கவியகம், வெள்ளியங்காட்டான்/அன்னையின் ஆணை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னையின் ஆணை

அன்னை யாருயிர்த் தெய்வமுள் ளன்பெனும்
அளப்பருங்கட லானவ ளார்வமாய்த்
தன்னை முற்றிலு மென்னலம் பேணவே
தந்த வள்தள ராத வுழைப்பினள்!
சின்னஞ் சிறிய கதைகளைச் செப்பியென்
சிந்த னைக்கு விருந்துசெய் வித்தவள்:
பன்ன ரும்நலன் தேடி யளித்தவள்
பாயின் மேல்கிடந் தாளுடல் நோயினால்!

சிரத்தை யோடிர வும்பக லாகவே
செயல்மு றைப்படி வந்துதன் தேர்ச்சியைப்
பொருத்தி வைத்தியம் பார்த்த மருத்துவர்,
பொழுதி றங்கிடப் போய்விடு மிவ்வுயிர்
வருத்த முற்றுப் பயனிலை, அன்னையின்
வாழும்நாட்க ளனைத்தும கழிந்த'தென்
 றருத்த மாக வுரைத்துவிட் டேகவும்.
யாது செயலென் றணங்கிட லாயினேன்!

உறவி னர்பலர் கூடி யிருக்கவும்,
ஊரினர்.வரப் போகவும், வீட்டினில்
பிறவி மறைவுக் கிடையுள்ள வாழ்க்கையின்
பெருமை, சிறுமைகள் பேசி யளக்கையில்,
முறுவல் பூத்த முகத்தின ராகிவே
முன்றி லில் இளம் பிள்ளைக ளாடவே,
உறுவ தென்கொலென் றுக்க மிழந்துநான்
உளமு டைந்துலை வெய்திட லாயினேன்.

அந்திப் போதைனை நொந்திடச் செய்ததால்,
அங்கம் யாவு மாடித் தளர்ந்தன!
சொந்தத் தாயி னுயிரைக் கவரவே
சோரன் போல்வரு மந்திப் பொழுதெனை
நிந்த னைமொழி சிந்தியென் நெஞ்சினில்
நீக்க மற்ற துயரம் நிறைகையில்,
விந்தை யன்னை விரும்பி யழைத்தெனை
வேட்க நோக்கியமர்த்தி விளம்பினாள்!

'வண்ண மேனி வலுவைக் குலைத்துநோய்
வாளி னிக்கணம் வாங்கியே என்னுயிர்
விண்ணி லேற்ற விரும்பினன் காலனும்:
விதிமுறையுமிது வாதலின் நீயிதை
எண்ணி யுள்ளம் அழித லிழி'வென
ஈன்ற தாய்தன் னிறுதி யியம்பவும்,
கண்ணி ரண்டு மருவிக ளாகவே
கலுழ்ந்து கேவிக் கதறிட லாயினேன்!

சேர அன்னையின் சிந்தை யறிந்திடச்
'செய்வ தென்'னென நைந்து வினவக்கண்
ணீரை நீக்கு; நிலை குலைதல்தவிர்!
நெஞ்சைத் தேற்றிக்கொ ளென்மக னே!யெனக்
கோர, அக்கணம் நானது கொள்ளவே
கூறி னாளன்னை கூர்த்த மதியொடும்!
ஊரி லுள்ள - உழைப்பவர் கண்ணிலே
ஒரேஎ வொருதுளி நீரொழு காவிதம்.

உதவி யொப்புர வாகவே வாழ்ந்திருந்
துண்மைக் காக வுயிரை மீந்தொரு
முதுபெ ருங்குடி மூத்த மகனென
முயன்று முறைநெறி மேற்கொண் டொழுகியே,
எதுவந் துறினுமோ ரென்னை வச்சமும்
இன்றி வாழ்ந்திரு!" வென்றன னேற்றுநான்
அதுவு மின்று முதல்கொண்டு வாழுவே
னன்னை!" யென்னஅவ் வாவி யகன்றதே!