உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/மாண்பு

விக்கிமூலம் இலிருந்து




மாண்பு

'மனம்போன்று மாண்பெனு' மென்சொலை நீயும்
மறவாமல் நெஞ்சினில் கொள்ளடா!
இனம்போன் றிருப்பவரின்சொல் - 'ஏற்றம்
இல்லை' யென் சொல்லித் தள்ளடா!

அயர்வும் மயக்கமும் நீக்கடா - நாளும்
ஆற்றலறிவினைத் தேக்கடா!
உயிரிலே வுயிரென் வுக்கடா - உன்னை
யுண்மை மனிதனா யாக்கடா!

நினைவு முழுவதும் நேர்மையில் - நிற்க
நினைத்து நினைத்துப் பழகடா!
மனதை யுயர்த்து மளவிலே - மண்ணில்
மாந்த ருயர்வென் றொழுகடா!

தேடக் கிடைக்காத சொத்தடா மாண்பே
தேசத்தைக் காத்திடும் சித்தடா !
நாடும் புலமையின் சத்தடா - நாளும்
நன்மை விளைக்கின்ற வித்தடா!

இன்னல்க ளுன்னை யெதிர்க்கினும் - எஞ்சா
தேற்றத்தை யேஎன்று மெண்ணடா!
சின்னஞ் சிறியதே னியெனச் - சேர்ந்து
சிறந்த செயல்களைப் பண்ணடா!

எண்ணி யெண்ணித்தினம் தேரடா! - நல்ல
இயல்பினை யேவெளி யாக்கடா!
மண்ணிற் பிறந்த மனிதரில் - நீயோர்
மாணிக்க மாவதை நோக்கடா!

என்னடா! என்னடா! என்னடா! - எங்கும்
இன்பம் விளைத்திட எண்ணடா!
கண்ணும் கருத்துமா யெண்ணடா - எண்ணின்
கடைத்தேற லாமிந்த மண்ணிலே!