உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/அறிவுறல்

விக்கிமூலம் இலிருந்து

அறிவுறல்

அன்ப மைந்த அகமே! எங்கள்
அறிவ மைந்த புறமே!
இன்ப மைந்த இகமே! - உங்கள்
இயல்பி லங்க வைப்பேன்!

எல்லை யற்ற எழிலால் - கமழும்
இனிய நறும ணத்தால்
முல்லை மலர்க ளெனவே - தமிழின்
முகம்மலர்த்த முயல்வேன்!

கள்ள மற்ற கண்கள் - கவினே
கலந்த மைந்த மேனிப்
புள்ளி மானைக் கொல்லும் - பொல்லாப்
புலியைப் பூட்டி வைப்பேன்!

கொஞ்சு கின்ற - கொவ்வைக் காரியைக்
கூறு செய்த - செவ்வாய்
விஞ்சு மழகுக் கிளியின் - சிறையை
வீட்டி வாழ விடுவேன்!

வெயிலெ ரிக்கும் வேளை விடலையர்
விரும்பிப் பாடும் சோலைக்
குயிலைக் கொத்து கின்ற - காக்கைக்
குறும்ப டக்கி வைப்பேன்!

துன்புறுத்து மிருளைத் - துரத்தித்
தூய நிலவு குத்திங்
இன்புறத்தும் மதியைத் - தேயா
திலங்கு மாறு செய்வேன்!

தாழ்வனைத்தும் தள்ளித் - 'தரணியின்
தாமுயர்ந்த' தென்னும்
வாழ்வமைத்து நானும் வைகல்
வனப்பை வாழ்த்து வேனே!