கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12. ஆப்ரிக்கப் பிரதமர் ஸ்மட்கடன் வாக்குப்போர்!

பிரிட்டனுடைய பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்காவில் அடிமரம் நுனிமரமாக வேட்டி வீழ்த்திய பின்னர், கவிக்குயில் சரோஜினி தேவி தென் ஆஃப்பிரிக்காவுக்கு காந்தியடிகள் கட்டளைக்கேற்ப சென்றார்.

தென் ஆஃப்பிரிக்காவில் நடைபெறுவது வெள்ளைக்காரர்களைக் கொண்ட சிறுபான்மை கட்சியினரின் ஆட்சியாகும். அங்கே பிழைப்புக்காக இந்தியர் பெரும் பகுதியினர் சென்று குடியேறினார்கள். அவர்களில் தமிழ் மக்களே அதிகமாக இருந்தார்கள்.

இந்தியர்களை வெள்ளையர் அங்கே மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்: அவமானப்படுத்தினார்கள்; கூலிகள் என்று இழிவாகப் பேசிக் கேவலமாக நடத்தினார்கள்: கருப்பர்கள் என்றனர்; நாகரிகமற்றவர் என்று நகைத்தார்கள்; அடிமைகளைப்போல கீழ்மட்ட வேலைகளிலே ஈடு படுத்தினார்கள். இவ்வளவு துராக்கிரதத் துயர்களைச் சகித்துக் கொண்டுதான் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள்.

காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, பலமுறை சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினார்; காரணம், அவர் கண்ணெதிரேயே இந்திய மக்கள் கடுமையாகக் கேவலமாக அவமதிக்கப்பட்டதுதா !

அகிம்சா போராட்டங்களை அங்கே அறப்போரிகளை நடத்தி வெற்றி பெற்றவர் காந்தியடிகள். அந்த வெற்றி பெருமையினால் விளைந்த கௌரவத்தை, புகழை, சாதனைச் சம்பவத்தின் பலனை இந்தியருக்காக அங்கேயே விட்டு விட்டு, காந்தி பெருமான் தனது தாயகமான இந்தியாவுக்கு 1914-ம் ஆண்டு வந்தார்!

தென் ஆப்பிரிக்கப் பிரதமராக அப்போது பதவியில் இருந்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர். இந்த மனிதன் தான் காந்தியடிகளாரைக் கைது செய்து முதன் முதலாகத் சிறைக்குள் அடைத்தவர்.

அதற்காக அண்ணல் காந்தியடிகள் ஸ்மட்ஸை தனது விரோதியாக நினைக்கவில்லை; அவர் கடமையை அவர் செய்தார்; இவர் உரிமைக்காகப் போராடினார்! ஆனால், கடைசிவரை ஜெனரல் ஸ்மட்சும்-காந்தியடிகளும் அரசியல் நண்பர்களாகவே நடமாடினார்கள். பதினொன்று ஆண்டுகள் அவர்கள் தொடர்பு தென்னாப்பிரிக்காவில் நீடித்தது.

ஜெனரல் ஸ்மட்ஸ் நிறவெறியர்; அதனால் காந்தியடிகள், இந்தியா திரும்பியதும், மீண்டும் நிறவெறி வேதாளம் முருங்கை மரம் மீது ஏறிக் கொண்டு தலை கீழாகவே தொங்க ஆரம்பித்தது.

தென் ஆப்ரிக்க இந்தியர்களுக்காக அங்கே தங்கி அரும் பணியாற்றி, சிறை மீண்டு என்று இந்தியா திரும்பினாரோ அதற்குப் பிறகு மீண்டும் அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை.

அயல் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதாவது நன்மைகள் புரிய நாட்டம் இருந்தால், முதலில் இந்தியா சுதந்திரம் அடைந்தால்தான் செய்ய முடியும் என்று காந்தியடிகள் உணர்ந்தார்.

இந்தக் காரணத்தால்தான் அவர் இந்திய விடுதலைக்காகவே முழுமூச்சுடன் பாடுபட்டார். தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் போகவே அவருக்கு விருப்பமும் இல்லை, மனமும் இல்லை. தென் ஆப்பிரிக்க மக்கள் பழைய பாசத்தோடு அடிகளாரை பன்முறை அழைத்தும் அங்கே போகாமலேயே இருந்து விட்டார்.

கென்யா நாட்டில் வாழ்ந்த இந்தியர்களும் துன்பப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக மாநாடு ஒன்று நடத்தி அரசுக்கு உணர்த்திட எண்ணினார்கள்.

அந்த மாநாட்டுக்குத் தலைமை தங்கிட கென்யா மக்கள் காந்தியடிகளாரை அல்லது சரோஜினி தேவியை 1924-ம் ஆண்டு அழைத்தார்கள்! அந்த அழைப்பை ஏற்று காந்தியடிகளுக்குப் பதிலாக கவியரசியை அனுப்புவது என்று காங்கிரஸ் மகாசபை எண்ணியது.

கிழக்கு ஆப்பிரிக்கா காங்கிரஸ் மகாசபை நடத்திய அந்த மாநாட்டுக்கு கவியரசி சரோஜினி தலைமை வகித்தார். இந்த மாநாடு மொம்பசா நகரில் நடந்தது. அங்கே அவர் பேசும்போது:

"இந்தியாவில் உள்ள ஓர் இந்தியன் உயிரோடு இருக்கும்வரை வெள்ளையர்கள் அக்கிரமச் செயல்களை எதிர்த்துப் போராடியே தீருவான்; அதற்குரிய தண்டனைகளும் கிடைத்தே தீரும்" என்று தென்னாப்பிரிக்காவிலே வாழ்கின்ற இந்தியர்களே தைரியமாகக் கூறுங்கள் என்று இந்தியர்களுக்கு ஊக்கம் தந்தார்.

நாயுடு பேசியபேச்சிலே வந்து விழுந்த சொற்சிலம்பங்கள், தெளிவான கருத்துக்கள், கோர்வையான பேச்சுத் தொடர்புகள், உணர்ச்சி வயப்பட்டு அவர் பேசும்போது, ஏற்படும் ஏற்றத்தாழ்வான குரல் ஒலிகள், அனைத்தையும் கண்டு இந்தியரும்-வெள்ளை இனத்தவரும் வியப்படைந்தார்கள். அதே நேரத்தில் ஆங்கிலேயரை இந்த அம்மையார் எப்படியெல்லாம் குற்றம் கூறுவாரோ என்ற பயமும் வெள்ளையரிடையே உருவானது.

நேடால் என்ற நகருக்கும் சென்றார் சரோஜினி! அந்த நேரத்தில் இந்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும் மசோதா ஒன்று சட்டமன்றத்திலே விவாதத்தில் இருந்தது. இந்தியர்கள் மிக நெருக்கடியான ஒரு துன்பச் சூழலிலே அப்போது அங்கே வாழ்ந்து வந்தார்கள்.

இந்திய பெருமக்களே! எதற்கும் அஞ்சாதீர்! நீங்கள் நடத்த இருப்பது உரிமைப்போர். தைரியமாக, துணிவாக, சிங்கம்போல் சிலிர்த்து எழுந்து கர்ஜனையிட்டும் போரை நடத்துங்கள்.

அடக்கு முறைகள் அலைகளைப் போல திரண்டு, புரண்டு வந்தாலும் அஞ்சாதீர்கள். தளர்ச்சியே இல்லாமல் கட்டுப்பாட்டுடன் போராடுங்கள் இந்தியர்கள் புற முதுகு காட்டாதவர்கள் என்ற இயல்பை நிலை நாட்டுங்கள். விடுதலை வீரர்களாக நிமிர்ந்து நில்லுங்கள்; முன்னேறிப் போராடுங்கள் என்று இந்தியர்களுக்கு உரிமைப் போர் நெஞ்சுரம் ஊட்டினார்.

அமெரிக்காவிலே உள்ள இந்தியர்களைப்போல நீங்கள் அமைதியாக வாழ முடியாவிட்டாலும், அதற்காக இங்குள்ள வெள்ளையரை விரோதிகளாக நினைக்காதீர்கள். நீங்கள் இரு இனங்களும் இங்கே சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்படியாவது சமாதானமாக நல்வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அதற்கான சமரச வழிகளை நீங்கள் கடைப்பிடித்துப் பழக வேண்டும்.

இந்தியருக்கோ அல்லது வெள்ளையருக்கோ தென் ஆப்பிரிக்கா பூமி சொந்தம் இல்லை. இரு இன மக்களும் குடியேறிய சகோதரர்கள். நீங்கள் மனித நேயத்தோடு சரி சமமாகவும், ஒற்றுமையோடும், முடித்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சேர்த்து வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால் பிரிட்டிஷ் ராஜ்யத்தை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்.

இந்தியரும்-வெள்ளையரும் சேர்ந்து வாழ வேண்டுமா? எது வேண்டும் மனமே என்று பிரிட்டன் ஆட்சிதான் தன்னைத்தானே கேட்டு; இரு இன மக்களுக்கும் பதில் கூறியாக வேண்டும் என்று கவியரசி வெள்ளைக்காரர்களுக்கு புரியுமாறு விளக்கினார்!

கவிக்குயில், இவ்வாறு பேச்சளவோடு நின்று விடவில்லை; பத்திரிகைகளுக்குப் பேட்டியும் தந்து நிலையை விளக்கினார் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்தார்: முதன் முதலாக காந்தியடிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்த பிரதமர் ஜெனரல் ஸ்மட்சையும் நேரில் சென்று கண்டு இந்தியர்கள் பிரச்னையை எடுத்துரைத்தார்.

அப்போது, உர்பன் நகரம் டவுன் ஹாலில் நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு டர்பன் நகர உதவி மேயர் தலைமை வகித்தார். அவர் ஒரு பெண்ணின் தைரியத்தையும்-தேச பக்தியையும் வெகுவாகப் பாராட்டி தலைமையுரையில் பேசினார்.

அக்கூட்டத்திற்கு திரளாகத்திரண்டு வந்து காத்திருந்து இந்தியர்கள் மட்டுமல்லர்; வெள்ளைக்காரப் பெண்களும் கனதனவான்களும் கூட திரண்டு வந்து கவியரசியின் பேச்சைக் கேட்டார்கள்.

ஜெனரல் ஹெரிட் ஜாக், கர்னல் கிரேஸ்வெல் போன்ற உயர் அரசு அதிகாரத் தலைவர்களும், மக்களும் பெருங் கூட்டமாகக் கூடி சரோஜினியின் பேச்சைக் கேட்டார்கள். கூட்டத்திற்கு தலைமை வகித்த அந்த ஐரோப்பியர், கவிக்குயில் அறிவாற்றலையும், 'நா' நயத்தையும் நாட்டுப் பற்றையும் வெகுவாகப் பாராட்டினார். ஆனால் ஒன்று!

டர்பன் டவுன்ஹால் கூட்டத்திற்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் டாக்டர் கில்பர்ட் என்பவர், கவிக்குயில் சரோஜினிதேவியை மேடையிலே பேசும்போது சூதாக, வஞ்சமாக, சாமர்த்தியமாக, சாதுர்யமாக பேச்சு மூலமாகவே ஒரு கேள்வியைக் கேட்டு மடக்கிடப் பார்த்ததே-அந்த ஒன்று!

என்ன கேள்வி அது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இதோ அவர் கேட்கிறார்:

"சரோஜினி நாயுடு அவர்களே, நீங்கள் 'சமத்துவம்' 'சமத்துவம்' என்று பேசுகிறீர்களே அந்த 'சமத்துவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?" என்று கேட்டது தான் அக்கேள்வி: மேலும் அந்த உதவி மேயர்:

"சமத்துவம் என்றால் ஆனைவருக்கும் நன்மை புரிவதும், உதவுவதும், ஏழை எளியவர்களுக்கு ஏற்றம் அளிப்பதும் சமத்துவம் அல்லவா? வெள்ளைக்காரர்களாகிய நாங்கள் உலகம் முழுவதும் செய்துவரும் ஜீவகாருண்யம் உங்களுக்குத் தெரியாதவையா?”

"நாங்கள் சமத்துவத்தை மறுப்பதாக மக்களிடம் உண்மையைத் திரித்துக் கூறி, இந்திய மக்களுக்கு ஆத்திரம் உண்டாக்கி, முன்னரே உள்ள மக்களது மனஸ்தாபங்களுக்கு ஏன் தூபம் போடுகிறீர்கள்?" என்று கேட்டார் அந்த உதவி மேயர் நமது கவியரசியை நோக்கி!

இவ்வாறு அந்த உதவி மேயர் ஏன் பேசினார்? அதுவும் கவிக்குயிலை நேராகவே வைத்துக்கொண்டு முகத்துக்கு முகமாக, தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டது ஏன்?

வெள்ளையர்கள் பொய்ப்பிரச்சாரம் என்ற கற்கோட்டையைச் இரும்புச் சம்மட்டிகளைக் கொண்டு உடைத்துத் தகர்த்துக் கொண்டு வரும் கவியரசியைப் பார்த்துக் கேட்ட கேள்வி. மக்கள் இடையே ஒரு சலசலப்பு ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தது.

சமத்துவம் என்ற சொல்லுக்குரிய பொருளைக் கேட்பது போலக் கேட்டது ஏன்? இந்த சொல்லுக்கு, நமது கவிக்குயிலுக்குப் பொருள் தெரியாதா என்ன? கேட்டவருக்கும் இது புரியாதா என்ன? பிறகு ஏன் அப்படிக் கேட்டார்-பொருள்?

சிறப்புக் கூட்டத்திலே என்ன பேசலாம் என்று சரோஜினி நினைத்திருந்தாரோ அந்த நினைப்பைச் சீர்குலைத்து, அவரது எண்ணங்களைத் திசை திருப்பி, சொல் மயக்கம் உண்டாக்கி, தேவியின் பிரச்சாரத்தை உருக்குலைத்து ஏதோ ஒரு கெட்டப் பெயரை உண்டாக்கவே, அந்த உதவி மேயர் தமது கவிக்குயிலைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்கிறார்!

முடியுமா அவர் சூழ்ச்சி இந்தியப் பெண் சிங்கமான தமது சரோஜினி தேவியிடம்? எரிமலை போல வீறிட்டு வெடித்து எழுந்தார். எரி குழம்புகள் போன்ற கருத்துக்களை அந்த வீரிய வெடிப்பு கொட்டிக் கொண்டே இருந்தது. இதோ அதிலுள்ள மணிகள்.

"தலைவர் அவர்களே! சமத்துவம் என்ற சொல்லை விளக்குமாறு கேட்கிறீர்கள்; கற்பனைச் சிறகுகளால் எங்கோ பறந்து சென்று விவாத விஷயத்தின் அடிப் படையை முழுவதுமாகவே மறந்து விட்டீர்கள்!"

'எளியவர்களுக்கும் இரவலர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லையே! ஆனால், அதற்கும் சுதந்திரம் வேண்டாமா?

கை, கால்கள் கட்டப்பட்டவர்களிடம் பிறருக்கு உதவி செய் என்றால், அவர்களால் முடியுமா? தண்ணீர் தாகத்துடன் வந்தவர்களுக்கு ஒரு கோப்பை நீரும் தர முடியாத வேதனை நிலையில் இந்திய மக்களை உருவாக்கி விட்டு, நீங்கள் என்ன பரோபகாரம் செய்கிறீர்கள்? என்று கேட்கலாமா?

'அவ்வாறு கேட்பதானது ஒரு கேள்விக்குள் மறு கேள்வியை மூடி மறைத்து வைத்துக் கொண்டு கேட்கும் அநீதிச் செயல்களேயாகும். தலைவர் அவர்களே! உமக்கு இது தெரியாதா? புரிந்தும் புரியாதது போல் கேட்டவரே, இதோ அதற்குப் பதில்,

'பரோபகாரம் செய்யும் சூழ்நிலையை பிரிட்டிஷ் அரசு இந்தியருக்கு தர மறுத்துள்ளது. இரண்டாவதாக இந்தியர்களை அடிமைப்படுத்தியதற்காக வெட்கப்பட வேண்டிய வெள்ளைக்காரர்களே!'

'தங்களுடைய ஆட்சியால் ஏற்பட்டுள்ள அலங்கோலங்களுக்கு இந்தியர்கள் தான் பொறுப்பாளிகள் என்று குற்றம் சாட்டுவது பொருத்தமற்ற பேச்சாகும்.

சுதந்திரம் இல்லாமல் சமத்துவம் இல்லை. ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் இந்தியர்களுக்கு தரப்பட வேண்டாமா? அவற்றைக் கேட்பது எப்படித் தவறாகும்?

உலகத்தின் அறிவுக் கதிராகவும், ஆன்மிகத்துக்குச் செவிலித் தாயாகவும் விளங்கும் இந்தியாவிடம் இருந்துதான், ஐரோப்பியர்கள் பரோபகாரச் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, பிறரிடம் இருந்து அல்ல.

உலகம் உயர்வடைவதற்காக உன்னதமான அளவிட முடியாத தியாகங்களைச் செய்துள்ள மகாத்மாக்களை ஈன்ற இந்தியா, நிறவெறி கொண்ட தென்னாப்பிரிக்க வெள்ளையரிடமிருந்து எதுவும் கற்க வேண்டிய தேவை அவசியமில்லை என்றார் தேவி.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் ஊமையரானார்! மக்கள் தேவி பேச்சைக் கேட்டு ஆரவாரமிட்டு குரல் எழுப்பினார்கள்.

தென்னாப்பிரிக்காவின் முடிசூடா மன்னராக இருந்தவர் பிரதமர் ஜெனரல் ஸ்மட்ஸ்! இவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமன்று; ராஜதந்திரியும் கூட!

இந்த மனிதர்தான் மகாத்மா காந்தியடிகள் சிறை வாழ்வுக்கு முதன்முதலில் அடிப்படை அமைத்து சிறையில் பூட்டியவர் இருந்தாலும், காந்தியடிகளின் நண்பராகவே கடைசி வரை இருந்தார்!

அத்தகைய சிறந்த ஓர் அற்புத அரசியல்வாதியான ஜெனரல் ஸ்மட்சுக்கும், இனவெறி எரிச்சல் ஏற்பட்டதால் கவியரசி சரோஜினி தேவியுடன் நேருக்கு நேராக வாக்கு வாதம் செய்திட ஒரு வாக்குப்போரே தொடுத்துவிட்டார்.

கவிக்குயில் சரோஜினி தேவி அவர்களே! சுயராஜ்யம் என்றால் என்ன? இந்தியாவில் எண்ண முடியாத ஜாதி பேதங்களையும்-உயர்வு தாழ்வுகளையும், தீண்டாமையையும் வைத்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு வந்து சமத்துவம் பற்றிப் பேசிட எப்படித் துணிவு பெற்றீர்?" என்று சிரித்துக் கொண்டே பிரதமர் ஸ்மட்ஸ் சரோஜினி தேவியைக் கேட்டார்.

அதற்கு நமது கவிக்குயில் பதில் கூறியபோது; "இந்தியாவில் உள்ள ஜாதி, சமூக பேதங்களை விட நூறு ஆயிரம், மடங்கு மிகுதியான நிறபேத உணர்ச்சியும், ஆங்காரமும் ஐரோப்பியரிடம் காணப்படவில்லையா?"

வேற்றுமைகளை எல்லாம் களைய எங்கள் தேசியவாதிகளும், சீர்திருத்தச் செம்மல்களும் அயராது உழைக்கின்றார்கள். அதே நேரத்தில் பிரதமர் ஸ்மட்ஸ் கேட்ட "சுயராஜ்யம் என்றால் என்ன?" என்பதற்கும் தான் விளக்கம் தருகிறேன்:

"நிர்வாகத்தின் பொறுப்பு முழுவதையும் ஏற்பதும், அயல் நாட்டுக் கொள்கையை வகுப்பதும் அயல்நாடுகளுடன் ராஜதந்திர உறவு கொள்வதும், போரைப் பற்றியும், அமைதியைப் பற்றியும் தீர்மானிப்பதுமான சுயராஜ்ய அதிகாரங்களை எல்லாம் மக்கள் அடைவதற்கு இந்தியா பணியாற்றிட உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவிலும், இந்தியர் குடியேறியுள்ள நாடுகளிலும் இந்த உரிமையைத்தான் இந்தியர்கள் வெள்ளையர்களைக் கேட்கிறார்கள் அவற்றை எம் மக்கள் அடையத்தான் போகிறார்கள் அதுதான் சுதந்திரம்; சுயராஜ்யம்; விடுதலை புரிகிறதா பிரதமர் அவர்களே!

வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை கூலிகள் என்றே அழைக்கிறார்கள்; அது பெரிய இந்தியச் கோடீஸ்வரனாக இருந்தாலும் இங்கே அவனும் "கூலி" தான்! இந்தியர்களை இவ்வாது இளப்பமாக பேசிய இனத் திமிருக்குச் சரோஜினி தேவி பலரறிய அங்கே கசையடி கொடுத்தார்!

"இந்தியரை வெள்ளையர்கள் கூலிகள் என்கிறார்கள். கூலிகள் என்றால் பொருள் என்னவென்று ஐரோப்பியர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்காக நான் இப்போது அதை விளக்குகிறேன். அவர்களுக்கும் பொருள் புரிந்து விட்டால் பிறகு 'கூலிகள்' என்று இந்தியரை அழைக்க மாட்டார்கள் அல்லவா?

பிரதமர் அவர்களே! நான் கூறுகிறேன் பிரிட்டிஷ் ராஜ்யமே ஒரு கூலிகள் ராஜ்யம்தான்! இன்று பிரிட்டனை ஆட்சி புரிவோரும் கூலிகளே! இன்று தொழிற்கட்சியாளர்கள் தானே அரசு புரிகிறார்கள்? அவர்கள் தொழிலுக்குக் கூலி பெறாமலா, இலவசமாகவா தர்ம சேவைகளா செய்கிறார்கள் என்று கேட்கிறேன்! கூறமுடியுமா பதில்?

தென்னாப்பிரிக்காவின் சர்வாதிகாரியான ஜெனரல் ல்மட்ஸ், இங்கிலாநதின் குடியேற்ற நாட்டு மந்திரியான 'கூலி' மிஸ்டர் தாமசின் கட்டளைக்குக் கீழ்படிகிறார்; ஆகையால் என் சகோதரர்களை ஐரோப்பியர்கள் கூலிகள்" என்னும் அந்தப் பெயர் இங்கிலாந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு மிகப் பொருத்தமானது.

எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து, அதனாலேயே அவர்களை அடித்து வீழ்த்துவது சிறப்பான ஒரு போர்க்கள வியூகம் இல்லையா! அத்னையே கவியரசி சரோஜினி தேவி அன்று ஜெனரல் ஸ்மிட்ஸ் முகம் தொங்கும்படி ஆணித்தரமாகப் பதில் கூறினார்.

பிரதமர் ஜெனரல் ஸ்மட்சுடன் நடைபெறும் வாக்குப் போரை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுக் கையொலிகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்!

கவிக்குயிலின் கடுமையான சொற்பிரயோக வாக்குப் போரைக் கேட்ட மற்ற ஆங்கிலேய அதிகாரிகள், அன்று முதல் இந்தியர்களைக் கூலிகள் என்று அழைக்கவே கூச்சப்பட்டார்கள் நிறுத்திக் கொண்டார்கள்!

தென்னாப்ரிக்காவில் இவ்வாறு கடும் மேடைக்களம் கண்டு வரும் கவியரசியின் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் காந்தியடிகள் காதுக்கு எட்டின. நாயுடுவின் இந்த வீரவுரைப் பேச்சுக்கள் தென்னாப்ரிக்காவில் மட்டுமன்று; இந்திய மக்கள் இடையேயும் வீர உணர்ச்சிகளை எழுப்பியபடியே இருந்தன. ஆனால், வாக்குப் போர் தொடுத்த ஸ்மட்சும், வழக்குத் தொடுப்பேன் என்ற ஆங்கில சென்னை அரசும், ‘மன்னிப்புக்கேள்’ என்று மருள் வாதமிட்ட மந்திரி மாண்டேகும் வெகுண்டு போனார்கள்; வெகுண்டார்கள்.

கவியரசி சரோஜினி நாயுடு தனது உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார். கூற வேண்டுமா எப்படிப்பட்ட வரவேற்பு பெற்றிருப்பார் என்று; அப்பப்பா... பம்பாய் மாநகரில் அவர் மாபெரும் வரவேற்பைப் பெற்றார்; கவியரசியும் அதை ஏற்றார்.

பெல்ஹாம் நகரில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கூடியது, தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அந்த மகாசயை மாநாட்டில் கலந்து கொண்டு மாபெரும் மகிழ்ச்சி பெற்றார்கள், டாக்டர் அப்துல்ரஹ்மான் என்பவர் தென்னாப்பிரிக்கா மகாசபை அணிக்குத் தலைமை வகித்து கலந்து கொண்டார்.

அந்த அணிக்கு தலைமை வகித்த ரஹ்மான் மகா சபையில் பேசும் போது:

"தென்னாப்பிரிக்க இந்தியராகிய நாங்கள் உங்களுக்கு மகாத்மா காந்தியடிகளைக் கொடுத்துள்ளோம், அவருக்கு நிகராக விளங்கும் சரோஜினி தேவியாரை எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால், மறுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்தியாவின் மாதர்குல விளக்காகவும், பெண்கள் விழிப்புணர்ச்சிகளுக்கு வித்தாகவும் விளங்கும் சரோஜினி தேவியார் இந்திய மக்களிடையே ஓர் அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகிறார். அவர் உங்களுக்கு மிகவும் தேவையானவர் என்பதை நான் அறிவேன்.

தென்னாப்பிரிக்காவில் அவர் பேசிய பேச்சுக்கள் ஆற்றிய பணிகள் எங்களை மிகவும் கவந்து விட்டன. தேவியாரை அழைத்துச் செல்வதே எங்கள் வருகையின் நோக்கம்.

தேவியாரின் திருவுருவப் படம் ஒன்றை நேற்று நான் மகாசபைக்கு பரிசாக வழங்கினேன், அழகான அந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள், தேவியாரை மட்டும் எங்களோடு தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லுகிறோம்! என்று அவர் பேசினார்.

இந்த உரை ஒன்றே போதும் அல்லவா தேவியார் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கடுமையாக இந்தியர்கள் உரிமைக்கு போராடினார் என்பதை இந்தியா உணர்ந்திட!

பெல்காம் காங்கிரஸ் மகாசபை, சரோஜினி நாயுடு தென்னாப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆற்றிய அரிய பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி மகிழ்ச்சி கொண்டது.

காங்கிரஸ் மகாசபை மாநாடு முடிந்ததும், சரோஜினி தேவியார் மீண்டும் வழக்கம் போல, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மாநாட்டுக் கருத்துக்களைப் பேசி, இளைஞர்களை வீறு கொள்ளச் செய்தார்! மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.