உள்ளடக்கத்துக்குச் செல்

கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/8. டெலஸ் கோப்பை முதன் முதல் கண்டு பிடித்தவர்

விக்கிமூலம் இலிருந்து

8. டெலஸ் கோப்பை முதன் முதல் கண்டு பிடித்தவர்

மூக்குக் கண்ணாடி வியாபாரியான தனது பழைய நண்பர் லிப்கரிஷே என்பவரைக், கலீலியோ வெனிஸ் நகர் சென்று பார்த்தார்! அந்த விஞ்ஞானி அப்போதுதான் தொலை நோக்கிக் கண்ணாடியைக் கண்டு பிடித்திருந்தார்!

இந்தக் கண்ணாடியைப் பற்றிக் கேள்விப்பட்ட கலீலியோ தனது நண்பரின் ஆய்வைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் தன்னுடைய மனதை அந்த தொலைநோக்கி மீதே ஊடுருவ விட்டார்.

சாதாரண கண்களைக் கொண்டு, வான் பொருட்களையும் அதன் வியத்தகு விந்தைகளையும் தெரிந்துக் கொள்ள அவர் வேணவாவுற்றார் தனது மூக்குக் கண்ணாடி வியாபார நண்பரிடமே சென்று விவரமறியத் தங்கலானார்!

"இரண்டு வெவ்வேறு உருப் பெருக்கிக் கண்ணாடிகளைக் கொண்டு, ஒன்றுக் கொன்று சிறிது தூரம் இடைவெளி இருக்குமாறு செய்து, தூரத்துப் பொருள்களைப் பார்த்தால், அந்த நெருக்கத்தில் அதே பொருளைத் தலைகீழாகக் காணலாம்? என்ற லிப்ரிஷே, கலீலியோவிடம் அதைச் செய்து காட்டிய செயல், அவருக்கு ஓர் அதிசயமாகவே அப்போது இருந்தது.

உடனே கலீலியோ, ஓர் ஊது குழலையும், இரண்டு மூக்குக் கண்ணாடி வில்லைகளையும் விலைக்கு வாங்கினார் அந்தக் கண்ணாடிகள் ஒருபக்கம் சாதாரணமானது; மற்றொரு பக்கம் ஒன்று புறம் குவிந்தும் மற்றொன்று உட்குவிந்ததுமாகும்.

அவர் ஊது குழாயின் ஒரு முனையில் கனமான, உட் குவிந்த கண்ணாடியைப் பொருத்தி வைத்து; புறம்குவிந்த கண்ணாடி வழியாகத் தொலைவிலுள்ள பொருட்களைப் பார்த்தார்.

அப்போது அப்பொருள் முன்பு இருந்ததைவிட மிக அருகில் அதாவது நெருக்கத்தில் காணப்பட்டன! அக்காட்சியைப்பார்த்து அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.

கலீலியோ தமது ஆராய்ச்சிக்குக் கண்டு பிடித்த அந்தக் கருவிதான் உலகிலே, முதன் முதலாகத் தோன்றிய தொலைநோக்கிக் கண்ணாடி என்ற "டெலஸ்கோப்" என்பதாகும்.

கண்ணாடி அணியாத மனிதன் தனது வெற்றுக்கண்களால் ஐயாயிரம் நட்சத்திரங்களைப் பார்க்கும் சக்தி யுட்டையவனாவான். வெற்றுக் கண்ணின் குறுக்களவு ஓர் அங்குலத்தில் ஐந்தில் ஒரு பங்கு உள்ளது.

இந்த குறுகிய அளவுக்குள்- குறிப்பிட்ட அளவு ஒளியே நுழையக் கூடும். ஓர் அங்குல குறுக்களவுள்ள தொலை நோக்கி; வெற்றுக் கண்களைவிட இருபத்தைந்து மடங்கு அதிக ஒளியைப் பெறும்!

அதனால், வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடிய மிக மங்கலான நட்சத்திரத்தைவிட, இருபத்தைந்தில் ஒரு பங்கு மங்கிய ஒளியினையுடைய நட்சத்திரத்தையும் இந்தக் கருவியின் மூலம் நன்றாகப் பார்க்க முடியும்.

அதனைப்போலவே, ஓர் அங்குலக் கண்ணாடியின் மூலமாக வானத்தின் இரண்டு லட்சத்து இருபதனாயிரம் நட்சத்திரங்களை நாம் காணலாம்.