உள்ளடக்கத்துக்குச் செல்

கவிபாடிய காவலர்/கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

விக்கிமூலம் இலிருந்து

12. கடலுள் மாய்ந்த
இளம் பெருவழுதி

வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் மொழி. ஆகவே, இப்புலவர் பாண்டிய மரபினர் என்பதை அறிகிறோம். இவர் பெருவழுதி என்று குறிப்பிடப்பட்ட காரணத்தால் பெருமைக்கும் உறைவிடமானவர் என்பதும் தெரியவருகிறது. இளமை அழகு திகழப் பெற்றமையால் இளம்பெருவழுதி ஆயினார் போலும்! இவர் கடலில் பயணப்பட்டபோது அங்கேயே இறந்த காரணம் பற்றிக் கடலுள் மாய்ந்த என்ற அடை கொடுக்கப்பட்டுக் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்று அழைக்கப்பட்டனர். ஆர் விகுதி கொடுத்துக் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியார் என்றும் குறிப்பிடப்பட்டும் வந்துள்ளார். இளம் பிராயத்திலேயே இவர் பேர் அறிவினராகத் திகழ்ந்துள்ளார். மரியாதை பெற்றவராகவும் கருதப்பட்டார்.

இவர் பேர் அறிவினர் என்பதை விளக்க இவரால் பாடப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் ஒன்றும், நற்றிணைச் செய்யுட்கள் இரண்டும் பரிபாடல் ஒன்றும் சான்றாக உள்ளன.

புறநானூற்றுப் பாடல் அரிய பெரிய நீதியை விளக்கும் நிலையில் உள்ளது. பரோபகாரம் செய்யவேண்டிய இன்றியமையா மையை நமக்கு நன்கு விளக்குகிறது. உலகம் இடையறாது அழிவுறாமல் இருத்தற்குக் காரணங்களாக இவர் குறிப்பிடுவன மிகமிகப் பாராட்டற்குரியனவாகும். கிடைத்தற்கரிய தேவாமுதம் கிடைப்பினும், தனித்து உண்ணாமல் பிறர்க்கும் ஈந்து உண்பவர் நாட்டில் இருப்பதாலும், எவரோடும் வெறுப்பில்லாதவர்களும், அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சுபவரும், சோம்பலின்றி இருப்பவரும், புகழுக்காக உயிரையும் கொடுப்பவரும் பழி காரணமாக உலகம் பெறுவதாயினும் அதனை ஏற்க இசையாதவர்களும், மனக்கவற்சி இல்லாதவர்களும், தமக்கென முயலாமல் பிறர்க்காக முயல்பவர்களும் உலகில் இருக்கின்ற காரணத்தால் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். இப்படிக் கூறிய பாடலில் உயிராய் விளங்கும் அடிகள்

புகழ்எனில் உயிரும் கொடுக்குவர்; பழியெனில்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பன. நற்றிணைச் செய்யுட்பகுதிகள் சுவைதரும் செய்திகளைத் தன் னகத்தே கொண்டுள்ளன. தாய் தன் மகள் புதுமணம் பெற்ற காரணத்தால் வண்டுகள் மொய்க்கும் தோளுடையளாய் இருப்பது குறித்துத் தோழியை நோக்கிக் காரணம் கேட்டபோது, தோழி சமத்காரமாக “சந்தன விறகை அடுப்பில் இட்டதனால், அதில் சூழ்ந்திருந்த வண்டுகள் போக்கிடம் வேறு இன்றி உன் மகள் புது மணத்தில் ஈடுபட்டு மொய்த்தன” என்று கூறும் மொழிகள் தோழியின் பேச்சு வன்மையினைக் காட்டி நிற்கின்றன. இச்சுவை யடங்கிய செய்யுளை நற்றிணையில் காண்க.

பரிபாடலில் இவரால் பாடப்பட்ட செய்யுளால் இவருக்குத் திருமால்மீதுள்ள பற்றும், திருமால் இருஞ்சோலை மலைமீதுள்ள அன்பும் நன்கு புலனாகின்றன. இக்காரணங்கொண்டு இவர் வைணவ நெறியினர் என்று கூடக் கூறிவிடலாம். திருமாலிடத்தில் கொண்டுள்ள பற்றினும் இவர் திருமாலிருஞ் சோலையாகிய தலத்தில் கொண்டுள்ள பற்று மிகமிக விஞ்சி நிற்கின்றது. எல்லா மலைகளிலும் திருமால் இருஞ்சோலைமலை சிறந்தது என்கிறார், அம் மலை திருமால் போன்றது என்கிறார். மக்களை நோக்கி அவர்கள் நல்வழி படுதற் பொருட்டு “மக்காள்”! திருமால் இருஞ்சோலையினை நினைமின்! அதன் புகழைக் கேண்மின்! அதனைக் கண்டு பணிமின் தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின்!” என்று கூறுவன இவரது பெருங்கருணைத் திறனைப் பெருக்கிக் காட்டுகின்றன. இப்பரிபாடலால் திருமால் இருஞ்சோலையின் இயற்கை அழகை இனிதின் நுகரலாம். மந்தி (குரங்கு,) வரை வரைபாய, மடமயில் அகவ, குயில் இனம் கூவ, சுனை எலாம் மலர, சுனை சூழ் சினை எலாம் செயலை (ஒரு வகைமலர்) மலர. வேங்கை மலர என்பன, இயற்கை யழகை இனிதின் எடுத்துக்காட்டும் தொடர்கள். மோட்ச இன்பம் அடைதல் அரிது. அவ் அருமையினையும் எளிமையாகத் திருமால் இருஞ்சோலையினைப் போற்றினுல் பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார். அத்திருமால் இருஞ் சோலையின் அடிவாரத்திலேயே தாம் வாழும் பேற்றை விரும்புகிறார் இவ்வரசப் புலவர் எனில், திருமால் இருஞ்சோலையிடத்து இவருக்கு இருக்கும் பற்றின் பெருக்கத்தை வேறு எதனால் விளக்கிக் கூற இயலும்? இங்கனம் கூறும் பரிபாடல் அடிகள்.

"இருங்குன்றத்து அடி உறை இயைகஎனப்

பெரும்பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே"
என்பன.