கலைக்களஞ்சியம்/தொகுதி 1/முகவுரை
முகவுரை
தமிழ் மொழி மிகவும் பழமையானது ; பேச்சு வன்மையிலும் இலக்கிய வழக்கிலும் அழிவின்றிச் சிறந்து விளங்குவது; உலகப் பொதுமறை எனத்தகும் திருக்குறளையும், ஒப்புயர்வற்ற சங்க நூல்களையும், சிறந்த காவியங்களான சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களையும் உடையது. எனினும் இச் சிறப்புக்களுடன் தற்கால வாழ்க்கைக்குரிய பிற கலைச் செல்வங்களும் தமிழிற்கு இன்றியமையாத தேவையாகும். எட்டுத் திக்கினும் உள்ள கலைகளையும் தன் அகத்தே பெற்று நம்மொழி வளம் பெற்றால்தான் தமிழ் மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் ஏனைய நாட்டு மக்களுடன் சமத்துவமாக அல்லது அவர்களினும் சிறப்பாக வாழ முடியும். இவ்வுயர்ந்த அறிவு பெற உதவியாயிருக்கக் கலைக் களஞ்சியம் ஒன்று வெளிவர வேண்டும் என்பது தமிழ் அறிஞர்களின் நெடுநாளைய அவா. ஆனால், இது வெளிவருவதற்கு அவசியமான ஏராளமான தொகையும், இந்த வேலையின் மகத்தான தன்மையும் கடக்க முடியாத மலைகள் போலத் தோன்றி, இப்பணியை நடைபெற வொட்டாமல் தடுத்தன. மற்ற நாடுகளில் இயற்றப்பெற்ற கலைக்களஞ்சியங்கள் பலருடைய நீண்ட கால முயற்சியின் பயனாகவே வெளிவந்தன. எனவே கலைக்களஞ்சிய வெளியீடு தனிப்பட்டவர்களோ, தனிச் சங்கங்களோ மேற்கொள்வதற்கு இயலாத தென்றும், அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகந்தான் மேற்கொள்வதற் குரியதென்றும் கருதப்பட்டு, இதைச் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டன.
1947-ல் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஏற்பட்டது. 1947 ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி இந்தியா பூரண சுதந்திரம் பெற்ற நாள். அன்று, நாடு முழுவதும் மக்கள் மனத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று, ஒரு நூற்றாண்டின் முயற்சி, பல தலைமுறைகளின் கனவு நனவான நாளன்றோ அந்நாள்? எங்கும் மகிழ்ச்சியின் அறிகுறிகள். எல்லோர் உள்ளத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான எண்ணங்கள், அரும்பெருஞ் செயல்களை மேற்கொள்ள வேண்டும், மேற்கொண்டால் முடிக்க முடியும் என்ற உறுதியான கருத்துக்கள் அன்று தோன்றின. மக்கள் உள்ளத்தில் பொங்கி எழுந்த இந்த உற்சாக வெள்ளத்தைச் செயல் என்ற வாய்க்கால் வழியே கரைகோலிச் செலுத்தினால் நற்பயன் விளையும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று. இந்த மேலான சந்தர்ப்பத்தில் கலைக்களஞ்சியம் ஒன்றை ஆக்கும் அரிய வேலையில் நாம் ஈடுபட வேண்டும் என்ற அறிக்கை ஒன்றைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுதந்திர தினத்துக்கு முந்தின நாள் வெளியிட்டிருந்தேன். நண்பர்கள் அனைவரும் அதை அன்புடன் வரவேற்றார்கள். தமிழ் அன்பர் பலர் அதற்கு உதவ முன்வந்தார்கள். டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார் முதன்முதல் ரூ. 10,001/- அளிப்பதாக வாக்களித்தார். ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியாரும், தருமபுர ஆதீனத் தலைவரும் இவ்வரிய பணிக்குத் தனித்தனியே அதே தொகை அன்புடன் வழங்கினார்கள். காலம் சென்ற திரு டி. ஏ'. ராமலிங்க செட்டியாரும், மற்றும் திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார், திரு. ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார், திரு. ரா. கிருஷ்ண மூர்த்தி, திரு. வீ. எஸ். தியாகராஜ முதலியார், திருவாவடுதுறை ஆதீனத் தலைவர், திரு. கா. ம. ரா. சுப்பராமன் முதலியோரும் பெருந்தொகை உதவினார்கள். இரண்டு நாட்களில் இலட்சத்திற்குமேற்பட்ட தொகை சேர்ந்தது. 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசம் நன்னாளில் கலைக்களஞ்சியப் பணி சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கியது.
கலைக்களஞ்சியம் வெளியிடுவதற்கு என்ன செலவாகுமெனக் கணக்கிட்டுப் பார்த்த போது, விரிந்த அளவில் செய்யச் சுமார் 14 இலட்சம் ஆகுமெனத் தோன்றிற்று. சென்னைச் சர்க்கார் ஆண்டுக்கு ஓர் இலட்சமாக ஐந்து இலட்சத்திற்கு மிகாமல், தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் பொதுமக்களிடம் திரட்டும் தொகைக்கு இரண்டு பங்கு வழங்குவதாக அன்புடன் இசைந்தார்கள். அச்சமயத்தில் தமிழ்ப் பேரன்பர் டாக்டர். ஆர். கே. சண்முகம் செட்டியார் மத்திய சர்க்காரில் நிதி அமைச்சராக இருந்தார். அவருடைய ஒத்துழைப்பால் மத்திய சர்க்காரும் இவ்வரும்பணியைப் பாராட்டி, ஆண்டுக்கு 75 ஆயிரமாக நான்கு ஆண்டுகள் அளிப்பதாக வாக்களித்தார்கள். திருப்பதி தேவஸ்தானத்தார் ரூ. 25,000/- மிகுந்த அன்புடன் வழங்கியுள்ளார்கள். பிற அன்பர்களும் சிறிதும் பெரிதுமான தொகைகளை வழங்கினார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பெரும்பணியை ஆற்ற இடம் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் எங்கள் மகத்தான நன்றி உரியது.
ஆனால், வேலையைத் தொடங்கிய பிறகுதான் ஏற்றுக்கொண்ட பணி எவ்வளவு பெரியது என்பது விளங்கிற்று. இதுவரையில் தமிழில் இல்லாத, நினைக்காத பொருள்களைப்பற்றி இன்று தெளிவாகத் தமிழில் எழுதவேண்டும். முன் தமிழில் வழங்காததால் அப்பொருள்களைப் பற்றிய சொற்கள் தமிழில் இரா என்பது வெளிப்படை. எனவே அவைகளை எப்படிச் சொல்வது என்பது முதற் சிக்கலாக இருந்தது. மற்ற மொழிகளில் இந்தச் சிக்கலை எவ்வாறு நீக்கியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்ததில், அவசியமான கலைச்சொற்களை வேற்று மொழிகளிலிருந்து அப்படியே தங்கள் மொழிகளில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கியது. மத்திய சர்க்கார் கூட்டிய கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் அடங்கிய மாநாட்டிலும் அவ்வம்மொழியினர் தத்தம் மொழியின் தன்மைக்கேற்ற மாறுதலுடன் இக் கலைச்சொற்களை எடுத்தாளுதல்தான் - ஏற்றது என்று முடிவு செய்தனர். தவிர, விஞ்ஞானம், உயர் கணிதம், ரசாயனம், பொறியியல் முதலிய சாஸ்திரங்கள் பல குறியீடுகளை ஆண்டு வந்திருக்கின்றன. ஆங்கில எழுத்துக்கள் 26 தவிர, தீட்டா (ɵ) முதலிய குறியீடுகள் சில கருத்துக்களைக் குறிக்க ஆளப்பட்டு வந்துள்ளன. அக் கருத்துக்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அக் குறியீடுகளும் தமிழில் இல்லை. ஆனால், தற்கால வாழ்க்கைக்குரிய விஞ்ஞான அறிவு பெற இக்காலத்தில் அக் குறியீடுகள் அவசியமாயிருக்கின்றன. எனினும் அறிஞர்களின் உதவியைக் கொண்டு, கலைச்சொற்கள் தமிழில் ஏராளமாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டுமே பிறமொழிக் கலைச்சொற்களும் குறியீடுகளும் கலைக்களஞ்சியத்தில் பயன்படுத் தப்பட்டிருக்கின்றன. நம் தமிழ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறைவுடன் தோன்றி, இன்றும் அளவற்ற ஆற்றலுடனிருக்கின்றது. நம் தமிழ்த் தாய்க்கு என்றும் முதுமையில்லை. என்றும் அவள் கன்னியாகவே அழகு மாறாமல் விளங்குவாள். ஆகையால் இச் சில புதிய சொற்களையும் குறியீடுகளையும் மேற்கொள்ளுதலால் தமிழ்த் தாய்க்கு வலிமையும் வளர்ச்சியுமே உண்டாகும்.
கலைக்களஞ்சியப் பணி தொடங்கி ஆறாண்டுகள் கழிந்து, ஏழாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் சேம்பர்ஸ் என்சைக்ளொப்பீடியா வெளியிடுவதற்கு 10 ஆண்டுகளும், என்சைக்ளொப்பீடியா பிரிட்டானிக்காவின் 9ஆம் பதிப்பைத் திருத்தி அமைப்பதற்கு 15 ஆண்டுகளும் ஆகியிருக்கின்றன. ஜப்பான் மொழியில் 10 தொகுதி கொண்ட கலைக் களஞ்சியம் வெளியிட 12 ஆண்டுகளும், இத்தாலிய மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட 9 ஆண்டுகளும் ஆகியிருக்கின்றன. ஆதலால் எடுத்துக்கொண்டிருக்கும் பணியின் தன்மையையும், இதுவரை இதுபோன்ற முயற்சி தமிழில் நடந்திராததால் அவ்வப்போது நேர்ந்த சிக்கல்களையும் எண்ணிப் பார்த்தால் இதுவரையில் ஆன காலம் அவ்வளவு நீண்டதன்று. ஆயிரக்கணக்கான அறிஞர்கள் இம் முயற்சியில் பங்குகொண்டு உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் உதவியின்றி இதனைச் செய்திருக்க முடியாது. கலைக்களஞ்சிய அலுவலகத்தில் பிரதம ஆசிரியர் முதலிய அனைவரும் நிறைந்த பக்தியுடனும் ஆர்வத்துடனும் பாடுபடுகின்றனர். இம் முயற்சியில் உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.
இத்தகைய அரும்பெரு முயற்சியில் நிறைவு காண்பது அரிது. ஆங்கிலத்தில் முதலில் வந்த என்சைக்ளோப்பீடியாவையும், அண்மையில் வெளிவந்திருப்பதையும் ஒப்பீட்டுப் பார்த்தால் அவற்றிடையுள்ள பெரிய வேறுபாடு வியப்பை உண்டாக்காமல் இராது. இதுவும் இம்மகத்தான துறையில் தமிழில் செய்யப்பெற்ற முதல் முயற்சி. தமிழ் வளரவும், தமிழ் மக்கள் அறிவுத் துறைகள் அனைத்திலும் மேம்பாடுறவும், இன்னும் சிறப்பான முயற்சிகள் வெளிவர அடிப்படையாக இருக்கவும், இது உதவவேண்டு மென்பது தான் எங்கள் பிரார்த்தனை. தமிழ் மக்கள் இதை ஏற்று, வாழ்த்தி அருள்வார்களாக.
இங்ஙனம் தமிழ் மக்களின் முயற்சியால் ஆக்கப்பெற்ற இம் முதல் தொகுதியைத் தமிழ் அன்னையின் திருவடி மலர்களில் சமர்ப்பிக்கின்றோம்.
சென்னை,
ஜய, சித்திரை, 1
தி. சு. அவினாசிலிங்கம்