உள்ளடக்கத்துக்குச் செல்

கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/18 கலீலியோ செய்த புரட்சிச் சாதனைகள்!

விக்கிமூலம் இலிருந்து

18 கலீலியோ செய்த புரட்சிச் சாதனைகள்!

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் கலீலியோ, கோப்பர் நிக்கஸ் கருத்து உண்மையானது என்று நிலைநாட்டினார்.

அக்காலத்தில் கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் என்ற தொலைநோக்கிப் பார்வைக் குழல் நூதனமான ஒரு கருவியாக எல்லோராலும் பாராட்டிப் போற்றப்பட்டது.

அந்தக் கருவியை கலீலியோ பயன்படுத்தியதால், புதிய இயந்திர நுட்பக் கலையுலகத்துக்கு அவர் அடிகோலிட்டார் என்று உலகம் இன்றும் பேசுகின்றது.

இன்றை விஞ்ஞானத்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 16-வது, 17-வது நூற்றாண்டுகளில் பயன்பட்ட விஞ்ஞானக் கருவிகள் மிகப்பழமையானவைதான் என்றாலும், அக்கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள், தயாரித்தவர்கள், இந்தக் காலத்துக்கும் ஏற்ற நவீன உலக மேதைகள்தான் அவர்கள் என்பதிலே எவருக்கும் கருத்து வேறுபாடோ, முரண்பாடோ இருக்க முடியாது.

இப்போது, கலீலியோவின் சாதனைகள் என்ன? ஆவர் எதையெதை எவ்வாறெலாம் ஆராய்ச்சி செய்தார் என்பதைப் படிப்படியாக, அதனதன் வளர்ச்சிக் கேற்றவாறு பார்த்தால்தான் அவர் எவ்வளவு பெரிய அரிய உழைப்பாளர் அவற்றுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பார் என்ற அருமைகளை உணர்ந்து நாம் பெருமை பெற்றவர்கள் ஆவோம்! அவரது வியர்வை நீர் சிந்திய உழைப்பின் முத்துக்கள் இதோ:

★ கலீலியோ, அவரது புதிய கருவிகளைக் கண்டு பிடித்து உலகுக்கு வழங்கியவைகளிலே மிகமுக்கியமானவை, பெண்டுலம் என்ற ஊசல் தத்துவம், ஒன்று. ★ எந்தப் பொருளையும் ஊடுருவிப் பார்க்கும் டெலஸ்கோப் என்ற தொலை நோக்கிப் பார்வைக் குழாயும், அக்குழாய்களில் சிறிய பெரிய உருவங்களைக் காட்டும் வகைகளையும் இவர் கண்டுபிடித்தார்.

★ சந்திர மண்டல ஆராய்ச்சியை நடத்தி அவற்றின் மூலம் சந்திரனில் உள்ள பொருட்களைக் கண்டு பிடித்தார்!

★ நட்சத்திர இயக்கங்களின் நிலைகள் என்ன என்பதை அவர் உலகுக்கு விவரமாக விளக்கிக் காட்டினார்.

★ வியாழன் கோளை ஆராய்ச்சி செய்தார்! அந்த மண்டலத்துள்ளே நிலவும் நான்கு நிலாக்களைக் கண்டறிந்து உலகுக்கு புதிய ஓர் அற்புதத்தை எடுத்துரைத்தார்!

★ சூரிய மண்டலத்தை ஆராய்ந்தார். அதன் முகத்திலே நகரும் கரும்புள்ளிகள் என்ன? ஏன் அந்தக் கருப்புப் புள்ளிகள் சூரியனில் தோன்றின என்பதற்கான காரண காரியங்களைத் துல்லியமாக ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

★ பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோப்பர்நிக்கஸ் கோட்பாடு உண்மைதான் என்று உலகுக்கு உணர்த்தும் பரிசோதனை சாட்சியாக நின்றார்.

★ வியாழன் கிரகத்தில் துணை கிரகங்கள் உள்ளன என்பதை முதன்முதலில் கண்டறிந்து மிகப்பெரும் சாதனையை உருவாக்கிய முதன் மனிதரே கலீலியோதான்!

★ சூரியனை பூமி சுற்றி வருகிறது என்று உறுதியாக நம்பியவர் மாமேதை கலீலியோ. ஆனால் அவரை ஆணவம் பிடித்த மதவெறியும், மூடநம்பிக்கையும், பழமைப் பாசிபடர்ந்த நெஞ்சங்களும், பயமுறுத்தி, துன்புறுத்தி சொன்ன உண்மைகளை மறுத்து அறிக்கை விடுக்குமாறு பலாத்காரக் கட்டாயப்படுத்தினார்கள்.

என்ன செய்வது என்று திணறிய கலீலியோ; அவர்களது அகம்பாவ ஆட்சிக்கு அடிபணிந்து மறுப்பு அவர் கூறிய உண்மையை அவரே அறிக்கை விட்டு மறுத்தார் பாவம்! ஆனால் எது தனது உள்ளத்திற்கு சரி என்று பட்டதோ அதற்கேற்ப உண்மையை மட்டும் அவரது உள்மனம் துறக்கவில்லை!

இந்த உண்மையின் சாரலிலே மென்மையான குறு குறுப்பை அனுபவித்த கலீலியோவின் நண்பர்கள் அறிவார்கள்! அத்தகைய மனம் பெற்ற ஆவரே உண்மையைப் போற்றியதற்காக நாடு கடத்தப்பட்டார்! சிறை பிடிக்கப்பட்டார்! அனாதையாக உயிர் நீத்தார் பாவம்!

தனிப்பட்ட மனிதனாக நின்று உழைத்து தனது சிந்தனை காட்டிய வழியிலே சென்று ஆராய்ந்து கண்டறிந்திந்த விஞ்ஞான உண்மைகளை, அறியாமல் முடை நாற்றப் படுகுழியிலே வீழ்ந்து தத்தளித்தோர் எதிர்த்தார்கள்! ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது! உண்மையே!