கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/மலையருவி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. மலை யருவி
—ராஜம் கிருஷ்ணன்—

ஊசிப்பாளையம் சிற்றூரிலே வாழ்ந்த சுப்பம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் ஆண்மக்கள். ஒருவன் மூத்தவன் பொன்னன்; மற்றவன் இளையவன் குமரன். மூத்தவன் படிக்காதவன்; உழைப்பாளி, வாழத்தெரிந்தவன்; நல்லவன்; வல்லவனும்கூட. இளையவன் படித்தவன்; ஊதாரி, படிப்புக்கேற்ற குறும்பும் விளையாட்டும்கூட, உலகம் புரியாதவன். வெளுத்தது எதையும் பாலென நம்பும் நல்லவன்; வல்லவன் அல்லன். வாழப்புரியாத துணிவுகொண்டவன்.

இருவருக்கும். அத்தை மகள் ஒருத்தி உண்டு. அவள் ரஞ்சிதம். துடிப்பும் அழகும் அவளுடைய உடைமைகள். மூத்தவனை “அண்ணன்” என்று அழைக்கும் அவள், இளையவன் குமரனை “அத்தான்” என்று அழைக்கிறாள். குமரனும் அவளை விரும்புகிறான்.

படிப்பில் வளர்ந்த குமரன் சிற்றூரில் நடக்கும் சாதாரண அக்கிரமங்களைப் பார்த்துக் குமுறு கிறான். பத்திரிகை ஒன்றுக்கு எழுதி, ஊராரின் வெறுப்பைப் பெறுகிறான். சங்கம் நடத்திப் பாழாகிறான். கள்ளச் சாராயம் காய்ச்சிய தன் மாமாவைக் கண்டிக்கப்போய், அவரது பகைமையையும் கண்டிப்பையும் பெறுகிறான். கொண்டைத் திருகைத் திருடிக்கொண்டு வந்த ஒருத்தியைக் கண்டுபிடித்து, தன் தாயின் குற்றத்தினை வெளிப்படுத்த முயன்ற முயற்சியில் குமரன் சிக்கிக்கொள்ளுகிறான். நகை விஷயத்திலும் பிறரிடம் குற்றம் சுமத்தப்படுகிறான் குமரன்.

ஊரையே விட்டுப்போகத் துணிந்து, தன் காதலி ரஞ்சிதத்தையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட வந்த குமரன், மாமனுடன் சண்டையிடும் பயங்கர நிலை ஏற்படுகிறது. சண்டையின் முடிவில் தேங்காய் மட்டைகளை உரிக்க உதவும் குத்துக்கல்லில் குடிவெறியின் காரணமாக குமரனின் மாமனர் வீழ்ந்து இறக்கிறார்.

பழிச்சொல்லுடன் ஓடிவிடுகிறான் குமரன். வழியிலே வெள்ளை மனத்துடன் பழகி, ஓர் எத்தன் கையிலே சிக்குகிறான். மீண்டும் திருகு வில்லையைத் திருடிய அந்தப் பெண்ணின் உதவியால் தப்புகிறான். நீலகிரிக்குச் சென்று இந்திரபுரி சமஸ்தானத்து வழியில்வந்த ஜீவன் என்கிற பிரபுவின் காரியதரிசி வேலையில் சேருகிறான்.

கிராமத்தில் ரஞ்சிதத்தின் தகப்பன் இறந்த பின் அவள் சுப்பம்மாளிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறாள். ஆனால், சுப்பம்மாளுக்குச் சித்தம் பேதலித்துவிடுகிறது. பொன்னன் ரஞ்சிதத்தை அடைய முயற்சி செய்கிறான். ஆனால் அவள் அதை விரும்பவில்லை.

காதலை மறந்துவிட்டாள் ரஞ்சிதம் என்று குமரன் ‘மது’ அருந்தத் தொடங்குகிறான். தேவ தாஸ்பாணி!... குடிவெறியில் எசமானன் ஜீவனிடம் தாறுமாறாக நடக்க ஆரம்பிக்கிறான் குமரன். வேலையிலிருந்து தள்ளப்படுகிறான். அங்கு மீண்டும் திருகுவில்லையைத் திருடிய பெண்ணைச் சந்திக்கிறான் குமரன். அவள் ‘கெட்டுப்போனவள்!’ இருந்தும் மனித உணர்வுகளில் நல்லவை ஒன்றிரண்டு அவளைவிட்டு எடுபட்டுவிடவில்லை. அவனே அவள் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அவனால் அவள் திருந்துகிறாள்.

ரஞ்சிதம் குமரனுக்காகக் காத்து ஏங்குகிறாள். சுப்பம்மாளும் பொன்னனும் படுத்தும் பாட்டுக்கிடையில், அவள் காதல் உறுதியாய் நிற்கிறது. திருகுவில்லை திருடிய அப்பெண் ராணியிடம் விபசாரம் செய்வதற்குத் தங்கியுள்ளவள்போலப் பேச்சு அடிபடுகிறது, நீலகிரியிலே! ராணியைவிட்டு விலகி, பொம்மைக் கடையில் வேலைக்குச் சேருகிறான் குமரன். ராணியின் கேவல வாழ்விலிருந்து அவளைத் தப்பச்செய்ய அவனால் முடியவில்லை!

அண்ணன் பொன்னன் கடைசியில் தம்பி குமரனைத் தேடிவருகிறான். அண்ணனும் தம்பி யும் பொருதுகின்றனர். குழப்பமும் குமுறலும் விளைகின்றன.

ராணியின் பிணம் ஏரியில் மிதந்த செய்தி கேட்டுச் சொந்தஊர் நோக்கிப் பயணமாகிறான் பொன்னன். ரஞ்சிதத்தைச் சந்தித்ததும் உண்மைகள் வெளியாகின்றன.

குமரனையும் ரஞ்சிதத்தையும் இணைத்து விட்டு ஒதுங்கிச் சென்றுவிடுகிறான், மூத்தவனாகிய பொன்னன்!


பழைய கருவியே புதிய பிண்டம்

அண்ணன் தம்பி விவகாரம். மிகவும் பழைய கதைக் கரு.

‘குறிப்பிட்டதொரு வட்டத்துக்குள்ளே வாழ்வை உடைய பெண்ணொருத்தி காவல் எழுதப் புகுவது அவ்வளவு எளிதன்று. சமுதாயத்தின் பல்வேறு படிகளில் காணும் மக்களைக்கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களோ, உலக அரங்கில் அகலக்கால் வைத்து பல வண்ணங்களில் கடக்கும் வாழ்க்கை நாடகங்களைப் பற்றி அறியும் வாய்ப்புக்களோ, தான் புழங்கும் வீடும் குடும்பமுமே உலக அனுபவமாகக் கொண்ட பெண்ணுக்கு இல்லை’ என்று தம் நாவலில் முன்னுரையில் திருமதி ராஜம் கிருஷ்ணன் சொல்கிறார்.

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணை விரும்புவது, பெண் இளையவனை விரும்புவது, கடைசியில் அண்ணன் தியாகியாக மாறுவது!-இந்தப் பாணியில் வரும் கதைகள் கர்ணபரம்பரைக் கதைகளிலிருந்து இன்றைய இலக்கிய வடிவங்கள் வரை எத்தனையோ பகுதியாகவும் தொகுதியாகவும் பல மொழிகளிலும் வந்துவிட்டன.

இந்த நியதிக்கு நானும் விலக்கல்லன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் நான் எழுதிய ‘வாழும் காதல்’ என்ற நவீனம் இதற்குச் சாட்சி.

இதே அண்ணன் தம்பி பிரச்சினை மூலம் இந் நாவலாசிரியை, தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஓர் அழகிய வடிவம் கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

குமரன் என்கிற இளைஞனின் கதைக்குக் கிட்டியுள்ள பிடிப்புத்தான் மேற்படி பாத்திர உருவாக்கத்திற்கும் ஓர் பிடியாக அமைந்திருக்கிறது. எங்கள் வட்டத்தில் ஒரு வழக்கு உண்டு. ‘மூத்தது மோழை, இளையது காளை’ என்பார்கள். இங்கே குமரனின் அண்ணன் பொன்னன் பாத்திரமும் அப்படித்தான். சோடை!...


கதையான வாழ்வு

வாழ்க்கையே கதை என்றும் கதையே தான் வாழ்க்கை என்றும் சொல்வது இலக்கியப் பாரம்பரியப் பண்பாகவும், இலக்கிய மறுமலர்ச்சியின் மரபாகவும் நிலவி வருகிறது. இத்தகைய குறிப்புடன், குடும்பத்தைச் சூழலாகக் கொண்டு கதை பின்னிக்காட்டும் திறன் கொண்டவர்களுக்கு நம் தமிழகத்திலே மதிப்பு கூடுதல். இவ்வகையில் திருமதி ராஜம் கிருஷ்ணனின் பெயரும் இலக்கிய அந்தஸ்துப் பெறும். பெண் மனத்தின் நுணுக்கமான உணர்ச்சியின் கதைகளைக் காரியமாக்கிக் காட்டும் கலையியல் சக்தி கைவரப் பெற்றவர் ஆசிரியை. ‘குறிஞ்சித் தே’னுக்கு முன்னோடிக் கதை இது. 

வாழ்க்கையைப் புதிராக்கி அதன்பின், அந்தப்புதிரை அவிழ்த்திட அவ்வாழ்க்கையையே ஓர் உபகரணமுமாக்கி, ‘அலகிலா விளையாட்டு’க் காட்டும் நேர்மைத்திறம் கொண்ட சிந்தனை மனங்களின் அடிச்சுவட்டை ஒற்றி நடந்து, காலத்தின் கருவில் உருவான-உருவாகும் நித்திய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இலக்கியப் பரிணாமக் கண்ணோட்டத்துடன் கதை எழுதவும், கதை சொல்லவும் தெரிந்த இந்த நாவலாசிரியைக்கு, இந்த அண்ணன் தம்பி சிக்கல்தானா இருந்திருந்து கிடைக்க வேண்டும்?

‘தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னே வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்;
பின்னே வினையைப் பிடித்துப் பிசைவார்கள்;
சென்னியில் வைத்த சிவன் அருளாயே!’

திருமூலர் வாக்கே இப்படியிருக்கையில், ராஜம் கிருஷ்ணனின் விந்தையான பாத்திரத் தேர்வை எடை போடுவதைவிட, எடை போட்டுப் படைத்த பாத்திரங்களின் குணதோஷங்களை எடை போடலாமே!


“பூமியைப் பார்!”

உள்ளுணர்வுப் போராட்டங்களைப் பாலுணர்வு கூட்டிக் கதை பின்னிச் சொல்லுவதில் மாப்பஸான் (Guy De Maupasant) நிலைப்புடன் விளங்கினார். அவரது பெண்மையின் விரிவாராய்ச்சிகளைக் கோடிட்டு நினைவூட்டுவது போல இங்கு ராணி வருகிறாள் காதலில் தோற்றவள்: ஆனால், நம் அனுதாபத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றவள். அந்தப் பேதையின் நினைவைச் சுட்டி என் அனுதாபத்தையும் சுவீகரிக்க முயலுகிறாள் ராணி:-... ஊர் ஊராகச் சுற்றி, திருடி, மயக்கி சாகசம் செய்த இந்த ராணி...ராணியா இவள்? இவளுக்கும் வேஷம் தான்!...” என்ற நினைவை ஊட்டுகிறான் நடிக ராசா. அவன் குமரன்.

குமரனுக்கு முறைப்பெண் ரஞ்சிதம்.

ரஞ்சிதத்தை ஆசிரியை அறிமுகம் செய்யும் அழகு, ரஞ்சிதத்தின் அழகுக்கு அழகாக அமைகிறது.

சரி, ரஞ்சிதத்தைப் பாருங்கள்.

பார்வையில் பண்பு இருக்கட்டும், உஷார்!—அதோ பொன்னன்!

இதோ, ரஞ்சிதம்

மஞ்சள் பூச்சு மிளிர்ந்த மாநிற முகத்தில் களி துள்ளும் கருவிழிகள்; ஒளியிடும் வெண்பற்கள்; காதிலே வெள்ளைக் கம்மலும் கழுத்திலே சரட்டட்டிகையும் அவள் முகத்துக்குப் பெருமையுடன் எழில் காட்டின. கைகளில் குலுங்கக் குலுங்கக் கண்ணாடி வளையல்கள், கால்களிலே கொலுசு அவள் கன்னி வடிவம்! அவள் தயிர்க்காரி; ஆனாலும் அவள் தயிர் இனிக்கத்தான் செய்யும்!

இந்த ரஞ்சிதத்துக்காக நடந்த போட்டாபோட்டிகள் எத்தனை? முளைத்தெழுந்த காமக்குரோதங்கள், கரவும் கள்ளமும் எத்தனை?

குமரன் நல்லவன்; குழந்தை மனம். வாழ்வாங்கு வாழ விழைந்தான். தீமை தோயாத வாழ்வு வாழவேண்டும் எனவும் பிறரும் நல்வாழ்வு வாழ வழி காட்டவேண்டும் எனவும் இலட்சியம் வைத்திருந்தான். ஆகவே தான், பொன்னைவிட குமரன்பால் அதிக ‘வேட்கை’ கொண்டு ஒழுகினாள் ரஞ்சிதம். கடமை ஒழுங்கும் கண்ணியப் போக்கும் பூண்டு கடந்தாள்.

ஒரு கட்டம்:

சோலையம்மன் கோயிலில், ‘சாமி’ கும்பிடுகிறாள் ரஞ்சிதம். ஒளிந்திருந்து, அவள் வேண்டுதலுக்கு மனிதக் குரல் தருகிறான் குமரன். தெய்வமாகி வந்த குமரனோ? ‘தாவிப்படரக் கொழுகொம்பில்லாத தனிக்கொடி போல்’ இருந்தவளுக்கு அவன் தானே குமரன்!...

“அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!”. என்று வேண்டினாள் அவள். ‘அவங்களுக்கு...’ என்ற உறவுச் சொல்லின் உரிமையை ‘அர்த்தம்’ காண விழைகிறது. குமரனின் அடிமனம். தன்னை நினைத்துத்தான் அவள் அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!’ என்று ‘நேர்ந்து’ கொண்டதாக அவன் கருதினான், உண்மை நடப்பும் அதுவே!

குமரனைச் சூழ்ந்த சுற்றுச் சார்புகளும் சூழ் வினையின் சூதுமதித் திரிபுகளும் அலைக்கழித்த உண்மையை ரஞ்சிதம் எங்ஙனம் தட்டிக் கழிப்பாள்?...

துயரங்களின் தழும்புகள் காய்த்துத் தொங்கிய போக்குடன் ஊர் திரும்புகிறான் குமரன். ரஞ்சிதத்தைப் பார்க்கிறான். ‘அண்ணி’-ஆம்; அவளைத் திருமணம் செய்து கொண்டதாகப் பொன்னன் சொன்னன்!

ரஞ்சிதம் குமரனைப் பார்க்கிறாள், அவள் வழிப்புகுந்து, இதயம் சேர்ந்து அவனைப் பார்க்கின்றாள். ஆயிரமாயீரங் குற்றங்களை அவன் செய்திருந்தாலுங்கூட, அன்பும் அவன் பக்கம் மாயாதது போன்ற நோக்குடன் ரஞ்சிதம் நிற்கிறாள். 

“நான் கொலைகாரன் என்று நினைக்கிறாயா? உங்கய்யாவை நான் இரக்கமில்லாமல் தள்ளிக் கொலை செய்தேன் என்று எண்ணி நீ என்னை வெறுத்தாயா, ரஞ்சிதம்? -

அவள் அப்படி வெறுக்கவில்லை. தேற்றுகிறாள்.

அவன் நிரபராதி!

அவள் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி ஒதுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டதும், அவனுடைய மனம் அமைதி பெறுகிறது. மனத்தால் மன்னித்தவள்; இப்பொழுது வருவதாகக் கூறுகிறாள். மலைப்பு!

தமையன் பொன்னன் தோன்றுகிறான். “உங்க இரண்டு பேருக்கிடையே சிக்கலைப் பின்னி உங்க அன்பிலே வெட்டு உண்டாக்க எண்ணினேன். ஒரே எண்ணத்திலே, பொய்யும் சூழ்ச்சியும் மனசிலே தோண நடந்துகிட்டேன். நான் தோத்துப்போனேன் தம்பி. அத்தனை வழியிலேயும் தோத்துப்போனேன். மலை உச்சியிலிருந்து ஓடிவரும் அருவியை எத்தினி தடுத்தாலும் அதன் நோக்கிலேதான் பாயுமின்னு புரிஞ்சுகிட்டேன்!” என்று ‘பாவ மன்னிப்பு’ பெறுகிறான். அன்பால் வாழ்த்தி மனத்தால் காதலித்த ரஞ்சிதத்தை, அவளுக்கு உரிய மன்மதனிடம் அவளுக்கு உகந்த மெய்யன்பனிடம் ஒப்படைத்து விட்டு, பொன்னன் மண்ணில் இறங்கி என்றுமில்லாத அமைதியுடன் நடக்கிறான்!

“பூமியைப் பார், அது உனக்குக் கற்றுத்தரும்,” என்கிறது பைபிள்.

'நல்ல பூமி'யை ஆக்கிய நாவலாசிரியை பெர்ல்பக் (Pearls.Buck) கையாண்ட சுற்றுப்புறத்தெளிவு, இந் நவீனத்தின் வரிக்கோடாகப் பிரதிபலிப்புப் பெறுகிறது.

பிறந்த மண்வளத்தில் பொன்னன் படித்துக் கொண்ட பாடத்தில்தான், ரஞ்சிதம் என்கிற பெண்மையின் கம்பீர்யமான குறிக்கோள் இலக்கு முழுமை பெறுகிறது. முழுமைப் பண்பைத் தருபவன் குமரன். இதயங்களின் நெகிழ்ச்சியில் மலையருவியாக வெள்ளமிட்டு ஓடுகிற மனைநிலை எண்ணங்களுக்கு (Sentimental Views) வடிவம் தருகிறாள் ரஞ்சிதம். இவள் நிழலில் ஒதுங்க முனைந்து, ஓடி ஒளிந்து ஏரியில் குதித்து, இறுதியில் சிறைக் கம்பிகளை எண்ணுகிறாள். ராணி, அசட்டுப் பெண்! கொண்டவன் இருந்தும், தடம் புரண்டு. நடந்த கதை மூலம், ராணி நம் அனுதாபத்துக்கு இலக்காகிறாள்!

மேலை நாட்டு ஆசிரியையான ஜேன் ஆஸ்டின் (Jane Austin) கையாண்ட அடிவரிசைத் தளத்தின் அழுத்தம் இவ்வாசிரியைக்கு வழிகாட்டிச் செல்கிறது.


சாயல்

ண்பொம்மை’ என்று ஓர் ஒரியா நாவல் வெளிவந்திருக்கிறது. சாகித்ய அகாடமிப் பரிசு பெற்ற அதுவும் கூட மலையருவியை ஒட்டியதுதான். மலையருவியைப் படிக்கும்போது அந்தப் பிரதிபலிப்பு (Reflection) நினைவிற்கு வருகிறது. இருப்பினும் ‘மலையருவி’ வேறுதான், ‘மண்பொம்மை’ வேறுதான்.

குடும்ப நாவல்களில் வெற்றி பெற்று வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் வெளியுலகையும் சுற்றிப்பார்த்து எழுதியிருக்கும் கோணம் இதில் நன்கு புலப்படுகிறது கோவை மாவட்டப் பேச்சுவழக்கு ஓரளவு பிடிபட்டு வந்திருக்கிறது; என்றாலும் தூய சிற்றுார்ப்புற வாடையையும் சூழலையும் அவரால் காட்ட முடியவில்லை.


வருணனை நயம்

பேய்க்காற்றும் சாரல் மழையும் போய் பகல் வெயிலும் குடல் துளைக்கும் பனியும் குளிரும் வந்தன. இலையுதிர்த்த மரங்கள் எல்லாம் தளிர்த்தன! நோய்வாய்ப்பட்டுக் கிடந்தவள் குணமாகித் தேறி வருவதுபோல் கரிந்திருந்த பசும்புல் தரையெல்லாம் வசந்தத்தை வரவேற்கச் சித்தமாகப் பசுமைபிடிக்கலாயிற்று.”

வர்ணனையில் குழைவும் உறுதியும் கலந்த போக்கு அழகு கூட்டுகின்றது. நவீனத்தில் கதைச் சூழல் (atmosphere creation) நேர்த்தி.


வாழ்த்து

‘அன்பின் வழியது உயிர்நிலை!’

இது வள்ளுவம். இந்த உயரிய மனிதப் பண்பாட்டினை எடுத்துக்காட்ட, ரத்த பாசமும் காதலும் எடுத்துக்காட்டுகளாக உலவுகின்றன. உலவும் தென்றல் போன்ற நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணனின் பேனா இந்நவீனத்தில் புதுத்தடத்தில் ஊன்றிப் புரட்சிப் பண்பையும் தொட்டுக்காட்டி ஊன்றிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்த நல்ல நோக்கம் வாழட்டும்! - கொட்டு முழக்கத்துடன் வாழட்டும் சொற்றுணை வேதியன் அருள் புரிவான்!...