கவியகம், வெள்ளியங்காட்டான்/மலையும் மயிலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மலையும் மயிலும்

பச்சைப் பயிர்கள் வளர்ந்திட வென்றோ
பால்ப சுக்கள் பருத்திட வென்றோ
இச்சகத்தில்பல் லாயிரங் கோடி
இனிய சீவன்கள் வாழ்ந்திட வென்றோ
நிச்சயம்செய்து கொள்ள நினைத்து
நீண்ட நேரம் நெருங்கி யுசாவி
உச்சி வானில் குழுமி முகில்கள்
ஒருங்கு மின்னி உருமுதல் கண்டே!

மதிமுகத்தில் மலர்ச்சி மறைந்து
மனது நொந்தனள் தாரகை மெத்த!
பதைப தைப்புடன் நானு மெழுந்தேன்.
பதுங்கி நிற்பதற் கோரிடம் தேட!
'இதய மென்மலர் வன்பிணி தீர
இன்றெ ழுந்தது கார்முகி' லென்று
புதிய போதை பொருந்தப் பொலிந்து
போற்றுந் தோகை எழில்மயி லொன்று!

குடியிருந்தஎன் வீட்டுக்கு முன்னால்
கோவி லில்குடி கொண்டுள்ள தேவி
கடிம லர்ப்பொழிப்பைம்புற் றரையில்,
கவின்மி குந்ததோர் காட்சியி தென்ன.
இடிமு ழக்கினுக் கேற்ப வியங்கி
இலங்கும் தோகை குலுங்க விரித்து,
படியி லும் ஒரு சொர்க்கமுண் டென்னப்
பரத நாங்டடியம் பண்ணிட லாச்சு!

விண்ண கம்எனும் பெண்மணி பாடி
வீணை மீட்டி விளைக்கும் இசைக்கு
மண்ணில் மாந்தர் மகிழ்ந்திடு மாறு
மாம யில்களித்தாடுதல் கண்டு,
கண்ணி ரண்டும் பெறும்பய னின்று
காணப் பெற்றவன் போன்று களித்தென்
எண்ணம் சொல்செய லென்பன வெல்லாம்
இழந்து சித்திர மொத்தவ னானேன்.

குடியி ருந்தஎன் குடிலுக்கு முன்னால்
கோவி லில்குடி கொண்டுள்ள தேவி
கடிம லர்ப்பொழில் பைம்புற் றரையில்
கவின்மி குந்ததோர் காட்சியி தென்ன.
இடிமு ழக்கினுக் கேற்ப வியங்கி
இலங்குந் தோகை குலங்க விரித்து
படியி லும்பர மானந்த மென்னப்
பரத நாட்டியம் பண்ணிட லாச்சு!

விண்ண கம்விழை வித்தகி யாகி
வீணை, மீட்டி விளைக்கு மிசைக்கு,
மண்ணில் மக்கள் மகிழ்ந்திடு மாறு
மாம யில்மதித்தாடுதல் கண்டு
கண்ணி ரண்டும் பெறும்பய னின்று
காணப் பெற்றவ னாகிக் களித்தென்
எண்ணம் சொற்செய லென்பன வெல்லாம்
இழந்து சித்திர மொத்தவ னானேன்.

ஒப்பி லாஎழில் பீலி யுகைப்பில்
உணர்வ னைத்து மொருங்கதி லொன்றி
இப்பி றப்பினி லெய்துவ தின்றே
இயைந்த தென்று வியந்திட நானும்
கப்ப லொன்று கவிழ்ந்த போன்று
கண்க லங்கக் கவலையி லாழ்ந்து
எப்ப டியினித் தப்புவ தென்றே
ஏங்கி னானென்றன் துங்கா விளக்கும்!

பேரெ ழில்தனைச் சேரப் பெருக்கிப்
பிரிய மாய்நடமாடும் மயில்மேல்,
மாரி முத்துக்கள் வாரிப் பொழிந்து
மகிழ்ச்சி கூர்ந்து புகழ்ந்ததும் வீட்டுக்
கூரை பாரியாய் மாறித் தரையைக்
குளமெனும்படிச் செய்தது மொன்று!
சாரை சாரையா யூறிச் சுவர்கள்
சகதி யாகிக் களைந்த திரண்டு!

சாறு காய்ச்சிய கட்டி படகாய்ச்
சகதி நீரில் மிதந்தது மூன்று!
வேறு வீடொன்று பாருங்க ளென்று
வேத னைக்குரல் நான்குடன், வேறு
நூறு நூறு விதம்தினம் நெஞ்சு
நொந்த ழச்செயும் வெந்துயர் - யாவும்
ஆறிச் சீவன் தழைக்கப் பருகும்
அமிழ்த மென்னத் திகழ்ந்ததக் காட்சி!