உள்ளடக்கத்துக்குச் செல்

கழுமலப்போர்/போர் நிகழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

4. போர் நிகழ்ச்சி

சேரமான் கணைக்கால் இரும்பொறை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முகலாய படைத் தலைவர்களோடு கழுமல நகர்க்கோட்டையில் காத்திருந்தான். அக்கால அரசியல் சூழ்நிலையும் அவனுக்கு ஏற்றதாகவே அமைந்திருந்தது. அதுவே சோழன் செங்கணான் அவன் மீது போர் தொடுக்கக் காரணமும் ஆயிற்று.

சேர நாட்டிற்குக் கிழக்கிலும், சோணாட்டிற்கு மேற்கிலும், பாண்டி நாட்டிற்கு வடமேற்கிலும், அதாவது இம்மூன்று நாட்டு எல்லைகளும் ஒன்றுசேரும் இடத்தில், சிறுநிலப்பகுதியைத் தம் உடமையாகக் கொண்டு கொங்கர் என்ற இனத்தவர் வாழ்ந்திருந்தனர். சேர, சோழ, பாண்டியர்களைப் போலவே அவர்களும் மறவர் மரபில் வந்தவராவர். அவர்கள் ஆனிரை ஓம்பும் தொழில் மேற்கொண்டிருந்தனர். கோவை மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தின் தென்பகுதியையும் கொண்டு, கொங்கு நாடு என அழைக்கப்பெற்ற அக்கொங்கர் வாழ் நாடு, நீர்வளம் அற்ற வன்னிலமே வாய்ந்த மேட்டு நிலமாம். அதனால், கொங்கர், தம் ஆனிரைகளுக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஆங்காங்கே எண்ணிலாக் கிணறுகளைத் தோண்டி வைத்திருந்தனர். ஆனிரைகளை எத்திசையில் கொண்டு செல்ல விரும்புகின்றனரோ, அத்திசையில் கொங்கர் சிலர், ஆனிரை செல்வதற்கு முன்பாகவே சென்று, கணிச்சி போன்ற கல் உடைக்கும் கருவிகளின் துணைகொண்டு, கற்களைத் தீப்பொறி சிதறுமாறு உடைத்து, சிறிது சிறிதாக அகழ்ந்து, ஆழ்ந்த என்று கிணறுகளைத் தோண்டி வைப்பர். அக்கிணறுகளும், மேல் நீரும் மிக்க நீரும் உடையலாகாமல், ஆழ் நீரும், அற்று அற்றுக் கசியும் குறை நீருமே உடையவாகும். அந்நீரை நீண்ட கயிறுகளில் சிறு முகவைகளைக் கட்டி இட்டு முகந்து ஆனிரை களுக்கு ஊட்டுவர்.[1]

ஆனிரை வளர்க்கும் அருந்தொழில் மேற்கொண்டு வாழ்ந்த கொங்கர், சிறந்த கொற்றம் உடையவராயும் விளங்கினர். சிறந்த வாட்போர் வீரராய் வாழ்ந்தனர். அரிய பெரிய கோட்டைகளையும் அழிக்கவல்ல பெரிய பெரிய குண்டுக் கற்களை வீசவல்ல கல்கால் கவணை என்ற கருவிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். கொங்கரின் இப்போர்ப்பண்பு, “ஒளிறுவாள் கொங்கர்”, “ஆர் எயில் அலைத்த கல்கால் கவணை நார் அரி நறவின் கொங்கர்” எனப் புலவர்களால் பாராட்டப்பெற்றுள்ளன.

இவ்வாறு ஆனிரை ஓம்பும் தொழில் மேற்கொண்டு ஆற்றல்மிக்க மறவராய் வாழ்ந்த கொங்கர், அவ்வப்போது, தம் அண்டை நாடுகளாய சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் புகுந்து, அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிவந்து, தம் ஆனிரைச் செல்வத்தை வளர்த்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். அதனால், அச் சேர, சோழ, பாண்டியர் மூவருமே கொங்கரைத் தம் பகைக்குலத்தவராகக் கொண்டு, அவரை அழித்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர மன்னன், அவரை வென்று, அவர் நாட்டைத் தன் நாட் டோடு இணைத்துக்கொண்டான்.[2] கிள்ளி வளவன் என்ற சோழர்குலப் பேரரசன், கொங்கரை வென்று புகழ் பெற்றான்.[3] பசும்பூண் பாண்டியன் என்பானும் கொங்கரை வென்று அவர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளைத் தனதாக்கிக் கொண்டான்.[4] இம்முடியுடை வேந்தர்களே அல்லாமல், குறுநிலத் தலைவர்கள் சிலரும் அவரைப் பணியவைப்பதில் பேரார்வம் காட்டியுள்ளனர். ஆய் அண்டிரன் என்ற வேளிர் குலத்தவன், அக்கொங்கரைக் குடகடல்வரை ஒட்டி வெற்றி பெற்றான்.[5]

சோழன் செங்கணான் சோணாட்டு அரியணையில் அமர்ந்திருக்கும் காலத்திலும், கொங்கர் சோணாட்டுள் புகுந்து கொள்ளையிட்டனர். அதனால் அவரை அழிக்க வேண்டும் என்ற ஆர்வம், செங்கணான் உள்ளத்தில் உருப்பெற்றது. அந்நினைப்பு வரப்பெற்றதும், கொங்கரின் படைப் பெருமையையும், அவரை அதற்கு முன் வென்றுள்ள வேந்தர்கள், அவரை வெல்ல மேற்கொண்ட போர் முறைகளையும் எண்ணிப் பார்த்தான். வென்ற வேந்தர்கள், வேற்படையில் சிறந்து விளங்குவதை, அவர்களின் வெற்றியைப் பாராட்டிய புலவர்கள், அவர்களின் வேற்படைகளையும் புகழ்ந்திருப்பதால் உணர்ந்தான். உடனே, அவ்வேற்படையில் சிறந்தான் ஒருவனையே கொங்கரை அழிக்கும் தன் படைக்குத் தலைவனாக ஆக்குதல் வேண்டும் என்று துணிந்தான். அதனால் வேற்படையில் சிறந்த போரூர்த் தலைவன் பழையனைப் படைத் தலைவனாகக் கொண்டான்.[6]

இவ்வாறு கொங்கரை வென்று அடக்குதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செங்கணான் செய்துகொண்டிருக்க, சேரன் கணைக்கால் இரும்பொறை, அக்கொங்கரைத் தன் படைத் துணைவராகக் கொண்டான். இச்செயல் செங்கணான் சினத்தை அதிகப்படுத்தி விட்டது. உடனே கழுமல நகர் நோக்கிச் சோழர் படை புறப்பட்டுவிட்டது. பழையன், சோழர் படைக்குத் தலைமை பூண்டதோடு, அவனுடைய வேழப் படையும், வேற் படையும், சோழர் படைக்குத் துணைப்படையாய் வந்தன.

கழுமல நகரை அடுத்திருந்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில், இருதிறப் படைகளும் எதிர்த்துப் போரிட்டன. சோழர் படையில் பழையன் ஒருவனே களம் புகுந்தான். ஆனால், சேரர் படைடயிலோ, படைத்தலைவர் அறுவருமே பங்கு கொண்டனர். பழையன் வேழப்படையும், வேற்படையும் வீறுகொண்டு போரிட்டன. சேரர் படைக்குப் பெருஞ்சேதம் விளைந்தது. கொங்குப்படை அறவே அழிவுண்டது. களம் எங்கும் பிண மலைகளே காட்சி அளித்தன. பிணம் தின்ன வந்து பறக்கும் பருந்துக் கூட்டத்தின் மிகுதியால், களம் முழுதும் நிழல் படர்ந்தது. சேரர் படைவீரர் அறுவரையும் தனித் தனியே தாக்கிப் போரிட்டுத் திரிந்தான் பழையன். நன்னன் நிலை குலைந்து வீழ்ந்து இறந்தான். ஏற்றை எதிர்நிற்கமாட்டாது இறந்து ஒழிந்தான். அணி பல பூண்டு அமர்க்களம் புகுந்த அழகனாகிய அத்தியும் அழிந்தான். நிகர் அற்றவன், அணுகி நின்று போரிட எவரும் அஞ்சத்தக்க ஆற்றல் உடையவன் எனப் பாராட்டப் பெற்ற கங்கனும் களத்தில் மாண்டான். வடநாடு விட்டுத் தென்னாட்டு அரசியல் வாழ்வை விரும்பி வந்த கட்டியும், வெட்டுண்டு வீழ்ந்தான். வில்வீரனாகிய புன்றுறையும் பொன்றினான்.

படைத் தலைவர் அறுவரும் இறந்துபடவே, சேரர் படை செய்வதறியாது சிதறி ஓடிற்று. பழையன், ஓடும் படைகளை விடாது துரத்திச் சென்று கழுமலக் கோட்டையைப் பாழ்படுத்துவதில் முனைந்தான்; படைத்தலைவர் போர்க்களம் புகக் கள நிகழ்ச்சிகளில் கருத்துடையனாய்க் கழுமலக் கோட்டைக்குள் தங்கியிருந்த கணையன், துணைவந்த கொங்குப் படை அழிவுற்றது; படைத் தலைவர் அறுவரும் இறந்துபட்டனர்; சோழர் படை, இறுதியில் கழுமலக் கோட்டையையும் சுற்றி வளைத்துக்கொண்டது என்ற செய்தியைக் கேட்டுக் கலக்கமும் கடுஞ்சினமும் கொண்டு களம் நோக்கிப் புறப்பட்டான். களம் புகுந்தவன், அத்தனை அழிவிற்கும் சோழர் படைத் தலைவன் பழையன் பேராற்றலே காரணமாம் என்பது அறியவே, அவன் சீனமெல்லாம் பழையன் மீது பாய்ந்தது. அகத்துள அவ்வளவு படையையும் அவன்மீது ஏவினான். கொங்கரின் பெரிய படையையும், படைத்தலைவர் அறுவரையும் வென்ற போர் நிகழ்ச்சிகளால் களைத்திருக்கும் அந்நிலையில், சேரனும், அவன் படையும், புதிய பலத்தோடு வந்து தாக்கவே, பழையன் நிலை கலங்கிவிட்டான். அந்நிலையில் வந்து பாய்ந்த ஓர் அம்பு, அந்தோ! அவன் ஆருயிரைப் போக்கிவிட்டது. வெற்றி வீரன் களத்தில் வீழ்ந்துவிட்டான்.

செய்தி கேட்டான் செங்கணான். கொங்கரை வென்று அழிக்கக் கருதிய தன் கனவை நினைவாக்கிய பெருவீரன், சேரன் படைத் தலைவர் அறுவரை ஒருவனாகவே நின்று வென்ற உரம் உடையான் உயிரிழந்தான் என அறிந்து ஆற்றொணாத் துயர் கொண்டான். அத்துயர், மறுகணமே அடங்காச் சினமாய் மாறிற்று. பழையன் உயிர் போக்கிய கணையனைக் கட்டிப் பிடித்துச் சிறையில் அடைத்துச் சீரழியச் செய்வேன் என வஞ்சினம் உரைத்து வாளெடுத்துக் களம் புகுந்தான்.

சோழன் செங்கணானே களம் புகுந்துவிட்டான் என்பதறிந்த சேரனும் பெரிய தேர் ஏறிப் போர்க்களம் புகுந்தான். இருவர்க்கும் இடையே பெரும்போர் நிகழ்ந்தது. ஆனால், இறுதியில் செங்கணான் நினைத்தது நிகழ்ந்துவிட்டது. தன் படைவன்மையால், படைவலி இழந்துபோகத், தேரும் அழிந்துபோகத் தனித்து நின்ற கணைக்கால் இரும்பொறையின் கையில் விலங்கிட்டுக் கைப்பற்றிக்கொண்டான். கழுமலக்கோட்டை சோழர் உடைமை ஆயிற்று, செங்கணானை, வெற்றி மாலை சூட்டிச் சிறப்பித்தார்கள்.

நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்னரும் கடும்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை, என்றாங்கு
அன்று அவர் குழீஇய அளப்பரும் கட்டூர்ப
பருந்துபடப் பண்ணிப் பழையன் படடெனக்,
கண்டு அது நோனான் ஆகித், திண்தேர்க்
கனையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும்பூண் சென்னி.

—அகநானூறு : 44

சிறை பிடிக்கப்பட்ட சேரன் நிலையைக் காண்பதற்கு முன், கழுமலப் போர்க்களத்தின் கொடுமையினைச் சற்றுக் காண்போமாக.

  1. “பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
    சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
    கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
    ஆகெழு கொங்கர் நாடு.” —பதிற்றுப் பத்து : 22

  2. “ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த
    வேல்கெழுதானை வெருவரு தோன்றல்!”

    —பதிற்றுப் பத்து : 32

  3. “கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!”

    —புறநானூறு : 373

  4. “கொங்கர் ஓட்டி
    நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்”

    —அகநானூறு : 253

  5. “கொங்கர்க்
    குடகடல் ஓட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே.”

    —புறநானூறு : 130

  6. “கொற்றச் சோழர் கொங்காப் பணீஇயர்
    வெண்கோட்டு யானைப் போலர் கிழவோன்
    பழையன் வேல்வாய்த்தன்ன” —நற்றிணை : 10