கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/11
பிரிட்டிஷ் வழக்குத் தொகுப்புப் பயமுறுத்தலையும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் இரண்டு முறைகள் எதிர்கொண்ட கவியரசி சரோஜினி தேவி, அந்த இரு தடவைகளிலும், பிரிட்டிஷாரின் அச்சுறுத்தல்களைத் தவிடு பொடியாக்கி வெற்றி கண்டார்.
அதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி அமெரிக்காவிடம் பல உதவிகளைப் பெறவும், அதே நேரத்தில் உலகம் நம்பும்படியாகவும், இந்தியாவிலுள்ள மக்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாகப் பொய்ப் பிரச்சாரங்களைச்செய்து வந்தது.
இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆதரவாளர்களைக் கைக்கூலிகளைப் போலப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து, "பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் வளமாகவே வாழ்கிறார்கள்" என்ற உண்மையற்ற நம்பிக்கைகளை உலகுக்கு வழங்கி அரசியல் பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்டிருந்தது.
அந்த பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறியும் கடமை காங்கிரஸ் மகா சபைக்கு உண்டல்லவா? அதனால் காங்கிரஸ், லாலாலஜபதிராய், டாக்டர் சுதீந்திரபோஸ் போன்ற தலைவர்களை அனுப்பி எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டது!
ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியத் தலைவர்களது பேச்சாற்றல் எடுபடவில்லை; பிரிட்டிஷ் ராஜ தந்திர சூழ்ச்சிகளை முறியடிக்க முடியவில்லை என்ற உண்மை வெளிநாடுகளுக்கும், காந்தியடிகளுக்கும், காங்கிரஸ் மகா சபைக்கும் புரிந்தது.
இந்த நேரத்தில் இந்தியாவிற்கு வந்து திரும்பிய கிறித்துவப் பாதிரிமார்களும் பிரிட்டனுக்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதனால் பிரிட்டனுடைய கோயாபல்ஸ் பிரச்சாரமே ஓங்கி நின்றது. வெளிநாட்டார்கள் அதையே நம்பி வந்தார்கள்.
பிரிட்டிஷாருடைய உண்மைகளை நம்ப விரும்பாத அமெரிக்கா, காந்தியடிகளாரை அமெரிக்கா வருமாறு பல முறை வேண்டி அழைத்தார்கள். ஆனால், மகாத்மாவுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு ஏற்படாத நெருக்கடிகள் இந்திய அரசியலில் ஏற்பட்டன. அதனால் அவர் அமெரிக்கா செல்ல மறுத்தார். காரணம், காந்தியடிகள் ஒரு அடிமை நாட்டுத்தூதுவராக வெளிநாடுகளுக்கு சென்றிட விரும்பவில்லை.
அமெரிக்க அரசு 1928-ம் ஆண்டு மீண்டும் காந்தியடிகளை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை மறுக்க முடியாத சூழ்நிலையால், தனது பிரதிநிதியாக கவியரசி சரோஜினிதேவியை அனுப்பி வைப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
சரோஜினிதேவி அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டால், பிரிட்டனுடைய ராஜதந்திரம் பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிவார் என்ற நம்பிக்கையும் காந்தியடிகளுக்கு இருந்ததும் ஒரு காரணமாகும். அதனால் சரோஜினி தேவியை அமெரிக்கா சென்று வருமாறு காந்தியார் பணித்தார்.கவியரசி சரோஜினிதேவி வெளிநாடுகளுக்குச் செல்வது என்பது புதிய அனுபவம் அன்று. அவர் உலகம் முழுவதும் பலமுறை சென்று திரும்பியவர். இந்தியத் தலைவர்களிலேயே வெளிநாடுகளுக்கு பலதடவை சென்று அனுபவப்பட்டவர் சரோஜினிதேவியே.
இந்தியாவிற்கு வெளியே மட்டுமன்று; இந்திய மாகாணங்கள் எல்லாவற்றுக்கும் ஊர் ஊராக, நகரம் நகரமாகச் சென்று காங்கிரஸ் மகாசபைப் பற்றியக் கருத்துக்களை விளக்கமாக எடுத்தக்கூறிய ஆற்றல் பெற்றவர். அதனாலும் அவரைக் காந்தியடிகள் அமெரிக்கா செல்லுமாறு கூறினார்.
எனவே, கவியரசி சரோஜினிதேவி காந்தியடிகளுடைய அன்புக் கட்டளையை ஏற்று அமெரிக்கா சென்றார். அங்கே சென்ற கவிகுயிலுக்கு அமெரிக்கா அமோக வரவேற்பை அளித்து மகிழ்வித்தது.
அமெரிக்காவில் சரோஜினிதேவி அங்குள்ள ராஜ தந்திரிகளைச் சந்தித்தார்; அறிஞர்களோடு அளவளாவினார்; அரசு அதிகாரிகளைப் பார்த்தார்; பொதுக்கூட்டங்கள் பலவற்றில் அமெரிக்க மக்களிடையே பேசினார்.
அவர் எந்தெந்த கூட்டங்களில் பேசினாரோ, அந்தந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கினார்.
அமெரிக்க அரசுக்கும், அறிஞர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவில் பிரிட்டிஷ் செய்து வரும் கொடுங்கோன்மை ஆர்ப்பாட்டங்களை அம்பலப்படுத்தினார். இந்தியாவின் உண்மை நிலைகளை விவரமாக எடுத்து விளக்கினார்.
இந்திய மக்களின் உரிமைப் போராட்டமான விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், காந்தியடிகளாருடைய அகிம்சை நெறிகள், சத்தியாக்கிரகப் போராட்டத்தன்மைகள், காந்தியத் தத்துவங்கள் அனைத்தையும் அருமையாக விளக்கி, மகான் காந்தியடிகள் வழியிலே இந்தியா பீடு தடை போட்டு வருவதையும் அழகாக எடுத்துரைத்து, அமெரிக்க மக்கள் இடையே புதியதோர் விழிப்பை உருவாக்கினார்.
கவிக்குயில் சரோஜினியின் காந்தியப் பிரச்சாரத்தால் இந்தியா மேலும் பெருமை பெற்றது மட்டுமன்று; பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரங்களையும் தனது பேச்சாற்றலால் முறியடித்தார்.