கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/9. தொலை நோக்கி மூலமாக சந்திரனை ஆராய்ந்தார்!

விக்கிமூலம் இலிருந்து

9 தொலை நோக்கி மூலமாக சந்திரனை ஆராய்ந்தார்!

ஆனால், வானவெளியில் ஏறத்தாழ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உலவுவதாக வான நூல் வல்லார் வரையறுத்துக் கூறுகிறார்கள்.

கலீலியோவால்; முதல் முதல் அவரால் செய்யப்பட்ட பார்க்கும் குழாயால், அவர் அதற்கு முன்பு தான் வெற்றுக்கண்களால் பார்க்க இயலாத எண்ணற்ற நட்சத்திரங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

கிருத்திகை நட்சத்திரம் PLEIADES ஆறு விண் மீன்களை மட்டுமே கொண்டது என்று மக்கள் அதுவரை நம்பினார்கள். ஆனால், இப்போது அதே கிருத்திகையில் முப்பத்தாறு நட்சத்திரங்களை கலீலியோ பார்த்துப் பரவசப்பட்டார்.

கிருத்திகை விண்மீன் என்பது மிகச்சிறிய நட்சத்திரங்களின் கூட்டம்! வானத்தில் அது ஒரு கோடியே எண்பது லட்சம் மைல் தொலை தூரத்தைக்கொண்டுள்ளது. இந்தக் கூட்டம் முழுவதிலும் மெல்லிய மேகப் படலம் பரவியுள்ளது.

சாதாரண வெறும் கண்களுக்கு ஆறு கிருத்திகை நட்சத்திரங்களே தெரியும். உற்று நோக்கும் கூரிய பார்வையுடைய ஒரு சிலருக்கு மட்டுமே பதினான்கு மீன்கள் வரையிலும் காணமுடியும்.

ஆனால், தொலை நோக்கியின் உதவியினால், மிகக் குறைந்தது மூவாயிரம் நட்சத்திரங்களையாவது நம்மால் பார்க்க முடியும். இதனைக் கூட வான வெளியில் ஆகஸ்டு மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையில் தான் நாம் பார்த்து மகிழலாம்.

இந்த கிருத்திகைக்கு நமது நாட்டில் ஒருகதை உண்டு. வெற்றுக் கண்களுக்குத் தோன்றும் ஆறு கிருத்திகை விண்மீன்கள், முருகப் பெருமானைக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டி வளர்த்த ஆறு பெண்கள் என்றும், அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் என்றும் கூறுவார்கள் என்பதே அந்தப் புராணக் கதை!

வான்வெளியில் ஒரு நீண்ட போக்கில் பேரொளியாகக் காணப்படும் பால்வெளித் தோற்றம் Milky Way இருக்கிறதே, அது எண்ணற்ற நட்சத்திரங்களின் ஒன்று சேர்ந்த கூட்டம் என்று கண்டும் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.

கலீலியோ தம்முடைய தொலை நோக்கியைக் கொண்டு சந்திரனையும் கண்டார், ஆதே நிலாவை அதனின் மூன்றில் ஒரு பங்கை அருகிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டார்.

ஆகாயப் பெருங்கடலையும் கடந்து ஏதோ ஆங்காங்குள்ள நாடுகளைக் கண்டு வெற்றி பெற்றதைப் போல அவர் வீர உணர்வு பெற்றார்.

தான் செய்து வைத்திருந்த தனது பார்க்கும் குழாயினைக் கலீலியோ தனது சொந்த நகரமான வெனிசுக்கு வெற்றி மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றார்.

அந்தக் கருவி அப்பொழுது அவருக்கு ஒரு விளையாட்டுக் கருவியாகவே திகழ்ந்தது. ஆனால், அந்த விளையாட்டுக் கருவியினைக் கண்டு மகிழ்ச்சி பெற்றிட ஒவ்வொருவரும் விருப்பம் கொண்டார்கள்.

மனிதக் கண்ணால் காண முடியாத தொலை பொருட்களை, இந்த ஆச்சரியமான விளையாட்டுக் கருவியின் உதவியால் தெளிவாகப் பார்த்து விடலாம் என்றால், யாருக்குத்தான் அதனைப் பார்க்க ஆசை ஏற்காது.

அதனால், வெனிசிய நகரத்துப் பெருமக்கள் அந்தக் கருவியினைக் கண்டுகளித்தார்கள். ஊர் மக்களே கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து அதைப்பார்த்து விட்டுச் சென்ற வண்ணம் இருந்தார்கள்.

கலீலியோவின் இந்தத் தொலை நோக்கிக் குழாயை வெனிஸ் நகர மக்கள், பார்க்க; மிக உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்றுக்கொண்டார்கள்.

சுமார் இரன்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்ணுக்கு தோன்றக் கூடிய மிக நீண்ட தூரத்தில் இருந்து கடலில் வருகின்ற கப்பல்களை ஒன்றன் பின் ஒன்றாகவே பார்த்தார்கள்.

ஐம்பது மைல் தூரத்தில் கப்பல் இரும்போது, அது பதினைந்து மைல் தொலைவிலேயே தெரிவது போன்ற ஓர் அற்புதக் காட்சியை மக்கள் மகிழ்ச்சியோடு கண்டார்கள்.

வான நூல் உலகில் கலீலியோவின் தொலைநோக்கி ஒரு புதுமைப் புரட்சியை உருவாக்கியது. இன்று நாம் அனுபவிக்கும் மிகப் பெரிய டெலஸ்கோப் தொலை நோக்கிக் கருவியே ஒரு முன்னோடியாக அமைந்தது.

கலீலியோ கண்டுபிடித்த முதல் டெலஸ்கோப் குழாய் இதுதான் என்று நினைக்கும்போது அதனைப் பார்த்த எல்லோரும் அவரவர் கண்களை அகல விரித்து ஆச்சரியப்படாமலா இருக்க முடியும்?

பேளமார் மவுண்ட் என்ற இடத்தில் இன்றை தினம் அமைத்துள்ள இருநூறு அங்குலம் உள்ள அந்த அற்புதத் தொலை நோக்கி; வெற்றுக் கண்களைவிட பத்து லட்சம் மடங்கு அதிக நோக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

வானியல் கண்டுபிடிப்பு மேதை கலீலியோ வெனிஸ், நகரில் சில நாட்கள் தங்கி இருந்தார். அந்த நகர சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலியோ கண்டுபிடித்தக் கருவிகளைக் கண்டு பாராட்டினார்கள். பிரமிக்கத்தக்க அவரது கண்டுபிடிப்புகளைப் போற்றி, அவரை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதனால், அவர் பணியாற்றி வந்த பாதுவா பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியை, அவர் உயிருள்ள வரை வகிக்கலாம் என்ற உத்தரவை சட்டமன்றம் மூலமாக வெளியிட்டார்கள். அதே நேரத்தில் அவர் செய்து அந்த பணியின் போது பெற்று வந்த ஊதியத்தை இரண்டு மடங்காக அதிகப்படுத்தி வழங்கிட சட்டமன்றத்தினர் வழி செய்தார்கள்.

விண்ணில் உள்ள விந்தைகளை விளக்கமாகக் கண்டறிய தான் கண்டுபிடித்தக்கருவிகளை அவர் மிகச்சாதாரணமானதே என்று எண்ணினார். மேலும் பல கருவிகளை அறிய அதற்காக இடைவிடாமல் உழைத்து வந்தார்.

அவர் கண்டுபிடித்த டெலஸ்கோப் கருவி மூலமாக, ஒரு பொருளை எட்டு மடங்கு பெரிதாகப் பார்த்திட வழி கண்டார். பிறகு அதையே முப்பது மடங்குப் பெரிதாகப் பார்க்கும் கருவியாக மாற்றி அமைத்தார்.

இவ்வாறு தொலை நோக்கிக் கருவிகளை படிப்படியாக ஓர் உருவத்தைப் பெரியதாக்கிக் காட்டிடும் வகைகளை அதிகப்படுத்தி, பார்க்கும் குழாய் வரலாற்றிலே பல புதுமைகளைச் சென்று ஒரு புரட்சியையே தோற்றுவித்தார் கலீலியோ என்றால் மிகையல்ல;

அவர் கண்டு பிடித்தக் கருவிகள் வாயிலாக, படிப்படியாக பெரிய பெரிய உருவங்களில் முழு சந்திர மண்டலத்தையும் ஆராய்ச்சி செய்து வந்தார்.

அந்த ஆராய்ச்சியின் பயன்கள், பிற்கால உலக ஆய்வாளர்களுக்கு பல அரும்பெரும் உண்மைகளை உணர்த்தும் கருவிகளாகவே அவை அமைந்தன.

சந்திர மண்டல ஆராய்ச்சியிலே கலீலியோ ஈடுபட்ட போது, அங்கே பற்பல மலைவரிசைகள் இருப்பதையும், அவைகட்கு அருகே பெரும் பெரும் பள்ளத்தாக்குகள் உள்ளதையும் பார்த்துப் பிரமித்துப் போனார்.

சூனியமான வெளித்தோற்றங்கள் அவரது ஆய்வுக் கண்களுக்குப் புலப்பட்டன. மனிதக் கண்கள் அதுவரைக் கண்டிராத அதிசயங்களை அவரது விழிகள் பார்த்துப் பார்த்து வியந்தன!

தாம் ஒருவர் மட்டும் அவற்றைக் கண்டுகளிப்படைந்தால் போதுமா? மற்ற மக்களும் அந்த அதிசயங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாமா? என்று எண்ணி; அதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தார்.

நீலவான ஆராய்ச்சியிலே நீந்திக் கொண்டிருந்த கலீலியோ. மற்ற ஆராய்ச்சியாளர்களும் அவற்றைப் பார்ப்பதற்கான அற்புதக் கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார்.

கலீலியோ இவ்வாறு அம்புலியை ஆராய்ந்து கண்ட வெற்றிக் களிப்பின் இடையே, அதைச்சுற்றியுள்ள மற்ற கோள்களையும் ஆராய்ச்சி செய்தார்.

அவரது வானியல் தேடலில், மற்ற கோள்களது உருவங்கள் எல்லாம் நிலாவின் உருவத்திலே கால் பங்கு உருவமாக அவரது கண்களுக்குத் தெரிவதைக் கண்டார்.

பால் வெளித்தோற்றம் என்ற வான் பரப்புகளை அவர் ஆராய்ந்தபோது, அங்கே என்ணற்ற நட்சத்திரங்கள் இருப்பதையும், அவற்றை ஒவ்வொன்றாகவும் பெரிய பெரிய உருவத்தோடும் பார்த்தார்.