களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/தோற்றுவாய்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தோற்றுவாய்

டைச்சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் சரித்திரத்தில் 'இருண்டகால'மாக இருந்தது, கடைச் சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி.பி. 250 என்று கருதப்படுகிறது. கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சங்கச் செய்யுட்களிலிருந்து கிடைக்கின்றன. சங்க நூல்களில் காணப்படுகிற கடைசி சேர அரசன் பெயர் கோக்கோதைமார்பன் என்பது. இவனைக் கோதை என்றும் கூறுவர். கோக்கோதை மார்பன் சேரன் செங்குட்டுவனுடைய மகன். இவன் சிறுவனாக இருந்தபோது இவனுக்குக் குட்டுவன்சேரல் என்று பெயர் இருந்தது. தன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணருக்குச் செங்குட்டுவன் உம்பர்காடு என்னும் நாட்டின் வருவாயையும் தன்னுடைய மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகக் கொடுத்தான்.[1]

புலவராகிய பரணருக்குச் செங்குட்டுவன் தன்னுடைய மகனான குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் என்பதன் பொருள், புலவரிடத்தில் கல்வி கற்பதற்கு மாணாக்கனாகக் கொடுத்தான் என்பதாகும். இளமையில் குட்டுவன் சேரல் என்று பெயர் பெற்றிருந்த இவன் முடிசூடின பிறகு கோக்கோதை மார்பன் என்று பெயர் பெற்றான் என்று அறிகிறோம்.

கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர அரசர்களின் இளைய வழியினரான பொறையர் அரசாண்டார்கள். கொங்கு நாட்டையரசாண்ட கடைசிப் பொறையன் கணைக்கால் இரும் பொறை. இவன் கோதை மார்பனுடைய தாயாதி உறவினன் இருவரும் சம காலத்தில் இருந்தவர்கள். கணைக்காலிரும் பொறை. சோழன் செங்கணானோடு போர் செய்து தோற்றுப் போரில் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டாள். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கொங்கு நாட்டையரசாண்டான். அதாவது சோழன் செங்கணானுக்குக் கீழடங்கி கணைக்காலிரும்பொறை அரசாண்டான். ஆகவே சோழன் செங்கணானும் சேரமான் கோக்கோதை மார்பலும் கணைக்கால் இரும்பொறையும் சமகாலத்தவர் என்று தெரிகின்றனர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டையர சாண்டவன் தெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன், இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. இந்த நெடுஞ்செழியன், சேரநாட்டுக் கடற்கரையோரத்தில் பேரியாற்றின் புகுமுகத்தில் இருந்த முசிறிப் பட்டினத்தை முற்றுகை செய்து அங்கிருந்த ஒரு தெய்வத் திருமேனியை எடுத்துக் கொண்டு மதுரைக்குப் போனான்.[2] இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசன் மேற்சொன்ன கோக்கோதை மார்பனே.

கோக்கோதை மார்பன், கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இவர்கள் கடைச் சங்ககாலத்தின் இறுதியில் சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் சேர, கொங்கு, சோழ, பாண்டிய நாடுகளை அரசாண்டார்கள். இவர்களுடைய பெயர் தெரியவில்லை. இவர்கள் காலத்தில் அயல் நாட்டவர் வந்து இவர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றியரசாண்டார்கள். அவர்கள் களப்பிரர் என்று கூறப்பட்டார்கள். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றியரசாண்ட வரலாறு மறைத்து போய் தெடுங்காலமாகப் பல நூற்றாண்டு வரையில் தெரியாமல் இருந்தது. கி.பி. 20-ம் நூற்றாண்டு வரையில் மறைந்துபோயிருந்த களப்பிர அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி, பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரியவந்தன. திரு.கே.ஜி.சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டை இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ்த் திங்களிதழில் வெளியிட்டார்.[3] அதன் பிறகு இந்திய சாசன இலாகா 1923-ம் ஆண்டில் எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தீன்) எழுத்தில் வெளியிட்டது.[4] சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்புரச் சாசனம் கிடைத்ததும் இந்தச் செப்பேடுகளிலிருந்து களப்பிர அரசர்களைப் பற்றி அறிகிறோம்.[5]

வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் களப்பிரரைப் பற்றின செய்தி தெரியவந்தது. அதன் பிறகு களப்பிரரைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் களப்பிரரைப் பற்றின முழுவரலாறு இன்றுங் கிடைக்க வில்லை.

களப்பிரர் வேறு, களம்பாளர் (களப்பாழர்) வேறு என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதினார்கள். சிலர் இருவரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் திரு.மு.இராகவையங்காரும், களப்பிரரும் களம்பாளரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு.டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்று கருதினார். பண்டாரத்தார் இதுபற்றி இவ்வாறு எழுதினார்: "அன்றியும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்த சோணாட்டுரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும் களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக் கொள்ளத் தக்கதன்று."[6]

தளவாய்புரச் செப்பேடு கிடைப்பதற்கு முன்பு திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு எழுதினார். அந்தச் செப்பேடு கிடைத்த பிறகு களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெரிந்துவிட்டது. வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. "கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்களைந்தும்" என்றும் (வரி 99) களப்பாழரைக் களை கட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோள் மானம் பேர்த்தருளிய கோன் என்றும் தளவாய்புரச் செப்பேடு (வரி.131-132) கூறுகிறது. எனவே களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. இளிக் களப்பிரரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்வோம்.


  1. பதிற்றுப் பத்து, ஐந்தாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு:
  2. அகநானூறு, 57; 14-16; 11-14
  3. செந்தமிழ், 20-ம் தொகுதி, பக்கம் 506-216
  4. Epigraphia Indica. Vol. XVI. 1923. pp. 291-309
  5. பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழகம் வெளியீடு 1967.
  6. பாண்டியர் வரலாறு, டி.வி. சதாசிவ பண்டாரத்தார் (பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி என்னும் தலைப்பு காண்க.)