உள்ளடக்கத்துக்குச் செல்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/முகவுரை முதற்பதிப்பு

விக்கிமூலம் இலிருந்து

முகவுரை

முதற்பதிப்பு


மிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாகவும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் 'இருண்ட காலம்' ஆக இருத்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங்காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம்.

1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங் கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுடைய வரலாற்று நூல்களில் களப்பிரரின் 'இருண்ட காலத்தை' ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான்.

களப்பிரர் வரலாறு எழுதப்படாததன் காரணம், அவர்கள் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களோ, செப்பேட்டுச்சாசனங்களோ, அவர்கள் காலத்துக் காசுகளோவே, பழம்பொருள் சான்றுகளோ கிடைக்காததுதான். இந்தநிலையில் அவர்களைப் பற்றி அறியக்கூடிய ஒரே சான்று அக்காலத்துச் சமய, இலக்கிய நூல்களேயாகும். இந்தச் சான்றுகளை இதுவரையில் யாரும் அதிகமாகக் கையாளவில்லை. பெரிய புராணமும் யாப்பருங்கல உரை மேற்கொள் செய்யுட்களும் ஓரளவு பயன்படுத்தப்பட்டன. இதுவரை வெளிவந்த களப்பிரைப்பற்றிய கட்டுரைகளும் அவர்கள் வரலாற்றை ஓரளவே தெரிவிக்கின்றன.

அக்காலத்தில் இருந்த (சைவ, வைணவ, பௌத்த, சமண) சமயங்களின் வரலாறு, சமய நூல்களின் (பதினோராம் திருமுறை) வரலாறு, செய்யுள் இலக்கண (யாப்பருங்கலம்) வரலாறு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தபோது களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிச் சில செய்திகள் புதிதாகப் புலனாயின. ஆகவே இந்நூலை எழுதினேன். களப்பிரர் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூலைப் படிப்பவர் அறிந்து கொள்ளலாம்.

களப்பிரரின் 'இருண்டகாலம்' இந்த நூலினால் 'விடியற் காலம்' ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும்.

வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன்.

இந்நூல் வெளிவர முழு முயற்சிகள் எடுத்துக் கொண்ட சென்ளைப் பல்கலைக் கழகத் தொல்பொருள்துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.

இந்த நூல் அச்சிட்டு வெளிவிடும் மக்கள் வெளியீடு நிறுவனத்தைச் சேர்ந்த திரு மே. து.ராசுகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மயிலாப்பூர்
சென்னை -4

மயிலை சீனி வேங்கடசாமி
20-10-1975