உள்ளடக்கத்துக்குச் செல்

கவிபாடிய காவலர்/இரும்பிடர்த் தலையார்

விக்கிமூலம் இலிருந்து

6. இரும்பிடர்த் தலையார்


சோழர் குடியின் தோன்றல்களில் ஒருவன் கரிகாற்சோழன். இவன் கரிகால் பெருவளத்தான், சோழன் கரிகால் பெருவளத்தான் என்றும் கூறப்படுபவன். இவன் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். நாங்கூர் வேள் மகளை மணந்தவன். இவனுக்குக் கரிகாலன் என்னும் பெயர் வந்தமைக்கு இரு பெருங் காரணங்கள் கூறப்படும். ஒன்று இவன் இளமையில் நெருப்பினால் சுடப்பட்டு உயிர் பிழைத்த போது, இவனது கால் சிறிது கரிந்த காரணத்தால் கரிகாலன் எனப்பட்டான் என்றும், கழுமலம் என்னும் ஊரில் இருந்து யானையை ஏவ, அது சென்று இவனுக்கு மாலை சூட்டிக் கொணர்ந்து அரசராக்கியதால் கரிகாவலன் என்பது கரிகாலன் என ஆயிற்று என்றும் கூறப்படும்.

இவன் சிறந்த போர்வீரன். சேரமான் பெருஞ் சேரலாதனோடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்க்களத்தில் போரிட்டு வென்றவன். அதே களத்தில் பாண்டியன் ஒருவனையும் வெற்றி கொண்டவன். இமயம் வரை படை எடுத்துச் சென்று அம்மலைக்கும் தன் ஊருக்கும் இடைப்பட்ட இடங்களில் இருந்த வடநாட்டு மன்னர்களையும் வென்று வாகை சூடியவன். காவிரிப்பூம்பட்டினத்தைத் தன் அரசிருக்கையாகக் கொண்டவன். உறையூரைத் தனது அரசின் தலைநகராகக் கொண்டவன். அதன் காரணமாக அந்நகரை நன்கு செழிப்புற வளமாகச் செய்தவன். நல்ல முறையில் அரசு புரிந்து நீதி வழங்கியவன். இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் காட்டினால் இதன் உண்மை நன்கு தெரியவரும்.

ஒரு முறை இரு பெரும் முதியோர் தம்முள் மாறுபட்டு அதனைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, இவனை நாடினர். இவன் இளைஞனாய்க் காணப்பட்டமையின், இவன் அவ்வளவு அனுபவம் பெற்றிரான் என்று உணர்ந்து தம் வழக்கைக் கூறாது திரும்பிச் சென்றனர். இதனை அறிந்த கரிகால் சோழன் அம்முதியோர்களை அடுத்த நாள் வருமாறு கூறி, அப்போது நன்கு வயது முதிர்ந்த பெரியோரைக் கொண்டு, அவர்களின் வழக்கினைத் தீர்த்து வைப்பதாகச் சொல்லி அனுப்பினான். அவர்களும் இவனது பேச்சில் நம்பிக்கை வைத்து, அடுத்த நாள் வருவதாகச் சென்று விட்டனர். கரிகாற் சோழன் அடுத்த நாள் தானே கிழவன் போல வேடம் பூண்டு, முதியவர்களின் வருகையை நோக்கி இருந்தான். முதியவர்களும் வந்தனர். தம்முன் நரைத்த முடியுடன் காணப்பட்ட உருவத்தைக் கண்டனர். “ஆ! இவரே நம் வழக்கைத் தீர்த்து வைக்கத் தக்க பெரியவர்” என்று அறிந்து அவரிடம் தம் வழக்கைக் கூறினர். நரை முடித்த தோற்றத்தோடு விளங்கிய கரிகாலன் இருவர் வழக்கையும் நன்கு ஆராய்ந்து குற்றம் உள்ளவர் இவர் தாம் என்பதை இருவருள் ஒருவரைச் சுட்டிக் காட்டினான். தீர்ப்பு ஒழுங்கானது என்பதை வந்த இரு பெரு முதுவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் கரிகாலன் தன் முதுமைக் கோலமாகிய வேடத்தை நீக்கி இளைய கரிகாலனாகத் தோற்றம் அளித்தனன். “ஆ! இவன் நம் வழக்கைத் தீர்க்க வலியற்றவன் என்றல்லவா எண்ணினோம்! இப்போது அவனே அன்றோ நல்ல அனுபவம் முதிர்ந்தவன் போல் வழக்கைத் தீர்த்தனன்!” என்று கூறிப் பாராட்டிச் சென்றனர்.

இத்தகைய பேரும் புகழும் சீரும் சிறப்பும் உடைய மன்னனது அம்மானே இரும்பிடர்த்தலையார் ஆவார். கரிகால் பெருவளத்தானது அம்மான் முறையினர் இப்புலவர் என்றால், அவர் அரசமரபினர் என்பது உறுதியல்லவா? இவர் இச்சோழ மன்னனுக்கும் பெருந்துணையாய் இருந்தனர். இவன் சுடப்பட்டபோது, அச் சுடுதலினின்று பிழைக்குமாறு செய்தவர் இவரே ஆவர். இவர் பெற்றோரால் எப்பெயரால் அழைக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால், இவர் யானையின் பிடரை இரும்பிடர்த்தலை என்று சிறப்பித்த காரணத்தால் இரும்பிடர்த்தலையார் என்று குறிப்பிடப்பட்டு வந்தார். அருந்தொடர்களைக் கூறியதனால் பெயர் பெற்ற புலவர்கள் பலர் நம் தமிழ் நூல்களில் காணப்படுகின்றனர். ஒருவர் மூங்கில் மரத்தின் முனை, நீர் நிலையில் படிந்திருப்பது மீனைப் பிடிக்க எறியப்பட்ட காரணத்தால், மீனெறிதூண்டிலார் எனப்பட்டார். இரும்பிடர்த்தலையார் புலமை மிக்கவர் என்பது இவரால் பாடப்பட்ட பாடல் புறநானூறு என்னும் தொகை நூலில் இடம் பெற்று இருப்பதால் நன்கு அறியலாம். இவரால் பாடப்பெற்ற பெருமை பெற்றவன் பாண்டியன் கருங்கை யொள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவன். இப் பாண்டியன் வீரமும் கொடையும் பெற்றிருந்த காரணத்தால் இப்புலவர் பெருமான் இவனைப் பாடினர் போலும்! புலவர் சோழர் மரபினர் ஆயினும், பாண்டியன் ஒருவனைப் புகழ்ந்து பாடியது இவரது பரந்த நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

புலவர் இப்பாண்டியனை விளிக்கையில், இப்பாண்டியர் குலம் ஈகையில் முன்னணியில் நின்ற இயல்புடையது என்பதைத் “தவறா ஈகைக் கவுரியர் மருக!” என்று கூறி யதிலிருந்து அறியலாம். ‘மருக’ என்பது மரபில் வந்தோனே என்பதைக் குறிக்கும் மொழி யாகும். இவ்வாறு அவனை விளித்துப் “பூமியே பிறழ்ந்தாலும் நீ சொன்ன சொல்லைத் தவறாது நடப்பாயாக” என்பதை, “நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்” என்று அவனுக்கு நல்லுரை நவின்றுள்ளார். இத்துடன் அவ னுக்கு அறிவுறுத்தல் இன்றி, “மன்னா! உன்னைக் காண இரவலர் வருவர். அவர்களின் குறிப்பு அறிந்து நீ ஈந்து அவர்களின் வறுமையைப் போக்குவாய் என்ற காரணமே அவர்கள் இடரான வழிகள் பல கடந்து வரு தற்குக் காரணம்” என்பதை

“நின் நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்

இன்மை தீர்த்தல் வன்மை யானே”

என்று கூறி அவனது கொடைச் சிறப்பைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாண்டியன் பகைவர் இடையில் கூற்றுவனைப் போல் இருந்து அவர்கள் உயிரைக் கொல்பவன் என்ற குறிப்பில் இவன் யானைமீது அமர்ந்த தோற்றத்தனாய்த் தன் கையில் வீரவாளுடன் துலங்குவான் என்பதை

“மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்

கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி”
என்று கூறி இவனது வீரச் சிறப்பையும் விளக்கியுள்ளார்.