களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/எப்போது வந்தனர்?

விக்கிமூலம் இலிருந்து

களப்பிரர் எப்போது வந்தனர்?

வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏழத்தாழ கி.பி.250-ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள் என்று கூறினோம். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது கி.பி.275-ல் என்று கூறுகிறார்.[1] கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று திரு சதாசிவபண்டாரத்தார் கூறுகிறார்.[2] திரு.எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார், கி.பி.6-ஆம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று கூறுகிறார். "சங்கம் (வச்சிரநந்தி கி.பி.470-ல் நிறுவன திராவிட சங்கம்) கி.பி.5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. கி.பி.6-ஆம் நூற்றாண்டு தொடங்கின போது தமிழ் நாட்டின் அரசியல் விரைவாக மாறுதல் அடைந்தது. இந்தக் காலத்தில்தான் களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் நிகழ்த்தன" என்று அவர் எழுதுகிறார்.[3] இவர் கூறுவது ஏற்கத்தக்கது அன்று. களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகுதான் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்டதே தவிர வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்ட பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்படவில்லை . ஆகவே, கி.பி.6-ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்று இவர் கூறுவது தவறு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்பதில் ஐயம் இல்லை . மேலும், இராமசாமி அய்யங்கார் இன்னொரு செய்தியையும் கூறுகிறார். "தமிழ் நாட்டில் ஜைனமதத்தை மேலும் உறுதியாக நிலைநாட்டுவதன் பொருட்டு ஜைனர் களப்பிரரைப் படையெடுத்து வருமாறு அழைத்தார்கள் என்று தோன்றுகிறது" என்று இவர் எழுதுகிறார்.[4] இவ்வாறு இவர் கூறுவதற்குச் சான்று இல்லை. கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தமிழகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலை கன்னட நாட்டுக் களப்பிரர் தமிழகத்தின்மேல் படையெடுத்து வருவதற்கு ஏற்றதாக இருந்தது. கடைச் சங்ககாலத்தில் இருந்த தமிழரசர்களும் குறுநில மன்னர்களும் ஒருவர் மேல் ஒருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருந்ததைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். காரணம் இல்லாமலே தங்களுடைய போர் வல்லமையைக் காட்டுவதற்காகவே அரசர்கள் அக்காலத்தில் அடிக்கடி ஒருவர் மேல் ஒருவர் போர் செய்தனர். போர் செய்வது அவர்களின் வழக்கமாகவும் குறிக்கோளாகவும் இருந்தது. தமிழ் நாட்டு வேந்தர்களுக்குள்ளாகவே போர் செய்வதைப் பெருமையாகக்கருதினார்கள். போர் செய்வதை ஒரு கலையாகலே அமைத்துக் கொண்டனர், அரசர்களின் போர்ச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போர் முறைகளில் பல முறைகளை வகுத்துக் கொண்டு அதற்குப் புறத்திணை என்றும் புறத்துறை என்றும் போர்க்கலையை வகுத்தனர். போர்த்துறைகளைக் கலையாகவே போற்றிவந்தனர். காரணம் இருந்தாலும் இல்லையானாலும் ஒவ்வொரு அரசனும் போர் செய்துதான் ஆகவேண்டும் என்னும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. தம்முடைய போர் வெற்றிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்னும் ஆசை அரசர்க்குள் ஏற்பட்டு விட்டது. போர்க்களத்துக்குப் போகாமல் அரசன் இறந்து விட்டால் அவனுடைய உடலைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி வாலினால் மார்பை வெட்டி 'விழுப்புண்' உண்டாக்கிய பிறகு அடக்கம் செய்த நிலையும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் 'போர்க்களச் சூழ்நிலை' தமிழ் நாட்டையும் தமிழரசர்களையும் பலவீனப்படுத்தி விட்டபடியால், அயல்நாட்டரசர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு படையெடுத்து வரக்காரணமாக இருந்தது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இருந்த இந்தச் சூழ்நிலை களப்பிர அரசரைத் தமிழகத்தின்மேல் படையெடுத்து வரத்தூண்டியது. அன்னிய நாட்டவர் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த ஆற்றல் மிக்க பேரரசர் இல்லாத நிலை களப்பிரரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது.

முன்பு கூறியபடி பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் செங்கணான், சேரமான் கோக்கோதைமார்பன், கொங்கு நாட்டுக் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த தமிழரசர்கள். இவர்கள் காலத்துக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழக் கி.பி. 250-ல் களப்பிரர் தமிழகத்தைக் கைபற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள் என்று அறிகிறோம்.

களப்பிரர் வென்ற சேர சோழ பாண்டிய மன்னரின் பெயர்கள் தெரிவில்லை. மூவேந்தர்களையும் இவர்களின் கீழடங்கியிருந்த சிற்றரசர்களையும் களப்பிரர் வென்றனர் என்று வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. "அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக் கொண்ட"னன் என்று வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் கூறுகிறது.[5]

களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றினபிறகு 'கடைச் சங்க காலம்' முடிவடைந்தது. களப்பிரர், மேற்கூறியபடி, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கி.பி.250-ல் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை.


  1. p.550 A Comprehensive History of indian val II, Edited by K.A.Nilakanta Satri 1956
  2. பக், 63, பாண்டியர் வரலாறு, டி.வி. சதாசிவபண்டாரத்தார், 1996,
  3. pp. 52-53. Studes in South India Jainism, M.S.Ramasami Ayorgs 1922
  4. Ibid, p.56
  5. வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-40.