கழுமலப்போர்/போரிட்ட வேந்தர்
2. போரிட்ட வேந்தர்
தமிழ் நாடு வயல் வளத்திலும், வாணிக வளத்திலும் சிறந்து, உலக அரங்கின் உயர்ந்த இடத்தில் அமரப் பெருந்துணை புரிந்தவர், அத்தமிழ் நாட்டை அன்று ஆண்டிருந்த முடியுடைய மூவேந்தர்களே என்றாலும், அத்தமிழ்நாடு, இன்று தாழ்ந்த நாடாய்த் தளர்ந்து போனமைக்கும் அவர்களே காரணமாவர். மூவேந்தர்கள் மொழியை முன் நிறுத்தி ஒற்றுமை உள்ளம் கொண்டு உலகாள்வதற்கு மாறாக, சேரர் சோழர் பாண்டியர் என்ற குலப் பெருமையே குறிக்கோளாய் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை வளர்த்து வந்தனர். மூவேந்தர் குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடே பிறந்தனர். ஒரு குலத்தில் ஒரு காலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் பிறந்து விட்டால், அவன் பிற இரு குலத்து அரசர்களையும் வென்று அடக்கி, அரசர்க்கு அரசனாய் வாழ ஆசை கொள்வதும், அவன் பெருமை கண்டு மனம் பொறுக்க மாட்டாத பிற இருகுலத்து அரசர்களும் ஒன்றுபட்டுக் குறுநிலத் தலைவர்களின் துணையையும் பெற்று, அவனோடு சமர் புரிந்து அவனை அழிக்க முனைவதும், அக்கால அரசியலின் அழிக்க முடியாத வழக்கங்களாகி விட்டன. அம்மட்டோ! ஒரு குலத்தவர், பிறகுலத்தவரோடு போரிட்ட நிலையோடு நின்றுவிடவில்லை. ஒரு குலத்தில் பிறந்தவர்களுக்குள்ளேயே, ஒருவர் ஒருவரோடு போரிட்டுக்கொள்ளவும், மகன் தந்தைமீது போருக்கு எழவும் தந்தை தான் பெற்ற மகனையே போரிட்டு அழிக்கவும் அக்காலத் தமிழரசர்கள் உரிமை பெற்றிருந்தனர். அவ்வுரிமையின் விளைவுகளில் ஒன்று இக்கழுமலப் போர்.
கழுமலப் போரில் கலந்துகொண்டவர்கள், சேரமான் கணைக்கால் இரும்பொறையும், சோழன் செங்கணானும் ஆவர். இருவரும் தமிழர் என மொழியால் ஒருவரேயாயினும், குலவழியால் வேறுபட்டவராவர். சேரமான் கணைக்கால் இரும்பொறை, சேரருள் ஒரு பிரிவினரால் இரும்பொறை மரபில் வந்தவனாவன், பரந்த சேரநாட்டைச், சேர வேந்தர்கள் இரு கிளையினராய்ப் பிரிந்து ஆண்டுவந்தனர். பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் வழிவந்த சேரர், வஞ்சிமா நகரைத் தலைநகராகக்கொண்ட சேர நாட்டு உட்பகுதியையும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழி வந்தோர், தொண்டியைத் தலைநகராகக் கொண்ட சேர நாட்டுக் கடற்கரைப் பகுதியையும் ஆண்டு வந்தனர்.
தொண்டி, மாந்தை, நறவு போன்ற மாநகர்களை அரசியல் தலைநகர்களாகவும் வாணிக நிலையங்களாகவும் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால், கடலை அடுத்திருந்த சேரநாட்டை ஆண்டிருந்த இரும்பொறை மரபினருள் சிறந்தவன் கணைக்கால் இரும்பொறை. இவன் கணையன் எனவும் கோதை எனவும் புலவர்களால் அழைக்கப்பெற்றுளான்.
இரும்பொறை ஆண்ட நாடு, கடல் வளத்தோடு, வயல் வளமும், மலை வளமும் வாய்ந்திருந்தது. மலை நாட்டு மக்களாகிய குறவர், தங்கள் தினைப்புனத்தில் விளைந்து முற்றிய கதிர்களைத் தின்னவரும் பறவைகளை ஓட்ட, கிளிகடி கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பினால் செந்நெற் கதிர்கள் தலை சாய்ந்து ஆடும் வயல்களிலும், நீர் நிறைந்து வழியும் உப்பங்கழிகளும் இரை தேடி வாழும் பறவைகள், அவ்வொலி கேட்டு அஞ்சி, ஒருசேர எழுந்து பறந்து ஓடும். இவ்வாறு அந்நாடு, கடற் பகுதியையும், வயல் வெளிகளையும், மலைக் காட்டையும் ஒருங்கே பெற்றிருப்பதால், அந்நாடாளும் அவனைக் கடல் நாடாகிய நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் சேர்ப்புன் என்றோ, வயல்கள் மலிந்த மருத நிலத் தலைவனைக் குறிக்கும் ஊரன் என்றோ, மலைவளம் மிக்க குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும் நாடன் என்றோ பெயரிட்டு அழைக்க முடியாமல் வருந்தியுள்ளார் அவன் அவைக் களப் புலவரும், அவன் ஆருயிர் நண்பரும் ஆகிய புலவர் பொய்கையார்.[1]
சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறந்த வீரனாவன்; அவன்பால் ஒரு பெரிய படையும் இருந்தது. வேற்படைப் பயிற்சி பெற்றிருந்த அப்படையை வென்று அழிப்பது எவ ராலும் ஆகாது; அப்படையோடு என்றும் பாசறைக்கண் வாழ்வதையே அவன் விரும்புவன். அப்பெரும் படையை அடக்கி ஏவல் கொள்ளத்தக்க உடல் வன்மையும் அவனிடம் பொருந்தியிருந்தது. ஒருநாள், அவன் யானைப் படையைச் சேர்ந்த ஒரு யானை மதம் பட்டுவிட்டது. அதன் அழிவு வேலைகளால், அப்பாசறையே நடுங்கிவிட்டது; அதைப் பீடித்து அடக்கும் ஆற்றல் அங்கிருந்த வீரர் ஒருவர்க்கும் இல்லை. அதன் ஆரவாரம் கண்டு அஞ்சிய வீரர்கள் உறக்கத்தையும் மறந்து விட்டார்கள். அச்செய்தி கேட்டான் கணைக்கால் இரும்பொறை; விரைந்து பாசறைக்குச் சென்றான். அடங்காது அலைந்து திரிந்து கொண்டிருந்த அம்மத யானையை அடக்கிப் பிடித்து, அதன் கட்டுத் தறியில் பிணித்தான். பின்னரே வீரர்கள். உறங்கச் சென்றனர். யானையின் அழி செயல் கண்டு அஞ்சி, அலை ஒலிபோல் ஆரவாரம் செய்த அவர்கள் அமைதி உற்றனர். அலைஓசை அடங்கிய கடல் போல், கோட்டையிலும் அமைதி நிலவிற்று. அத்துணை அஞ்சாமையும், அதற்கேற்ற உடல் வன்மைபும் உடையவன் இரும்பொறை.[2]
இரும்பொறை காலத்தில், மூவன் என்ற பெயர் பூண்ட வீரன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவனும் இவனைப் போலவே கழிகளையும், கழனிகளையும் ஒருசேரக் கொண்ட வளம் மிக்க நாடுடையவனாய் விளங்கினான். அவன் நாட்டுக் கழிகளில், பகற்காலமெல்லாம் இரை தேர்ந்து உண்ணும் பறவைக் கூட்டம், இரவு வந்ததும், அவன் நாட்டு வயலோரங்களில் போட்டிருக்கும் நெற்போர்களில் சென்று தங்கும், நெய்தல் மணக்கும் நெல் வயல்களில் புகுந்து தொழில் புரியும் உழவர், உடல் தளர்ச்சி போக, மதுவை ஆம்பலின் அகன்ற இலையில் வார்த்து உண்டுவிட்டு, அம் மது மயக்கத்தால், ஆங்கு வந்து ஒலிக்கும் கடலின் அலை ஓசைக்கு ஏற்ப அடியிட்டு ஆடுவர்.[3]
இத்தகைய வளம் மிக்க நாட்டைப் பெற்றுள்ளோம் என்ற செருக்குள்ளம் கொண்டு, மூவன், சேரனை மதிக்க மறுத்துவிட்டானோ, அல்லது மூவேந்தர் குடியில் வந்த தன்னைப்போலவே, குறுநிலத் தலைவனாகிய இவனும், வளமிக்க ஒரு நாட்டில் வேந்தனாய் வாழ்வதா எனப் பொறையன் உள்ளத்தில் பொறாமைத் தீ புகைந்து பற்றிக்கொண்டதோ, இருவர்க்கும் இடையே பகை வளர்ந்துவிட்டது. கணையன் படையோடு சென்று மூவனை வென்று அடக்கினான்; அவன் சினம் அம்மட்டோடு அடங்கவில்லை போலும்; அம்மூவன் பற்களைப் பெயர்த்தெடுத்து வந்து, தன் தலைநகராம் தொண்டிமாநகரின் தலைவாயிற் கதவில் வைத்து அழுத்தினான்.[4]
இவ்வாறு வெற்றி வீரனாய் விளங்கிய சேரமான், சிறந்த புலவனுமாவன். புறநானூற்றைப் பாடிய புலவர் வரிசையில் இடம் பெறத்தக்க பெரும் புலவனாய் வாழ்ந்திருந்தான். புலமையிற் சிறந்த பேரரசனாய் வாழ்ந்த அவன், பெரும் புலவர் ஒருவரைத் தன் ஆருயிர் நண்பராகப் பெற்ற பெருமையும் உடையவன். அவன் அவைக் களப் புலவராய் விளங்கிய பொய்கையார், பாசறைக்கண் அவன் வேழத்தை வென்று அடக்கியதையும், மூவனை வென்று அடக்கியதையும், மூவனை வென்று அவன் பல்லைக் கோட்டைக் கதவில் அழுத்தியதையும் பாடிப் பாராட்டியுள்ளார். இரும்பொறைபால் பரிசில் பெற வந்தவர்களை வழியிடையில் கண்டு, பெரியோர்களே! நீங்கள் தொண்டி நகர் வாழும் அரசன்பால் செல்கின்றீர்போலும், மதுவளம் மிக்க அத்தொண்டிமா நகரே எம் ஊர்; அந்நகர்வாழ் அரசனே எம் தலைவன். அவனிடம் செல்லும் நீவிர், ‘ஐய! நீ போரில் வெற்றி பெறுந்தோறும், அவ்வெற்றியை வாழ்த்திப் பாராட்டும் பொய்கையாரை வழியிடையே கண்டோம்’ என்று கூறுங்கள். அவனைப் பாடிப் பாராட்டும் நீங்கள், அவன் புகழ் பாடும் என்னையும் மறவாது பாராட்டுங்கள். அப்பாராட்டு, பெரும் பரிசில் பெறத் துணை புரியும்” என்று கூறியதாகப் பாடிய பாட்டில், அவன் ஊரையே தம் ஊராகவும், அவனையே தம் தலைவனாகவும், அவன் புகழ் பாடுவதையே, தம் வாழ்வின் பயனாகவும் கொண்டு உரிமை பாராட்டும் புலவர்தம் பெருமைதான் என்னே![5]
கழுமலப் போரில் வெற்றி கண்ட சோழன் செங்கணான், செங்கண்மால் எனவும், செங்கன் சினமால் எனவும் அழைக்கப்பெறுவான். இவன் கழுமல வெற்றியை அறிவிக்கும் சங்க இலக்கியங்கள், இவன் வரலாறு அறியத் துணை புரிந்தில. இவன் கழுமல வெற்றியைப் பாராட்டும் களவழி நாற்பது என்ற நூல், இவனைப் ‘புனல் நாடன்’, ‘நீர் நாடன்’, ‘காவிரி ‘நாடன்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் இவன் நாடு சோணாடு என்பதையும், ‘செங்கண்மால்’, ‘செங்கண்சினமால்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் இவன் பெயர் செங்கணான் என்பதையும், ‘இயல்திண் தேர்ச்செம்பியன்’, ‘புனைகழல்கால் செம்பியன்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் சிபி பிறந்த சோழர் குலத்தவன் என்பதயும், ‘அருமணிப்பூண் ஏந்து எழில் மார்பு இயல்திண் தேர்ச் செம்பியன்’, ‘அடர்பைம் பூண்சேய்,’ ‘பொன்னார மார்பின் புனை கழல்கால் செம்பியன்,’ ‘கண்ணார் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன்’ என்ற தொடர்களால் பெயரிட்டு அழைப்பதன் மூலம், மணியாரமும், மலர் மாலையும் விளங்கும் மலர்ந்த மார்பையும், வீரக்கழல் கட்டிய கால்களையும் உடைய இவன் அழகுத் திருவுருவின் நலம் இத்தகைத்து என்பதையும், ‘அதிராப் போர்ச் செங்கண்சினமால்’, ‘மடங்கா மறமொய்ம் பின் செங்கண் சினமால்’, ‘செருமொய்ம்பின் சேய்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் வீரம் இத்தகையத்து என்பதையும், முல்வேள் மனைமுழங்கு போர்த்தானைச் செங்கண்சினமால்', 'தடந்து இடம் கொள்வான், தளை அவிழும் தார்ச்சேய்' ’கொற்றவேல் தானைக் கொடித்திண்தேர்ச் செம்பியன்’, கொய்சுவல் மார்பின் கொடித்திண்தேர்ச் செம்பியன்' எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் வேற்படை, வாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகியவற்றின் கொற்றம் இத்தகைத்து என்பதையும், கொங்கரை அட்ட களத்து' எனவும், ’வஞ்சிக்கோ அட்ட களத்து' எனவும் கூறி, இவன் வென்றது கொங்கு நாட்டாராகிய சேரரையும் வஞ்சிமா நகரின் வேந்தனாகிய கணைக்கால் இரும்பொறையையும் ஆம் என்பதையும் அறிவிக்கின்றது.
சேக்கிழார் இயற்றிய, திருத்தொண்டர் புராணம் என்ற பெயர் பெற்ற பெரிய புராணம் இவன் வரலாறு தவித்துக் கூறுவது.
சோணாட்டில் காவிரியாற்றங்கரையில் ஒரு காடு இருந்தது. அக்காட்டில், ஒரு வெண் நாவல் மரத்தின் கீழ்ச் சிவபெருமானின் திருவுருவம் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதைத் தான் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாய், ஒரு வெள்ளை யானை பார்த்தது. அன்று முதல், தன் துதிக்கையால் தூயநீர் கொண்டுவந்து அத்திருமேனியை ஆட்டியும், மணம் வீசும் மலர்க் கொத்துக்களைக் கொணர்ந்து அப்பெருமானுக்குச் சூட்டியும் வழிபடத் தொடங்கிற்று. அதனால், அக் காடும் அன்றுமுதல் திருவானைக்கா எனப் பெயர் பெற்றது. இது நிற்க.
இறைவன் வீற்றிருக்கும் அவ்வெண்நாவல் மரத்தில் சிலந்தி ஒன்றும் வாழ்ந்திருந்தது அது சிவன் திருமுடியில், யானை சூட்டிய மலர்களையும், மரம் செடிகளின் இலைகளையும் பார்த்தது. யானை அன்பால் சூட்டியன அவை என்பதை அது அறியாது. காற்றால் அலைப்புண்டு உதிர்ந்த காட்டுச் சருகுகள் என்றே அவற்றைக் கருதிற்று. இறைவன் திருமுடியில் சருகுகள் உதிர்வதைக் கண்டு, அதன் அன்புள்ளம் கலங்கிற்று. உடனே, அவ்விறைவன் திருமுடிக்கு மேலே, தன் வாய் நாலால் வலை பின்னி, விதானம் அமைத்தது.
மறு நாள், வழக்கம்போல் வழிபாடாற்ற வந்த வெள்ளை யானை, அச்சிலந்தி வலையைப் பார்த்தது. இறைவன் திருமுடிமேல் எச்சில் நூலால் வலை இயற்றி இருப்பது தூய்மைக் குறைபாடாம் என்று கருதித் தன் துதிக்கையால் அவ்வலையை அழித்து விட்டு, வழிபாட்டையும் முடித்துக்கொண்டு போய் விட்டது. அதன் பின்னர் ஆங்கு வந்த சிலந்தி வலை அழிந்து போயிருப்பதைப் பார்த்து வருந்திற்று. ஆயினும் அது. அழிந்தது எவ்வாறு என்பதை அறியாதே, மீண்டும் வலை பின்னி வைத்துச் சென்றது.
இவ்வாறு, சிலந்தி வலை பின்னுவதும், யானை அவ்வலையை அழித்து இறைவன் திருமுடியில் காட்டு மலர்களையும் இலைகளையும் இட்டுச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், சிலந்திதான் வலை பின்னுகிறது; அது அதன் அன்பின் அறிகுறி என்பதை யானை அறியாது; யானை தான் வலையை அறுத்துவிட்டுக் காட்டுச் சருகுகளை இட்டுச் செல்கிறது; அது அதன் வழிபாட்டின் விளைவு என்பதைச் சிலந்தி அறியாது. ஒரு நாள் யானை வழிபாடாற்ற வருங்கால், ஆங்கிருந்த சிலந்தி உண்மையை அறிந்து கொண்டது. சிலந்திக்கு அடங்காச் சினம் பிறந்துவிட்டது; இத்தனை நாட்களாக, இதைச் செய்து வந்தது இந்த யானைதானோ? இனியும் இதை உயிரோடு விட்டு வைப்பது கூடாது என்று துணிந்தது. உடனே மரத்தை விட்டு இறங்கி, யானைத் துதிக்கையின் துளையுட் புகுந்து சென்று கடித்துவிட்டது. அது பொறுக்கமாட்டாத யானை, துன்பத்தால் துடித்து வீழ்ந்து இறந்தது. வீழ்ந்த யானை துன்ப மிகுதியால், தன் துதிக்கையைத் தரையில் ஓங்கி ஓங்கி அறைந்ததால், அதன் உட்புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது.
ஈருயிர்களின் இறவாப் பேரன்பைக் கண்ட இறைவன், வெள்ளானைக்கு வேண்டும் வரங்களை வழங்கிவிட்டுச், சிலந்திக்குச் சோழர் குலத்தில் பிறந்து, பேரரசு செலுத்தும் பெரு வாழ்வை அளித்தான்.
இஃது இவ்வாறாகச், சோணாட்டில், சுபதேவன் என்பான் அரசோச்சியிருந்தான். அவனும், அவன் மனைவி கமலவதி என்பவளும், தில்லையில் திருக்கூத்தாடும் இறைவன்பால் குறையா அன்புடையராவர். அவர்கள் தமக்கு மகப்பேறில்லா மாசினைப் போக்குமாறு, அம்மன்றாடியை மன்றாடி வேண்டிக்கொண்டனர். அவன் திருவருளால் கமலவதி இறுதியில் கருவுற்றாள். அவள் வயிற்றில் மகவாய்ப் பிறக்குமாறு சிலந்தியின் ஆருயிர்க்கு அப்பரமன் ஆணையிட்டான். அவ்வாறே, சிலந்தி, சோழர் குல மாதேவியின் வயிற்றில் மகவாய் வந்து தோன்றிற்று.
கருப்ப நாள் நிரம்ப மகப்பெறும் நாழிகையும் நெருங்கி விட்டது. அக்காலை, காலத்தின் பயனறியும் கணக்காளர், பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேல் பேரரசனாய்ப் பெருமை பெறுவான் என்றனர். அது கேட்ட அத்தாய், தன் மகன் தன்னேரில்லாத் தனியரசு செலுத்த வேண்டும் என்ற தணியா வேட்கை உடையவளாய், தன் உயிர் போவதையும் பொருட்படுத்தாது, பிள்ளைப் பேற்றினை ஒரு நாழிகை கழித்துப் போட்டு மகவீன்று, அம்மகிழ்ச்சி நிறை மனத்தோடே மறைந்து விட்டாள்.
பிறந்த செல்வனுக்குச், சுபதேவன், செங்கண்ணான் எனச் சிறப்புப் பெயரிட்டுச் சீராட்டி வளர்த்தான். கற்கவேண்டிய கலைகளை யெல்லாம் கற்றுக் காளைப் பருவம் பெற்றான், கோச்செங்கணான். சுபதேவன், நாடாள் உரிமையை அவன்பால் ஒப்படைத்துவிட்டுக் காடு சென்று, கடுந்தவம் பல புரிந்து இறுதியில் கண்ணுதலான் கழலடி சேர்ந்தான்.
கோச்செங்கணான், அரியணை அமர்ந்து, தன் கொற்றமும் வெற்றியும் விளங்க ஆட்சி புரிந்து வந்தான். நாடு நலம் பெற்றுவிட்டது; இனி அதற்கு நலிவு இல்லை என்ற நிலை பெற்றுவிட்டதும், தன் கருத்தை இறைவன் திருப்பணியில் போக்கினான்; சோணாட்டில் இறைவன் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளானோ அங்கெல்லாம் திருக்கோயில் அமைக்கும் அரிய தொண்டினை மேற்கொண்டான். தன் பழம் பிறப்பின் பெருமையை அறிந்து கொண்டமையால், அத்திருவானைக்காப் பெருமானுக்குக் கோயில் எடுத்தும், அக்கோயில் உள்ளே வெண்ணாவல் வளர்த்தும் வழிபாடாற்றினான் அரசன் கருத்தறிந்த அவன் அமைச்சர்களும், சோணாடு முழுவதும், சிவன் கோயில்களை அமைத்து, அவற்றில் குறைவற நிகழ வேண்டிய வழிபாட்டிற்கு வேண்டிய அமுதுபடி முதலான நிபந்தங்களையும் உண்டாக்கி வைத்தனர்.
இறைவனுக்குத் திருக்கோயில் அமைக்கும் அரிய பணி மேற்கொண்ட கோச்செங்கணான், அப்பணி குறைவற நிறைவேறிய பின்னர், இறைவன் உறையும் பெரிய கோயிலாகிய தில்லை மாநகர் சென்று சேர்ந்தான்; ஆங்கு ஆடும் பெருமானை அன்புருக வழிபட்டிருந்த வேந்தன், அக்கோயிவில் வழிபாடு செய்யும் அந்தணர்க்கு வாழிடம் நன்கு வாய்க்காமை கண்டு, அவர்க்கெனப் பெரிய மாளிகைகள் பல அமைத்துத் தந்தான்.இவ்வாறு அன்பு நெறியிலும், அரசியல் முறையிலும் சிறந்தோனாய், விளங்கிய செங்கணான், இறுதியில் இறைவன் திருவடி நிழல் அடைந்து இறவாப் பெருநிலை பெற்று விட்டான். இதுவே சேக்கிழார் கூறும் செங்கணான் வரலாறு.
“வெண்நாவல் இறைக்கொளிநூல் பந்தர் செய்த
வியன் சிலம்பி அது அழிந்த வெள்ளா னைக்கை
உள்நாடிக் கடித்தஉடல் ஒழியச், சோழன்
உயர்குலத்துச் சுபதேவன் கமலத்து ஓங்கும்
பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கண்
பெருமானாய்ப், பெருங்கோயில் பலவும் கட்டிக்
கண்ணார்வித் துயர்தில்லை மறையவர்க்கும் உறையுள்
கனகமய மாக்கிஅருள் கைக்கொண் டாரே”
என்ற ஆசிரியர் உமாபதியார் ஆக்கிய திருத்தொண்டர் புராண சாரச் செய்யுள், அவ்வரலாற்றைச் சுருங்க உரைப்பதும் காண்க.
அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்கணானே என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர்கின்றன.
இவ்வாறு, சுத்தசைவனாய், சிவத்தொண்டு புரிந்தவனாய், சைவசமய ஆசிரியர்களால் பாராட்டப்பெற்றவனாய செங்கணான், வைணவப் பெரியார்களாய், திருமங்கை ஆழ்வாராலும், பொய்கையாழ்வாராலும் பாராட்டப் பெற்றிருப்பது, செங்கணானின் எம்மதமும் சம்மதம் என்ற பரந்த சமரச சமய உள்ளத்தை உணர்த்துவதாகும். ‘உலகம் ஆண்ட தென்னாடன், குடகொங்கன், சோழன், ‘தென் தமிழன்’'வடபுலக்கோன்,’ ‘கழல், மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத், தெய்வாள் வலம் கொண்ட சோழன்.’ ‘விறல் மன்னர் கிறல் அழிய வெம்மா உய்த்த செங்கணான்,’ ‘புடை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த தேராளன்,’ என அவன் வெற்றிகளை விளங்கப் பாடிய திருமங்கை ஆழ்வார், ‘இருக்கு இலங்கு திருமொழிவாய் எண்தோள். ஈசற்கு எழில் பாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்’ என அவன் சிவத் தொண்டினையும் பாராட்டியிருப்பது, அவனுக்குச் சிறப்பன்றோ?
- ↑
“நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்ஙனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்கு கதிர் அலமரும் கழனியும்
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே.”–புறநானூறு : 49
- ↑
“கானல்அம் தொண்டிப் பொருநன்; வென்வேல்
தெறல் அரும்தானைப் பொறையன்; பாசறை
நெஞ்சம்நடுக்கு உறூஉம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிது கண்படுப்பக்
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை.”–நற்றிணை: 18
- ↑
“பொய்கை நாரை போர்வில் சேக்கும்;
நெய்தல் அம்கழனி நெல் அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித், தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!”
–புறநானூறு: 209
- ↑
“மூவன், முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்
கானலம் தொண்டிப் பொருநன்.”
–நற்றிணை: 18
- ↑
“கள் நாறும்மே கானல்அம் தொண்டி;
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;
அன்னோன் படர்தியாயின், நீயும்
எம்மும் உள்ளுமோ. முதுவாய் இரவல!
அமர் மேம் படூஉம் காலை, நின்
புகழ்மேம் படுகளைக் கண்டனம் எனவே.”
–புறநானூறு ; 48