கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/14. கலீலியோ பைபிள் விரோதி! போப்பாண்டவர் தீர்ப்பு!
14. கலீலியோ பைபிள் விரோதி! போப்பாண்டவர் தீர்ப்பு!
கிறித்துவ சமைய நூலான பைபிள் நூலுக்கு கலீலியோ நேர் விரோதி என்று பேச ஆரம்பித்தார்கள். கருணைக்கடல் இயேசு நாதரை விட, கலீலியோ நான் தான் அறிவாளி என்று பேசுகிறார்! என்றார்கள்.
ஆண்டவர் இயேசு நாதரை விடவா இவர் அதிகமாக எதையும் அறிந்தவர்! அகந்தையால் கலீலியோ பேககிறானே! அவர் அப்படிப் பேசுவது என்றால் பாதிரிகளாகிய நாங்கள் ஏன்? மெழுகுவர்த்திகளை ஏற்ற மட்டும்தானா?
இயேசு ஊழியம் புரிவதற்காகவே பிறந்த எங்களைவிடவா இந்த கலீலியே உலக இயக்க வரலாற்றை நன்றாகப் புரிந்து கொண்டவர்? இவர் பேசும் கருத்துக்கள் எல்லாம் எங்களது அறிவை விட அவர் மீறியவர் என்பதை அல்லவா காட்டுகின்றது?
"கிறித்தவ ஊழியரான பாதிரிமார்களை மீறிப்பேசிட கலீலியோவுக்கு உரிமை கொடுத்தது யார் ஆணவமல்லவா அது. மக்களை எப்படி வேண்டுமானாலும் குழப்பிவிடலாம் என்று நம்புகிறாரா?"
-என்று, பாதிரிமார்களும், கிறித்துவ மார்க்கமும் கலீலியோவை பகிரங்கமாகவே குற்றம் சாட்டின. ஆனால், மக்கள் இடையே எங்கு பார்த்தாலும் பரபரப்பு ஏற்பட்டது.
கிறித்தவ மார்க்கமும், பாதிரியார்களும் தம் மீது நேருக்கு நேராகக் சாட்டியக் குற்றச்சாட்டுக்கனைக் கலீலியோவும் நேருக்கு நேராகவே மறுத்தார்!
"நான் எந்த இடத்திலும் இயேசு பெருமானைவிட மேலானவன் என்றோ, அவரைவிட ஞானம் பெற்றவன் என்றோ, எங்கும், எந்த இடத்திலும் பேசியது கிடையாது.”
"ஆண்டவராகிய இயேசுவை நான் எங்கும் களங்கப்படுத்தும் வகையில் நான் எண்ணியது கிடையாது" என்பதைக் கலீலியோ திட்டவட்டமாக அவர்களை மறுத்தார்!
"பைபிள் நூல் விஞ்ஞான அறிவைக் கற்றுத்தர ஏற்பட்ட நூல் அன்று" என்று பேசியது உண்மை. ஆனால், நான் பைபிள் நூலைக் குறை கூறிப்பேசியது இல்லை.
"மனித இனம்; கர்த்தராகிய ஆண்டவனை அடைய வழி கூறும் நூல் பைபிள்" என்று நான் பேசி இருக்கிறேனே தவிர, பைபிளைப் படிக்காதே என்றோ, இயேசு பெருமான் மார்க்கத்தைப் பின்பற்றாதே என்றோ நான் எங்குமே கூறியது கிடையாது.”
உண்மை இவ்வாறிருக்க, பாதிரியார்கள், கிறித்துவக் குருமார்கள் ஏனோ என்மீது வேண்டுமென்றே குறை கூறி வீண் புரளியை எழுப்புகிறார்கள் என்று புரியவில்லை” என்று, கலீலியோ மதவாதிகள் மீது வேதனைப்பட்டு அறிக்கை விடுத்தார்.
இத்தகைய கருத்து வேறுபாடுகளால்; கிறித்துவக் குருமார்களுக்கும்- கலீலியோவிற்கும் இடையில் ஒரு பெரிய பிளவே ஏற்பட்டு விட்டது.
மதவாதிகளுக்குக் கலீலியோ போதிய விளக்கம் அளித்தும்கூட, அவர்கள் மன எரிச்சலோடு பேசியபடியே இருந்தார்கள். காரணம், மதவாதிகளுக்குள் பழக்கப்பட்டுப் போன பழமைப் பாசிச உணர்வுகள், உண்மைகளையே படுகுழி தோண்டிப் புதைத்துவிட்டன.
அதனால், அவர்கள் என்னென்ன பொய்ப் புகார்களைக் குற்றச்சாட்டுக்களாகக் கூறமுடியுமோ அவற்றைத் தயார் செய்து போப் ஆண்டவரிடம் கலீலியோ மீது ஒரு புகார்ப் பட்டியலையே கொடுத்தார்கள்.
அவர் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுக்களை இதற்கு முன்பே தொகுத்துத் தந்துள்ளோம். இருந்தாலும், மீண்டும் ஒரு முறை கலீலியோ மீது கிறித்துவ ஊழியர்களான நாங்கள் புகார்களை கொடுத்துள்ளோம்-படித்துப் பாருங்கள் என்று அகந்தைக் குரலோடு பேசினார்கள் பாதிரியார்கள்.
போப் பாண்டவரும், கலீலியோ மீது குருமார்கள் சாட்டிய குற்றச்சாட்டுக்கள் உண்மையா - பொய்யா? என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை. அதனால், மதவாதிகளின் பெரும் பான்மையோர் முடிவுக்கு இணங்க, கலீலியோ குற்றவாளிதான் என்று முடிவு செய்தார்கள். ஆனால், கலீலியோவுக்கு ஒரு நிபந்தனையைப் போப்பாண்டவர் விதித்தார்.
அந்த நிபந்தனை என்ன தெரியுமா? இதோ "கலீலியோ எக்காரணத்தைக் கொண்டும் தான் கண்டுபிடித்தக் கொள்கைகளை மக்களிடமோ, மற்ற யாரிடமோ எடுத்துக் கூறக்கூடாது.
அவர் கொண்டுள்ளக் கருத்துக்களைக், கொள்கைகளைத் தமது உள்ளத்தினின்றும் உடனே அகற்றி விட வேண்டும்! அவ்வாறு செய்ய விட்டால் கலீலியோ கண்டிப்பாகத்தண்டிக்கப்படுவார்" என்று போப்பாண்டவர் அவருக்கு நிபந்தனையும், எச்சரிக்கையும் விதித்தார்.
போப் ஆண்டவரின் இந்தத் தீர்ப்பு: வருங்கால மக்களின் வளமான ஆறிவியல் வாழ்வுக்கு ஒரு பெரும் தடை போடப்பட்டதாக, கலீலியோ உணர்ந்தார்! மனம் தளர்ந்தார்!
ஒரு போப், வானியல், அறிவியல் உணர்வுகளே இல்லாதிருப்பதனால் வரும் கேடுபாடு இது என்பதை உணர்ந்தார்! கலீலியோ வேதனைப்பட்டார்!
போப் ஆண்டவர் என்பவர், வானியல் அதிசயங்களை உணராதவராக உள்ளாரே என்று அவர் வருத்தப்பட்டார்! இதயம் நொந்தார்!
"இந்த ஆணையின் அநீதியால், விஞ்ஞான உலகம் தனது புதுமை பூக்கும் மணத்தை இழந்து வாடிய மலராகி விடுமே என்று கண்ணீர் சிந்தினார்!
இனிமேல் வரும் போப்புகள் மார்கத் தத்துவங்களை மட்டுமே படித்தால் போதும் என்றால், அவர்கள்தான் போப் ஆண்டவராகும் தகுதி பெற்றவர்கள் என்றால்; எதிர்காலத்தில் வானியல், அறிவியல் மட்டும் அல்ல, வேறு என்னென்ன 'இயல்கள்' தனது வளர்ச்சிகளை இழந்து உலகத்தைப் பின்னோக்கித் தள்ளி வேடிக்கைப் பார்க்குமோ என்று சஞ்சலப்பட்டார்.
வானியல் வரலாறு, தத்துவம் ஆகியவற்றைப் போப் அறிந்திராவிட்டால் பரவாயில்லை; அவற்றுக்காகக் கண்டு பிடிக்கப்பட்ட கருவிகள் என்ன? அவற்றின் தத்துவப் பயன்கள் என்னென்ன? அதனால் உலகுக்கு வரும் புதுமை வளர்ச்சிகள் என்னென்ன? இக்கருவிகளால் உலக மக்களுக்குப் பயனுண்டா? இல்லையா? என்ற விபரத்தையாவவது என்னை அழைத்துக் கேட்டிருக்கலாம்.
கண்டு பிடிக்கப்பட்ட தொலை நோக்கிகள், ஊசல் தத்துவங்கள், சந்திரமண்டல ஆய்வுகள், வியாழன் மண்டலச் சந்திரன்கள், அவற்றின் இட நகர்வுகள், சூரியனின் கரும்புள்ளிக் காரண காரியங்கள், இதன் சுழற்சிகள் ஆகியன என்ன?
அதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டக் கருவிகளின் பயன்கள் யாவை? மக்களுக்கு அதனால் நன்மையா? தீமையா? என்பதையாவது உலகைக்காக்கும் தந்தை, தாய் தகுதிகளில் இருக்கும் போப்பாண்டவர், அக்கருவிகள் மூலமாக இயற்கையின் விநோதங்களைப் பரிசோதனை செய்து நான் கூறுவது உண்மையா? பொய்யா? என்பதையாவது தீர்மானம் செய்திருக்க வேண்டாமா?
இவற்றிலே எதையும் செய்யாமல் செய்திடத்தக்க முயற்சியைக் கூட எடுக்காமல், வேதம் ஓதுகின்ற சாத்தானைப் போல, என்னைப் பைபிளுக்கு விரோதியாக்குவது மன்னிக்க முடியாத ஆண்டவன் கட்டளையாக ஏற்று காலம் ஒரு நாள் தீர்ப்பு தந்தே தீரும் என்பது உறுதி என்று கலீலியோ தனது கருத்துக்களை மக்கள் மன்றத்திலே நின்றுஒரு வானியல் புலமையாளனைப்போல முழக்கமிட்டார். அதைக் கேட்டவர்கள் மனம் கொதித்துக் கூச்சலிட்டனர்!
ஆனாலும், போப்பாண்டவரின் உத்தரவு என்பதற்காக இதற்குக் கீழ்படிந்து கலீலியோ ஓரிரண்டு நாட்களாக எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
எவ்வளவு நாட்களுக்கு ஒரு சிந்தனை முடக்கு வாத நோய்க்குட்பட்ட தளர்வோடு முடங்கிக்கிடக்கும்? எனவே. மூன்றாம் நாளே அவர் தனது ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்து விட்டார்.