தமிழகத்தின் ஒளியே! மன்னர் மன்னவா! என்னை மன்னித்தருள்க என்று வணங்கிவிட்டாலோ!" என்று வினவினர். நான் கலிங்கநாட்டைக் கண்டிருக்கிறேன். மன்னனின் குணத்தை மக்கள் கூறக் கேட்டிருக்கிறேன். மமதையே அந்த மன்னனுக்குத் தோழன். எனவே அவன் மன்னிப்புக் கோரான்! போருக்கே எழுவான்" என்று நரைத்ததலையும் வடு நிரம்பிய உடலும் கொண்ட ஒரு வயோதிக வீரர் கூறக் கேட்ட மற்றவர் அங்ஙனமாயின் நமக்குப் பெருவிருந்துதான். சந்தேகமில்லை" என்று கூறி, ஆரவாரித்து ஆயுதங்களைத் தூக்கிச் சுழற்றி ஆடினர்.
மன்னன் குலோத்துங்கன் படைத்தலைவன் தொண்டைமானுடன், தனியறையிலே உரையாடிக் கொண்டிருந்தான். கவலை கொண்ட முகத்தினனாக வீரமணி, அந்த அறையின் வாயிற்படியிலே காவல் புரிந்து நின்றான்.
"மன்னவா! இந்தப் போருக்காகத் தாங்கள் நேராகக் களம் புக வேண்டுமா? நான் செல்வேன் சேனைகளுடன்; வெல்வேன் கலிங்க வேந்தனை! உமது கட்டளை எனும் வில்லுக்கு நான் அம்பு! என்னை எய்தால் போதாதோ?" என்று தொண்டைமான் கூறிடக் கேட்டு புன்முறுவல் பூத்த மன்னன், "அங்ஙனமே யாகுக! அஞ்சா நெஞ்சரே, அன்பரே, தேவையான படைபலத்தோடு சென்று வென்று வாரும். கலிங்கனின் காதுகளில் கங்கைக்கரைக்காரரின் கூச்சலே கேட்கிறது. அதனாலேயே அவன், புயலில் குதிக்கத் துணிந்துவிட்டான். அன்றோர்நாள், ஆரிய மன்னர்களைச் சேரன் செங்குட்டுவன் வென்று, சிரமீதில் கல்லேற்றி வந்த சேதியை கலிங்கன் மறந்தான் போலும்!" என்று மன்னன் கூறினான்.
"உறையூருக்கு ஓலை அனுப்பிவிடுகிறேன். வீரமணி குதிரைப் படைக்குத் தலைமை தாங்குவான். எனது தமையனாரிடம் கரிப்படையின் பொறுப்பிருக்கும்; தரைப்படைக்குத் தலைமை நானே கொள்கிறேன்" என்று தொண்டைமான் போர் முறையை விவரிக்க, மன்னன் உலவியபடி, "சேனைத் தலைவரே! உமது சித்தம்போல் செய்யும். ஆனால் ஒன்று;கலிங்க நாடு மலையரண் கொண்டது. கலிங்க மன்னனின் மமதைக்குக் காரணமும் அதுவேதான்! எனவே மலையரணைத் தூளாக்க யானைப் படையைச் சற்று அதிகமாகவே கொண்டு செல்லும். மேலும், கலிங்கநாட்டின் மீது, நமது படைகள் தரை மார்க்கமாகப் பாய்வதோடு கடல் மார்க்கமாகவும் நமது சேனைகள் சென்று முற்றுகையிட வேண்டுமாகையால், நமது கப்பற்படையும் தரைப்படை கிளம்பும்போது கிளம்பட்டும். கலிங்கம் அழியட்டும்" என்று கூறினான்.
"தங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்" என்று கூறிப் பணிந்து நின்றான் தொண்டைமான். இரு வீரரின் முகங்களும் கோபத்தால் சிவந்திருந்தன. முத்துப்போல் அரும்பிய வியர்வையைத் துடைக்கவும் மனமின்றி மன்னன், 'நமது படைகளை வெளியிலே கூட்டு; நான் சில கூறல் வேண்டும்" என்றான்.
சித்திர மண்டபத்தை அடுத்த வெளியிலே படைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தொண்டைமான் வீரமணியை உடன் அழைத்துக்கொண்டு குதிரை மீதேறி அணிவகுப்பை ஒழுங்கு பார்த்தான். படை முழுவதிலும் ஜொலிக்கும் முகங்களும், அவற்றுடன் போட்டியிடும் ஒளிவீசும் ஆயுதங்களுமாக இருந்தன! "இந்த வடு இன்ன களத்திலே உண்டாயிற்று. இன்ன போரிலே இன்ன விதமான வெற்றி நான் கண்டேன்" என்று பழங்கதை பேசி நின்றனர் படை வீரர்கள். வீரமணியின் வாழ்க்கையில் புதியதோர் நிலைமை, அதாவது குதிரைப் படைக்குத் தலைமை தாங்கும் பேறு கிடைத்ததால், அவன் மிக்க மகிழ்வுடனே விளங்கினான். காதலியைப் பிரித்திருக்க வேண்டுமே என்ற கவலையையும் மறந்தான்! புதுத் தலைவரைப் பெற்ற குதிரைப் படை வீரர்கள் களித்தனர். குதிரைகள் களம் புகும் காலம் இதுவெனக் கண்டு கொண்டு கால்களை தட்டி நின்றன! 'கலிங்க வீரர்களின் மார்புகளிலே இந்தக் குளம்புகள் தாண்டவமாடும்' எனக் கூறிக் குதிரையை வீரர்கள் தட்டிக் கொடுத்தனர். குன்றுகள் பல வரிசையாக அடுக்கியது போன்ற காட்சி தந்தன கரி வரிசை! அவைகளின் ஆரவாரம் கடலொலி போன்றிருந்தது.
பேரிகை ஒலித்தது; பேச்சு நின்றது! மன்னவன் ஓர் யானை மீதமர்ந்து, படைவரிசை நடுவே வந்து நின்றான்! புன்னகை பூத்தான்! வீரர்களின் முகமெலாம் மலர்ந்தன! "மன்னர் மன்னவன் வாழ்க! தமிழ் மாநிலம் வாழ்க!" என்று வீரர்கள் முழக்கம் செய்தனர்.
"தமிழ் மாநிலம் வாழ்க! உண்மை உரை அது; வீரர்காள்! தமிழ் மாநிலம் வாழ, அதன் கீர்த்தி பரவ, உங்கள் குருதியைப் பாய்ச்ச வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளவே இன்று இங்கு உம்மை அழைத்தேன். மண், பெண், பொன் எனும் மூன்றுக்கும் மாநிலத்திலே போர் மூளுவதுண்டு. நாம், மண் வேண்டியோ, பெண் வேண்டியோ, பொன் கோரியோ கலிங்க நாட்டின் மீது போர் தொடுக்கவில்லை. சோழவளநாடு சோறுடைத்து! நமது மணி மாடங்களிலே தேனிழையூறிய செம்பவள இதழ்ச் சேயிழையார் தத்தமது காதலருடன் தென்றலையும் திங்களையும் வென்று வாழ்கின்றனர். மண், பெண், பொன் எனும் மூன்றிற்கல்ல இப்போர்; மானத்திற்கு! ஆம்! தமிழகத்தின் எல்லையிலே உள்ள ஓர் கொல்லை கலிங்கம்! புன்னகைப் பூந்தோட்டமல்ல! செந்தமிழ் செழிக்கும் சோலையுமல்ல! ஆனால், கலிங்கன் கப்பம் தர மறுக்கிறான்! என் உயிர் போகாமுன்னம், உமது குருதியில் வீரம் குதித்தாடுவது நிற்காமுன்னம், தமிழகத்தின் கீர்த்தி குறையாமுன்னம், கலிங்கனோ, கடம்பனோ, வங்கனோ, எவனோ திறை தர மறுக்கிறான் எனில், நமது மானத்தை மாய்க்க நினைக்கிறான் என்றே பொருள். மூவேந்தரிலே மற்றையோர் என்ன எண்ணுவர்! மேலே, கங்கைக் கரையிலே உலவும் ஆரியர்கள் எவ்வளவு கேலி செய்வர்! குலோத்துங்கனின் நாட்கள் குறுகிவிட்டன என்று கொக்கரிப்பர். சோழமண்டலத்திலே, போர் வீரர்கள் கூட்டம் குறுகிவிட்டதென்று கூவுவர்? உண்மை நிலை அதுவா? ஒதிய மரமா நாம்! போர்த்திறம் இழந்தோமா? தோள் வலியும் மனவலியும் இழந்தோமா? முன்னோரின் புகழுக்கு நாம் மாசுகளா? முதுமொழிகளுக்குக் கரையான்களா? ஆண்மையற்ற கூட்டமா? அஞ்சி வாழும் ஆமைகளா? நயவஞ்சக நரிகளா? நாம் ஏறுகள்! நாம் தமிழர்! கொலைவாளைத் தூக்குவோம். கொடுமை களைவோம்! மாற்றானின் ஆயுதங்களை நமது மார்பெனும் மதிலிலே வீசச் செய்து மகிழ்வோம். வீரப் போரிலே, வெற்றி காண்போம். வீழ்ந்தாலோ, புகழ் தழுவும் பேறு பெறுவோம். மறத் தமிழரே! கலிங்க நாட்டு மன்னன் மீது போர் தொடுத்தாகிவிட்டது. உமது குருதியைக் கொட்ட, உடலைக் களத்திலே வீழ்த்த, அச்சாரம் வாங்கி விட்டேன். ஆண்மையாளரே! சின்னாட்கள், சிங்காரத் தமிழகத்தை உங்கள் செல்வக் குடும்பத்தை, காதலை, கவிதையை, காட்சியை மறந்து பிரிந்திருங்கள். வானமே கூடாரம்; தரையே பஞ்சணை, ஆயுதங்களே தோழர்கள்; கானலே காதலி; போரே சரசம்; இதுவே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். போரிடத் துணிவு பிறவாதவரே, ஒதுங்கி நில்லுங்கள், எவரேனுமிருப்பின். அவர்கள் மீது நான் காயேன். உறையூர் போகச் செலவு தருவேன். கோழைகள் வீரர்கள் கூட்டத்திலே இருத்தல் கூடாது. பதரும் மணியும் கலத்தல் வேண்டாம்! வீரர்களே, இன்றே துணிந்து கூறுங்கள், போருக்குத் தயாரா!" என்று மன்னன் உருக்கமாகப் பேசிக் கேட்டான். "தயார்! தயார்! தயார்!" என்று வீரர்கள் முழக்கம் செய்தனர். மன்னவன் சிரித்தான்.
"மகிழ்ந்தேன்! வீரர்களே, உம்மை வாழ்த்துகிறேன். கலிங்கம் சென்று, வென்று, வாகைசூடி வருமளவும், நான் காஞ்சியிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். உங்களை விட்டுப் பிரிந்துள்ள காதலிகளின் கண்கள் கக்கும் கனலினின்றும் தப்பவே, நான் உறையூர் போகாது இங்கிருக்க எண்ணுகிறேன்" என்று மன்னனுரைத்திட, வீரர்கள் மகிழ்ந்தனர்.
வீரமணி, மன்னனை வணங்கி, "மன்னரே, மங்கையரின் விழிகளிலே கனல் கக்குமென்றீர்கள். உண்மையே! ஆனால் காதலில் கட்டுண்டோ, கிலியால் தாக்குண்டோ, வீரர்கள் களம் புகாது, கட்டிலறை நோக்கி நடந்திடின், தமிழ் அணங்குகள், "இத்தகைய கோழையையா நான் பெற்றேன் மணாளனாக" என்று கூறிக் கண்களில் புனல் சோர நிற்பர்" என்றான்.
மன்னன், "வீரமணி! மாதர் விழி பற்றிய ஆராய்ச்சியை மெத்த நுணுக்கமாகக் கண்டுள்ளானே," என்று கூறிட, வீரமணி வெட்கித் தலைகுனிந்தான். அதே வேளையில், நடனராணியும், வெட்கித் தலைகுனிந்து இருந்தாள், அரண்மனையிலே!