கவியகம், வெள்ளியங்காட்டான்/இரக்கம்

விக்கிமூலம் இலிருந்து
இரக்கம்

குருடன் தானவன், குருடன் தான்வழி
கொஞ்ச மும்தெரி யாமுழுக்
குருடன்தானவன்! எனினும் மக்கள்
குலத்தி லவனு மொருத்தனே!

வந்து சென்ற பகல்களொடுமினி
வரவி ருக்கும் பகல்களும்,
நைந்த இரவுகளாகி அவன்வாழ்
நாட்கள் முழுவதும் நகர்வன!

எங்கி ருந்தவன் வருகி றானினி
யெங்கு செல்ல முயல்கிறான்,
இங்கு வழிமிக இடறு தொடருக
ளெவ்வி தங்கடந்தேகுவான்.

கான கந்ததனிலுள்ள கவின்மயில்,
கரடி, புலியெனும் கருத்தினில்
வான வில்லையும்காதில் வாங்கியே
வைத்திருப்பவனாயினும்,

மற்ற மனிதர்கள் போல மாதரின்
மங்கலத்திரு முகங்களை
உற்றுப் பார்த்தொரு போதிலும் தன
துள்ளம் மாசு படுத்திடான்!

'கேவ லம்,ஒரு குருட னெனப்பிறர்
கேலி செய்வது மிகமிகப்
பாவம்! அவன்வழி முழுவதும்உயிர்
பதற நெருடித் தவிக்கிறான்!

எண்ணிச் செல்லு மிடத்தை யினியவள்
இடறு றாதுசென் றெய்திடக்
கண்ணு ளோரெவ ரேனு மொருதடி
கையில் கொடுத்துத வுங்களே!