கவியகம், வெள்ளியங்காட்டான்/புடமிட்ட பொன்

விக்கிமூலம் இலிருந்து
புடமிட்ட பொன்

விற்பு ருவமதில் வியர்வை பூத்திடவும் - 'கொஞ்சம்
வெகுளி எனஅவை மேலும் கோனிடவும்
சிற்பம் உயிர்பெறும் மந்தி ரச்சொல்லால் - எழுந்து
சேர என்னிடம் தேடி வந்ததென.
நிற்ப தற்கிது போது' மெனஇருந்த - இல்முன்
நெஞ்சு குளிர்ந்திட வந்து நின்றவன்காண்
கற்புக் கரசியென் காதல் தாராவென்-றந்தக்
கதவின் சந்துகள் காண உதவினவே.

'சரக்கென் றெழுந்ததும் கதவின் தாழ்நீக்கிச் - சற்று
சாய்ந்து நிலைப்படி யோரம் நின்றவளாய்
சிரிக்க முயன்றவனாகியே மொழிந்தேன்:' எனது
சீவன் நலமுடன் வந்து சேர்ந்ததென.
உருக்கம் உவகையோ டுரிமை உணர்வெனவே - பண்புகள்
உந்த ஒருதுளி அதரம் மலர்த்துவளாய்
அரைக்கண் சுருக்கியே அவளும் அகம்பார்த்தாள்- பற்பல
அருத்தம் அதில்நளிை பொருத்தி ஆவலுடன்!

கையி லிருந்தஅப் பையை வாங்கியதும் - 'வா'வெனக்
கனிவு காட்டியோர் வார்த்தை கூறியதும்,
வெயிலில் சென்று களைத்து வந்தவர்க்கே - நிழலாய்
விளையும் இன்பமும் விளங்கு' மென்பதுபோல்
செய்வ தென்னயென் றெதுவு மறியாமல் - 'பேதைச்
சிறுமி யெனஉமை விட்டு நான்பிரிந்தேன்.
தெய்வ மேதயை கூர்ந்து மறந்திடுக! - என்றவள்
திக்கித் தேம்பவும் பக்கெனச்சிரித்தேன்.

தோட்டந் துரவுகள் சூழ அதனிடையே - எழில்வீடு
தோகை மயில் இன மான்கள் துள்ளிடயே,
கோட்டை கொத்தள மாய மைத்ததிலே - தோழிகள்
கூட இருந்துகுற்றேவல் செய்பவராய்
ஆட்டம் பாட்டுகளோடு வாழ்வதிலும் - தனது
அன்புக் கணவனின் அருகி லினிதிருந்து
ஓட்டை வீட்டி லிணைந்து வாழ்வதிலே - பெண்ணின்
உள்ளம் நிறைவுறக் கூடும்', என்றனளே.

இன்ன தெனப்பகுத் தியம்ப இயலாத - எதுவோ
இருக்க வேண்டுமோர் சக்தி உங்களிடம்!
பொன்னும் மணியுமென்றுள்ள தெல்லாமும் - வெற்றுப்
பொருள்க ளெனப்பறித் தெரிய வும்செய்தேன்.
என்னை யீன்றஅவ் வுரிலிருப்பதெலாம் - வேம்பாய்
ஏன்க சந்தன என்பதும் அறிவேன்!
என்ன என்னமோ எண்ண வைத்ததுகாண் - இந்த
இரண்டு திங்களு முங்கள் நினைவென்றாள்.

பிறையை வென்றொளிர் நெற்றி மீதினிலே - கலைந்து
பின்முன் னாகிக் கிடந்த கூந்தலையென்
நிறைந்த காதல் நிலைத்த பார்வையுடன் - விரலால்
நெறிப்படும்படி நீவி விடலானேன்.
'சிறிய அறையிது; மேலும் ஒழுகுவது - இன்னும்
சேரும் இடர்பல கோடி உண்டெனினும்
குறையெ னும் ஏது வேனு மொன்றிருப்பின் - அதுவே
கொழுநன் றனைப்பிரிந் திருப்ப தே' என்றாள்.

எதுவொன் றிவளிடம் இருக்க வேண்டுமெனப் - பள்னாள்
எண்ணி நானெதிர் பார்த்தி ருந்தேனோ
அதுநி றைந்தவ னாகி யேவந்தாள் - புடமிட்
டற்பு தச்சுடர் வீசும் பொன்னெனவே!
புதிய சிந்தனை பொதிந்த வார்த்தைகளைத் -தாரா
புகலக் கெட்டுடல் பூரித்தவனானேன்!
மதியு லாவிய வான மண்டலம் போல் - நெஞ்சில்
மகிழ்ச்சி யாகிய நிலவு மேவியதே!