உள்ளடக்கத்துக்குச் செல்

கவிபாடிய காவலர்/தொண்டைமான் இளந்திரையன்

விக்கிமூலம் இலிருந்து

15. தொண்டைமான்
இளந்திரையன்

இது வரையிலும் சேர சோழ பாண்டியர் ஆகியமூவேந்தர் மரபைச்சார்ந்த அரசர்குலப் புலவர்களைப் பற்றிப் படித்து வந்தனம். அவ்வேந்தர் குடிகளுள் சோழர் குடித் தொடர்புடைய இளந்திரையன் என்பாருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களையும் சிறிது காண்போமாக.

நாகபட்டினத்துச் சோழன் பிலத் துவாரத்தின் வழியே நாகலோகத்தைச் சார்ந்தனன். அங்கு இருந்த நாக கன்னிகையாகிய பீலிவளை என்பாளைக் கண்ணுற்றனன். கண்ணுற்ற சோழ மன்னன் அவளை மணந்து கொள்ள மனம் கொண்டனன். இக்கருத்தை அவளுக்குக் கூறியதும், பீலிவளை, மன்னா! இப்போது என்னை உன் வேட்கைக் காரணமாக மணக்க விரும்புகிறாய். அங்ங்னமே நம் இருவர் உள்ளமும் ஒன்றுபட்டு மணந்தபின், நம் இருவர்க்கும் இன்மகவு தோன்றினால் அம் மகவின் கதி என்னாவது? யானோ நாகலோகவாசி, நீரோ மண்ணுலக வாசி." என்று வினாவ நாகபட்டினத்துச் சோழன் "மாதே, நீ இது குறித்துக் கவலை கொள்ளவேண்டா! உனக்கு என்னுல் பிள்ளைப் பேறு கிடைக்குமானால், அப்பிள்ளையினைத் தொண்டைக் கொடியால் பிணைத்துக் கடலில் இட்டு விடுக. அம் மைந்தன் யதோர் இடையூறும் இடையில் எய்தாது கரையைச் சாரின், அவனுக்கு என் அரசுரிமையைத் தருகின்றேன்” என்று உறுதி கூறினன்.

சோழனது உரைகளை நம்பி பீலிவளையும் அவனை மணந்து கொண்டனள். சில காலம் பீலிவளையோடு இன்புற்ற சோழன் தன்னாடு திரும்பி விட்டனன். இறைவன் அருளால் இன் மகவும் பிறந்தது. நாகபட்டினத்துச் சோழன் கூறியபடி குழந்தையைத் தொண்டைக் கொடி அடையாளமாகக் கட்டிக் கடலில் இட்டனள். குழந்தையும் ஆண்டவன் அரு ளால் இடையில் அவலம் ஒன்றும் உறாமல் கரையை அடைந்தது.

இம் மகன் கடல் அலையால் உந்தப்பட்டுக் கரையை அடைந்தமையால் இளந்திரையன் என்று கூறப்பட்டனன். தொண்டைக் கொடியினால் இவன் பிணிக்கப்பட்டு அக் கொடியுடன் கரையை அணுகியமையால் தொண்டை மான் இளந்திரையன் எனப்பட்டனன். திரையன் எனவும் திரையல் எனவும் இவனை நூல்கள் குறிப்பிடும்.

இம் மகவு சோழ மன்னனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயது வந்ததும் காஞ்சியம் பதிக்கு அரசராக்கப்பட்டார். சோழர் குடிக் கலப்புடையராயினும், மூவேந்தரோடு ஒருங்கு வைத்து எண்ணப்பட்ட பெருமை சான்றவராயினும், மூவேந்தர் மரபுடன் இவர் இணைத்து வழங்கப்படாமல் குறுநில மன்னர் மரபுடன் இணைத்துப் புலவர்களால் பேசப்பட்டனர்.

இவர் புலவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவரைப் புகழ்ந்து தனி நூல் ஒன்றும் பாடப்பட்டுள்ளது. அந் நூலே பத்துப்பாட்டில் காணப்படும் பெரும்பாணாற் றுப் படையாகும். நக்கண்ணனார் என்னும் புலவரும் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பெரும்பாணாற்றுப் படையின் மூலம் இளந்திரையர் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல புலனாகின்றன. இளந்திரையரது செங்கோன்மை காரணமாக வழிப் போவாரை வெட்டி அவர்கள் கையகத்துள்ள பொருள் களைக் கொள்ளும் வழிபறிக் கொள்ளையர் இலர். இடி விழுந்து இன்னல் உறுத்தாது. பாம்புகள் தீண்டிப் பயம் உறுத்தா. கொடிய விலங்குகள் கொடுமைகள் செய்யா. இளந் திரையருடன் மலைந்தவர் தேயம் பாழ்படும். நயந்தவர் தேயத்தில் நன் பொன் பொலிவு பெறும். முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுவனவற்றை அளிப்பர். புலவர்கட்குப் பேர் அணிகலன்களும் பிற கலங்களும் கொடுத்து மகிழ்வர். இரவலரது கிழிந்த ஆடையை நீக்கி நல்லாடையினை ஈவர். சோறும் கறியும் கொடுத்து உபசரிப்பவர் என்றெல்லாம் பெரும்பாணாற்றுப்படை கூறிப்பிட்டு இம் மன்னரைப் புகழ்கிறது.

இவ்வாறான பெருமைகட்கு உறைவிடமான இளந்திரையன் புலவரால் பாடப்படும் புரவலராக மட்டும் இன்றித் தாமே கவிபாடும் காவலராகவும் இருந்தனர். இவர் பாடிய பாடல்களாக நற்றிணையில் மூன்றும் புறநானூற்றில் ஒன்றும் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் என்னும் நூலும், நன்னூல் மயிலை நாதருரையும் இவரால் இளந்திரையம் என்னும் நுால் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றன. இம் மன்னரால் ஆக்கப்பட்ட ஊரும் ஒன்று திரையனது ஊர் என்று நன்னூல் மயிலை நாதர் உரை கூறுகிறது!

நற்றிணையில் இளந்திரையன் பாடிய பாடல்களால் தலைவன் தலைவியருடைய அன் பின் மாட்சிகள் தெரிய வருகின்றன. ஓர் இடத்தில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தபோது கார்காலத்தில் வந்து விடுவதாகத் தலைவிக்கு உறுதிகூறிப் புறப்பட்டான். கார் காலமும் வந்தது. மழையும் பெய்தது. அதன் காரணமாகப் பிடவ மலரும், கொன்றைப் பூவும், தோட்டல் அலரும் மலர்ந்து தோன்றின. இவற்றைக் கண்ட தலைவி "இன்னமும் தலைவர் வந்திலரே" அவர் கூறிச் சென்ற கார்ப்பருவமும் வந்து விட்டதுவே" என்று கூறி வருந்தும்போது, தோழி "மாதே இது கார்ப்பருவம் அன்று. மேகம் பருவம் அல்லாத காலத்தில் கடல் நீரை முகந்து கொண்டு தாங்கமாட்டாமல் ஈண்டுப் பொழிந்தது. அந்நீரைப் பெற்ற மலர்கள் மலர்ந்தன. அங்ங்னம் இருக்க, நீ எப்படி இதனைக் கார்ப்பருவம் என்று கருதலாம்?" என்று கூறும்போது தலைவியை ஆற்றுவிக்க வேண்டுமென்ற கருத்துக் கொண்டு மேகத்தை "மதியின்று மறந்து கடல் முகந்த கமம் சூல் மாமழை," என்று கூறியிருப்பது சுவை தருவதாகும். அதாவது அறிவில்லாமல் மேகம் கடல் நீரை முகந்து கருவுற்றது என்பதாம். அதே பாடலில் வெயிலின் பரப்புக்கு உவமை கூறுகையில் "துகில் விரித்தன்ன வெயில்" என்று ஆசிரியர் கூறுவதைப் படித்து இன்புறல் வேண்டும். மற்றொரு பாடலில் கடற்கரையில் நண்டுகள் அலையால் உந்தப்பட்டுக் கரையினை அணுகும்போது, அதனைப் பிடிக்க இளம் பெண்கள் முயன்று ஓடுதற்குள் அந்நண்டு ஓடி வளையில் ஒளிந்து கொண்டபோது வளைந்து நிற்பதையும் இக் கவிஞர் கவினுறத் தெரிவிக்கப்புக்க போது "ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇஉள் ஒழிந்த வசைதீர் குறுமகள்" என்பர்.

புறநானூற்றில் இப்புரவலப் புலவர் கூறியுள்ள கருத்தினையும் கருதுவோமாக. அப் பாடல் அரசர்கள் அரசினை எம்முறையில் நடத்தவேண்டும் என்ற குறிப்பினை அழகுபடக் கூறுகிறது. நேர்முகமாகக் கூறின் தம்மை ஒத்த மன்னர் "இவனே நமக்கு அறிவு கொளுத்துபவன்?" என்று சினம் கொள்ளக்கூடும் என்று கருதியோ, அன்றி, வேறு எந்தக் காரணத்தாலோ உவமையாகவே கூறி உவமேயத்தால் தாம் கூறக் கருதிய கருத்தினை நம்மையும் ஏனையவரையும் யூகித்து அறியுமாறு செய்யுளை அமைத்து இருப்பது இவரது நுண்ணறிவுத்திறனை நன்கு புலப்படுத்துவதாகும். "நல்ல உருளையைக் கொண்ட வண்டியைச் செலுத்துவோன் விழிப்புடன் நன்முறையில் செலுத்து வானேயானல், தனக்கும் ஊறுபாடு எய்தப் பெருதவனயும் பிறர்க்கும் தீங்கினை விளைவிக் காதவனயும் வழியைக் கடந்து செல்வான். அவ்வாறு இன்றி அச் சகடத்தினைத் தாறுமாறாகச் செலுத்தினால், அவன் தனக்கும் தீங்கு ஏற்படுத்திப் பிறர்க்கும் இன்னலை விளைவித்துச் சகடத்தையும் துன்பத்திற்கு உள்ளாக்குவன் என்பதே இப்புலவர் புறநானூற்றில் புகன்ற பாட்டின் பொருள். இதன் உள்பொருள் காவ லாகிய வண்டியினைச் செங்கோன்மையாகிய நெறியில் செலுத்தாதுபோனால், பகையாகிய சேற்றில் காவல் சாகாடு அழுந்தித் தனக்கும் தன் கீழ் வாழ்வார்க்கும் பல தீக்கேடுகளை மேன்மேலும் தரும் என்பதாம் ;

"காவல் சாகாடு உகைப்போன், மானின்
ஊறுஇன்ருகி ஆறு இனிது படுமே ;
உய்த்தல் தேற்றன் ஆயின், வைகலும்
பகைக்கூழ் அள்ளல் பட்டு

மிகைப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே"

என்ற பாடலில் - மேல்கூறிய கருத்துக்களை நன்கு தெரிந்துகொள்க.

இவ்வாறு அரசர்களாய் இருந்தவர் அருங்கவி பல புனைந்து மக்களுக்கு அறிவு கொளுத்தியுள்ளார். அரச பொறுப்பைமட்டும் பாராது, அரச குடியினில் பிறந்துவிட்டோம் என்று இறுமாந்து, அறிவு மதுகை இன்றி வாழ்நாள் கழிக்காது, தாமும் அறிவுசான்ற புலவர்களாகப் பொலிந்து, இன்கவிகள் பல இயற்றிய பண்பு தமிழ்நாட்டின் தனிப்பண்பாகும். இன்னணம் கவிபாடும் கவிஞராய் மன்னர்கள் பலர் விளங்கியதால்தான் இவ்வரசர்களும், நல்லிசைப் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்பட்ட பெருமை பெற்றனர். இவர்களது அறிவுத்திறனை மேலும் மூல நூலில் முழுமையும் கண்டு மூதறிவு பெறுவீர்களாக!