காஞ்சி வாழ்க்கை/வெள்ளம் விடு தூது

விக்கிமூலம் இலிருந்து

வெள்ளம் விடு தூது


சீரோங்கி நிற்குமெங்கள் செல்வச் சிவபெருமான்
பேரோங்கு நற்சடையிற் பேசரிய–ஏரோங்கு

கங்கையெனப் பேர்பூண்டு காரார் பொருப்பமிசை
மங்கையென வந்திடுநல் மாநீரே–பொங்கிப்

புவியில் இழிந்தோடப் பொற்புடனே வெள்ளக்
கவியின் உளமனைத்தும் காண்போய்–அவியாத

நல்லொளியை வீசுமுயர் நற்கதிரோன் தன்கிரணப்
பொன்னொளியால் பூமியினின் றேயெழுந்து–மின்னலிடை

மேமெனச் செல்வாய் நீ மேகமாய்ச் செல்வதன்முன்
ஏகவுரு வென்பதுபோ லெங்கும்–போகாத

மாய உருவாகி மாலாகி நன்மேகம்
ஆய உருவுகொண்டு ஆள்வாய் நீ!–தோயாத

வானம் படர்ந்து வளர் நிறமே வெண்மையெனத்
தானம் அறிந்ததன்பின் தான்கனத்து–காணக்

கரிய நிறங் கொண்டு கவின்பொருந்த மின்னி
அரிய இடியொலியொன் றாக்கி–நிரல் நிரையாய்

வானவில் லென்றொன்று வளைத்து அதில்பயின்ற
மோன நிற மேழும் மூழ்குவித்து–மா நிலத்தில்

நின்ற மனிதரெல்லாம் நேர்மை மழைஎமக்குப்
பொன்ற வகையளித்துப் போற்றிடுவாய்–என்றோத

தூரலாய் மாவீழ்தாய்த் தூங்காப் பெருமழையாய்ச்
சாரலாய் வந்து தழைத்துமிகு–ஒரிரவில்

நினைத்தற் கரிய நெடுமழையைப் பெய்து

மனத்திற்கு ஓகையளி மாமழையே!–புனத்தயலும்

புள்ளிரியுஞ் சோலையிலும் பூங்கமல வாவியிலும்
உள்ளும் உயர்ந்திடுசெந் நெல்வயலும்–விள்ளரிய

இன்பம் நிறைத்து இனிமை நலங்காணத்
துன்பம் அகலத் துயர் நீக்கி–மன்பதைகள்

வாழ்வுபெற்றோம் யாமென்று வாழ்த்திப் பணிந்தேத்தும்
சூழ்புவியைக் காத்திடுநற் றூ நீரே!–ஏழ்கடலும்

வற்றி மழையாக வந்து உலகமெலாம்
சுற்றிப் பெருவெள்ளம் தோற்றுவிப்பாய்-முற்றறிஞர்

‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’யே-அடுத்துரைத்த

சொல்லேமெய் யாமென்னத் தொல்லுலகில் நீர்வளமும்
நல்ல பயிருமுடன் நாட்டுவித்து-மல்லல்

வளமுற்ற நாடதனை வந்து பெரு வெள்ளமென
அளவற் றழித்தகன்று ஆழ்த்தி–குளமெல்லாம்

அன்னம் புகலிடமாய் ஆக்குவித்து எவ்விடத்தும்
கின்னங் களையுங் கிளர்மழையே!–உன்பெருமை

நன்றாய்ந் தறிந்து நலமுரைத்தார் வள்ளுவனார்
ஒன்றாலே யல்ல ஒருபத்தால்–பொன்றாத

‘நீரின் றமையா தூலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்’கென்ற–சீரியதோர்

இன்பங் கனிந்த எழில்பெறு நற் சொல்லாலே
வன்பின் செயலகற்றி வாழ்த்துபெற்றாய்!-உன்புகழை

ஓதற் குரித்தாமோ ஓங்கிவரு நற்புனலே
சீதத் தினிமைதருந் தெண்ணீரே!–போதமிகு

தண்டமிழ்சேர் நற்குடகு தன்னில் உதித்தபெரு

மண்டலம் தான்புகழ்மா காவேரி–கண்டிடுவோர்

உந்தன்வெள் ளப்பெருக்கை ஓர்ந்து மகிழ்வாரே
கந்தன் றனை ஒரு நாள் கைத்தலத்தால்–உந்திய நற்

பொற்சரவ ணத்தினிடைப் பொற்புடனே தாங்கி நின்றாய்
நற்பெருமை சேர்ஞான சம்பந்தன்–பொற்பார்

கவிகள் பதினொன்று காரணத்தால் பாடிப்
புவியிற் புகழ்ச்சைவம் ஓங்க–அவியாத

வையைப் பெருக்காக வந்தவுந்தன் மத்தியிலே
பொய்யை அகல்விக்கப் போட்டவுடன்–ஒய்யென்று

தக்க தமிழ்ப்பெருமை தானேயாய் நீயறிந்தாய்
மிக்க அதன் நலத்தை மேவினாய்–பக்கமதில்

அப்பதிக மேந்தி அருந்தமிழின் நற்பெருமை
எப்புவியும் கண்டு இனிக்குவண்ணம்–ஒப்பரிய

நற்செயலால் முன்னேற்றி நல்ஏ டகமடைந்து
விற்பன்னாய் நின்றிட்ட மேநீரே!–கற்பமெலாம்

நின்றாயே! நீணிலத்தில் நீயன்றோ மக்களுயிர்
பொன்றாமற் காத்தளிக்கும் புண்ணியவன்–நன்றான

மெய்த்தூய்மை செய்துஉடன் மேலான இன்ப நலம்
உய்த்து உயர்விப்பாய் ஓநீரே!–உய்த்தாலும்

ஏனோ நீ அன்றிருந்த எங்கள் பழந்தமிழின்
தேனாய் விளங்கியதென் னாடழித்தாய்–கோனான

சோழன் கரிகாலன் தோன்றிச் சிறப்புறச்செய்
வாழ்கா விரிப்பட்டினத்தையன்று–பாழாகச்

செய்திட்டாய் அச்செயலால் செம்மைத் தமிழ்க்கலைகள்
பெய்திட்டாய் உன்வயிற்றிற் பெற்றிட்டாய்–உய்வரிய

தமிழின் நலங்கண்டாய் சற்றெம்மை நோக்கி

அமிழ்தம் அளித்துக்காத் தாக்குவாய்–குமிழ் நிறைந்து

மாகரைகள் பொங்கி வழிந்து பெருக்கெடுத்து
மாகரையின் மாமரங்கள் மாள்குவித்து–ஏகாந்த

நீரின் உருவாக்கி நீசென்றால் உன்பெயர்க்கு
நீர்மை எனப் பொருள்கொள் நீர்மையோ?–சீரான

பெருவெள்ளந் தன்னிலே பெண்கள் கலந்துபெயும்
திருவின் விளக்கெல்லாம் செம்பொட்டோ–உருவனையார்

மாலை உனக்கணிவர் மட்டற்ற இன்பத்தால்
சோலை வயற்புறத்தில் சோறுண்டு–மேலாய

காதலர்க ளோடு களிப்புக் கடல்குளித்துப்
பூதலத்தில் போயிடுவர் பொற்புடனே–நீதான்

சுழிகள் கிளப்பிடுவாய் சூழலிலே யுற்றால்
விழிகள் பிதுங்கிடவே வெல்வாய்–கழிகளிலே

தங்கிப் பல உயிர்கள் தண்ணீர்த்தா கம்போக்க
இங்கிதமாய் நின்று இசைவிப்பாய்–பொங்கரிய

பாலாற்று வெள்ளமெனப் பார்மீதில் இத்தலை நாள்
மேலாற்றி வந்திடு நல் மேநீரே!–காலாற்றி

இவ்விடத்தில் நின்று எனதுஉரை கேட்டதற்பின்
எவ்விடத்தும் ஏகிடுவாய் ஏர் நீரே!–உய்வரிய

நற்றொண்டை நாட்டை நலஞ்சிறந்த நாடாக்க
உற்பத்தி யான உயர் ஆறே!–வெற்பினர்சேர்

நந்திப் பெருமலையில் நாடிடவே தோன்றியுடன்
உந்தி விளையாடி உற்றிட்டு–சொந்தமென

மைசூரில் வாழும் மகிபர் தடுத்துன்னின்
மெய்மீது வாரு மிகு நீரைக்–கைசெய்து

கட்டி வயற்கனுப்பிக் காணரிய நற்பயனை

மட்டுக் கடங்காது மல்குவித்து–விட்டுஉனைப்

போவென்பார் பாலைபோல் பொங்குநீ ரற்றபின்பே
வாவென்ற மற்றவர்க்கு வாய்க்காலால் - சாலமிகு

நீரளிக்கும் தன்மை பெற்ற நேரிய நற் பாலாறே!
சீர்புகழ எம்மாற் றிறமாமோ - பேரான

இத்தகைய பாலாற்றின் ஏத்தரிய வெள்ளமென
உய்த்து இவண் நிற்கும் உயர்புனலே - வித்தகமாய்

வழியை மிக அடைத்தாய் வல்லாரே யானால்
விழிவைத்து நோக்கி விளித்து - கழியாத

செல்வ வளம்பலவும் செம்மைப் பயன் நிறைவும்
நல்ல நிலையினிலே நல்குவிப்பாய் – பல்விதமாய்ப

பூக்கள் இருமருங்கும் பொழிய அதையேற்று
மீக்கொள் மரமடித்து மேவுகின்றாய் – நோக்கரிய

உந்தன்மேல் வேகமதில் உற்றவர் வீடுற்றவரே
அன்றித் திரும்பி இவண் யாரறிவார் – பொன்றலிலா

கச்சிப் பதிமருங்கில் காணப் பலபேர்கள்
இச்சிக்க வந்த எழில் நீரே – மெச்சிடு நற்

காதலவன் தன்கரத்தைக் காதலியும் பற்றியுடன்
ஏதமிலை என்றுனையே யேத்துவதும் கோதகன்ற

இளமை எழிற்சிறுவர் ‘எந்தாய் இந் நீர் நலத்தின்
வளமை வழுத்துரைப்பாய்’ யென்றே – மடமையுடன்

சீலை தனைப்பிடித்துச் சிங்கார மாய்க்கேட்க
சாலப் பலஉரைக்கும் தாயாருடன் – மேலான

மக்கள் பலரும் மகிழ்வாய் நல் லாருடனே
மிக்க நலம் வேண்டி மேவிடுவார் – துக்க நிறை

தீய மனதுக்கும் தீம்புனலே உன்செய்கை
தாயின் பரிவாகத் தண்மைதரும் – மேயவர்கள்

உந்தன் நலம்கண்டார் உற்று உனைப்பிரிய

சிந்தையிலு மெண்ணார்கள் தேர்ந்துரைப்பர் – பந்தமறு


நற்றவஞ்செய் நல்லார்போல் நாடி ஒன்றுந் தேடாமல்
உற்றதொரு மேலாம் உயர் நிலையை - பெற்று

விரைவாகச் செல்லும் வியன் நலஞ்சார் வெண்புனலே
உறவாக நான்உரைக்கும் ஓர்மொழிகேள் - கரைகாணா

உன்னைப் புகழும் உயர்வுடைய புலவரிலே
என்னை ஒருவனாய் எண்ணாதே-மன்னியதோர்

நற்புகழைப் பாடுமுயர் நாவலர்போல் நானுன்னைப்
பொற்புடனே பாடேனே யாயிடினும்-அற்புதமாய்

விந்தைச் சுழல்கிளப்பி வேகமாய்ச் சொல்லுமொரு
நந்தம் பாலாற்றின் நளிர்புனலே!- இந்தநிலை

தன்னிலே சென்றதன்பின் தாண்டி ஒரு காதவழி
உன்னினால் ஓங்கிடுநற் பொற்கோயில்-பன்னிடுவேன்

அக்கோயில் செல்வதன்முன் அண்டிஉனை வேகவதி
மிக்காய்க் கலப்பாள் நீ மேன்மைபெற்று தொக்கொன்றாய்ச்

சிலதூரம் சென்றபின்னர்த் தேர்ந்து அவ ளூர்கடந்து
முன்னின்ற சிவபுரத்தை முன்னியே-பொன்னியெனப்

பொன்கொழித்துச் செல்வாய் புகுந்தெம்மூர்க் கால்வாயில்
மின்னிக் கலந்து மிளிர்வுறுவாய்-தன்னிகரில்

வேகத்தே செல்வாய் விளம்புவேன் இப்பொருளை
நீகருத்தே நிற்க நிறுத்துவாய்-போக

சிவபுரத்தைத் தாண்டிச் சென்றவுடன் என்னூர்
சிவபுரம தாகச் சிவணும்-பவ நீக்கும்

வெண்மை நிறம் பூண்ட மிக்கான மண்டபமொன்
றுண்மை உனக்குதெற்காய் ஓங்கி நிற்கும்-கண்ணான

அம்மண் டபத்தை அடுத்தோங்கும் அங்கநகர்
இம்மென் பதன்முன்னே ஏகுவாய்-நம்முடைய


நற்கடம்பன் தாதை நவில்வா ருளப்பொருளாய்ச்
சொற்கடந்த தூயோனாய்த் தோன்றிடுவன்-அற்புதஞ்தேர்

அம்பலவன் தங்கும் அழகார் திருக்கோயில்
இம்பருல கென்ன எதிர்காண்பாய்-செம்பவள

மேனியனார் கோயிலின்பின் மேவுமென தில்லிருந்து
தானினைந்து நிற்குமெந்தன் தாயானாள் தூநினைவால்

எந்தன் சுகம்காண இன்பம் அடைந்திடுவாள்
துன்பம் அகற்றி எனைச் சோபிப்பாள் - அன்புளத்தில்

ஓர்மகனாய் நின்ற எந்தன் உயர்வேதன் வாழ்வாகச்
சீர்புவியில் வாழ்ந்திடுநற் செல்வமவள் - பேரான

செல்வம் எனக்கெனவே சேர்க்கத்தன் இன்பமெலாம்
ஒல்லாவே என்று ஒதுக்கினவள்-எவ்வாறும்

நான்மகிழ்ந்தால் தான்மகிழ்வாள் நன்மனத்தில் வாழ்வுற்றுத்
தேன்இனிக்கும் தீஞ்சொல்லைச் செப்பிடுவாள்-மாறான

ஒன்னார் தமக்கிளையா உள்ளத்த ளாய்நின்று
என்னாளும் என்னுயிர்க்கு இன்பமளி-பொன்னான

நற்கருணை கொள்வாள் நலஞ்சிறந்து என்னைவளர்த்
துற்றவனாய்ப் போற்ற உறுதிசெய்தாள் - பெற்றவளே

தானாய் இருந்தாலும் தந்தைபோல் கல்விநலம்
வேண அளித்தென்னை வித்தகனாய் - நானிலத்தே

எல்லாரும் போற்ற எழிலுடைய னாக்கினாள்
பொல்லாங்கைப் போக்கிக் குருவானாள் - நல்லாளாய்

ஐந்து பெருங்குரவர் ஆனாளே யாய்நின்ற
விஞ்சு நலமளிக்கும் மேதக்காள்-எஞ்சாத

நற்றாய்நல் லம்பலவன் நற்கோயிற் பொற்கரைமேல்
உற்று எனைக் காண உன்னுவாள்-அற்புதஞ்சேர்


பாலாற்று வெள்ளமே! பண்பார் அவள்தனக்கு
வேலாயு தன்பாதம் வேண்டி இவண் - மால் நீக்கி

வாழ்கின்றே னென்றும் வழியூர்க்குக் காணாமல்
ஆழ்கின்றே னென்றும் மறிவிப்பாய் - சூழ்கின்ற

சுற்றத்தார்க் கெல்லாம் நீ சொல்லிடுவாய் என் நலத்தை
மற்றென்றன் மாவன்னை மாண்புடையாள்-பெற்றவள்போல்

நேசம் என்பால்கொண்டு நேர்மை நலம் பலவும்
பாசம் அகலாமல் பற்றிவைப்பாள்-ஆசையுடன்

காஞ்சித் திருத்தலத்தே காத்துஎனைப் போற்றியவள் வாஞ்சனைசேர் உள்ளத்தில் வாழ்வைப்பாள்-தீஞ்சுவைசார்

அவட்கும் நலம்பகர்வாய் அம்பலவன் காப்பால்
தவக்கமொன் றின்றித் தழைத்து-சுகத்துள்ளேன்

பாலாற்று நற்புனலே பகர்வாயென் சுற்றமெலாம்
மேலாக யானிங்கே மேவினேன்-கோலநிறை

நல்லின்பங் கொள்வாய் நற்றாய் பயனளிப்பாள்
அல்லும் பகலும் அறிவன்யான்- நில்லாது

ஓடிப் புகன்றால் உடனே உனைச்சேர
நாடிஒரு சேயாற்று நங்கையவள்-கூடிடுவாள்

அன்னவளோ டுற்று அழியாத இன்பமுடன்
பொன்கதிரோன் றோன்று புகழ்க்கடலுள்-மன்னிநலம்

சேர்ந்தே கலந்து தெவிட்டா இன்பதில்

சார்ந்தே மகிழ்வாய் தழைத்து.