கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/15 கலீலியோ கருத்துக்குத்தடை! கைது சிறை!

விக்கிமூலம் இலிருந்து

15 கலீலியோ கருத்துக்குத்தடை! கைது சிறை!

போப்பாண்டவர் ஒற்றர்களுக்கும் தெரியாமல், எவர் கண்ணிலும் படாமல், தாம் கண்டறிந்த உண்மைகள் குறித்துத் தனிமையில் தொடர்ந்து பல ஆய்வுகளைச் செய்து வந்தார்.

அவ்வாறு செய்ததின் விளைவாக, அவர் பல புதிய புதிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அன்று வரை அவரது ஆராய்ச்சி என்னென்ன புதுமைகளைக் கண்டறிந்ததோ, அவற்றை எல்லாம் தொகுத்து ஓர் ஏட்டில் எழுதினார் பிறகு அதை நூலாகவும் வெளியிட்டார். அதனால், அவரது புதிய தனிமைக் கண்டு பிடிப்புக்களை உலகம் உணர ஆரம்பித்தது.

கலீலியோவின் எதிரிகள் மீண்டும் விழித்தெழுந்தார்கள். கலீலியோ வெளியிட்ட நூல், அவரது பகைவர்கள் இடையேயும், மக்கள் மத்தியிலும் புதியதோர் பரபரப்புச் சூழ்நிலை உருவாக்கியது.

கலீலியோவால் எழுதப்பட்ட நூலில் உள்ள வானியல், அறிவியல் கண்டுபிடிப்புக் கருத்துக்களை எவரும் மறுக்க முடியாதபடி, பற்பல ஆதாரச்சான்றுகளுடன் விளக்கிக் காட்டி, எளிய நடையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருந்தார்.

தனது எண்ணங்களைப் புத்தகமாக வெளியிட்டு விட்ட கலீலியோவின் துணிச்சலையும், தைரியத்தையும் கண்டு போப் அணியினர் ஒன்று சேர்ந்துக் கூச்சலிட்டு ஓர் எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டார்கள்.

வாயால் பேசக்கூடாது என்ற கலீலியோ கருத்துக்கள், எண்ணங்கள் எல்லாம் இப்போது புத்தக உருவிலே நாட்டில் நடமாடின! அதைக் கண்ட போப் திருச்சபையினர், கலீலியோவை எங்கிருந்தாலும் துரத்திப்பிடி! வேகமாகச் செயல்பட்டு கைது செய் என்ற பழைய போப் ஆணைமீது மறுபடியும் ஒரு புது கட்டளையை பிறப்பித்தார்கள்!

சிறைபட்ட அன்றே கலீலியோவை ரோமாபுரியின் சிறைக்குக் கொண்டு போய் விட்டார்கள். அங்கு மூன்று நாட்கள் அவரைத் தங்க வைத்து, கலீலியோ மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது போப்பின், திருச்சபையினரும் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், அவர் எழுதி வெளியிட்ட அவரது புத்தகத்திலுள்ள கருத்துக்களில் ஒன்றான, "பூமியைச் சூரியன் சுற்றுவதில்லை என்பதை அவர் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்."

'அந்தக் கருத்து பைபிள் வேதாகமத்திற்கு நேர் விரோதமானது' என்ற குற்றச்சாட்டை போப்பாண்டவர் சாட்டினார். அதற்குக் கலீலியோ பதில் கூறும்போது தனது கண்டு பிடிப்பின் உண்மைகள் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, அவற்றுக்கான காரண காரியங்களை திருச்சபை மண்டபத்தில் விளக்கிக் கொண்டே வந்தார்.

இறுதியாக, அவரது புத்தகக் கருத்துக்கு முத்தாய்ப்பாக, பூமியைச் சூரியன் சுற்றுவது இல்லை என்பதை வலியுறுத்தித் தர்க்கவியலோடு கலீலியோ அற்புதமாக வாதாடினார்.

என்ன வாதாடி என்ன பயன்? எட்டிப் பழத்திலே தேன் சுவைச்சாறா சுரக்கும்? எட்டிதானே ஊரார்; எனவே அவரது உண்மைகளையே குற்றம் சாட்டி கலீலியோவுக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை' என்று போப்பாண்டவர் தீர்ப்பளித்தார்!

ஆயுள் தண்டனை சிறை பெற்ற போது கலீலியோவுக்கு வயது எழுபது; மூதறிஞராகி விட்டார்; பாவம்! சிறையிலே அவர் அடைபட்டதும் மதவாத வெறிபிடித்த அதிகாரிகளால், ஊழியர்களால், கிருச்சபைக் தொண்டர்களால், குருமார்களால், பாதிரியார்களால், நேரிடையாயாகவும், இலை மறை காயாகவும் அவர் துன்புறுத்தப்பட்டார்; சித்திரவதைக்கும் ஆளானார்: வயது எழுபது அல்லவா? பாவம்! பாவம்!

இவ்வாறு கலீலியோ இருபத்திரண்டு நாட்கள் இக் கொடிய சிறைவாசத்தால் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்; இரக்கம் என்பதே அவருக்குக் கடுகளவும் காட்டப்படவில்லை!

ரோமாபுரி கார்டினர் ஒருவர்; அவர் பெயர் பெல்லாமேன்; அவரது இடைவிடாத பெரும் முயற்சியால் கலீலியோ சீயன்னா என்ற நகருக்கு உடனடியாகச் சென்றுவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாடு கடத்தப்பட்டார் கலீலியோ! குடும்பத்தோடு சியன்னா நகர் சென்றார் எழுபது வயதுக்கு மேற்பட்ட வராகியும் ஆயுள்தண்டனை பெற்றவர்; மேலும் என்னென்ன துன்பங்கள் நேருமோ என்று அவர் வேதனைப்பட்டார்; மனம் நொந்து நைந்தார்!

சீயன்னா நகர் சென்ற கலீலியோவுக்கு வறுமை நோய் அவரைப் பற்றிக் கொண்டது. அதனால், அவர் மட்டும் அல்லல்களை ஏற்கவில்லை! குடும்பமே வறுமை நெருப்பிலே சிக்கி கருகிய நிலையில் வாடியது!

அதனால், அவருடைய உடல் மிகவும் பலவீனமானது; மெலிந்தது உடல்! உருக்குலைந்தது அழகு! சோர்ந்தது உள்ளம்; சுருங்கியது தோல்; பற்றியது அவரைப் பெரு தோய்; இறுதியாக அலைந்தார் தன்னையும் மறந்து!

அவருக்கு மட்டுமன்று பெருநோய் அவருடைய அன்பு மகளுக்கு வந்தது பசிநோய்! அந்தப் பெருநோயால் மரணம் விழுங்கியது அவளை!

கலீலியோ வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் வாட்டி எடுத்த போது எல்லாம் அவரது அருமை மகள் உறுதுணையாக இருந்தாள் ஆறுதல் கூறினாள்!

அப்படிப்பட்ட பொறுமை மிக்க, பொறுப்புள்ள, தந்தை மீதும், அவரது கண்டு பிடிப்பின் உழைப்புக்குப் பேருதவியாக இருந்த பிரிய மகள் அகால மரணத்தால் இறந்த பின்பு, கலீலியோ வாழ்க்கையையே வெறுத்தார்; விரக்தியால் எதன் மீது பற்றற்று வாழ்ந்தார்; ஏன் பிறந்தாய் மகளே என்னை நடுவீதியிலே நிறுத்தவா? மகளே என்று அழுது அழுதுக்கதறி ஆறாத்துயருற்றார்!

அன்று முதல் உணவை மறந்தார்; உறக்கத்தை மறத்தார்; உணர்வற்ற நடைப் பிணம்போல வாழ்ந்தார்! மகள் சோகம் ஒர் புறம்; போப் ஆண்டவர் ஆணவ ஆணை மறுபுறம்; உண்மையின் உறுத்தல் உணர்வு உட்புறம்; உலகுக்கு நமது அறிவைத் தியாகம் செய்தும் அது பயன்படாமல் வீண் உழைப்பும் துரோகமும் ஆகிவிட்டதே என்ற கவலை இன்னோர் புறம், இவ்வாறு மனவேதனைகளின் உளைச்சலால் கலீலியோ நாளுக்கு நாள் நலம் குன்றியும், நலிந்தும், மெலிந்தும் மனம் சிறுகச் சிறுக நைந்தும் தன்னையே தான் வருத்திக் கொண்டும் நடமாடினார்!

அதனால், அவர் பார்வை இழந்து குருடரானார்; செவிகளும் செவிடாகின. 'உடலும், உள்ளமும்-நரம்பும் தோலுமானது!

இந்தச் சோக நிலையிலும், துயர வாழ்விலும் வானியல் துறையின் தொடர்பு விடாது ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார் என்றால்; அவரது அறிவியல் உணர்வுகளை நாம் எவ்வாறு பாராட்டுவது என்றே புரியவில்லை!

கலீலியோ முதன் முதலில் மாதா கோவிலில் கண்டு பிடித்த, நேரத்தைக் கணக்கிடும் கருவியைப் பற்றி, கண் இழந்த பின்பும், வாழ்வு கருகிய பிறகும்கூட, அவர் மென்மேலும் ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

அவர் கண்டறிந்த உண்மைகளைக் கொண்டே, பிற்கால உலகம்; கடிகாரம் என்னும் காலம் காட்டும் கருவியை உருவாக்கிக் கொண்டது.

வானியல், அறிவியல், உலகுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் யோக்யருக்கு, உண்மையே உருவானவருக்கு, உலகுக்கு பல சாதனைகளைச் சாதித்துக் காட்டி வழங்கியவருக்கு உலகம் கொடுத்த அன்பளிப்பு என்ன தெரியுமா?

அவரது வாழ்க்கை என்ற வளமான வேரை அருகம் புல்லைப் பிடுங்கி எறிவது போல, கிறித்துவக் குருக்களும், போப் பாண்டவரின் தலையாட்டிப் பொம்மைகளும், ஆமாம் சாமிகளும் சேர்ந்து அவர் வாழ்வின் வளத்தையே பிடுங்கி எறிந்து விட்டார்கள்!

அது மட்டுமா? மனிதன் எவ்வளவு தான் புகழேணி ஏறி உச்ச நிலையில் இருந்தாலும் உன்னதமான புகழும், செல்வமும் பெற்று வாழ்ந்தாலும், அவன் அந்த நிலையிலே இருத்து; உட்பகையாலும், உடன் பகையாலும்! புறவிரோதிகளாலும் உருட்டி விடப்பட்டால் தலைகுப்புற வீழ்ந்து சாகவேண்டிய அபாயம் தானே அவனுக்கு வரும்.

ஆனால், கலீலியோ இந்த மனிதப் பகைக்கு விதிவிலக்காகக்கூட இல்லை; முழு விரோதியாகவே அவரை கிறித்தவ குருமார்கள் சித்தரித்துக் காட்டிவிட்டார்கள்.

அதனால், தமக்கென வாழாது மனித நேயத்தின் நலவாழ்வுக்கும், வளவாழ்வுக்கு பாடுபடும் பேரறிவாளர்களுக்கு எல்லாம் வாழ்வில் தாழ்வும், துன்பமும் நேருவது சர்வ சாதாரணமாகி விட்ட உலக இயல்பாகி விட்டது.

இந்த வேதனை வாழ்க்கை; மனித இனத்திற்கு எவ்வளவு பெரிய தீராப்பழியாகவும், பாவமாகவும், அமைகின்றது. என்பதை நாம் என்னும் போது, நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை வழங்கும் மனபாரமாகவே அது மாறுகின்றது.

கலீலியோவின் வாழ்க்கை என்ற சுமைதாங்கியில் இந்த மன பாரத்தை நம்மால் இறக்கிவைத்து இளைப்பாற முடியுமா? இது மனித குலத்தின் கேள்வி!

இந்த கேள்விக்கு அனுபவம் உள்ள மனித குல நேயர்களது வாழ்க்கை தான், அவரவர் மன உரத்திற்கேற்றவாறு பதில் கூற இயலும்-இல்லையா?

ஆனால், கலீலியோ போன்ற அறிவியல் உலகத் தியாக சீலர்கள், உண்மைக்காக தங்களையே பலிகொடுக்துக் கொண்டவர்களுக்கு இந்த நன்றி கெட்ட உலகம் மகிழ்ந்து அளிக்கும் பரிசு என்ன?

காலமெல்லாம், கல்லைறையான பிறகெல்லாம், அவதூறுகனை வாரி இறைத்து வரலாற்றுக் களங்கத்தை உருவாக்கி விடுகிறது! அதை ஒவ்வொரு நூற்றாண்டின் எழுத்தாளனும் எழுதி எழுதி, அறிவுத்தியாகம் செய்தவர்களை பழி தீர்த்துப் பலியாக்கிக் கொண்ட மாபாவிகளை வரலாற்று உணர்வோடு அவமானப்படுத்தினார்கள்! அது மனிதகுலம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு ஆபத்து என்பதை அந்த பழிபுரியும் பாதகர்கள் உணர்ந்தால்தான் வரலாறு அவர்களை வணங்கும் வாழ்த்தும்!

கலீலியோ இவ்வளவு பெரிய துன்பங்களைத் தாங்கிக் கொண்டுதான், எதையும் தாங்கும் இதயம் எனக்கும் உண்டு என்ற அறிஞர்குல அறிவுரையைக் கேற்றவாறு, கி.பி. 1542-ஆம் ஆண்டு, சனவரி மாதம், தனது எழுபதுத் தெட்டாம் வயதில் தனது உயிரை இழந்தார். மரணம் அவருக்கு மாலை போட்டு வரவேற்று வாழ்த்தி அணைத்துக் கொண்டது.

கலீலியோ இறந்த போது இந்த நன்றி கெட்ட நரி உள்ளம் படைத்த உலகம், அவருக்கு யாரும் ஒரு நினைவுச் சின்னம் கூட எழுப்பவில்லை.

ஏனென்றால், கலீலியோ ஒரு சிறைக் கைதியாக மரணமடைந்தாராம் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பாததற்கு இது தான் காரணமாம்!