கழுமலப்போர்/போரின் பின் விளைவு
6. போரின் பின் விளைவு
கைப்பற்றிய கணைக்கால் இரும்பொறையோடு உறையூர் வந்து சேர்ந்தான் செங்கணான், போரில் தோற்ற பகையரசர்களைக் கைப்பற்றிச் சிறை வைக்கும் போதும், அவர் அரசர் என்பதை மறவாது, மதிப்போடே நடத்துதல் வேண்டும் என்ற தமிழரசர்களின் போர் அறப் பண்பினை அறியாதவனல்லன் செங்கணான். ஆயினும், படைத் தலைவன் பழையனை இழந்த துன்பம் அவன் உள்ளத்தில் பசுமையோடிருந்தது. வென்று துரத்த முடியாத கொங்கரை வென்று துரத்திய வேற்படை மிக்க அவ்வீரனை, ஆறு படைத் தலைவர்களை, ஒரே களத்தில் அழித்துக் கொன்ற ஆற்றல் உடைய அவ்வீரனைக் கொன்றவன் கணைக்கால் இரும்பொறை என்பதால், செங்கணானுக்கு அவன்பால் கொண்ட சினம், அவன் சிறையுற்ற பின்னரும் தணிந்திவது. அவனை அவன் வாழ் நாள் முழுதும் சிறையில் வைத்துச் சிறுமை செய்யவேண்டும்; பழையனைக் கொன்றமைக்குப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே செங்கணான் உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. அதனால், அவனைக் குடவாயில் என அழைக்கப்பெறும் கும்பகோணத்திற்குக் கொண்டு போகும்படி ஆணையிட்டான். சோணாட்டுப் பெரிய சிறை அங்கு இருந்தது. அரிய காவல் உடையது. அழிக்க முடியாத அரண் பெற்றது. அதனுள் அடைக்கப்பெற்றவர் எவ்வளவு முயன்றாலும், வெளியேறிப் பிழைத்துப் போவதோ, வெளியார் எவ்வளவு பெரும்படை கொண்டு வளைத்துக்கொண்டாலும், அகத்தில் அடையுண்டு கிடப்பாரை விடுதலை செய்துகொண்டு போவதோ இயலாது. அஃது அவ்வளவு அரிய காப்புடைமையால், சோழர்கள், தம் அரச செல்வங்களை அக்கோட்டைச் சிறைக்குள்ளேயே வைத்திருந்தனர். மகள் உள்ளத்தில் காதல் அரும்பு மலரத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த ஒரு தாய், அம்மகள், அதனால் கெட்டழிந்துவிடக் கூடாது எனும் கருத்துடையளாகி, அவள் வீட்டைவிட்டு வெளிச் செல்லாமை குறித்து ஏற்படுத்தும் கட்டும் காவலும், எவ்வளவு அழிக்கலாகா ஆற்றல் உடைய ஆகுமோ, அவ்வளவு ஆற்றல் வாய்ந்தன, குடவாயிற் கோட்டத்துக் கட்டும் காவலும் எனக் கூறியுள்ளார், அவ்வூரில் வாழ்ந்திருந்த புலவர் ஒருவர்[1]
அந்தக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில், சேர நாட்டுக் கொற்றவனை அடைத்த பின்னரே, செங்கணான் உள்ளம் சினம் ஆறிச் சிறிதே அமைதியுற்றது.
கழுமலப் போர் முடிவையும், கணைக்கால் இரும்பொறை சிறைப்பட்டதையும் கேட்டார் புலவர் பொய்கையார். தம் புலமைப் பெருமையை நிலைநாட்டுவான் வேண்டி, ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகராகச் சென்றுகொண்டிருந்தமையால் கணையனின் கழுமலப் போர் முயற்சியை அறிந்திலர். அறிந்திருந்தால், அது நிகழாவாறு தடுத்திருப்பர். அவர் அதை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போனமையால், கழுமலப் போர் நிகழ்ச்சியை அவரால் தடுத்தல் இயலாது போயிற்றோ, அல்லது, அதை அறிந்தும், மூவன் போன்ற பெருவீரனையே வென்று, அவன் வெண்பற்களைத் தன் தொண்டி நகர்த் தலைவாயில் கதவில் அழுத்தி வைத்த மாவீரனாகிய கணையன் தோல்வி காணான் என்ற நம்பிக்கையால், அவர் அவன் முயற்சியைத் தடுத்திலரோ அறியோம். போர் நிகழ்ந்துவிட்டது. அவனும் சிறைபுகுந்துவிட்டான்.
அது கேட்கவே அவர் ஆறாத்துயர் உற்றார். கெட்ட காலை விட்டோடும் கொடுமையை அவர் உள்ளம் அறியாது. நண்பனை அவன் செல்வக்காலை விட்டு வாழினும், அவன் அல்லற்காலை அகலுதல் கூடாது எனக் கருதும் ஆழ்ந்த நட்புணர்வு உடையவர் புலவர். பெருஞ்சோறு அளித்துத் தம்மைப் புரந்த அக்காவலனுக்குச் சோழன் அமைத்திருக்கும் காவலை அகற்றி, அவனை மீண்டும் அரியணையில் அமர்த்தி மகிழவேண்டும் என்று விரும்பினார் புலவர்.
செங்கணானை அவர் அதற்குமுன் அறியார் ஆயினும், அவன் இயல்பு யாது என்பதை அவர் கேட்டிருந்தார். “புலவர்கள்பால் பெருமதிப்பு உடையவன்; அவர் கூறும் அறவுரைகளைப் பொன்னேபோல் ஏற்றுப் போற்றும் பேருள்ளம் உடையான். அவனுக்குக் கணையன் பால் வந்த சினமெல்லாம், கணையன் அவன் பகைவராகிய கொங்கரைத் தன் படைத் துணைவராகக் கொண்டான் என்ற அவ்வொரு நிகழ்ச்சிக்கே; கணையன் மீது அவனுக்கு நேரான பகை கிடையாது; ஆகவே, அக்கொங்கர் அறவே அழிவுற்றுப் போன இந்நிலையில் அவன் சினமும் சிறிது ஆறியிருக்கும். இந்நிலையில் அவன்பால் என்போலும் புலவர்கள் சென்று வேண்டினால், அவன் கணையனைச் சிறைவீடு செய்ய மறுக்கான்” என்று நம்பினார். நம்பியவாறே, செங்கணானைச் சென்று காண அப்போதே புறப்பட்டார்.
அந்நிலையில், புலவர் உள்ளத்தில், மற்றும் ஒரு புதிய உணர்வு உருப்பெற்றது. செங்கணான், தம் வேண்டுகோளைச் செவிமடுக்க வேண்டுமாயின், அவனுக்குத் தம்பால் ஒரு பற்று உண்டாதல் வேண்டும். அது உண்டாக வேண்டுமாயின், அவன் உள்ளம் உவக்கும் ஒன்றைத் தாம் செய்தல் வேண்டும். அரசர்கள் புகழ் விரும்புபவர்கள். பிற புகழினும், வெற்றிப் புகழையே பெரிதும் விரும்புவார்கள். ஆகவே எந்த நிகழ்ச்சியால் பெற்ற மகிழ்ச்சி, அவன் மனத்தில் மண்டிக் கிடக்கிறதோ, அம்மகிழ்ச்சி மேலும் மிகும்படி செய்தல் வேண்டும். அவன் கழுமலப் போரில் பெற்ற வெற்றியைப் பொருளாகக் கொண்டு, பாக்கள் பல பாடி அவனைப் பாராட்ட வேண்டும் அவை கேட்டு, அவன் தம்பால் பற்றுக்கொள்ளும் அந்நிலை நோக்கி, நண்பன் விடுதலைக்கு வழி காணுதல் வேண்டும் என்று கருதினார்.
அக்கருத்து எழவே, உறையூர்ப் பெருவழியில் சென்ற அவர் போக்கு, கழுமல நகர் நோக்கிச் செல்லும் நீண்ட வழியில் சென்றது. கழுமலப் போர்க் காட்சியைக் கண்டார். கலங்கிற்று அவர் உள்ளம். கண்கள் நீர் சொரிந்தன. அந்நெகிழ்ந்த உள்ளத்தோடு, தம் புலமை உணர்வையும் ஒன்று கூட்டினார். உருப் பெற்றன நாற்பது உயிரோவியங்கள். களவழி நாற்பது எனப் பிற்காலத்தவரால், தொகுத்து வரிசை செய்யப்பெற்ற அப்பாக்கள் நாற்பதும், நவில்தொறும் நயம் பயக்கும் நலம் உடையவாய் அமைந்தன.
உயிரோவியங்கள் நாற்பதும் எழுத்துருவம் பெற்றன. உடனே அவ்வேட்டோடு, புலவர் பொய்கையார் உறையூர் அடைந்தார். பொய்கையார் தன் பகைவன் நண்பர் என்பதைச் செங்கணான் நன்கு அறிவான். ஆயினும், அவன் உள்ளத்தில், வழிவழியாக வந்து ஊறிக் கிடக்கும் தமிழ்ப் பற்று, அவரை வரவேற்று, வழிபாடாற்றத் தூண்டிற்று. புலவர்க்குரிய பெருமையோடு வரவேற்றான். வழிநடை வருத்தம் தீர அவர் விரும்பும் உணவளித்து ஓம்பினான். புலவர்க்கு உடல் தளர்ச்சி போயிற்று. ஆனால், உள்ளத்தளர்ச்சி போகவில்லை. அது தீர்த்துக்கொள்ள வேண்டிய சமயத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி, அவன் அரண்மனையில் காத்துக் கிடந்தார்.
அரசியல் பணிகளை முடித்துக்கொண்டு, செங்கணான் புலவர் பக்கத்தில் வந்து அமர்ந்தான். உடனே புலவர் தம் கடமையைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். ஏட்டை மெல்ல அவிழ்த்தார். ஒவ்வொரு பாட்டாகப் பாடிப் பொருள் உரைக்கத் தொடங்கினார். தமிழ் அறிந்தவன் செங்கணான், அதனால், அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருட் சிறப்பு, சொற் சிறப்பு, ஒலிச் சிறப்பு ஆகிய நயங்களை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றான். ஒவ்வொரு பாட்டும், அவன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பாயும் இன்ப வெள்ளத்தை அதிகப்படுத்திக்கொண்டே வந்தது. இறுதிச் செய்யுளைப் பாடி முடித்தார் புலவர். அரசன் இன்பத்தின் எல்லையைக் கண்டு விட்டான். தன் நாடு நலம் அனைத்தும் அந்நாற்பது பாக்களில் ஒரு பாவிற்கே ஈடாகாது என உணர்ந்தான். அத் தகைய பாக்கள் நாற்பது பாடிய புலவர்க்கு எதையும் அளிக்கலாம், எவ்வளவு வேண்டுமாயினும் அளிக்கலாம் என்றது அவன் உள்ளம்.
அரசனின் அவ்வுள்ள உணர்வை உணர்ந்து கொண்டார் புலவர். இருக்கை விட்டு மெல்ல எழுந்தார். அரசனை அன்போடு விளித்தார். தம் இரு கைகளையும் விரித்து நீட்டி, “வேந்தே! என் உள்ளம் விரும்பும் ஒருபொருளை வேண்டிப் பெறவே உன்பால் வந்தேன். உன்னால் கொடுக்கக் கூடியதே அப்பொருள், அதை அளிக்கும் அருள் உள்ளம் உனக்கு உண்டாதல் வேண்டும்” என்று தன் மன வேட்கையை மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார். புலவர் கேளா முன்பே, அவர் விரும்புவது எல்லாம் கொடுக்கத் துடிக்கும் உள்ள முடையனாகிய அவன் அவர் வாய் திறந்து கேட்பதை மறுப்பனே? அவர் வேண்டுகோள் அவன் காதில் வீழ்ந்ததோ இல்லையோ, “பெருந்தகையீர்! தாங்கள் என்பால் பெற வேண்டுவது எதுவேயாயினும் மனம் உவந்து தருவேன்; தயங்காது கேளுங்கள்” என்று தன் இசைவினை அளித்தான். உடனே புலவர், “அரசே! கழுமலப் போரில் உன்னால் சிறை செய்யப்பெற்ற காவலன், கணைக்கால் இரும்பொறை, என் நண்பன்; என்னைப் பல்லாண்டு புரந்தப் பெரிய வள்ளல். மானம் முதலாம் மாண்பு நிறை குணங்கள் உடையான். அத்தகையான் சிறையுண்டிருப்பது காண என் சிந்தை நைந்து உருகுகிறது. அவன் விடுதலையில் என் உயிர் வாழ்வு தங்கியுள்ளது. இதுவே உன்பால் வேண்டுவது” என்று கூறினார்.
புலவர், தம் வறுமை தீரப் பொன் கேட்பார், பொருள் கேட்பார், நாலுகாணி நிலம் கேட்பார்; நாட்டு வருவாயில் பங்கு கேட்பார் என எதிர்நோக்கிய செங்கணான், அவர் தம் நலத்தை நாடாது, தம் நண்பன் நல்வாழ்வு குறித்து வேண்டுவது கண்டான். அவர் புலமையின் பெருமை கண்டு அவர்பால் கொண்ட மதிப்பினும், தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் அவர் பேருள்ளம் கண்டுகொண்ட மதிப்புப் பெரிதாயிற்று. அந்நிலையே அவன் உள்ளம் நெகிழ்ந்தது. கணைக்கால் இரும்பொறைபால் கொண்டிருந்த காழ்ப்பு, கணப் பொழுதில் மறைந்துவிட்டது. அவனை விடுதலை செய்ய இசைந்தான். புலவரையும் உடனழைத்துக் கொண்டு, குடவாயிற் கோட்டத்திற்கு அப்போதே விரைந்து சென்றான்.
புலவர் பாடிய செந்தமிழ்ப் பாக்கள் மீது கொண்ட பற்றுள்ளத்தால், கணையன் தன் குலப் பகைவர்க்குத் துணை புரிந்தவன், தன் படைத் தலைவன் பழையனைக் கொன்ற பெரிய பகைவன் என்பதையெல்லாம் மறந்து, அவனை விடுதலை செய்ய முன் வந்த செங்கணான் தமிழ் உள்ளம் கண்டு உலகம் அவனைப் பாராட்டிற்று. அப்பாராட்டுரைகளுள் சில வருமாறு :
“பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்.”
—இராசராச சோழன் உலா.
“பொறையனைப் பொய்கை கவிக்குக்
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்.”
—குலோத்துங்கச் சோழன் உலா.
“இன்னருளின்
மேதக்க பொய்கை கவி கொண்டு, வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திபன்.”
—விக்கிரம சோழன் உலா.
“களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய, உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசு இட்ட பரிசு.”
—கலிங்கத்துப்பரணி.
புலவர் அரும்பாடு பட்டார்; அரசனும் அதற்கு இசைந்தான். ஆயினும் அவர் நினைந்தது நிகழவில்லை. நினைக்க முடியாதது நிகழ்ந்துவிட்டது. அவர் எண்ணத்திற்கு எதிர்மாறானது நடந்துவிட்டது.
குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்தான் சேரமான். அவன் அந்நிலையை எதிர்பார்த்தவன் அல்லன். அந்நிலையை, அவன் உள்ளமும் தாங்கிக் கொள்ளாது. வெற்றிப் புகழ் பெற விரும்பி களம் புகுந்த அவன், தோற்றுச் சிறைப்பட்டமைக்குப் பெரிதும் நாணினான். வெற்றி வாய்க் காது போயினும், வீரப் புண் பெற்று விண்ணுலகடையும் வாய்ப்பும் கிடைத்திலதே என்று எண்ணி எண்ணி வருந்தினான். அவ்வுள்ளத் துயர் ஒன்றினாலேயே உயிர்போகும் நிலை பெற்றுவிட்ட அவனுக்கு, அத்துயரை மேலும் மிகுவிக்கும் ஒன்று நடைபெற்றுவிட்டது.
ஒரு நாள் நீர் வேட்கை மிகவே, சிறைக் காவலரை விளித்து உண்ணு நீர் தருமாறு வேண்டினான். சேரமான் சிறந்த பேரரசனே எனினும், அவர் கண்களுக்கு அவனும் ஓர் சிறைக் கைதியாகவே புலப்பட்டான். மேலும் தங்கள் பெரும் படைத்தலைவன் பழையனைக் கொன்றமைக்குப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற காழ்ப்பு உள்ளமும் அவர்களுக்கு இருந்தது. அதனால், அவன் வேண்டியதைக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அவ்வாறு தாராது போவது தம் கடமையில் தவறியது ஆகுமே என்பதை உணர்ந்தனர். அதனால், அவன் கேட்டபோதே தாராது, காலம் தாழ்த்தித் தந்தனர்; தரும்போதும் அரசன் என்ற மதிப்பு இன்றித் தந்து இழிவுபடுத்தினர்.
காவலர் கொடுமையைக் கண்டான் கணையன். “நட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று” என நினைக்கும் நல்லுள்ளம் உடையான் அவன். அவ்வுள்ளுணர்வு உடையவனே உயர்ந்தோனாவன். தம் நிலையில் தாழும் காலம் வந்துற்ற போதும், தம் மானத்தை இழக்க நினையா மனம் உடையாரை, மானத்தை இழக்க வேண்டிய இன்றியமையாமை வந்துறுமாயின் அந்நிலையில், தம் உயிரை இழந்து மானத்தைக் காக்கும் மாண்புடையாரை, இம்மண்திணி ஞாலத்து மக்கள் எல்லாம், அம்மண்ணுலகம் உள்ளளவும், மதித்து மனத்தகத்தே நிறுத்தி வழிபாடு செய்வர்” என்ற இம் மறங்கெடா மானத்தின் மாண்பினை உணர்ந்த மன்னன், கணைக்கால் இரும்பொறை. ஆதலின், சிறை காவலர் செயல் கண்டு அவன் சிந்தை நொந்தான். அவர் தந்த தண்ணீரை உண்ண மறுத்தது அவன் உள்ளம். அந்நீர் நஞ்சினும் கொடிதாகக் காட்சி அளித்தது அவன் கருத்துக்கு. அதனால், உண்ணு நீர்க்கலத்தை ஒருபால் ஒதுக்கி வைத்துவிட்டான். அவன் நீர் வேட்கை எங்கோ சென்று மறைந்துவிட்டது. அவன் நினைவு எதை எதையோ எண்ணத் தொடங்கிவிட்டது.
போர்க்களம் புகுந்து போரிட்டு, மார்பிலும், முகத்திலும் வீரப்புண் பெற்ற வெற்றி வீரர்க்கே, வானுலக வாழ்வில் இடம் உண்டு. ஆதலின் பிறந்த குழந்தை முதல் இறக்கும் கிழவர்வரை உள்ள எல்லோரும் வீரப் புண்பெற்று வீறுபெற வேண்டும் என்று விரும்பினார்கள், நாடாளும் நல்லவர். அவர்கள், இறந்து பிறந்த குழந்தைக்கும், உருவின்றிப் பிறந்த ஊன் தடிக்கும் வீரப்புண் பெறும் வாய்ப்பு இல்லாமையால், அலை வானுலக வாழ்வை இழந்து விடுதல் கூடாது என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு அவற்றை இடுகாட்டில் சென்று சுடுவதன்முன், தருப்பைப்புல் மீது கிடத்தி, வாளால் இருவேறு துண்டுகளாக வெட்டி, வாள்வடு உண்டாக்கி, “பிற வெற்றி வீரர்க்கு உண்டாகும் வாய்ப்பெல்லாம் இவற்றிற்கும் வாய்க்குமாக” என வாழ்த்திச் சுட்டனர். அத்தகைய பெருவேந்தர் வழியில் வந்த நான், போரில் வெற்றி பெறாது போயினும், வீரப் புண்ணாவது பெற்றேனா இல்லை. வீரப்புண் பெற்று விழுமிய நிலைபெறாது போயினும், உயிரிழந்து மானம் இழக்காத மன்னன் என்ற பெயரையாவது நிலை நாட்டினேனா இல்லை. சங்கிலியால் பிணிக்கப்பெற்று இழுத்துச் செல்லப்படும் நாய் போல், பகைவரால் கையில் விலங்கிடப்பெற்று, சங்குக்கொண்டுவரப்பட்டு இச்சிறையகத்தே அடைக்கப்பட்டுள்ளேன். இந்நிலை வந்துற்றும் என் உயிர் பிரிந்திலது. உயிரிழந்து போகாமை மட்டும் அன்று; அவ்வுயிரை மேலும் ஓம்ப, உண்ணுநீர் அல்லவோ வேண்டினேன். பாணர்க்கும் புலவர்க்கும் வாரி வாரி வழங்க வேண்டிய நான், அவ்வாறு வழங்கிய என் கைகளால், இச்சிறை காவலரை அல்லவோ இரந்து நின்றேன்; அந்தோ என் இழி நிலை இருந்தவாறு என்னே! என்னினும் இழிந்தாரும் இவ்வுலகில் இருப்பரோ! அத்தகையான் என்றும் பிறந்திருக்கமாட்டான். என் ஒருவனாலேயே இம்மண்ணிற்கு அம்மாசு உண்டாகிவிட்டது; இன்னும் என் உயிர் பிரிந்திலதே” என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிற்று அவ்வுள்ளம். அவ்வுள்ள உணர்ச்சிக்கு உருவளித்தது அவன் கை. அக்கருத்தெல்லாம் ஒன்று திரண்டு ஓர் அழகிய பாட்டாக இடம் பெற்றது ஏட்டில். ஏடு அவன் கையில் கிடந்தது. இறந்து வீழ்ந்தது அவன் உடல்.
சேரன் இறந்து வீழ்வதற்கும், செங்கணான் பொய்கையாரோடு சிறைக்கோட்டம் புகுவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் ஓடோடிச் சென்று, சிறைக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தனர். மன்னன் ஒருபால் வீழ்ந்து கிடந்தான். உண்ணுநீர்க்கலம் ஒருபால் உருண்டு கிடந்தது. கையில் ஏடு காட்சி அளித்தது. புலவர் ஏட்டை எடுத்தார். அவர் வாய் பாட்டைப் படித்தது :
“குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?”
—புறநானூறு : 74
மன்னன் மனத்தைப் புலவர் அறிந்து கொண்டார். அவன் மறைவு கண்டு அவர் மனம் மாறாத் துயர் உற்றது என்றாலும், அம்மறைவு, மறையா மாண்புமிக்க இச்செய்யுள் பிறப்புதற்குக் காரணமாயினமை கண்டு களிப்புற்றார். அவன் மானம் இழக்கா மற மாண்பு கண்டு மன்னன் தலை வணங்கினான்.
மன்னன் மனம் மாறியது. போர் போர் என எப்போதும் போர் வெறிகொண்டு வாழ்ந்த செங்கணான் சிந்தை தெளிவடைந்தது. மானமிக்க மன்னன் மறைவிற்குக் காரணமாகிய தன் கொடுமைதீர, அந்நாள் முதல் நல்லற நெறியில் நிற்கத் துணிந்தான். இறைவன் திருக்கோயில் கொண்டிருக்கும் இடம்தோறும் கோயில் அமைக்கும் பணியினை அன்றே தொடங்கினான். இறப்பதற்குள் எழுபது பெருங்கோயில் களைக் கட்டி முடித்தான். அதன் பயனாக, “நல்லான் ஒருவனைக் கொன்ற நயமிலி” என்று நாட்டோரால் பழிக்கத்தக்க அவன், சைவ, வைணவப் பெரியார்களால், தம் அருட்பாடல்களில் வைத்துப் பாராட்டத்தக்க பெருநிலை பெற்றான். அவன் வரலாற்றினை விளங்கப் பாடிய பெரியார்களும், அவன் சிலந்தியாய்ச் சிவத்தொண்டு புரிந்ததும் செங்கணானாய்ச் சிவன் கோயில் கட்டியதும் ஆய, அவன் தொடக்க வரலாற்றினையும், முடிவு வரலாற்றினையும் மட்டும் கூறி, இழிவுடைய அவன் இடைநிலை வரலாற்றினை எடுத்தோதாது மறைந்து விட்டார்கள். இறவாப் பெருநிலை பெற்றுவிட்டான் அவனும்.
- ↑
“வென்வேல், கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே” —அகநானூறு: 60