உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 9

விக்கிமூலம் இலிருந்து


9


றந்து கிடந்த யானையின் தந்தத்தைக் கொண்டு பேய்கள் பல்துலக்கிக்கொண்டு, யானையின் எலும்பால் நாக்கை வழித்துக் கொண்டு, ஓடும் இரத்த ஆற்றிலே வாய் கழுவிக் கொண்டு, இஷ்டமான பிணத்தை வயிறு புடைக்கத் தின்னலாம்; வெறும் பிணம் தின்ன விருப்பமில்லையேல், அறுசுவை உண்டியே அங்குச் சமைக்கலாம்; அத்தனையும் அடுக்காக இருந்தன. பிணமான கலிங்கரின் வெண்பற்களைக் குவித்திடின், அரிசி! அதைக் குத்திட உடல் வேண்டுமா! இதோ, கலிங்கரிடத்து, தோல் கிழித்து தரையில் உருண்ட முரசுகள். அவைகளிலே கொட்டி, யானைத் தந்தத்தாலே குத்திடலாம்! சமைத்திடச் சாமான் ஏராளம்! சாப்பிடவோ சகலமும் தயார்! விருந்து தீர்ந்ததும் வெற்றிலைப் பாக்கு வேண்டுமா? குதிரையின் குளம்புகள், பாக்கு! யானைக் காதுகள் வெற்றிலை! போட்டு மெல்லட்டும் பேய்கள்!! ஓஹோ! வெண் சுண்ணம் வேண்டுமே! அதுவும் உண்டு. கலிங்கரின் கண்களில் வெள்ளைக்கு மட்டும் குறைவா!! பேய்கள் பெருவிருந்து பெறலாம் என்று கூறும் விதமாகக் கிடந்தது களம்! அத்தகைய போருக்குப் பிறகே கலிங்கமன்னன், தலைதப்பினால் போதும் என்றோடிவிட்டான். அவனைப் பிடித்துவர ஒரு படை சென்றது. ஓடி ஒளிபவரையும், செத்தவர் போல் படுத்திருப்போரையும் பிடித்திழுத்துக் கைது செய்ய ஒரு படை வேலை செய்தது. களத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வீரமணி வருகையில். இறந்து கிடந்த யானைக்குப் பக்கத்திலே உருண்டு கிடந்த ஒரு கலிங்கத்தானின், ஈனக் குரல் கேட்டது. குற்றுயிராகக் கிடந்தவனைக் கண்ட வீரமணி, குதிரையைவிட்டுக் கீழே குதித்து, "கலிங்கப்படை தோற்றது, மன்னன் மருண்டோடி விட்டான். நீர் ஏன் கைதியானீர்" என்று கூறிவிட்டு, வாளை உறையினின்றும் தயாராக எடுத்து உருவினான். சாய்ந்து கிடந்த கலிங்கத்தான், அணையுமுன் ஒளிவிடும் விளக்குபோல், ஒருமுறை சிரித்துவிட்டு, "பிணத்தோடு பிணக்கு ஏன்? உயிரை இழக்கப்போகும் என் முன் உருவிய உடைவாள் ஏன்? என்னைக் களத்தைவிட்டு அழைத்துச் செல். உன் கூடாரத்துக்கல்ல. இங்கிருந்து சிலகாத தூரத்திலே ஒரு குகை இருக்கிறது. வழி நான் காட்டுகிறேன். அங்குப் போனபின், சாகப்போகும் நான்—வயது முதிர்ந்த நான், கடைசிவரை களத்திலே தீரமாக நின்று போரிட்ட நான்—இரகசியம் ஒன்றுரைக்க வேண்டும்" என்றான்.

"கபடம்! நான் கேளேன்" என்றான் வீரமணி.

"வீரனே! சாகப்போகும் என்னிடம் விளையாடாதே! வஞ்சகமல்ல நான் பேசுவது! நான் நிம்மதியாக இறக்க, என் மனத்தில் உள்ள பளுவைக் கீழே தள்ள வேண்டும்" என்றான் கலிங்க வீரன்.

கலீர் எனச் சிரித்துவிட்டு வீரமணி, "பளுவைத் தாங்க நான் சுமைதாங்கி என்று எண்ணுகிறாயோ" என்று கேட்டான்.

"ஆம்! ஒரு சுந்தரியின் வாழ்வைத் தாங்கும் சுமை தாங்கியாக்கப் போகிறேன். அந்த அபாக்கியவானின் ஆசையின் விளைவு, வேதனை உலகிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். என் மகளைப் பற்றிய மர்மம் உன்னிடம் உரைக்கப் போகிறேன். யோசித்துக் கொண்டிராதே. உன் குதிரை மீது என்னைத் தூக்கி வைத்துக் கொள். என் இரு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. உயிர் துண்டிக்கப்படுமுன், உன்னிடம் நான் உள்ளத்தில் உள்ளதை உரைத்திட வேண்டும்; தூக்கு!" என்றான் கலிங்கன்.

வீரமணிக்குப் பரிதாபம் பிறந்தது. கலிங்க வீர வயோதிகன், களத்திலே படுகாயத்துடன், குற்றுயிராகக் கிடக்கும் நேரத்திலே தன்னைக் கெஞ்சுவது கண்டு மனம் இளகினான். வீரமுள்ள நெஞ்சினருக்கு ஈரமும் உண்டன்றோ!

கலிங்க வீரனைத் தூக்கித், தன் குதிரை மீது சாய்த்து தனது மேலங்கியால் மறைத்துவிட்டான். குதிரை மீது தாவி உட்கார்ந்தான். "தெற்குப் பக்கமாகக் குதிரையைத் துரத்து; வேகமாகப்போ! வழியிலே, யார் நிறுத்தினாலும் நிற்காதே; என்னைக் காட்டிக் கொடுக்காதே; கோடி புண்ணியம் உண்டு" என்று வயோதிகன் திணறிக் கொண்டே கூறினான்.

குதிரை கடுவேகமாக ஓடிற்று. வீரமணி செல்வதைக் கண்டு அவனுடனிருப்போர், துணைக்காகக் கூடச் செல்லலாயினர். வீரமணி, உரத்த குரலில், அவர்களை நோக்கி, "தோழர்களே! நீங்கள் களத்துக்கடுத்த கூடாரத்திலே தங்குங்கள். நான் ஒரு அவசர வேலையாகச் செல்கிறேன். விரைவில் வருகிறேன்" என்று கூறி அனுப்பிவிட்டான்.

"நல்ல காரியம் செய்தாய். ஏது! நீ ஒரு தலைவன் போல் தெரிகிறதே" என்றான் வயோதிகன். வீரமணி சிரித்தான். தெற்கு திசையிலே இரண்டு மைலுக்கு மேல் சென்ற பிறகு, கிழக்குப் பக்கமாகத் திரும்பினர். கிழக்கே ஒரு மைல் சென்ற பிறகு, சிறு குன்றுகள் தென்பட்டன. அங்குக் குதிரை நிறுத்தப்பட்டது. மூன்றாவது குன்றிலே போ, என்னைத் தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும்" என்றான் வயோதிகன். வீரமணி வயோதிகனை தோள்மீது அமர்த்திக் கொண்டு, அன்புடன் அணைத்துக் கொண்டான். குன்றின்மீது கொஞ்சம் சென்றதும் ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதைத் தள்ளின பிறகு குகை தென்பட்டது. இருள் சூழ்ந்திருந்தது. கிழவன் ஒரு மூலையிலே விளக்கிருக்கும் கொளுத்து என்றான். இருள் நீங்கியதும், குகை, மிக சுத்தமாக ஒருவரிருவர் வசிக்கக் கூடிய விதமாக அமைந்திருப்பதைக் கண்டான். வீரமணி, கிழக்குப்புறமாகத் திரும்பினதும், ஒரு கட்டில் கிடந்தது; அதன்மீது கலிங்கவீரன் படுக்க வைக்கப்பட்டான். வீரமணி அருகே உட்கார்ந்து கொண்டு, "ரொம்ப களைப்பாக இருக்கிறதோ? ஏதாவது பானம் பருகினால்....." என்று விசாரித்தான்.

"பானமா! எனக்கேனப்பா! ஒன்பது சோழ வீரர்களின் உயிரைக் குடித்தேன். எனக்கொன்றும் தாகவிடாய் இல்லை" என்றான் வயோதிகன். வீரமணி, புன்னகயுடன். "ஒன்பது சோழவீரரின் உயிரைக் குடித்தீர்; ஆனால், உள்ளே போன வீரரின் உயிர்கள் உமது உயிரைக் குடிக்கின்றன" என்றான் வீரமணி.

"என் உயிரை இழக்க நான் அஞ்சவில்லை. என் மனம் உன் உதவியால் சாந்தியானால், போதும். எனக்கு வாழ்ந்து தீரவேண்டுமென்ற அவசியமில்லை. எனக்கு எல்லாம் உண்டு; எதுவும் இல்லை! பொக்கிஷம் ஏராளமாக உண்டு. இதோ இந்தப் பக்கமாக உள்ள பேழைகளிலே உள்ள பூஷணங்கள், கலிங்க நாட்டை விலைக்கு வாங்கி விடலாம். அவ்வளவு இருக்கிறது. ஆனால் இவ்வளவு பொக்கிஷமுள்ள எனக்குப் போகம் இல்லை. மனைவி உண்டு. ஆனால் மகிழ்ச்சி இல்லை. மனைவி என்னுடன் இல்லை. மகள் உண்டு மணிபோல்! ஆனால் அந்த மணி உள்ள இடமோ எனக்குத் தெரியாது. அவளைக் கண்டு பிடித்து, என் மகளிடம், என் வரலாற்றைக் கூறி, பெற்றேனே தவிர வளர்த்தேனில்லை என் மகளை, அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டு, என் முயற்சியால் ஈட்டிய இந்தச் செல்வத்தை, என் காதலில் கனிந்த செல்வத்திடம் தர வேண்டும். உனது உழைப்புக்காக நீ இதிலே பாதி எடுத்துக்கொள். என் மகளை ஒரு முறை நான் கண்ணால் கண்டால், களிப்புக் கடலிலே மூழ்குவேன். கையிலே தூக்கிவைத்தேன், சிறு குழந்தையாக இருந்தபோது; இன்றுவரை கண்டேனில்லை. எங்கு இருக்கிறாளோ! என்ன கதியோ! ஏழ்மையோ! நோயோ!" என்று கூறி அழுதான்.

வீரமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. வயோதிகன் மிக்க சோகத்துடன் பழங்கால நினைவினால் நெஞ்சு நெகிழ்ந்து பேசுவதை இடைமறித்துத் துன்புறுத்தவும் இஷ்டப்படவில்லை; அதிகமாகப் பேசிக்கொண்டே இருந்தால் என்ன ஆகுமோ என்றும் கவலைப்பட்டான். "தாயிருக்க மகளுக்கென்ன குறை!" என்று கேட்டான்.

"தாய்! அவளைப் பெற்ற தாய் என்ன மகிழ்வித்த அம்மாது மகளுடன் இல்லை. தாய்வேறு, மகள் வேறு; தந்தைவேறு; ஒருவரோடு ஒருவர் இல்லை. துயரக் குழப்பமப்பா என் சேதி" என்று கதறினான் கிழவன்.

"பரிதாபம்! இவ்வளவு துக்ககரமான வாழ்க்கையிலே நீர் இருப்பது கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பெரியவரே! உமக்கு உதவி செய்தே தீருவேன். உமது மகளை மூன்று மண்டலங்களிலே எங்கு இருந்தாலும் கண்டு பிடிப்பேன்! இது உறுதி. வடநாடுகளிலே வதியினும் கண்டு பிடித்தே தீருவேன். அவளை என் தங்கையாகப் பாவிப்பேன்" என்றான் வீரமணி.

"தங்கையாக இருக்கட்டும், அவள் எவனையேனும் மணந்து கொண்டிருப்பின்; இல்லையேல் அந்த நங்கைக் கேற்ற நாயகனும் நீயே. வீரமும் விவேகமும் கருணையுங் கொண்ட உள்ளமுடைய உத்தமனே! இந்தப் பாவியினிடம் எவ்வளவு பரிவு காட்டுகிறாய்; என் வாழ்க்கையிலே நான் எத்தனையோவித மகிழ்ச்சி கண்டேன்; எவ்வளவோ துயரிலும் வாடினேன். போர் பல புரிந்திருக்கிறேன். புகழும் அடைந்தேன். பொற்கொடி போன்றவளைப் பூசித்தேன். அவள் தந்தவரம், என் மகள்; அவளை இழந்தேன். இன்று அவள் என் அருகே இருந்து, "அப்பா!" என்று ஒரு முறை அன்போடு அழைத்தால், இந்தப் பாவியின் உயிர் நிம்மதியாகப் பிரியும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு இல்லை. என் செய்வது. என் மகன்போல் இன்று நீ இருக்கிறாய். நீயே இனி என் வரலாற்றுக்கு வாரிசு!" என்று கூறிவிட்டு வயோதிகன் களைத்துச் சாய்ந்து விட்டான். குளிர்ந்த நீரை முகத்திலே தெளித்து, மேலங்கியால் மெதுவாக வீசினான் வீரமணி. இரண்டொரு நிமிடங்களில், வயோதிகன் கண்களைத் திறந்தான். அணையப் போகும் தீபத்தின் நிலையிலிருந்தன அவன் கண்கள். வீரமணி விசனித்தான்.

"தாய்! அவளைத் தேடுவானேன்! அவள் நிம்மதியாக ஆண்டு கொண்டு இருக்கிறாள். வீரனே! என் மகளின் தாய், ஒரு அரசி" என்றான் வயோதிகன்.

வீரமணி ஆச்சரியப்பட்டான். "அரசியா! எங்கே? யார்? நீர் ஒரு மன்னரா!" என்று பரபரப்புடன் கேட்டான்.

"நான் மன்னனல்ல! ஆனால் என் மனதை கொள்ளை கொண்டவள், எனக்கு காதல் மதுரத்தை ஊட்டியவள், மகளை ஈந்தவள், சாதாரணக் குடியல்ல, என்போல் சாமானியமானவளுமல்ல; ஆம்! அவள் ஒரு அரசி! அன்பினால் நாங்கள் பிணைக்கப்பட்டோம், வஞ்சத்தால் வெட்டப்பட்டது எமது அன்புச் சங்கிலி! எங்கள் காதலின் கனியும் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டது. என் வரலாறு மிகமிகச் சோகமுடையது" என்றான் வயோதிகன்.

"எந்தநாட்டு அரசியைப் பற்றி நீர் பேசுகிறீர்" என்று வீரமணி கேட்டான்.

"சோழ மண்டலத்துக்கும் ஆந்திர மண்டலத்துக்கும் இடையே உள்ள மலர்புரி எனும் சிற்றரசு உனக்குத் தெரியுமோ! சோழனிடமே மலர்புரி கப்பம் கட்டுவது" என்று துவக்கினான் வயோதிகன்.

"ஆமாம்! மலர்புரிக்கு விதவை மருதவல்லி அம்மையார் அரசி!" என்றான் வீரமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலிங்க_ராணி/கலிங்க_ராணி_9&oldid=1725682" இலிருந்து மீள்விக்கப்பட்டது