காஞ்சி வாழ்க்கை/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
I. முன்னுரை

வாழ்க்கைப் பயணம் நீண்டது–எண்பது கோடி நினைந்து எண்ணுவது– நினைக்க நினைக்க வளர்வது–உற்று நோக்க உணர்வூட்டுவது, என் வாழ்க்கைப் பயணத்தின் ஐம்பத்தைந்தாவது வயதில்–மைல் கல்லில் இன்று நான் நிற்கிறேன். இந்த ஐம்பத்தைந்தாண்டுகளில், அறியா நிலையில் ஐந்தாண்டுகள் கழிந்தனபோக, அரைநூற்றாண்டு எல்லையை எண்ணிப் பார்க்கிறேன். அது என் எண்ணத்தின் அளவு கடந்து அப்பாலே சென்று கொண்டே இருக்கின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் என் இளமையின் நினைவுகளை எண்ணி எண்ணி உருகினேன். அதன் விளைவால் எழுந்தது என் ‘இளமையின் நினைவுகள்’ என்ற நூல். இடையில் பத்து ஆண்டுகள் எப்படியோ–என்னென்ன வகையிலோ உருண்டோடி விட்டன. இன்று மீண்டும் என் கடந்த கால வாழ்வைப் பற்றிச் சிந்தித்துத் தீட்டத் தொடங்கிவிட்டேன். ஆயினும் அதற்கு அடிப்படையாகிய எண்ண அலைகள் எல்லையற்று விரிகின்றன. அவற்றின் இடையில் சிக்கி–தள்ளுண்டு– அலைந்து இதோ என் வாழ்வைத் திரும்பி நோக்கி எழுதத் தொடங்குகிறேன்.

வாழ்க்கை முழுக்க முழுக்கச் சுவையுள்ளது அன்று–அல்லது முற்றும் துன்பத் தொடக்குள்ளதுமன்று. இரண்டும் கலந்ததே வாழ்க்கை, அவரவர் மன அமைதியின் வழியே இன்பதுன்ப எல்லை பெருகவும் சிறுகவும் கூடும். சிலர் இல்லாததையெல்லாம் எண்ணி, எல்லாவற்றையும் ஏதோ இடர்ப்பாடு கலந்ததாகக்கருதி வருந்தி வருந்தி வாழ் நாளைக் கழிப்பர்; சிலர் வள்ளுவர் கூறியாங்கு ‘இடுக்கண் வருங்கால் நகுக’ எனச் சிரித்து, துன்பத்தை ஏற்று அமைதியுறுவர். இன்னும் சிலர் ‘எது வரினும் வருக அலது எது போயினும் போக’ என்று எதற்கும் கவலையுறாது ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ எனும் வகையில் தம்மை மறந்து வாழ்வர். ஆனால் இத்தகையவர் வீழ்ச்சியுற்றாலோ எழுதல், என்றும் இயலாது. அவர்கள் அனைவரும் கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்ப்பார்களாயின் பற்பல உண்மைகள் அவர்கட்குத் தோன்றாமற் போகாது. அந்த உண்மைகளின் ஊடேதான் அவர்தம் உள்ளம் அமையும். அவ்வாறு அவர்கள் எண்ணும் எண்ணம் அவர் வாழ்வை மட்டுமன்றிச் சமுதாய வாழ்வையே செம்மைப் பாதையில் ஈர்த்துச் செல்லும். ஆயினும் அவ்வாறு எண்ணுகின்றவர் சிலரே! எண்ணினும் எழுத்தில் வடிக்கின்றவர் அவரினும் மிகச் சிலரே !

வாழ்க்கை வெறும் புறத்தோற்றத்தால் மட்டும் முடிவு செய்யப்பெறுவதன்று. அகத்தொடு பொருந்தியதே வாழ்வின் அடித்தளம். அதை உணர்ந்து கொள்ளாதவரே பிறர் புறவாழ்வைக் கண்டு பலப்பல வகையில் சிந்திப்பர்-பேசுவர். எனினும் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ளே பொதிந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளை உணர்ந்து கொள்ள இயலாது, நானே என்னுடைய வாழ்வில் என் அனுபவத்தில் பெற்ற பல உண்மைகளை மறந்துவிட்டேன். தீயவற்றை மறக்க வேண்டியது முறை-ஆனால் நல்லனவும் அல்லவா மறந்து போகின்றன. வாழ்க்கையைப் பற்றி எழுத வேண்டும் என்ற உணர்வு தூண்டத்தூண்ட சிற்சில சம்பவங்களும் அவற்றால் பிணைந்த பயன்களும் அவற்றால் நான் கண்டுகொண்ட உண்மைகளும் புலனாகின்றன. அவற்றுள் ஒருசிலவற்றையே நான் இங்கே தொகுத்துள்ளேன்.

உதகையின் உச்சியில் இருந்துகொண்டு நான் எழுதி முடித்த எனது 'இளமையின் நினைவுகள்' வெளிவந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதைப் பயின்ற அன்பர் பலர் அந்த அடிப்படையிலேயே தொடர்ந்து வாழ்வின் பிற பகுதிகளைப் பற்றியும் வடித்துத்தர வேண்டும் என்று விரும்பினர். அந்தத் தொகுதியிலும் நான் என் இளமை வாழ்வு முற்றிலும் காட்டினேன் என்று கொள்ள இயலாது. ஏதோ ஒருசில பகுதிகளைத்தான் தொட்டுக் காட்டினேன். அடுத்து எழுதும் இப்பகுதியிலும் அப்படியே ஒருசில நிகழ்ச்சிகளைத் தான் காட்டமுடிகின்றது. முன்னைய பகுதியில் நான் அறிவு வரப்பெற்ற ஐந்தாம் ஆண்டுதொடங்கி, பள்ளியிறுதி வகுப்பில் பயின்ற நாள்வரையில் சில நிகழ்ச்சிகளைக் குறித்துள்ளேன். இப் பகுதியில் என் வாழ்வில் எதுவரை எழுதுவேன் என்பது எனக்கே தெரியவில்லை. தொடங்கிய பணி எதுவரை என்னை ஈர்த்துச்செல்லும் என்பது எனக்கே புரியாத புதிராக உள்ளது. எனினும் எழுதத் தொடங்கி விட்டேன்.

முன்பகுதியில் குறித்தபடியே, என் வாழ்நாள் பூமேற் செல்லும் பொன்னாளாகக் கழியவில்லை. பார்க்கின்றவர்களுக்கு ஏதோ என் வாழ்வு பகட்டாகத் தோன்றினும், என் வாழ்வுப் பாதையில் கரடுமுரடான நெறிகளே அதிகம். என்னிடம் நெருங்கிப் பழகும் நண்பர்களும் அன்பர்களுமே அதை ஓரளவு அறிவர். எனது அன்னையால் வளர்க்கப் பெற்ற நான், அவர்கள் பழக்கியபடியே யாரையும் எதையும் அண்டி வேண்டாத நிலையில் வளர்ந்துவிட்டவன். சுந்தரர் பாடிய,

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சிருடைக் கழல்களென் றுன்னி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனுய்த் திரிவேன்'
என்ற வடதிருமுல்லைவாயில் தேவாரமே எனக்கு உறுதுணையாக நிற்பது. ஆம் ! அதைப் பாடி, அச் சுந்தரரைப் போன்றே நான் கடந்த இன்னல்கள் பல. மற்றவர் தம் குறையை மறைத்து, எதிரில் முகத்துதிபாடி, அவர்தம் உதவியைப் பெறும் 'மனித' நிலை நான் அறியாதது. உள்ளதை உள்ளபடியே விளக்கிச் சொல்வதால் எத்தனையோ பெரிய மனிதர்களது பகையைச் சம்பாதித்துக் கொண்டவன் நான். எனினும் உறுதியும் ஒருவனை இறையருளும் பொருந்திய காரணத்தால் ஏதோ என்னால் சில நினைத்த காரியங்களைச் செய்யமுடிகின்றது. அவ்வாறு செய்து முடிந்தபின் திரும்பிப் பார்த்து எப்படி முடிந்தது?’ என்றுதான் நான் எண்ணுவது வழக்கம். அவ்வப்போது நான் பெற்ற நல்லுணர்வுகள் பலப் பல.

இன்று நான் ஐம்பத்தைந்தை முடிக்கும் நிலையில் நிற்கின்றேன். பள்ளிப் படிப்பைப் பதினேழாம் ஆண்டில் முடித்த நான் கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளை எண்ணுகிறேன். இன்று இங்கே ஏர்க்காட்டின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு கடந்தகால வாழ்வை எண்ணும்போது எத்தனையோ உணர்வுகள் அரும்புகின்றன. ஏர்க்காட்டின் உச்சியை அடையப் பத்தொன்பது குறுவளைவுகளைக் (Hair pin bends) கடக்க வேண்டியுள்ளது. கணக்கில் 20 வளைவுகள் உள்ளன; எனினும் ஒன்று வெறும் திருப்பமே. என் வாழ்நாளில் இரண்டு பத்தொன்பது ஆண்டுகளாகிய வளைவுகளை எண்ணும்போது ஒருபுறம் நடுக்கமும் ஒருபுறம் நல்லுணர்வும் அரும்புகின்றன. இந்த முப்பத்தெட்டு ஆண்டுகளில் என் வாழ்வில் குறுக்கிட்டவர் எண்ணற்றவர்-முன் வந்தவர் பலர். பின் நின்றவர் பலர்-தாக்கியவர் பலர்-தாங்கியவர் சிலர். இழந்தவர் பலர்-ஏற்றவர் பலர். மறைந்தார் சிலர்-பிறந்தார் சிலர், இவ்வாறு மக்களினத்தும் பிறர் உயிர்களிடத்தும் நானும் ஒருவகை-ஒன்றாகக் கழித்த நாட்களை எண்ண வியப்பு மேலிடுகிறது. வாழ்வின் பிற்பகுதியில் நிற்கும் நான், இது வரையில் நான் பிறந்த உலகுக்கோ வாழ்ந்த சமுதாயத்துக்கோ என்ன செய்தேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது 'ஒன்றுமில்லையே' என வருந்த வேண்டியுள்ளது. இப்படி ஒன்றுக்கும் உதவாது வெற்றுடம்பினனாய் வாழ்ந்து கழிவது வருந்தத் தக்கதுதான். 'இருந்தமிழே உன்னல் இருந்தேன்’ என்று தமிழ்விடுதூது காட்டுவது போன்று தமிழ் எனக்குச் சோறுபோட்டு வழிகாட்டியதன்றி, நான் தமிழுக்கு என்ன செய்தேன்? அப்படியே எனக்கு எண்ணற்ற அறிவுரைகளை வழங்கிய சமுதாயத்துக்கும் உலகுக்கும் நான் செய்த கைமாறு யாது ? ஆம்! இந்த எண்ண அலைகளுக்கிடையில் கடந்து சென்ற வாழ்நாள் பற்றி வரையத் தொடங்கிவிட்டேன்.