கவியகம், வெள்ளியங்காட்டான்/பராக்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பராக்கு

அச்சமற்றிரவில் - மகிழ்ந்தே
ஆடு மென்குழந்தாய்!
உச்சி வான்றனிலே - இளம்பிறை
ஊர்ந்து செல்வது பார்!

பொன்னின் மலர்பூத்த - பூங்காப்
போலு மெழில் வானில்
மண்ணுந் தாரகைகள் - மலர்ந்து
மகிழ்ந்தி ருப்பனபார்!

சின்னஞ் சிறியனவாய் - வானில்
சிதறி யிருந்தமுகில்
துன்னி யிளம்பிறையைத் - தொடர்ந்து
தொல்லை தருவதும் பார்!

'வண்ணக் கருமுகிலே! - நீயென்
வழியை மறைத்தாலுன்
கண்ணைக் கரைத்திடுவேன்' எனப்பிறை
கடிந்து ரைப்பதைப் பார்!

'அடிவ யிற்றினிலே - கண்கள்
அமைந்திருக்கிறது,
பொடிய னே போடா!' - எண்முகில்
பொரிந்து விழுவதும் பார்!'வயிற்றில் கண்களையும் - முதுகில்
வாயும் வைத்திருந்தால்,
இயற்றும் தொழில் போர்தான்'! - எனப்பிறை
இகழ்ந்தி யம்புதல் பார்!

நாக்கறுந்தது போல் - முகிலும்
நாணி வாயடைத்தங்
கேக்கம் டழவே - கண்ணீர்
இறங்கி வருவதும் பார்!