கவியகம், வெள்ளியங்காட்டான்/இல்லறம்
Jump to navigation
Jump to search
இல்லறம்
பல்வேறு தொழில்களில் எதையேனு மொன்றிளம்
பருவத்தில் நன்கு பழகி
பலரும்வி ரும்பும்விதம் நாடோறுந் தவராமல்
பாங்காக வே புரிந்து
சொல்வேறு செய்யுங் தொழில்வேறு பட்டவர்
தொடர்புவே ரோடறுத்துச்
சுதந்திரத் திற்கென்றுந் துளியங்கம் நேராமல்
சுயசிரம சீவியாகி
புல்வேறு நெல்வேறு தானெனினும் பாத்தியுள்
பொருந்தியவை வாழ்வதே போல்
பொதுவாக அனைவரையுஞ் சுயமாகப் பாவித்துப்
புகழ்நனி பொருந்தும் விதமாய்
இல்வேறு கொண்டுதன் மனைவியுடன் இன்பமாய்
இருப்பதின் பெயர் இல்லறம்
என்பதனை இன்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.