கவியகம், வெள்ளியங்காட்டான்/இளைஞர்
Jump to navigation
Jump to search
இளைஞர்
தெளிவுடைய கல்வியும் கேள்வியும் மேலான
செயல்களில் தெம்புடையையும்
தேசபக்தி யுமினிய சொற்களுடன் நகைமுகமும்
தேவைகளில் மிதமும் நல்ல
வளமுடைய தேகமும் வாதுசூ தில்லாத
வாக்குங் கூர் மதிவன்மையும்
வழிதவரி நடவாத திடமனதும் பெரியோரா
வழிபடும் வழக்குடையையும்
களவுகர் வங்கோபம் காலம்வீ ணாக்குதல்
கள்கயமை யாதியற்ற
கலையார்வ மொடுங்கல கலப்பான தேகக்
கட்டழகும் வாய்த்திருக்கும்
இளைஞர்களை ஈன்றநன் னாட்டினு
இன்னலுண் டாவதில்லை
என்பதனை யின்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.