காஞ்சி வாழ்க்கை/நாற்பது ஆண்டுகளுக்குமுன் நான்

விக்கிமூலம் இலிருந்து


நாற்பது ஆண்டுகளுக்கு முன்
நான்

மனிதன் வாழப்பிறந்தவன். பரந்த அண்ட கோள வாழ்வியலில் மனித வாழ்வு ஒரு நொடிக்கும் குறைந்தது. என்றாலும் அதில் அவன் வாழவே பழகவேண்டும். உள்ளத்தில் உண்மை ஒளியும் உதட்டில் வாய்மையும் செயலில் செம்மையும் சிறக்க வாழும் மனிதனே அந்த நொடி எனும் கால எல்லையைத் தாண்டி நெடிது வாழ்பவனாவான். இந்த மனித இனம் தோன்றி எத்தனையோ ஆண்டுகள் ஆயின. எனினும் அந்த இனம் பற்றித் திடமான வரலாறு இல்லை. இந்த நூற்றாண்டில் பல்வேறு சாதனங்கள் உண்டானமையின் பலவகையில் மனித வரலாறு விளக்கப் பெறுகிறது. அறிஞர்கள் தம் வாழ்வைப் பற்றி நூல்களும் வடித்துள்ளார்கள். அந்தப் பெருவரிசையில் ஒன்றாக இது அமையாததாயினும் ஓரளவு இந்த நூற்றாண்டின் இடைக் காலத்தில் இருந்த காஞ்சியைச் சார்ந்த ஒரு நிலையினை இது காட்டும் என நம்புகிறேன்.

பல பேரறிஞர்கள் நாட்குறிப்பினை, முறையாக எழுதி வைத்து, அடுத்துத் தேவையாயின் அவற்றைத் தொகுத்தும் விரித்தும் நூல்களை வெளியிடுவர். சில நாட்குறிப்பு ஏடுகள் அப்படியேயும் அச்சிடப் பெற்றுள்ளன. மேலைநாடுகளில் இத்தகைய சுய வரலாறுகளும் மற்றவர்கள் தம் ஆசிரியர் போன்றார் பற்றி எழுதிய வரலாறுகளும் அதிகமாக உள்ளன என அறிகிறோம். எனினும் நம் தாய்நாட்டில் அதிலும் தமிழ்நாட்டில் அதிகமாகத் தனி மனிதர்தம் வரலாற்று நூல்கள் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதப் பெற்ற ஒருசில வரலாற்று நூல்கள் உண்டேனும் தம் வரலாற்றைத் தாமே எழுதும் மரபு இன்னும் நம்மிடை வளரவில்லை. திரு. வி. க. போன்ற பெரியவர்களுள் இரண்டொருவர் எழுதிவைத்த வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளன. அந்த வரிசையில் இன்றேனும், ஏதோ ஒருவகையில் என் வாழ்க்கைக் குறிப்பை எழுதி அதன் ஒரு பகுதியையே இன்று உங்கள் முன் வைக்கிறேன். என் இளமை வாழ்வு குறித்து எழுதிய இளமையின் நினைவுகள் முன்பே வெளிவந்துள்ளது.

உயிர் வளர்ச்சியின் உச்சியில் வாழ்கின்ற மனிதன் தன் வாழ்வினைப் பிற உயிர்களின் வாழ்க்கையோடு, பிறமக்களின் வாழ்க்கையோடு, சமுதாய உணர்வோடு எண்ணிப்பார்ப்பானாயின் உலகில் இன்று நடைபெறுகின்ற பல போராட்டங்கள் இல்லையாகக் கழியும். இன்றைய உலகில் மனிதன் பலபேறிஞர்கள் சுட்டிக் காட்டுவதுபோது, மனித உணர்வை விட்டு விலங்கு உணர்வினை மேற்கொண்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இந்த உணர்வினால் பல உண்மைகள் மங்கி மடிகின்றன. உதாரணமாக ஒன்றைமட்டும் இங்கே சுட்டிக்காட்ட நினைக்கின்றேன். லஞ்ச ஒழிப்புப் பற்றி அரசாங்கம் தீவிரமாகப் பீராசாரம் செய்ய, சில மேல் நிலையில் உள்ள அமைச்சர்களும் ஒரு சில உயர் அதிகாரிகளும் உண்மையில் கைநீட்டாத நல்ல கடப்பாட்டில் வாழ்கின்றார்கள். என்றாலும் லஞ்சம் அங்கிங்கெனாதபடி ஆண்டவனைப்போல் தெளிவாகக் காட்ட முடியாததாய் நிலவுகிறது. இப்படியே பிறவகைளும். இத்தகைய கொடிய சூழலில் மனிதன் சிக்கி வாழும்போது, ‘அவன் சுயவாழ்வு ஒரு கேடா’ என்றுகூட நினைக்கத் தோன்றுகின்றது. எனினும் ஒருசிலர் என்றாயினும் உண்மை உணர்ந்து, நேர்மை, நாட்டிலும் நிலவுலகிலும் நிலவாதா என்ற உணர்விலேயே பல நல்ல நூல்களை நாட்டில் உலவ விடுகின்றனர். வள்ளுவர் காலம் தொடங்கிக் காந்தி அடிகள் காலம்வரை எத்தனையோ அறவோர்கள் எழுதிவைத்த அத்தனையையும் படித்துக் கொண்டே, பேசிக்கொண்டே, அவர்களைப் பற்றிய மகா நாடுகளை நடத்திக் கொண்டே, மனிதன் தன் மாறுபட்ட வழியிலேதான் சென்று கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இத்தகைய நூல்கள் தேவையா என்ற எண்ணம் என் உள்ளத்திலும் எழத்தான் செய்தது. எனினும் இந்தக் காஞ்சி வாழ்வாகிய எட்டு ஆண்டுகளில் என் அன்னையார் இருவர் பிரிந்தமையும் வேறு பிற நிகழ்ச்சிகளும் என்னை இதை எழுதி வெளியிடத் தூண்டின என்பதோடு, பிற காரணங்களை முன்னுரையிலும் காட்டியுள்ளேன். என் அன்னைக்கு என் ஊரின் பக்கத்திலேயே நிலைத்த நினைவுச் சின்னம் ஏற்படுத்த வாங்கிய நிலமும் (நூலில் குறிக்கப்பெற்றது) தற்போது என் வசம் இல்லை. எனவே இன்று அண்ணாநகரில் உள்ள அன்னையின் பெயரால் அமைந்த அறப்பணியினைச் செம்மையுறச் செய்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதற்கும் தான் எத்தனை இடர்ப்பாடுகள்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த காஞ்சி வாழ்க்கையின் கூறுகள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அக்காலத்தில் வேறு நிகழ்ச்சிகள் பலவும் இன்று என் கண்முன் நிழலிடுகின்றன. எனினும் பத்தாண்டுகளுக்கு முன் எழுதியதை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளியிடக் கூடாது என்ற எண்ணத்திலே இந்த அளவில் இந்த நூலை உங்கள் முன் வைக்கின்றேன்.

காஞ்சி வாழ்வின்போது நான் அதிகமாகக் கவிதைகளை எழுதினேன். பல அக்காலத்தில் வெளிவந்த தமிழ்க் கலையில் இடம்பெற்றன. அவற்றுள் ஒன்றே என் அன்னைக் கென வெள்ளத்தைத் தூதனுப்பிய ‘வெள்ளம் விடு தூது’ ஆகும். 1939ல் எழுதப் பெற்ற அந்த இலக்கியத்தை இணைத்து என் அன்னையின் பாதப் போதுகளுக்கு இந்த நூலை உரிமையாக்க வேண்டும் என்ற உணர்விலேயே அந்த நூலையும் இதில் உடன் இணைத்துள்ளேன். அப்படியே அக்காலத்தில் வாழ்ந்து எனக்கு வழிகாட்டிகளாக இருந்து இன்று மழை இருந்து இன்று மறைந்து அருளும் பல பெரியவர்களுக்கும் என் தலைதாழ்ந்த வணக்கத்தைச் சொல்லிக்கொள்ளக் கொள்ளக் கடமைபப்பட்டவனாகின்றேன்.

காலம் நமக்கென நிற்பதில்லை. ‘நிகழ்காலம்’ என்ற ஒன்றே இல்லை என்று அறிஞர்கள் கூறும் அளவுக்குக் காலம் விரைந்து செல்லுகிறது. ‘செல்லுகிறது’ என்று முடிப்பதற்குள் அந்த நிலை இறந்தகாலமாகி விடுகிறது. இவ்வளவு விரைந்து செல்லும் காலச் சூழலுக்கிடையில் கடந்த காலத்தை நினைப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்கையாகவே அமைகின்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் துக்கம் தோய்ந்தவையாக இருந்தாலும், மனிதன் அதனுள்ளேயே மூழ்கி இருந்து தன் காலத்தையெல்லாம் வீணாக்காது, சிறிது சிறிதாகத் தெளிவு பெற்று, சமுகத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு எப்படி எப்படி மாறிவாழக் கற்றுக்கொண்டான் என்பதையும் இந்த நினைவால் உணரமுடிகின்றது. ஒவ்வொரு சாதாரண மனிதனும்–கல்லாதவனும்கூட–அவனுடைய கடந்தகால நிகழ்ச்சிகளை எண்ணிச் செயலாற்றுவனாயன் நிச்சயமாக அச் செயல்கள் தெளிவு பெற்றனவாக இருக்கும் என்பது உண்மையாகும். எனவே மற்றவர்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, இந்நூல் என்னைப் பொறுத்தவரையில் என் உளத்துக்குத் தெளிவுவூட்டி, உணர்வை நல்வழியில் திருத்தி, உலகில் உலவ வழிகாட்டியாக அமையும் என எண்ணுகிறேன்.

என் நூல்கள் விற்பனை வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கே என உரிமைப்படுத்தி நின்ற நெறியில் இந்நூலும் ‘வள்ளியம்மாள் கல்வி அறத்’துக்கெனவே வெளிவருகிறது. தமிழ் உலகம் இந்நூலை நலமிருப்பின் ஏற்றுப் புரக்க வேண்டுகிறேன். இந்நூல் வெளிவரக் காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றியுடையேன்.


‘தமிழ்க்கலை இல்லம்’
சென்னை -30.
1-9-'80.

பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்.