உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/கொண்டுணி

விக்கிமூலம் இலிருந்து

கொண்டுணி

அளக்கு மளவிலமைந்த வகலம்
ஆழம், நீளம், அழகென லான
குளக்க ரைதனில் குந்தியே, கூவல்
கொக்கு ரைத்ததன் றக்கரை யோடு!

ஆழமானதண் ணினில் வாழும்
அருமை யானஓ மீன்களே கேளிர்!
பாழும் தூண்டி லுடன்வரு கின்றான்
பாவிச் செம்பட வன்.அதோ பாரீர்!

நீரி லென்றும் பிறந்து வளர்ந்து
நிலைத்து வாழ்கிற நீங்களெப் போதும்
ஊர் லுள்ள இம் மானிட ரென்போர்
உள்ளந்தன்னை யுணர்ந்திட வில்லை!

மனிதனுக்கொரு தீங்குசெய் யாமல்
மண்ணைப் பற்றியு மெண்ணிப்பா ராமல்,
இனிது வாழ்ந்திட என்னினு முங்கள்
இன்னு யிர்க்கிவ னேயெம னாவான்!

உங்கள் பசியைத் தணிப்பதற் காக
உலகில் மனிதனுதித்திடவில்லை!
தங்கள் பசியைத் தணிப்பதற் கும்மைத்
தான்பி டிக்கத் தவிர்ப்பதுமில்லை!

பலத்தி லவனை நிகர்பவரில்லை;
படிப்பில் மெத்தவும் கைவரப் பெற்றோன்
நிலத்தி லவனை யெதிர்த்தின்று நேரில்
நிற்க வேறுபி ராணியொன் றில்லை!

ஆண்ட வன்றனை வேண்டுவன், கொல்ல.
அவலம் புழுவினைக் கோத்ததும் நீரில்
துண்டில் வீசித் தொலைத்திடு வான், நீர்
துரம் போய்மறை வீர்விரைந் தென்றே.