காட்டு வழிதனிலே/சிறுபாணாற்றுப் படை
சிறுபாணாற்றுப் படை
“எனக்குத் தீராத தலைவலி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்வதென்றே தோன்றவில்லை” என்கிறான் ஒருவன்.
“தலைவலியா? பாலக்காட்டிலே ஒரு மருத்துவன் இருக்கிறான். அவனிடம் போனால் ஒரே நாளில் குணப்படுத்திவிடுவான். அவனைக் கண்டாலே தலை வலியெல்லாம் பறந்துவிடும்” என்கிறான் தானே அத் துன்பத்தில் உழன்று உண்மை அறிந்த மற்றொருவன்.
இவ்வாறு கூறி அவன் தலைவலியால் துன்புறுபவனே மருத்துவனிடம் வழிப்படுத்துகிறான்.
இந்த உரையாடலிலிருந்து இரண்டு கருத்துக்கள் தெளிவாகின்றன. நோய்க்கு நல்ல மருந்து கிடைக்கும் இடம் தெரிகின்றது; அந்த மருந்தை உதவிடும் மருத்துவனுடைய திறனும் புகழும் வெளியாகின்றன. இவ்வாறு தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கு வெளிப்படுத்தும் இப் பழக்கம் மக்களிடையே இயல்பாக எங்கும் காணப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது ஆற்றுப்படை என்ற நூல்வகை. தீராத வறுமையாலோ அல்லது வேறு துன்பத்தாலோ துயருறும் ஒருவனே அதைத் தீர்க்கக்கூடிய ஒருவனிடம் வழிப்படுத்துவதுதான் ஆற்றுப்படை. வறுமையால் வாடிப் பரிசில் பெறக் கருதிய ஒருவனைப் பரிசில் பெற்று வந்த வேறொருவன் தனக்கு அதையளித்த வள்ளலிடம் செல்லுமாறு அவ்வள்ளலின் புகழையும் கொடை வளத்தையும் எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்துகிறான்.
பத்துப் பாட்டு என்ற சங்க இலக்கியத் தொகை நூல்களிலே ஐந்து ஆற்றுப்படைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இது ஒய்மானாட்டு நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. யாழ்ப்பாணர்கள் பெரும்பாணரென்றும் சிறுபாணரென்றும் இருவகைப்படுவார்கள். அவர்களில் சிறுபாணன் ஒருவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது போலும். ஆசிரியப் பாவால் இயற்றப்பட்டு முன்னுாற்றுக்கும் குறைந்த அடிகளை உடையதால், அடிகளின் சிறுமை பற்றி இப் பெயர் வந்ததென்றும் கூறுவர்.
வள்ளன்மை மிக்க தலைவன் ஒருவனது உயர்வு தோன்றப் பாடுவதற்கு ஆற்றுப்படை என்னும் நூல்வகை சிறந்த சாதனமாக இருக்கின்றது. இதிலே அத்தலைவனை நேர்முகமாகப் புகழாது பிறனொருவனுக்குக் கூறு முகத்தாலே புகழுவது சாலச்சுவை பொருந்தியிருக்கிறது. அவ்வாறு புகழ்ந்து பேசுவதுதான் உயர்ந்த புகழ்ச்சியாகும்.
சிறுபாணாற்றுப்படையில் விரிந்துள்ள செய்தியை இனி ஆராய்வோம். ஆற்றொனா வறுமையில் ஆழ்ந்த பாணனொருவன் ஒய்மானாட்டு நல்லியக் கோடனிடம் சென்று யானையும் தேரும் மற்றப் பொருள்களும் பரிசிலாகப் பெற்றுத் திரும்புகிறான். வழியிலே அவன் வேறொரு பாணனைச் சந்திக்கிறான். அந்தப் பாணனும் வறுமையால் வாடித் துயர் ஆற்றுப்படுத்த விறலியர் கூட்டம் சூழப் பாலை நெடு வழியில் வருந்தி வந்தான். அவனுடைய நிலையைக் கண்டு பரிசில் பெற்று வந்த பாணன், “நீ பரிசில் பெற விரும்புவாயாயின், வஞ்சியும் மதுரையும் உறந்தையும் தரும் செல்வம் வறிதென்று தோன்றும் படி, ஏழு வள்ளல்களின் வள்ளன்மையும் தான் ஒருவனே தாங்கி நிற்கும் ஒய்மானாட்டு நல்லியக் கோடனிடம் செல்லுக'” என்று வழிப்படுத்துகின்றான். போகும் வழியிலே முதலில் அவனுடைய எயிற் பட்டினத்தில் மனைதோறும் மீன்சூட்டுடன் உபசரிக்கப் பெறுவாய். கேணியிற் பூத்த பூவே முருகப் பெருமானது கை வேலைப் போல வெற்றி கொடுத்த வேலூரிலே புளிங்கறியிட்ட சோறும், ஆமானிறைச்சியும் அன்புடன் வழங்கப் பெறுவாய். அந்தணர் சுருங்காத அவனது ஆமூரிலே ஞெண்டு கலந்த உணவை உழத்தியர் விருப்புடன் அளிப் பார்கள். அங்கிருந்து நல்வியக் கோடனது மூதூரர் அண்மையிலேயே உள்ளது. அவனுடைய அரிய காவலையுடைய கோபுர வாயில் பொருநருக்கும் புலவருக்கும் அந்தணருக்கும் என்றும் திறந்திருக்கின்றது. அதைக் கடந்து சென்று பல்மீன்நடுவண் பால்மதிபோன்று வீற்றிருக்கும் நல்லியக்கோடனை யணுகி, “முதியோரைவணங்கும் கையாய் "இளையோர்க்கு மலர்ந்த மார்பாய் என்றும்,” உழவருக்கு நிழல் செய்யும் செங்கோலாய் என்றும், பகை
பகைவருக்கு அழல் தரும் வேலையுடையாய் என்றும் சில மொழிகள் கூறுவதற்கு முன்பே, அவன் உனக்கு நல்ல ஆடையை அணிவிப்பான்; காண்டவ வனத்தை எரியூட்டின அருச்சுனனுக்கு முன்னவனான வீமசேனன் கண்ட மடை நூல் நெறியில் வழுவாது செய்த அடிசிலைப் பொற்கலத்திட்டு, விருப்பமொடு தானே நின்று உண்ணச் செய்வான்; அதன் பின் நிதியமும், அணிகலன்களும், தேரும், குதிரையும், பண்டியும், செலுத்தப் பாகனும் தந்து உன்னை அனுப்பி வைப்பான். அவனிடம் செல்க' என்று கூறி முடிக்கின்றான்.
பாணனுடைய உரையிலே ஓய்மாநாட்டு நல்லியக் கோடனின் வள்ளன்மை நிலைத்த புகழ் பெற்று விளங்குகிறது. மூவேந்தர்களது தலைநகர்களுக்குச் சென்றால் அங்கு கிடைக்கும் நிதியமும் வறிதென்று தோன்றும்படி, வள்ளல்கள் எழுவரின் கொடைத் தன்மையை அவன் ஒருவனே கொண்டிருப்பதாக அவன் கூறுகின்றான். மேலும் நல்லியக் கோடனே நின்று பாணருண்ணும்படி விரும்பிய உணவைத் தருவதாகக் கூறுவதிலிருந்து அவனுக்குப் புலவரிடத்துள்ள அன்பும் மரியாதையும் வெளியாகின்றன. “"நல்லியக் கோடன் செய்நன்றி அறிபவன்; சிற்றினம் சேராதவன்; இன்முகம் உடையவன்; இனியன்; அஞ்சினவர்களுக்கு அருள் செய்பவன்; வெஞ்சினம் இல்லாதவன்; பகைவர் படையிற் புகுந்து அதை உடைப்பவன்; தன் படை நிலைகுலைந்த காலத்து அதைத் தாங்குபவன்; கருதியது முடிப்பவன்; அறிவில்லாதார் மாட்டு அறியாமை பூண்டிருப்பவன்;”
அறிவுடையோர் குழுவில் அறிவு நன்கு உடையவன்; பரிசிலருக்குத் தரமறிந்து கொடுப்பவன்; வரையாது கொடுப்பவன்' என்று இவ்வாறு கவிஞர் அவனைப் புகழ்ந்து பாடுகிறார்,
மேலும் அவர் தம் வறுமை நிலையை உள்ளத்தை உருக்கும் வகையில் திறம்பட எடுத்துரைக்கிறார், “எங்கள் வீட்டு நாய் தான் ஈன்ற கண் விழியாத இளங் குட்டிகள் முலையுண்ணுதலைப் பசி மிகுதியால் பொறுக்கமாட்டாது குரைத்துக்கொண்டு எங்கள் அடுப்பிலே படுத்திருக்கும்;” கறையான் அரித்துக் கொண்டிருப்பது எங்கள் அடுப்பு: காளான் பூத்தது எங்கள் அடுப்பு” என்று அடுப்பை வர்ணிக்கிறார் நல்லூர் நத்தத்தனார்.
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்று நாய் குரைக்கும்......
காழ்சோர் முதுசுவர் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற் காளாம்பிப்
புல்லெனட்டில்
என்கிறார். அடுப்பிலே நெருப்பிட்டு எத்தனை நாட்களாயினவோ! என்றாவது ஒரு நாள் நெருப்பிட்டாலும் அவருக்கு உணவுப் பொருளாகக் கிடைப்பது குப்பையில் முளைத்துக் கிடக்கும் வேளைக்கீரையே யாகும். அதை உப்பின்றி வேகவைத்து, பிறர் கண்டால் நகைப்புக் கிடமாகுமென்று அஞ்சி வாயிலடைத்துத் தம் சுற்றத்தாருடன் உண்பாராம்.
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திரும்பே ரொக்கலோ டொருங்குடன் மிசையும்.
இரும்பேரொக்கல் என்கிறார்; சுற்றத்தாருக்குப் பஞ்சமே இல்லை; உணவுக்குத்தான் பஞ்சம்.
நிலங்களின் தன்மையையும் வனப்பையும் விரித்துரைப்பதில் கவிஞர் நத்தத்தனார் மிக வல்லவராகக் காணப்படுகின்றார். நெய்தல் நிலப் பட்டினத்தைப் பற்றிக் கூறும்போது அங்கு, '“தாழை அன்னம் பூக்கின்றது; செருந்தி தமனியம் போலிருக்கின்றது; கழி முள்ளி ஒளிவீசும் நீல மணிபோலப் பூக்கின்றது: புன்னை முத்துப்போல அரும்புகின்றது” என்று அழகாக அந்நிலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார், வேலூரிலே, “அவரை பவழம் போன்ற பூக்களைக் கொண்டிருக்கிறது. மயிலின் கழுத்தைப்போலக் காயா மலர்கின்றது; முசுண்டை கொட்டம்போல விரிகின்றது; காந்தள் கைவிரல்போல இதழ் அவிழ்கின்றது; கொல்லையில் இந்திர கோபப் பூச்சிகள் ஊர்கின்றன” என்கிறார்.
மருத நிலக் காட்சி ஒன்றை அவர் எவ்வாறு தீட்டுகிறார் என்று பார்ப்போம். தாமரையைப் பற்றிக் கூறிவிட்டால் மருத நிலத்தின் செழிப்பும் செவ்வியும் பளிச்சென்று விளங்கிவிடுமல்லவா நத்தத்தனார் இதை நன்கு அறிந்திருக்கிறார். “நீர் நிலையில் நெடிது நேரம் காத்திருந்து, நீரின் மேல் மட்டத்திற்கு வந்த கயல் மீனை முழுகி எடுத்த, பொன்னிறம் போலும் வாயையுடைய, நீலமணிச் சிரல் பாய்வதாலே கிழிபட்ட இலைகளையுடைய தாமரை” என்று அவர் எழுதுகிறார்.
நிலை அருங் குட்டம் நோக்கி நெடிதுஇருந்து
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளுடைத் தாமரை
என்ற அடிகளிலே மருத நிலத்தின் நீர் வளம் சுரந்த பேரெழில் கொப்புளித்து நம் மனக்கண் முன்பு தெளிவாக நிற்கிறது.
ஆசிரியர் நத்தத்தனார் கையாளும் உவமைகள் மிகப் பொருத்தமாயும் அழகாயும் அமைந்திருக்கின்றன. மகளிர் கூந்தலைப் பற்றிக் கூறுமிடத்து அது, மெல்லியதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையைப் போலிருக்கின்றது-அது விழிகு பெயல் அழகுகொள் கதுப்பு-என்கிறார் வாழைப் பூவெனப் பொலிந்த ஒதி யென்றும், பிடிக்கை அன்ன பின்னு வீழ் என்றும் கூந்தலை வெவ்வேறு வகையாக முடிப்பதைப் பற்றிக் கூறுகிறார். இளமங்கையரின் காலின் மென்மைக்கு நாயின் நாக்கை உவமிக்கின்றார். யாழின் நரம்புக் கட்டு நெகிழ்வதும் இறுகுவதும் கருங்குரங்கின் கையில் பிடிபட்ட பாம்பு அதன் கையைச் சுற்றி இறுகுவதையும் நெகிழ்வதையும் போன்றிருக்கின்ற தென்று சொல்லுகிறார். பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன, அங்கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவு என்பது அவர் வாக்கு. மேலும், ஒட்டகம் துயில் மடிந்தன்ன வீங்குதிரை எனவும், எரிமறிந்தன்ன நாவின் பேய் மகள் எனவும், பாம்பு வெகுண்டன்ன தேறல் எனவும் ஏற்ற உவமைகளை ஆசிரியர் பயன்படுத்துவதை நோக்க நோக்க அவருடைய கவிதைத் திறன் நன்கு புலனாகின்றது.
யாழைப் பற்றி ஆசிரியர் கூறுகின்றபோது, அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும் நரம்பு-அமிழ்து பொதிந்திலிற்றும் அடங்கு புரி நரம்பு-என்று எழுதுகிறார். அதனால், யாழின் சிறப்பை அவர் நன்குனர்ந்தவர் என்று தெரிகிறது.
பாடுதுறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொளின்னியம் குரல்குர லாக
நூனெறி மரபிற் பன்னி
என்று அவர் எழுதுவதிலிருந்து அவர் இசையறிவு வாய்ந்தவரென்பதையும் அறியலாம்.
சங்க காலப் புலவர்கள் இயற்கை அழகில் பெரிதும் ஈடுபட்ட உள்ளமுடையவர்கள். அவர்கள் கண்டு துய்த்த இயற்கைக் காட்சிகளைத் தங்கள் பாக்களில் மிக அழகாகப் பொறித்திருக்கிறார்கள். நல்லூர் நத்தத்தனாரும் இயற்கையில் திளைத்த உள்ளமுடையவர். அவர் குறிஞ்சி நிலக் காட்சியொன்றை எவ்வாறு தீட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.
மகளிர் கூந்தல்போன்ற அழகிய கலாபத்தை மஞ்சிடை விரித்து, மூங்கில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் மலையின் மேல் நின்று மயில் ஆடுகின்றது என்று அவர் கூறுகிறார்.
மேலும் சிறுபாணாற்றுப்படையைப் படிக்கின்ற போது அதன் சொல்லாட்சியும், சொற்றொடர்களும், பொருட் செறிவும் நமது உள்ளத்தைக் கவர்கின்றன. வயங்கிழை உலறிய அடி, வண்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை, நாடா நல்லிசை, பைந் நனையவரை பவழங் கோப்ப, எயிற் கதவம் உருமுச் சுவல் சொறியும் என்பன போன்ற சொற்றொடர்களையும், அடிகளையும்படிக்குந்தோறும் படிக்குந்தோறும் தேன் ஊறுகின்றது.
செங்கழுநீர்ப் பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமையானது பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலிலே, காட்டு மல்லிகையாகிய படுக்கையிலே, தன் முதுகை மஞ்சள் இலை மெதுவாகத் தடவத் துயில்கொள்ளும் படியான சேர நாடு என்றும், உப்பு வாணிகர் வளர்த்த மந்திகள், மகளிர் பல்போன்ற முத்துக்களைக் கிளிஞ்லிவிட்டு அதைக் கிலுகிலுப்பைபோல ஆட்டிக் கொண்டு உப்பு வாணிகரின் பிள்ளைகளுடனே விளையாடும் கொற்கை என்றும், செந்தாமரைப் பீடத்திலே தும்பி தன் துணையுடன் துயின்று, பின் சீகாமரமென்னும் பண்ணைப் பாடிக்கொண்டிருக்கும் படியான சோழ நாடு என்றும் அவர் எழுதியிருப்பது மிக இனிமை வாய்ந்திருக்கின்றது.
மேலும், ஏழு வள்ளல்களின் கொடைப் பெருமையைச் சில அடிகளில் திறம்படக் கூறியிருப்பதும், தமிழ் வேந்தர்களைச் சொல்லாது அவர்களது மதுரை, வஞ்சி, உறந்தை என்னும் நகரங்களேயே குறித்து, ஆங்குப் பெறும் பரிசிலும் வறிதாகக் தோன்றும் என்று கூறும் சொல் நயமும் படித்து இன்புறற் பாலன.
இவ்வாறு சிறுபாணாற்றுப்படை நல்லியக் கோடனுடைய வள்ளன்மைமையும், நத்தத்தனார் கவித் திறமைைையயும் ஒருங்கே வெளியிடும் பாமணியாகத் திகழ்கின்றது.