கவியகம், வெள்ளியங்காட்டான்/கவிதை

விக்கிமூலம் இலிருந்து
கவிதை


கவிதை கவிதை என்போம்! - அதுகண்
கண்ட தெய்வ மென்போம்!
செவியின் செல்வ மென்போம் - சேர்த்துச்
சிந்தை பெய்து கொள்வோம்!

நினைவை நேர்மை செய்து - நெறியில்
நிலைநிறுத்து கவிதை!
கனவு போன்ற வாழ்வைக் - கலைபாய்க்
கவின்பெ றச்செய் கவிதை!

காதல் மோக னத்தை - வாழ்வில்
காண வைத்த கவிதை!
சோதி வான மணிபோல் - ஞானச்
சுடர்து லங்கு கவிதை!

பேதை யென்ற பிணையை - அறவே
பெயர்த்தெறிந்த கவிதை!
மேதையென்ற பெயரை - இட்டு
மேன்மை செய்த கவிதை

சோம்பல் சூது சோகம் - பகைமை
சுட்டெரித்த கவிதை!
பூம்பொ ழில்ம லர்த்தேன் - இனிமை
பொதிந்து வைத்த கவிதை!

மனதை மாண்பு செய்து மதியில்
மணமெ ழுப்பு கவிதை!
புனித மான மனிதப் - பிறவிப்
பொருளு ணர்த்து கவிதை!

தலைமை தாங்கும் தமிழ்ப்பூம் - பொழிலில்
தளைய விழ்ந்து கமழப்
புலமைதேங்கும் கொடிகள் - அழகாய்ப்
பூத்த ளித்த கவிதை!