உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தொகை/1.பாலைக்கலி/21-30

விக்கிமூலம் இலிருந்து

பாடல்: 21 (பால்மருள்)

[தொகு]

'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவடி,
ஈர் நறும் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்,
பொருள் வயின் பிரிதல் வேண்டும்' என்னும்
அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே!

நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,
'நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு' என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே!
அவற்றுள், யாவோ வாயின? மாஅல் மகனே!

'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள் தான்,
பழ வினை மருங்கின், பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள் வயின் பிரிவோய் - நின் இன்று
இமைப்பு வரை வாழாள் மடவோள்
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே.

பாடல்: 22 (உண்கடன்)

[தொகு]

உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்கும்கால் முகனும், வேறு ஆகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அ·து இன்றும்
புதுவது அன்றே - புலன் உடை மாந்திர்! -

தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன் உடையார் மொழிக் கண் தாவார்; தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்கும்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை?

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்
பறி முறை பாராட்டினையோ? - ஐய!

நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்
செய் வினை பாராட்டினையோ? - ஐய!

குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும்
இளமுலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்
தளர்முலை பாராட்டினையோ? - ஐய!

என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாடச்,
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண்
படர் கூற நின்றதும் உண்டோ - தொடர் கூரத்,
துவ்வாமை வந்தக் கடை?

பாடல்: 23 (இலங்கொளி)

[தொகு]

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்து இருத்தல்
நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே;
இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்;

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்,
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்,
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்.
சூடினர் இட்ட பூ ஓரன்னர்;

என ஆங்கு,
யானும் நின் அகத்து அனையேன்; ஆனாது,
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே!

பாடல்: 24 (நெஞ்சுநடுக்குற)

[தொகு]

'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும்', என்னும் சொல் -
இன் தீம் கிளவியாய்! - வாய் மன்ற; நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர,
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார்; ஆய் கோல்,
தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ?
'இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
நெடு மலை வெஞ்சுரம் போக' என்றார், ஆய் இழாய்!
தாம் இடை கொண்டது அது ஆயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்,
'தொய்யில் துறந்தார் அவர்' என தம் வயின்,
நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்.

பாடல்: 25 (வயக்குறு)

[தொகு]

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்;

மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர்
தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;

ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்;

ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்;

என ஆங்கு,
யாம் நின் கூறுவது எவன் உண்டு? எம்மினும்
நீ நற்கு அறிந்தனை, நெடுந்தகை! - வானம்
துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் - நின்
அளி மாறு பொழுதின், இவ் ஆய் இழை கவினே.

பாடல்: 26 (ஒருகுழை)

[தொகு]

ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,
நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;

பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத்,
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்!
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்;

திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்!
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கித், தம்
இசை பரந்து உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்;

அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறு ஆகித்,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்!
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு, உலையாது காத்து ஓம்பி,
ஆறு இன்றிப் பொருள் வெ·கி அகன்ற நாட்டு உறைபவர்;

என நீ,
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்
பொரு முரண் யானையர், போர் மலைந்து எழுந்தவர்,
செரு மேம்பட்ட வென்றியர்,
'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே!

பாடல்: 27 (ஈதலில்குறை)

[தொகு]

ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய )
தீது இலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்தப்,
பேதுறு மட மொழிப், பிணை எழில் மான் நோக்கின்,
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்பக்
காதலர்ப் புணர்ந்தவர் கதுப்பு போல், கழல்குபு
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகைபெறப்,
பேதையோன் வினை வாங்கப்ப் பீடு இலா அரசன் நாட்டு,
ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்;

நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க;
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்யப்
புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல்?

கல் மிசை மயில் ஆலக், கறங்கி ஊர் அலர் தூற்றத்
தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க;
ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற,
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ளப்,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர்தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல்?

என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!
'நாம் இல்லாப் புலம்பு ஆயின், நடுக்கம் செய் பொழுது ஆயின்,
காமவேள் விழவு ஆயின், கலங்குவள் பெரிது' என
ஏமுறு கடும் திண் தேர் கடவ,
நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே.

பாடல்: 28 (பாடல்சால்)

[தொகு]

பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்,
நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
தோடு உறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெறச்,
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு,
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்;

விரிந்து ஆனா மலர் ஆயின், விளித்து ஆலும் குயில் ஆயின்,
பிரிந்து உள்ளார் அவர் ஆயின், பேதுறூஉம் பொழுது ஆயின்,
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த, நோய் மிகும் ஆயின் - வணங்கு இறை! அளி என்னோ?

புதலவை மலர் ஆயின், பொங்கர் இன வண்டு ஆயின்,
அயலதை அலர் ஆயின், அகன்று உள்ளார் அவர் ஆயின்,
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது,
நுதல் ஊரும் பசப்பு ஆயின் - நுணங்கு இறை! அளி என்னோ?

தோயின அறல் ஆயின், சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்
மாவின தளிர் ஆயின், மறந்து உள்ளார் அவர் ஆயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகும் ஆயின் - பைந் தொடி அளி என்னோ?

என ஆங்கு,
ஆய் இழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,
பரிந்து எவன் செய்தி - வருகுவர் விரைந்தே!

பாடல்: 29 (தொல்லெழில்)

[தொகு]

தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇ, புது நலம் ஏர்தர;
வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள,
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார,
மா ஈன்ற தளிர் மிசை, மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர,
மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்;

சேயார் கண் சென்ற என் நெஞ்சினைச் - சின் மொழி! -
நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்;

போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையைச்
சூழ்பு ஆங்கே - சுடர் இழாய்! கரப்பென்மன்? கை நீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்;

தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர்உயிர் -
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென் மன்? வலிப்பவும்,
நெடு நிலாத் திறந்து உண்ண, நிரை இதழ் வாய்விட்ட
கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து அலைத்தரூஉம்;

என ஆங்கு,
வருந்தினை வதிந்த நின் வளை நீங்கச், சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது - ஏகி, நம்
அரும் துயர் களைஞர் வந்தனர் -
திருந்து எயிறு இலங்கு நின் தேமொழி படர்ந்தே.

பாடல்:30 ( அருந்தவம்)

[தொகு]

அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடிப்,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ்வாயும்,
இரும் தும்பி, இறைகொள எதிரிய வேனிலான் -

துயில் இன்றி யாம் நீந்தத், தொழுவை அம் புனல் ஆடி,
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான் மன்னோ -
'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளர் ஆயின்?

பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ -
'ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லைத்
தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளர் ஆயின்?

உறலி யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ -
'பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளர் ஆயின்?

என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் - தகைபெற,
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி - பணிபு நின்
காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே!

கலித்தொகை
கலித்தொகை 1.பாலைக்கலி
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கலித்தொகை/1.பாலைக்கலி/21-30&oldid=487190" இலிருந்து மீள்விக்கப்பட்டது