காட்டு வழிதனிலே/காட்டு வழிதனிலே

விக்கிமூலம் இலிருந்து

காட்டு வழிதனிலே


ரண்டு செயல்களிலே எனக்கு அளவு கடந்த விருப்பமுண்டு. நல்ல கவிதைகளைப் படிப்பது ஒன்று; தனியாக உலாவச் செல்வது மற்றொன்று. இரண்டையும் ஒரே காலத்தில் சேர்த்துச் செய்ய முடியுமானால் அது எனக்குப் பாலில் தேன் கலந்து ஒன்றாய்க் கிடைத்தது போல.

அந்திநேரத்திலே இளஞ் சோளப் பயிர்கள் மெதுவாகக் காற்றிவே ஒல்கி அசைந்து பசுமையான அலைகள் எழுந்தாடுவதுபோல அழகிய காட்சியளித்து இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது தோட்டங்களின் வழியாகத் தனிமையிலே சென்றால் வாய் தாகைவே ஏதாவது ஒரு கவிதையை முணுமுணுக்க தொடங்கி விடுகிறது. தனிமைக்கும், இயற்கைக்கும், கவிதைக்கும் என்னவோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை வெளியிலே கிடைக்கிற தனிமைக்கு அத்தனை கவர்ச்சி இருக்க முடியுமா? அந்த இடத்திலே கவிதையானது இதழ் அவிழ்ந்த முல்லையின் மணம் போலத் தானாகவே தோன்ற முடியுமா?

மாடுகளைப் புலத்திலே மேய விட்டுவிட்டு மர நிழலிலே அமர்ந்து அவற்றைக் கவனித்துக்கொண்டிருக்கும் சிறுவன்கூட ஏதோ. ஒரு நாடோடிப் பாடலைப் பாடத் தொடங்குகிறான். அவனையும் இயற்கையே கவர்ந்து தன்னை மறக்கச் செய்கின்றதென நான் நம்புகிறேன.

மாலைப் பொழுதில் ஒருநாள் நான் கழனிகளிடையே செல்லும் ஒற்றையடி வழிதனிலே நடந்து கொண்டிருந்தேன். தனிமையைத் துய்ப்பதற்காக அவ்வாறு நான் அடிக்கடி செல்வதுண்டு. தனிமை என்றால் மானிடக் கூட்டம் இல்லை என்பதுதான் பொருள்; மற்றபடி நான் தனியாகச் செல்லுவதே இல்லை. காட்டு வெளியிலே எனக்கு எத்தனையோ தோழர்கள் உண்டு.

அழகாகப் பேசித் துணையோடு ஒய்யாரமாக இரை தேடி விட்டில் பிடித்து நடக்கும் மைனாக்கள், குடுகுடு வென்று ஓடிச் சிதறிக் கிடக்கும் தானிய மணிகளைப் பெறுக்கும் மணிப் புறாக்கள், வேலியின் மேலிருந்து அண்ணாந்து பார்க்கும் ஓணான், நீலமேனி விளங்க நீண்டு படுத்திருக்கும் மலை, சிறு சிறு கூழாங் கற்களே உருட்டி விளையாடி வரும் சிற்றோடை இவையெல்லாம் தனிமையை நன்கு துய்க்க எனக்குக் கிடைத்த தோழமைப் பெருஞ்செல்வங்கள். உயிர்ப் பரிணாமத்தின் உச்சியிலே இருக்கிற நம்முடைய இனம் மட்டும் கிடையாது. இயற்கையைத் துய்க்கச் செல்லுகிற இடத்திலும் பல மனிதர்கள் வாழ்க்கைச் சுமையையெல்லாம் மூட்டை முடிச்சோடு கொண்டு வந்து அவற்றைப் பற்றித் தொணதொணப்பார்கள். சிலர் கடற்கரைக்குச் செல்லுவார்கள். சுருண்டு சுருண்டு நிமிர்ந்து எழுந்து வெண்ணுரை மகுடமிட்டு மடங்கித் தடாரென்று விழுந்து சலிப்பின்றி, ஓய்வின்றி, உறக்கமின்றிப் புரண்டுகொண்டிருக்கும் அலைகளின் அழகும், அகன்று விரிந்து நீல மணிப் பரப்பாய்க் கிடக்கும் கடலின் காம்பீரியமும் அவர்கள் உள்ளத்தைக் கவரா; அவற்றிலே அவர்கள் மனம் செலுத்த மாட்டார்கள். உத்தியோக ஊழல்கள், ஊர் வம்புகள், குடும்பத் தொல்லைகள் இவற்றையெல்லாம் அவர்கள் கூடவே தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். நத்தைக்குக்கு வீட்டுச் சுமை எப்பொழுதும் முதுகின் மேலே; அதுபோல அவர்களுக்கு வாழ்க்கைச் சுமை. நீலமேனி நெடுஞ் சாகரத்தை அவர்களுடைய கண்ணிலே படாமல் காலமாயைக் கடுஞ் சாகரம் மறைத்துவிடும். வாழ்க்கையை ஒரு நொடி மறந்துவிட்டு இயற்கை இன்பத்தை நுகரலாகாதா? அவர்களால் முடியவே முடியாது.

எனக்கு இப்படிப்பட்ட மனிதர்களைப் பிடிக்கிறதே இல்லை. உலாவப் புறப்படும்போது அவர்களை நான் பக்கத்தில் அணுகவிடமாட்டேன். ஆனால், சில வேளைகளிலே எப்படியாவது ஒன்றிரண்டு நத்தையர்கள் எதிரிலே வந்து தொலைவார்கள். அது மட்டுமல்ல; “ஏன் தனியாகப் போகிறீர்கள்? யாரும் துணை கிடைக்கவில்லையா? நான் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே கூட நடக்கத் தொடங்குவார்கள். “இல்லை, நீங்கள் தொல்லைப்பட வேண்டாம்” என்று கூறுவதற்குள்ளே, “என்ன, இந்த வாரத்து ரேஷன் அரிசியைப் பார்த்தீர்களா?” என்று ஏதாவது பேச்செடுத்து விடுவார்கள். பிறகு அவர்களைத் தப்பவே முடியாது. ஒட்டுமுள் பார்த்திருக்கிறீர்களா? வேட்டியில் ஒட்டிக்கொண்டதே என்று காட்டு வழிதனிலே எடுக்கப் போனால் கையில் ஒட்டிக்கொள்ளும்; அக்கையை விடுவிக்க மற்றொருகையை பயன்படுத்தினால் அதில பிடித்துக் கொள்ளும். விடவே விடாது. அதை ஒத்தவர்கள் இந்த மனிதர்கள்.

இயற்கை இன்பத்தைச் சுவைப்பதற்குப் புள் விலங்களும், மரஞ்செடி கொடிகளும், மலர்களும், ஓடைகளும், குன்றுகளுமே ஏற்றவை. மனிதன் மட்டும் இயற்கைக்குப் புறம்பானவனா, அவனும் இயற்கையில் ஒரு பகுதிதானே என்று நீங்கள் கேட்கலாம். அவன் புறம்பானவன் என்று நான் கூறவில்லை. ஆனால், அவன் தனது செயற்கை வாழ்க்கையால் தன்னை அப்படிச் செய்து கொள்ளுகிறான் என்பதே என் குற்றச்சாட்டு. அவன் தனியாகத் தினமும் ஒரு நாழிகைப் பொழுதாவது தன் நாகரிகச் செயற்கை வாழ்க்கையை மறந்து இயற்கையோடு அமைதியாக ஒன்றியிருந்தால்தான் அவனுக்கு உய்வு பிறக்கும்-அவனே இன்று எதிர்த்து நிற்கும் துன்பங்கள் ஒழியும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

ஓடுகின்ற ஊற்று நீரிலே உயர்ந்த அறிவு நூல்களைக் காணலாம் என்று ஆங்கிலக் கவிஞன் ஒருவன் தந்து கூறியதில் உள்ள உண்மையை இயற்கையோடு நட்புரிமை பூண்டு தனியாக உறவாடியவர்களே அறிவார்கள்.

நான் நத்தை நண்பர்களுக்கெல்லாம் தப்பித்துக் கொண்டு காட்டு வழியிலே எங்கே போகிறேன் என்கிற எண்ணமே இல்லாமல் அன்று நடந்துகொண்டிருந்தேன். மேல் வானத்தை முத்தமிட்டுக் கொண்டு படுத்திருக்கும் நீல மலைகளின் பின்னால் பகலவன் தன் பொற்கிரணங்களைச் சுருட்டிக் கொண்டு மறையத் தொடங்கினான். பூங்காவியைக் கரைத்து அதிலே ஒளி கூட்டி எங்கும் பூசியது போலத் தோன்றிய செவ்வானம் உலகிற்கு ஒரு புதிய வனப்பைத் தந்து கொண்டிருந்தது.

தொலைவிலே பசும்புல்லை மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று வீட்டிலே கட்டுண்டு கிடக்கும் தன் இளங் கன்றை நினைந்து மடி சுரந்து அம்மா என்று கூப்பிடும் ஓசை, அமைதியைப் பெருக்கிக் கொண்டு காற்றில் மிதந்து வந்தது. எங்கோ ஒரு நாய் குரைத்தது. காக்கைகள் கூட்டங் கூட்டமாகத் தம் தங்குமிடங்களுக்குப் பறந்து சென்றன. அவற்றைப் பார்த்தால் இரவு தன் கருஞ்சிறு ஒற்றர்களை ஏவி உலகை வளைத்துக் கைப்பற்றிக்கொள்ள ஏற்ற தருணம் வாய்த்துளதா என்று வேவு பார்த்து வர அனுப்பியவைபோல் காண்கின்றன.

கழனிப் பரப்பினிவே, மாலை மயங்கும் வேளையிலே இயற்கையில் ஒரு பேரமைதி பொங்கிக் கொண்டிருக்கிறது. ஆடுமாடுகளைப் பட்டிக்கு ஓட்டிக்கொண்டு போகும் இடைப்பையன் பாடுகின்ற நாடோடிப் பாட்டு இந்த அமைதியைக் குலைப்பதே இல்லை.

இவற்றிலெல்லாம் நெஞ்சு செலுத்தி மெய்ம் மறந்து நடக்கிறபோதே என் வாய்தானாகவே ஒரு கவிதையை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

மாலைப் பொழுதில் ஒருமேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
என்று தொடங்கும் பாரதியாரின் பாடல் அது. பாடிக் கொண்டிருக்கிறேன் என்கிற நினைப்பு உதயமானபோது,

ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே

ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே

என்கிற அடிகளை நான் உச்சரித்துக் கொண்கொண்டிருந்தேன்.

மாலைப் பொழுதிலே வானையும் கடலையும் நோக்கியிருந்த வேளையில் காதலியான கண்ணம்மா பின்புறமாக யாரும் அறியாமல் வந்து தம் கண்ணைப் பொத்துவதாகக் கற்பனை செய்து பாரதியார் அழகான கவிதை எழுதியிருக்கிறார்.

அவர் சட்டென்று கண்ணை மறைத்த கைகளைத் தீண்டினாராம்; அதே நொடியில் வந்தது யாரென்று அவருக்குப் புலப்பட்டுவிட்டது.

பாங்கினில் கையிரிரண்டும் தீண்டியறிந்தேன்
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்
ஓங்கி வளர் உவகை ஊற்றிலறிந்தேன்
ஒட்டும் இரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்
வாங்கி விடடிகையை ஏடி கண்ணம்மா

மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்.
தனிமையிலே, காட்டு வழியினிலே இவ்வடிகளைச் சுவைத்துச் சுவைத்துப் பாடுகின்றபோது எனக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. என்னையும் அந்த எல்வையில் கட்டிப் பிடிக்க யாரோ பின்புறமாக வருகிறது போலத் தோன்றியது.

இருள் அரசி தன் கரும் போர்வைகளை ஒவ்வொன்றாக உலகின்மேல் வீசிக்கொண்டிருக்கின்றாள்; பொருள்களெல்லாம் மங்கித் தோன்றுகின்றன. மலையின் நீல நிறம் கறுப்பாக மாறி இருளோடு இணையத் தொடங்கிற்று. மரங்கள் இருட்டுக் குவியல்களாக மாறின. அழகுநாக் குருவிகள் கூட்டங்கின. கனத்த குரலில் ஒன்றிரண்டு வார்த்தை பேசிய செம்போத்தும் நாவொடுங்கியது.

யாரோ பின்னால் என்னைத் தொடர்ந்து வருகின்றது போன்ற உணர்ச்சி ஓங்கிக்கொண்டே இருந்தது. பாரதியார் பாட்டிலுள்ள உணர்ச்சியின் பிரதிபலிப்போ அல்லது! உண்மையில் யாராவது வருகிறார்களோ தெரியவில்லை. சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாரையும் காணோம்.

இருள் செறிந்து படிகின்ற சந்தியின் இறுதியிலே மலைப் பாதைகளிலும் காட்டு வழிகளிலும் தனிமையாக இயற்கையோடு ஒன்றி உலாவுகின்றபோது யாரோ ஒருவர் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற இத்தகைய உணர்ச்சி ஏற்படுகிறது. கருநீலப் பட்டுடுத்தித் தன் முன்தானையால் அவனியை அணைத்து உறக்கத்தில் ஆழ்த்தி ஓய்வு கொடுக்க வருகின்ற இரவன்னையோ அல்லது நாள்தோறும் புதிய புதிய மலர்களை அணிந்து மிளிரும் காட்டாற்றுத் தாவணியை வளைத்து வளைத்து அநாயசமாகத் தன் உடம்பின்மேல் வீசிக்கொண்டு தோன்றும் வனதேவதையோ—யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒவ்வொரு தடவையும் மறைந்து பின் தொடரும் அம் மங்கை அருகில் இருப்பதை நான் உணர்கிறேன்.

திரித்த நுரையி னிடை நின்முகங்கண்டேன்

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்

என்று கவிஞர் பாடியதுபோல அவளுடைய முகத்தின் சாயலை நான் எங்கும் காணமுடிகிறது. அவள் ஏன் என்னே இப்படிப் பின் தொடர்கிறாள். ஏன் எனக்கு மோனத் துணைவியாக வருகிறாள் என்பதை அறிய முடியவில்லை. ஆனால், அவளுடைய சூக்குமத் தோழமையிலே என் உள்ளம் புனிதமடைகிறது; வாழ்க்கை விவகாரங்களிலே நாளெல்லாம் உழன்றுபட்ட சிறுமைகளும், பெற்ற புன்மை உணர்ச்சிகளும் நீங்கி வானில் பறக்கத் தொடங்குகின்றது; வானில் பறக்கின்ற நிலையிலும் அவளுடைய தோழமையை ஆங்கு நன்கு துய்க்கின்றது. இவற்றை நான் தெளிவாக உணர்கின்றேன்.

இயற்கை அன்னையின் மடியில் தவழும் உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அன்ரறோ? அவ்வாறிருக்கக் குறுகிய பிரிவினைகள் செய்துகொண்டு சாதியென்றும், சமயமென்றும், நிறமென்றும், நாடென்றும் எல்லை வகுத்து, நலத்திற்காக எழுந்த மெய்நெறிகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாது வாதனைப்பட்டு மடிகின்றோமே, என்ன சிறுமை என்கிற எண்ணம் அப்பொழுது எழுகின்றது. அறிவைப் பெற்றுள்ள மனிதன் ஏன் இவ்வாறு தானே உண்டாக்கிக் கொண்ட விலங்குகளில் மாட்டிக்கொண்டு துன்பக் குழியில் வீழ்ந்து தவிக்கிறானோ தெரியவில்லை. அவனுடைய வெறுப்பும் தந்நலமும் வானில் எழுந்து பறக்கக்கூடிய உள்ளத்தின் சிந்தனை ஆற்றலைக் கூடக் கட்டுப்படுத்தி விடுகின்றனவே, என்ன விந்தை! இதை உணராத மனிதன் “இயற்கையில் எங்கும் சுயநலந்தான் தாண்டவமாடுகிறது; விட்டில் பூச்சியை மைனாக் குருவி பிடிக்கிறது; மைனாவை வல்லூறு பிடிக்கிறது; வல்லூறை இராசாளி பிடிக்கிறது. இவ்வாறு எங்கும் சுயநலந்தான்” என்று பேசித் தன் அறிவின் திறமையைப் பற்றிப் பெருமையடைந்து கொண்டு, தனது குறைகளையும் சிறுமைகளையும் ஒழிக்க முயலாது திரிகின்றான். நம் உள்ளத்தை உயர்த்தி உலகமே ஒன்றென உணரும் பெரு நிலைக்குச் செலுத்தக் கூடிய பேராற்றல் இயற்கைக்கு உண்டென்பதை மனிதன் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. அவனுக்குத் தனிமையின் இனிமை கசக்கின்றது. தனிமையின் மென்பேச்சு, இயற்கையின் வண்ணமறைச் சிறுகுரல் அவன் செவியில் விழுவதில்லை. இயற்கையில் திளைத்த கவிஞர்கள் அதை அறிந்து கூறியிருக்கிறார்கள். அதை ஒவ்வொருவனும் தன் உள்ளத்தில் உணரும்படியாக இயற்கையோடு உறவாடுவதை உணவருந்துவது போன்ற முக்கியமான செயலாகக் கைக்கொள்ள வேண்டும்.

“இயற்கை வாழ்விற்குத் திரும்பிப் போ” என்று பலர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு முதற் படியாக இயற்கையோடு தனிமையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறு நாழியாவது உறவாடு என்று நான் கூறுகிறேன். அப்படி உறவாடும் போது வாழ்க்கைத் தொல்லைகள் அனைத்தையும் மறந்துவிட்டுக் கவிதையை மட்டும் மறவாதிருக்கவேண்டும். ஏனெனில் கவிதைதான் இயற்கைக் கன்னியோடு நம்மைச் சேர்த்து வைக்கும் இன்பத் தோழியாகும்.

கவிதையும், காட்டுத் தனி வழியும் மனிதனை உயர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை. மக்களின் இன்றைய வாழ்க்கையில் எழுந்துள்ள இடர்ப்பாடுகளைக் களைந்தெறிவதற்கு இடையூறாக நிற்கும் குறுகிய தந்நல நோக்கத்தை மாற்றிப் பரந்த மனப்பான்மை கொள்ள அவை உதவுகின்றன. அவற்றை நாம் ஒரு நாளும் புறக்கணிக்கலாகாது.